Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,702 முறை படிக்கப்பட்டுள்ளது!

நான் செம்பரம்பாக்கம் ஏரி பேசுகிறேன்!

கண்நீர் கதைகள்…

நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு. சட்டத்தின் இருட்டறைக்கு வெளிச்சம் ஏற்றப் பயின்ற, கறுப்பு அங்கி வழக்கறிஞர்கள், தங்களின் வாதங்களுக்கு வலுச்சேர்க்க, தடித்த புத்தகங்களுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டிருந்தனர். நீதிமன்ற ஊழியர்கள் பரபரத்துக் கிடந்தனர். செய்தியாளர்களும் வழக்கைக் கவனிக்க வந்த பொதுமக்களும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் மூழ்கிப்போய் இருந்தனர். அங்கு நிலவிய ஒருவிதமான இறுக்கம், குளிரூட்டப்பட்ட அந்த அறையை ஒருவிதமான புழுக்கத்தில் வைத்திருந்தது.

p36இத்தனைப் பதற்றங்களுக்கும் பரபரப்புக்கும் காரணம், அன்றைக்கு விசாரிக்கப்பட இருந்த முதல் வழக்கு முக்கியத்துவமான வழக்கு. அதில் சாட்சி அளிக்க வந்திருந்தது, சென்னையை மூழ்கடித்த வெள்ளத்தைத் தேக்கிவைத்திருந்த செம்பரம்பாக்கம் ஏரி.

தலைமை நீதிபதியின் வருகைக்குப் பிறகு, கூண்டில் ஏற்றப்பட்ட ‘சாட்சி’ செம்பரம்பாக்கம் ஏரி அளித்த வாக்குமூலம்:

‘‘தமிழகத்தின் தலைநகரான சென்னையின் தென்மேற்குத் திசையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா என் இருப்பிடம். செம்பரம்பாக்கம் என்ற எனது பெயருக்கு ‘மலைகள் சூழ்ந்த எழிலான ஊர்’ என்பது பொருள். செம்பரம்பாக்கம் என்ற எனது பெயரிலேயே கிராமம் ஒன்றும் உள்ளது. என்னால், அங்கு ஓர் அடி நிலம்கூட விளைவிக்கப் படுவதில்லை. என்னில் நிறையும் தண்ணீர், அந்தக் கிராமத்தின் ஒரே ஒரு குடியானவனின் தாகத்தைக்கூட தீர்த்ததில்லை. அதனால், நான் வேறு. செம்பரம்பாக்கம் என்ற ஊர் வேறு. இதை நான் முதலில் தெளிவுபடுத்தி விடுகிறேன்.

பல்லவர்கள் காலத்தில் நான் உருவாக்கப் பட்டதாக, சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது தவிர, என் பூர்வீகம் பற்றி எனக்கு வேறு எதுவும் தெரியாது. செம்பரம்பாக்கம், சிறுகளத்தூர், பழஞ்சூர், சோமங்கலம் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள கோயில்கள் என் எல்லைகளாக உள்ளன. யாரோ ஓர் அரசனோ, பெரிய தலைக்கட்டு குடும்பமோ அல்லது சிவ பக்தி முக்திப்போன ஒரு சாதாரண குடியானவனோ… எனக்கு விவரம் தெரியாத நேரத்தில் ஒரு சிவலிங்கத்தை எனக்கு நடுவில் நட்டு வைத்துள்ளான். நான் முழுவதுமாக நிரம்பிக் கிடக்கும்போது, அந்தச் சிவலிங்கம் எனக்குள் மூழ்கிவிடும். அதை ஓர் அளவீடாகக் கிராமத்தினர் பார்த்துப் பழகியிருந்தனர். தமிழக முதலமைச்சராக காமராஜர் இருந்த காலகட்டம், என் வாழ்வில் வசந்தம் வீசியது. என்னை அவர் சிறப்பாகக் கவனித்துக்கொண்டார். எனக்கு அருகில், அழகான பூங்கா ஒன்றை அமைத்தார். ஆனால், அதன்பிறகு வந்தவர்கள் பூங்காவைக் கவனிக்கவில்லை. கோடிக்கணக்கான சென்னை மக்களின் தாகத்தைத் தணிக்க 40 சதவிகிதம் தண்ணீரை நானே அளிக்கிறேன். அதனால், என்னை நம்பித்தான் சென்னை என்று என்னால் கர்வமாகச் சொல்ல முடியும். நான் வற்றிப்போனால், தவித்துப்போய்விடும் சென்னை. தண்ணீர் பஞ்சத்தால் ஆட்சியை இழந்த வரலாறு தமிழகத்தில் உள்ளதால், மக்களின் ஓட்டுக்களைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் அவ்வப்போது என்னைச் சுற்றியே நிகழ்த்தப்படும். ஆனால், எப்போதும் இல்லாத அளவில் இந்த முறை, நீதிமன்றத்தின் ஆவணங்களிலும் என் பெயர் இடம்பெற்றுள்ளது. என்னை மையமாக வைத்து பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

