Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2016
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,098 முறை படிக்கப்பட்டுள்ளது!

கிராமத்து கைமணம்! 1

arusuvaiசோளச்சோறு

பேரைச் சொன்னாலே சொக்கிப்போவாங்க கிராமத்து ஆளுங்க. அத்தனை சுவையான இந்த தானியத்தை நகர வாசிகள்ல எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியலை. இதுவரைக்கும் இல்லாட்டியும் பரவாயில்லை, இந்த வெயில் நேரத்துல குளிர்ச்சியான பொருட்களாத் தேடிப் பிடிச்சுச் சாப்பிடுவீங்கள்ல.. அதுல ஒண்ணா இந்தச் சோளத்தையும் சேர்த்துக்குங்க.

உடம்புக்குச் சத்தும் குளுமையும் தர்ற இந்தச் சோளத்தைச் சோறா ஆக்கறது எப்படிங்கறதைச் சொல்றேன். கூடவே குழம்பும் துவையலும்கூட இருக்கு. நான் சொல்ற பக்குவப் பிரகாரம் செஞ்சு சாப்பிட்டு, அப்புறம் சொல்லுங்க எப்படி இருக்குங்கறதை…

ஒரு கப் அளவுக்கு சோளத்தை எடுத்து அதுல ஒரு கை அளவுக்குத் தண்ணி தெளிச்சுப் பிசறி, இறுக்கமா அமுக்கி வைங்க. பத்து நிமிஷம் அப்படியே இருக்கணும். அப்புறமா அதை உரல்ல போட்டுக் குத்தணும். சோளம் உடைஞ்சுடாதபடிக்கு, பார்த்துப் பக்குவமா இடிக்கணும். உடைஞ்சுட்டா, சோறாக்கும்போது கஞ்சி சுத்துன மாதிரி கொஞ்சம் குழைஞ்சு போயிடும்.

இடிச்சு எடுத்த சோளத்தை முறத்துல போட்டு உமி போகப் புடைச்சு எடுங்க. அதுல மறுபடி ஒரு கைப்பிடி தண்ணியத் தெளிச்சுப் பிசறி அமுக்கி வைங்க. பத்து நிமிஷம் கழிச்சு மறுபடியும் அதை உரல்ல போட்டு இடிச்சு, புடைச்சு, உமியைச் சுத்தமா நீக்கிடணும்.

அஞ்சு கப் தண்ணியக் கொதிக்கவெச்சு அதுல சுத்தம் பண்ணின சோளத்தைப் போடுங்க. பத்து நிமிஷத்துக்கு தீ நல்லா எரியட்டும். அப்புறமா தீயைக் குறைச்சுடுங்க. தண்ணி வத்திப்போய் சோளம் மெத்துமெத்துனு வேகற வரைக்கும் கிளறணும். வெந்ததும் தேவையான உப்புப் போட்டு இன்னும் பத்து நிமிஷம் அடுப்புல வெச்சுக் கிளறி இறக்குங்க. சோளச்சோறு தயார்.

சூட்டோட அப்பவேவும் சாப்பிடலாம். ஆறவெச்சு, சின்னச்சின்ன உருண்டைகளா உருட்டி, தண்ணில ஊறப்போட்டு மறுநாள் வரைக்கும் வெச்சிருந்தும் சாப்பிடலாம்.

குட்டிப்பசங்களுக்கு விருப்பமானதா மாத்தணும்னா சோளச் சோத்துல பால், நெய், சர்க்கரைச் சேர்த்துக் கொடுங்க. சத்தமில்லாம ஒரு கட்டு கட்டுவாங்க..!

——————————————————————————————————

சுக்கு மோர்க்குழம்பு

ஒரு டீஸ்பூன் பச்சரிசி, ஒரு டீஸ்பூன் துவரம் பருப்பு… ரெண்டையும் தண்ணில அரை மணி நேரம் ஊற வைங்க. ஊறினதும், தண்ணிய வடிச்சுட்டு, அரை டீஸ்பூன் சீரகம், ஆறு பச்சை மிளகாய், நாலு சின்ன வெங்காயம், 2 பல் பூண்டு, ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்த்துருவல், சின்ன துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் இதையெல்லாம் சேர்த்துக் கொஞ்சமா தண்ணிவிட்டு நைஸா அரைச்செடுங்க.

லேசா புளிச்ச, கெட்டித் தயிரை ஒரு கப் அளவுக்கு எடுத்து, அதுல ஒரு கப் தண்ணி, கொஞ்சம் உப்பு, அரைச்ச விழுது சேர்த்துக் கரைச்சு வைங்க.

