பீட்ரூட் கீர்
தேவையானவை: பீட்ரூட் (பெரியது) – 2, காய்ச்சி ஆறவைத்த பால் – 4 கப், ஏலக்காய் – 3, குங்குமப்பூ – ஒரு சிட்டிகை, முந்திரி – 6 (நெய்யில் வறுக்கவும்), சர்க்கரை – 50 கிராம், நெய் – சிறிதளவு.
செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி, நறுக்கி, குக்கரில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். வெந்த பீட்ரூட், காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரை, ஏலக்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். மேலே
குங்குமப்பூ தூவி, வறுத்த முந்திரி சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து கூலாக பரிமாறவும்.
சப்பாத்தி உப்புமா
தேவையானவை: சப்பாத்தி – 4, வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை: சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கி…
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து, நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்திகளைப் போட்டுக் கிளறி இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி
பரிமாறவும்.
குறிப்பு: காலையில் மிகுந்துவிட்ட சப்பாத்தியை வீணாக்காமல், மாலையில் இப்படி சப்பாத்தி உப்புமாவாக செய்யலாம்.
முட்டைகோஸ் சாதம்
தேவையானவை: துருவிய முட்டைகோஸ் – ஒரு கப், வடித்த சாதம் – ஒரு கப், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (ஊறவைக்கவும்), மிளகு – சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், வறுத்த
வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி (மிகவும் பொடியாக நறுக்கியது) – ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை: வடித்த சாதம், சூடாக இருக்கும்போதே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்தால் பொலபொலவென்று உதிர்ந்துவிடும். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக்
கொடுத்துள்ளவற்றை தாளித்து… பட்டை, மிளகு – சீரகத்தூள், கடலைப்பருப்பு, உப்பு, வேர்க்கடலை போட்டுக் கிளறி, ஊறவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய இஞ்சி சேர்த்து மேலும் கிளறவும். இதில் துருவிய
முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, சிறிது நீர் தெளித்துப் புரட்டி வேகவிட்டு இறக்கவும். இந்த முட்டைகோஸ் மசாலாவை வெந்த சாதத்தில் போட்டுப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
ஐந்து வற்றல் குழம்பு
தேவையானவை: மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், கத்திரிக்காய் வற்றல், அவரைக்காய் வற்றல், கொத்தவரங்காய் வற்றல் – தலா ஒரு கைப்பிடி அளவு, தக்காளி – 100 கிராம், தோல் உரித்த
சின்ன வெங்காயம் – ஒரு கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: மிளகு, சீரகம், துவரம்பருப்பு, கடலைப் பருப்பு, எள் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை: புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க
கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, எல்லா வற்றல்களையும் ஒன்று ஒன்றாக போட்டு தீய்ந்து விடாமல் வதக்கி… சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள்,
தனியாத்தூள், மிளகாய்த்தூள் போட்டு வதக்கி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். குழம்பு வற்றி `திக்’காக வரும்போது வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
மிளகுத் தண்ணீர் சூப்
தேவையானவை: மிளகு – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் – அரை டீஸ்பூன், தக்காளி – பாதியளவு (நறுக்கவும்), மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
நெய் – அரை டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.
பொடிக்க: தனியா – ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், பூண்டுப் பல் – ஒன்று.
செய்முறை: பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை பொடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் ஒன்றரை கப் நீர் விட்டு கொதி வந்ததும் மஞ்சள்தூள் சேர்த்து, இந்தப் பொடியை போட்டு, தக்காளி, உப்பு,
வெல்லம் சேர்க்கவும். நன்றாக கொதி வந்ததும் இறக்கவும். இதனுடன் முழு மிளகு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, நெய் சேர்த்துப் பரிமாறவும்.
சீரக ரைஸ்
தேவையானவை: அரிசி – ஒரு கப், பூண்டு – 15 பல், சீரகம் – 2 டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், வறுத்துப் பொடித்த முந்திரிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், மோர் மிளகாய் வற்றல் – 4,
எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: அரிசியை உதிர் உதிராக வேகவிட்டு எடுக்கவும். ஒரு டீஸ்பூன் நெய்யை அதில் சேர்க்கவும். பூண்டினை தோல் உரித்து வட்ட வட்டமாக நறுக்கி… சிறிதளவு நெய்யில் இளஞ்சிவப்பாக
வதக்கவும். மீதமுள்ள நெய்யில் மிளகு, சீரகத்தை வறுத்து கொரகொரப்பாக பொடி செய்யவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு மோர் மிளகாய் வற்றலை கருமையாக வறுத்து ஒன்றிரண்டாக
உடைத்துக் கொள்ளவும். ஆறிய சாதத்தில் உப்பு சேர்த்து, முந்திரிப் பொடி, மிளகு – சீரகப் பொடி, பூண்டு, மோர் மிளகாய் வற்றல் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
ஸ்பெஷல் வடை
தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப், பச்சரிசி – 25 கிராம், முழு உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 10, காய்ந்த மிளகாய் – 5, தேங்காய்த் துருவல் – 2
டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு (தோல் சீவவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, அரிசி, முழு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அலசி, ஒன்றுசேர்த்து நீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை
வடித்து, தோல் சீவிய இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிசைந்து, வடைகளாகத் தட்டி, சூடான
எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
கம்பு மோர்க்கூழ்
தேவையானவை: கம்பு மாவு – ஒரு கப், பச்சை மிளகாய் – 4, நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப், தயிர் – ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: தயிரைக் கடைந்து ஒரு கப் நீர் விட்டுக் கலக்கி மோராக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து… சின்ன வெங்காயம், இஞ்சி, கீறிய பச்சை மிளகாய்
சேர்த்துக் கிளறி, கடைந்த மோரை ஊற்றி, உப்பு போட்டு, அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் கம்பு மாவை போட்டு கைவிடாமல் கிளறவும். மாவு வெந்தவுடன் இறக்கிப்
பரிமாறவும்.