p36aஎன்னைச்சுற்றி மிகப் பெரிய சர்ச்சைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவருடைய கட்சிப் பொதுக்குழுவில் என்னைத் தனித் தலைப்பாக்கி நீண்ட விளக்கம் அளித்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவர்கள் என்னைப் பேசு பொருளாக்கி உள்ளனர். அதுதான் அதற்குக் காரணம். இதற்கெல்லாம் நான் இப்போது பதில் சொல்லியாக வேண்டும். அதற்கு முன்பு என் திறன் என்ன? எவ்வளவு தண்ணீரை என்னால் நிரப்பி வைத்திருக்க முடியும்? அதற்கும் கூடுதலாக தண்ணீர் நிறையும் போது, என்னால் எந்த வழியில் அவை வெளியேற்றப்படுகிறது? என்னால், வெளியேற்றப்படும் தண்ணீர் மட்டும்தான் அடையாற்றில் வருகிறதா? நான் வரும் வழியில் என் எதிரிகள் எனக்கு ஏற்படுத்தி வைத்துள்ள தடங்கல்கள் என்ன என்பதை எல்லாம் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நசரேத்பேட்டை, மேப்பூர், சிறுகளத்தூர், புத்தேரி, பழஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களை நான் இணைக்கிறேன். பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதூர் சாலை மட்டுமல்லாது, குன்றத்தூர் – ஸ்ரீபெரும்புதூர் சாலை வழியாகவும் என்னை வந்தடைய முடியும். எனது மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. உபரித் தண்ணீரை வெளியேற்ற என்னிடம் 24 வெளியேற்று வழிகள் உள்ளன. எவ்வளவு தண்ணீர் வந்து நிறைந்தாலும் நான் இந்த 24 வழிகளைப் பயன்படுத்தித்தான் தண்ணீரை வெளியேற்ற முடியும். அதைச் செய்யவில்லை என்றால், நான் உடைந்துவிடுவேன். அப்படி நான் உடைந்தால், முழுச் சென்னையும் மூழ்கிப்போய்விடும். இந்த 24 பாதைகள் வழியாக அதிகபட்சமாக… 29 ஆயிரம் கன அடி முதல் 33 ஆயிரம் கன அடி வரையிலான நீரைத்தான் வெளியேற்ற முடியும். அப்படி வெளியேறும் தண்ணீர் அடையாறாகப் பரந்து, சென்னையை வந்தடைகிறது. சென்னையில் மழை வலுத்த நாட்களில் குறிப்பாக கடந்த டிசம்பர் 1-ம் தேதி இந்தச் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதுவும் 29 ஆயிரம் கன அடித் தண்ணீர்தான் வெளியேற்றப் பட்டது. ஆனால், அது அடையாற்றின் வழியாக சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்துக்கு வந்து சேர்ந்தபோது அதன் அளவு 55 ஆயிரம் கன அடி முதல் 65 ஆயிரம் கன அடியாக உயர்ந்திருந்தது. இது எப்படி சாத்தியம்? இதற்கு நானா பொறுப்பு? இல்லை… இல்லவே இல்லை.