வடை சட்டில ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊத்தி, அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுந்து, கொஞ்சம் கறிவேப்பிலை, காய்ஞ்ச மிளகாய் 1 இதையெல்லாம் போட்டுத் தாளிச்சு, கரைச்சு வெச்சிருக்கற மோர்க் கரைசலை ஊத்தி, பத்து நிமிஷத்துக்குக் கைவிடாம கிளறுங்க. பச்சை வாடை போய் நல்ல மணம் வந்ததும் இறக்கிடுங்க.

சுக்கு மணத்தோட கமகமக்கற இந்தக் குழம்பை சூடான சோளச்சோறுல ஊத்திச் சாப் பிட்டா.. அட அட..! அந்த ருசியே தனிதான்.

——————————————————————————–

கொள்ளு துவையல்

கால் கப் கொள்ளை எடுத்துக்குங்க. வடை சட்டியச் சூடாக்கி அதுல கொள்ளைப் போட்டு நல்லா பொரிஞ்சு மொறுமொறுப்பாகி, வாசனை வர்ற வரைக்கும் வறுத்து எடுத்து வைங்க. அதே வடை சட்டில 2 டீஸ்பூன் எண்ணெயை ஊத்தி காய்ஞ்சதும் மிளகாய் வத்தல் 3, 2 டீஸ்பூன் உளுந்து ரெண்டையும் போட்டு வறுத்தெடுங்க.

வறுத்து வெச்ச மிளகாய், உளுந்து, கொள்ளு எல்லாம் சூடு ஆறினதும் அதோட, 2 டீஸ்பூன் தேங்காய்த் துருவல், சிறு துண்டு புளி, 2 பல் பூண்டு, தேவையான உப்பு எல்லாத்தையும் சேர்த்துக் கொஞ்சமா தண்ணிவிட்டுக் கரகரப்பா அரைச்செடுங்க.

‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ம்பாங்க. கொழுப்பைக் கரைச்சு ஊளைச் சதையைக் குறைக்கற கொள்ளு, துவையலா மாறும்போது ருசி அருமையா இருக்கும். தண்ணில ஊற வெச்ச சோளச்சோற, மோர் இல்லேனா தண்ணி விட்டு கரைச்சு, கொள்ளுத் துவையலோட சாப்பிட்டா, ‘‘இந்த வெயிலுக்கு இதானே அமிர்தம்’’னு மனசாரச் சொல்லுவீங்க..


நவதான்ய உருண்டை

சோளம், கம்பு, கொள்ளு, பாசிப் பயிறு, சோயாப்பயிறு, காராமணி, கோதுமை, பொட்டுக்கடலை, எள்ளு.. இந்த ஒம்பது வகையான தானியங்களை யும் வகைக்கு கால் கப் அளவுக்கு எடுத்து, ஒவ்வொண்ணையும் தனித்தனியா, வெறும் வடை சட்டில போட்டு சிவந்து, வாசனை வர்ற வரைக்கும் வறுத்து எடுத்துக்குங்க. ஆறினதும் மெஷின்ல கொடுத்து மாவா நைஸா அரைச்சுக்குங்க.

ரெண்டரையிலிருந்து மூணு கப் அளவுக்கு சர்க்கரையை எடுத்து மிக்ஸில போட்டு பொடிச்சு பவுடராக்குங்க. இதை, அரைச்சு வெச்சிருக்கற தானிய மாவோட கலந்து, கூடவே உருக்கின அரை கப் நெய், அரை கப் தேங்காய்த் துருவல் எல்லாத்தையும் சேர்த்து பிசறி பெரிய நெல்லிக்காய் அளவுக்கு உருண்டை பிடிச்சு வைங்க. உருண்டை பிடிக்க வராம மாவு பொல பொலனு உதிர்ந்தா கவலைப்படாதீங்க. ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு பால் எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமா தெளிச்சு உருண்டை பிடிங்க. பதமா இருக்கும்.

புரோட்டீன் சத்து நெறஞ்ச இந்த உருண்டைல மணத்துக்குனு ஏலக்காய் மாதிரி எதையும் சேர்க்க வேண்டாம். வறுபயிறு வாச னையே கமகமனு அத்தனை பிரமாதமா இருக்கும். பசியோட வர்ற பிள்ளைங்களுக்கு ஒரே ஒரு உருண்டை கொடுத்தாப் போதும். வயிறு நெறஞ்சு உற்சாகமாயிடுவாங்க

கம்புரொட்டிஎள்ளுப்பொடி

ரெண்டு கப் அளவுக்கு கம்பு எடுத்து தண்ணிய தெளிச்சு பிசறி, உரல்ல போட்டு குத்தி புடைக்கணும். அதைக் காயவெச்சு மிஷின்ல கொடுத்து மாவா அரைச்சுக்குங்க. இந்த மாவை வேணுங்கற அளவுக்கு எடுத்து உப்பு போட்டு கலக்கி, கொஞ்சம் கொஞ்சமா கொதி நீரை ஊத்தி நல்லா அழுத்தி பிசையணும்.