ஸ்வீட் கார்ன் – அவல் போஹா
தேவையானவை: வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துக்கள், அவல் – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – அரை கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைப்
பழம் – அரை மூடி (சாறு எடுக்கவும்), மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (விழுதாக அரைக்கவும்), உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை: அவலை நன்றாக நீரில் அலசிவிட்டு, நீரை வடிய விட்டு வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்க்கவும். இதனுடன் நீர் வடித்த அவல்
சேர்த்து கிளறி, வேகவைத்த சோள முத்துக்களை போட்டு வதக் கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). இதில் மஞ்சள்தூள், சர்க்கரை, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி,
சிறிது நேரம் வேகவிடவும். கடைசியாக தேங்காய்ப்பால் விட்டுக் கிளறி அடுப்பை அணைக்கவும்.
வீட் பிரெட் மசாலா டோஸ்ட்
தேவையானவை: வீட் பிரெட் (கோதுமை ரொட்டி) – 6 ஸ்லைஸ், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
அரைக்க: இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு, பூண்டு – 6 பல், சீரகம் – அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைப் பழம் – அரை மூடி (சாறு எடுக்கவும்),
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களுடன் சிறிதளவு நீர் சேர்த்து, மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். இரண்டு ஸ்லைஸ்களின் ஒருபுறம் வெண்ணெய் தடவி, அவற்றின் உள்ளே
அரைத்த சட் னியை தடவி… குறுக்காக வெட்டவும். தோசைக்கல்லை காயவைத்து, வெட்டிய பிரெட் துண்டுகளை போட்டு இருபுறமும் சிவக்க சுடவும் (சுற்றிலும் நெய் (அ) வெண்ணெய் சிறிது
ஊற்றிக்கொள்ளவும்). இதேபோல் எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் செய்து கொள்ளவும்.
குறிப்பு: பிரெட் டோஸ்டர் இருந்தால் அதில் வைத்தும் எடுக்கலாம்.
வெஜ் மசாலா பாத்
தேவையானவை: அரிசி – ஒரு கப், நறுக்கிய காய்கறி கலவை (கத்திரிக்காய், கேரட், வாழைக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், உருளைக்கிழங்கு, பீன்ஸ்) ஒரு கப், உரித்த சின்ன வெங்காயம் – 10,
ஆய்ந்த முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, புளி – எலுமிச்சை அளவு, துவரம்பருப்பு – கால் கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை,
உப்பு – தேவைக்கேற்ப.
அரைக்க: தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கசகசா – ஒரு டீஸ்பூன், முந்திரி – 6, பூண்டு – 4 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். புளியை ஊறவைத்து, கரைத்து, அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வைக்கவும். துவரம்பருப்பை வேகவைக்கவும். குக்கரில் நெய்
விட்டு… வெங்காயம், காய்கறி கலவை, பெருங்காயத்தூள், முருங்கைக்கீரையை வதக்கி, அரைத்த மசாலா விழுதை சேர்த்து மேலும் வதக்கவும். இதில் வேகவைத்த பருப்பு சேர்த்து, புளிக் கரைசலை
ஊற்றி, தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, அரிசியை சேர்த்துக் கிளறவும். பிறகு குக்கரை மூடி, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு குக்கரைத் திறந்து,
கறிவேப்பிலையை தாளித்து சேர்த்துக் கிளறி பரிமாறவும்..
கார்லிக் பரோட்டா
தேவையானவை: மைதா – ஒரு கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், பேக்கிங் பவுடர் – கால் டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: மைதாவோடு உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். இதில் சர்க்கரை, சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து, நீர் விட்டு, தளர்வான, மிருதுவான மாவாக பிசையவும்.
இதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து இன்னொரு முறை அடித்து பிசைந்து… எண்ணெய் தடவி 6 மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, மாவை உருண்டை களாக உருட்டவும். சப்பாத்தி இடும் மனை மீது
சிறிதளவு மைதா தூவி, மாவு உருண்டையை வைத்து மெல்லிய சப்பாத்திகளாக இடவும். அதன் மீது எண்ணெயை பரவலாக தடவி, புடவை கொசுவம் போல் மடித்து பின்னர் உருண்டைகளாக்கவும். பிறகு
இதனை கனமான பரோட்டாக்களாக தட்டவும். தோசைக்கல்லை சூடாக்கி, பரோட்டாவைப் போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். பிறகு பரோட்டாவின் ஓரங்களை இரண்டு கைகளுக்கு
நடுவே வைத்து தட்டவும். இப்போது அடுக்குகளோடு கூடிய கார்லிக் பரோட்டா ரெடி.
குயிக் இனிப்பு இடியாப்பம்
தேவையானவை: ரெடிமேட் இடியாப்பம் – ஒரு கப், டூட்டி ஃப்ரூட்டி – ஒரு டேபிள்ஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு – 10, நெய் – சிறிதளவு, சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – அரை கப்,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, உலர்திராட்சை – 10.
செய்முறை: தேவையான அளவு நீரைக் கொதிக்கவைத்து அதில் ரெடிமேட் இடியாப்பத்தை போடவும். 5 நிமிடத்தில் வெந்து பொலபொலவென்று வந்துவிடும். இதில் நெய்யில் வறுத்த முந்திரி,
ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், டூட்டி ஃப்ரூட்டி, உலர்திராட்சை சேர்த்துக் கிளறவும். பரிமாறுவதற்கு முன் சர்க்கரை தூவிக் கிளறி பரிமாறவும்.
சிவப்பரிசி உப்புமா கொழுக்கட்டை
தேவையானவை: சிவப்பரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், சிவப்பு அவல் – கால் கப், தேங்காய்த் துருவல் – அரை கப், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: சிவப்பரிசி, துவரம்பருப்பு, சிவப்பு அவல், காய்ந்த மிளகாயை நீரில் 3 மணி நேரம் ஊறவைத்து… அடைபதத்தில் கொரகொரப்பாக அரைக்கவும் (பாதி அரைபடும் போது தேங்காய் துருவல்,
உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்). வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த மாவைப் போட்டு கைவிடாமல் கிளறவும். நன்றாக வெந்த பிறகு இறக்கவும். பிறகு, மாவை
கொழுக்கட்டை போல பிடித்து, இட்லித்தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
வறுத்த அரிசி சொஜ்ஜி
தேவையானவை: பச்சைப் பட்டாணி – அரை கப், காய்ந்த மிளகாய் – 5, பச்சரிசி – ஒரு கப், தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு – அரை கப், உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை: வெறும் வாணலியில் அரிசியையும், பாசிப்பருப்பையும் தனித்தனியாக, இளஞ்சிவப்பாக வறுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை
தாளித்து, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கிளறி, தேவையான நீர் விட்டு… உப்பு பட்டாணி சேர்த்து, ஒரு கொதி வந்ததும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விடவும். இதில் வறுத்த அரிசி, பாசிப்பருப்பை போட்டு,
தேங்காய்த் துருவலை சேர்க்கவும். நன்றாக கலக்கிவிட்டு, குக்கரை மூடி வெயிட் போட்டு, மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். ஏதாவது ஒரு சட்னியுடன் பரிமாறவும்.
பாதாம் மலாய் ஜாமூன்
தேவையானவை: ஆச்சி பாதாம் டிரிங்க் மிக்ஸ் – 200 கிராம், ஆச்சி குலாப் ஜாமூன் மிக்ஸ் – 200 கிராம், நெய் அல்லது எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, பிஸ்தா பருப்பு – 20 (நறுக்கவும்),
சர்க்கரை – 500 கிராம், பால் – ஒன்றரை லிட்டர்
செய்முறை: ஆச்சி குலாப் ஜாமூன் மிக்ஸில் சிறிது பால் விட்டு பூரி மாவு பதத்தில் மெத்தென்று பிசைந்து, உருண்டையாகவோ அல்லது கனமான வடை போலவோ செய்துகொள்ளவும். வாணலியில் நெய்
(அ) எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் ஜாமூன்களை பொன்னிறமாக பொரித்து வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சவும். பால் சுண்டி ஒரு லிட்டர் அளவு வந்ததும்,
சர்க்கரை, ஆச்சி பாதாம் டிரிங்க் மிக்ஸ் இரண்டையும் சேர்த்து சிறிது கொதிக்கவிட்டு இறக்கவும். இதில் பொரித்த ஜாமூன் உருண்டைகளைப் போட்டுக் கிளறி, நறுக்கிய பிஸ்தா பருப்பை சேர்த்து
அப்படியே ஒரு மணி நேரம் வைக்கவும். ஊறியதும் எடுத்து பரிமாறவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து `ஜில்’ என்றும் பரிமாறலாம். அருமையான இந்த ஸ்வீட்டை பர்த்டே பார்ட்டி போன்ற விசேஷங்களில் செய்து அசத்தலாம்.