என்னைவிட்டு வெளியேறிய தண்ணீர் அடையாறாக மாறிப்போகும்போது அப்படியே போவதில்லை. அதன் பாதையில் உள்ள 278 ஏரிகளின் தண்ணீரையும் உள்வாங்கிச் செல்கிறது. என்னில் தொடங்கி, சென்னைக் கடற்கரை வரை உள்ள பரப்பளவு மொத்தம் 500 ச.கி.மீ. இந்தப் பரப்பளவில் 2-ம் தேதி பெய்த மழையின் அளவு மி.மீ. வரலாறு காணாத மழைப்பொழிவு அது. அதுவும், தண்ணீரின் அளவை அதிகரித்தது.அவை எல்லாம் சேர்ந்துதான் சென்னையை மூழ்கடித்தது. டிசம்பர் 1-ம் தேதி இரவு வரை எனக்கு வந்து சேர்ந்த நீரின் அளவு, விநாடிக்கு 960 கன அடி. வெளியேற்றப்பட்ட நீரின் அளவு 900 கன அடி. சரியாகத்தான் வெளியேற்றப் பட்டுள்ளது. இதில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், இரண்டாம் தேதி எதிர்பார்க்காத அளவில், அதாவது 400 மி.மீ மழை பொழிந்ததால், எனக்கு வந்த நீரின் அளவு அதிகபட்சமாக விநாடிக்கு 26 ஆயிரம் கன அடியாக சட்டென உயர்ந்தது. கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள் முதல்நாள் வரை 960 கனஅடி. மறுநாள் 26 ஆயிரம் கனஅடி. எப்படித் தாங்குவேன் நான். அதன்பிறகுதான், 29 ஆயிரம் கன அடி நீரை பொதுப்பணித் துறை பணியாளர்கள் உதவியுடன் வெளியேற்றினேன். ஏன் முதல் நாளே, 29 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றவில்லை என்று அனைவரும் கேட்கிறார்கள். அப்படிச் செய்திருந்தால், சென்னை மூழ்குவதைத் தவிர்திருக்கலாமே என்றும் கேட்கிறார்கள். பொதுப்பணித் துறை அதிகாரிகள், ‘‘விதிமுறைப் படி அது சாத்தியமில்லை. அப்படியெல்லாம் குடிநீருக்காகப் பயன்படுத்தும் தண்ணீரைத் திறந்துவிட முடியாது. அப்படி வெளியேற்றினால், ஒருவேளை இரண்டாம் தேதி மழை அந்த அளவுக்குப் பெய்திருக்காவிட்டால், அதில் இருந்த நீர் எல்லாம் வெளியேறி, இவ்வளவு மழை பெய்ததற்குப் பின்னும் குடிநீர் பஞ்சத்தில்  தவித்துப்போய் இருப்பீர்கள்” என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும்  என்னைத்தான் பேசுபொருளாக மாற்றி என்னைக் குற்ற உணர்ச்சியில் தவிக்க வைத்திருப்பீர்கள்.