ஒரு பிளாஸ்டிக் பேப்பர்.. இல்லேன்னா, வாழை இலையை எடுத்து அதுல கொஞ்சங் கொஞ்சமா மாவை எடுத்து வெச்சு தண்ணியத் தொட்டு மெல்லிசு ரொட்டியா தட்டிக்குங்க. சூடான தோசைக் கல்லுல போட்டு சுட்டெடுங்க. ரொட்டியைச் சுத்தி எண்ணெய்விட்டு ரெண்டு பக்கமும் திருப்பிப்போட்டு எடுங்க. மிதமான தீயில சுடணும்.

வேகறதுக்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கும். பொறுமையாதான் சுடணும். சத்தான இந்த ரொட்டியை சாப்பிட்டுப் பார்த்தா, அந்த ருசியே சிரமத்தைப் பார்க்காம அடிக்கடி இதைச் செஞ்சு சாப்பிடச் சொல்லும்.

கம்பு ரொட்டிக்கு தொட்டுக்க ஜோரானது எள்ளுப்பொடி. சரி, அதை எப்படி செய்யறது?

எள்ளை கல், மண் நீக்கி, சுத்தப்படுத்தி வெறும் வடை சட்டில போட்டு வாசனை வர்ற வரைக்கும் வறுத்துக்கோங்க. உளுந்து, மிளகாயை அரை டீஸ்பூன் எண்ணெய்ல சிவக்க வறுத்துக்கோங்க. பூண்டு, புளி, உப்பு, எள், உளுந்து, மிளகாய் எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து அரைச்செடுத்தா போதும், பொடி தயார்! புளிக்காத கெட்டித் தயிர்ல இதைக் கலந்து கம்பு ரொட்டிக்கு தொட்டுகிட்டா.. அட, அட.. அதை நெனச்சாலே எச்சில் ஊறுதே!

இதே மாதிரி கட்டித் தயிர்ல வெல்லத்தைக் கலந்து கம்பு ரொட்டியை அதுல முக்கியெடுத்து கூடவே எள்ளுப் பொடியை தொட்டு சாப்பிட்டுப் பாருங்க. ‘தித்திக்குதே..’னு குஷியாயிடுவீங்க.

காராமணி கீரைத்தண்டு குழம்பு

மணமும் ருசியும் அத்தனை பிரமாதமா இருக்கற இந்தக் குழம்பை கிராமத்து ஆளுங்க அடிக்கடி செஞ்சு சாப்பிடுவாங்க.

அரை கப் காராமணியை சுத்தம் பண்ணி, வெறும் வடை சட்டில போட்டு வாசனை வர்ற அளவுக்கு வறுத்து, அளவான உப்பு சேர்த்து வேக வையுங்க. தண்டங்கீரையை ரெண்டு பெரிய தண்டா எடுத்து பொடியா நறுக்கி, உப்பு போட்டு வேகவையுங்க.

2 பெரிய வெங்காயம், 4 தக்காளி இதை பொடியா நறுக்கிக் கங்க. ரெண்டு முழு பூண்டை எடுத்து உரிச்சு வைங்க. வடை சட்டில 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயை காயவெச்சு, அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுந்து, அரை டீஸ்பூன் வெந்தயம் இதையெல்லாம் தாளிச்சு, பூண்டு, வெங்காயத்தை வதக்குங்க. வதங்கினதும் தக்காளியச் சேர்த்து வதக்கணும். காராமணி, கீரை இதையெல்லாம் வேக வெச்ச தண்ணி இருக்குமில்லையா அதுல கொஞ்சமா புளியை ஊறவெச்சு கரைச்சு வடிகட்டி அந்த கரைசலை தக்காளியோட சேர்த்துடுங்க. அதோட ரெண்டரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் தனியாத்தூள், கொஞ்சம் உப்பு போட்டு கொதிக்க வைங்க. பச்சை வாடை போனதும் மூணு பல் பூண்டை நசுக்கி குழம்புல போடுங்க. கூடவே ஒரு கொத்து கறிவேப்பிலையும் போட்டு மூடி வெச்சு அடுப்பை அணைச்சுடுங்க.

கமகமக்கற இந்த காராமணிக்குழம்பு இட்லி, தோசை, ரொட்டி, சாப்பாடு எல்லாத்துக்கும் ரொம்ப அருமையா இருக்கும்.