p36bஎனவே, நீங்களும் சென்னை மாநகரமும் மூழ்கியதற்குக் காரணம் நான் அல்ல. இப்போது அந்தப் பேரழிவுக்குக் காரணம் நீங்கள்தான் என்பதை நான் விளக்கமாக நிரூபிக்கிறேன். என்னில் இருந்து வெளியேறும் தண்ணீர் அடையாறாக சென்னை வருகிறது. ஓர் ஆறு என்பது, தன் அளவில் அகன்றுகொண்டே போவதாக இருக்க வேண்டும். ஆனால், அடையாற்றை  நீங்கள் அப்படியா வைத்துள்ளீர்கள்? மந்தநந்தபுரத்தில் 9 மீட்டராக உள்ள அடையாற்றின் சமவெளி, ஏர்போர்ட் வரும்போது 6 மீட்டராக மாறுகிறது. திரு.வி.க பாலம் அருகில் அதை ஒரு மீட்டராகச் சுருக்கி உள்ளீர்கள். அப்படியானால், மந்தநந்தபுரத்தில் பரந்து வெளியேறும் தண்ணீர் ஏர்போர்ட் வரும்போது, குறுகி ஓட வேண்டும். ஆனால், அதிகமான தண்ணீர் வரும்போது நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு கரைகளைக் குறுக்கிக் கொண்டதுபோல், தண்ணீர் செய்யுமா? அது பெருக்கெடுத்து வரும் தண்ணீர், தனக்கான பாதையைத்தானே உருவாக்கிக்கொள்ளும். வழியில் தடுத்து நிற்கும் உங்கள் கட்டுமானங்களைத் தாகமெடுத்து வரும் அந்த வெள்ளம் விழுங்கிவிடும். இப்படி வகைதொகையில்லாமல் இருப்பதால், தண்ணீர், வழியற்ற இடங்களில் தனக்கான வழியைத் தானே உருவாக்கிக்கொண்டது. கடந்த 2005-ம் ஆண்டு 55 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் வந்தபோதும் சைதாப்பேட்டை பாலத்துக்குக் கீழேதான் தண்ணீர் சென்றது. இவ்வளவு பாதிப்பில்லை. ஆனால், இப்போது ஏன் பாலத்துக்கு மேல் சென்றது என்பீர்கள். அதற்கும் நானே பதில் சொல்கிறேன். சைதாப்பேட்டை பாலத்தில், மொத்தம் 12 வழியேற்றும் பாதைகள் இருந்தன. ஆனால், அவற்றில் 7 பாதைகளை ஆக்கிரமிப்புகளால் அடைத்துவிட்டீர்கள். பிறகு எப்படி அது தண்ணீர் வெளியேற்றும்? 2005-ல் அடையாற்றில் ஓடிய வெள்ளம் வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி. இப்போது 20 ஆயிரம், 30 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே ஓடியிருக்கிறது.

அடையாற்றின் சீற்றத்தைத் தணிக்கும் பல்லாவரம், குரோம் பேட்டை, போரூர் ஏரிகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. இதனால் தண்ணீர் அனகாபுத்தூர், பள்ளிக்கரணை, பொழிச்சலூர், பம்மல், குரோம்பேட்டை குடியிருப்புகளை மூழ்கடித்துவிட்டு அடையாற்றுக்கு வந்தது. பொத்தேரி தொடங்கி திருநீர்மலை வரை சுமார் 20 கி.மீ தொலைவுக்கு அடையாறு 30 மீட்டர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த 30 மீட்டருக்கான வெள்ளம் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளை மூழ்கடித்தது. நந்தம்பாக்கம் தொடங்கி மணப்பாக்கம் வரை சுமார் 10 கி.மீ வரை அடையாற்றின் படுகைகளை அரசே பட்டா நிலங்களாக மாற்றியது. அதில், நந்தம்பாக்கம், மணப்பாக்கம் மூழ்கியது. சென்னை நகருக்குள் சைதாப்பேட்டை தொடங்கி அடையாறு முகத்துவாரம் வரை ஆக்கிரமிப்புகள். சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் மூழ்க முக்கியக் காரணம் இதுதான்.

இனிவரும் காலங்களில் அடையாறைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். அதன் ஆற்றுச் சமவெளியை உங்கள் இஷ்டத்துக்குக் குறுக்காதீர்கள். அதன் கரைகளை இருபுறமும் சமமாக வைத்திருங்கள். ஒரு புறம் கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதும் மறுபுறம் கரைகளை சுரண்டுவதுமாக இருந்தால், இப்போது வந்த 60 ஆயிரம் கன அடித் தண்ணீர்கூட வேண்டாம்… 30 ஆயிரம் கன அடித் தண்ணீர் வந்தாலே நீங்கள் முழுகிப்போய்விடுவீர்கள். இனியாவது எச்சரிக்கையாக இருங்கள்!”

  நன்றி: விகடன்