Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2016
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,890 முறை படிக்கப்பட்டுள்ளது!

மறந்துபோன கோடை பானங்கள்

summer_2_2843874gவாயுக்கள் நிரப்பப்பட்டு, `சுவையூட்டிகள்’ சேர்க்கப்பட்டு, கெடாமல் இருக்க ரசாயனக் கலவைகள் கலக்கப்பட்டு, பழங்களின் சத்து என்று பொய் முலாம் பூசப்பட்டு, பல் கூச்சம் உண்டாகும் அளவுக்கு `சில்’லெனக் கிடைக்கும் செயற்கைக் குளிர்பானங்களைத் தொடர்ந்து அருந்துவதால் எலும்பு அடர்த்தி குறைவு நோய், வயிற்றுப் புண், செரியாமை, உடல் பருமன், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்றவை நம் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புள்ளது என்கின்றன ஆராய்ச்சிகள்.

கடந்த இருபது ஆண்டுகளாகப் பன்னாட்டு செயற்கை பானங்களிடம் அடிமைப்பட்டு நோய்களால் அவதிப்படுகிறோம். கழிப்பறையைச் சுத்தம் செய்யும் அமிலத்தைப் போலப் பயன்படும் ஒரு செயற்கை பானம், நம் உடலில் எப்படிப்பட்ட வன்முறையை அரங்கேற்றும் என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறோமா? இந்தக் கோடையிலிருந்தாவது இயற்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாரம்பரிய பானங்களைப் பருக ஆரம்பிப்போம். கோடைக் காலத்தில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்யவும், இழந்த ஆற்றலை மீட்கவும், தாகத்தைத் தணித்துக்கொள்ளவும், வெப்ப நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக்கொள்ளவும் பயன்படும் பாரம்பரிய பானங்கள் என்னென்ன?

`மருத்துவச் சக்கரவர்த்தி’ கம்பு 

முப்பது வருடங்களுக்கு முன்புவரை, இல்லம்தோறும் தேவையான அளவுக்குக் கம்பரிசி இருந்தது. வெயில் காலம் வரும்போது, கம்பஞ்சோற்றோடு மோரும் சின்ன வெங்காயமும் கலந்த குளிர்ச்சியான பானம் தயாரிக்கப்பட்டு அருந்தப்பட்டது. ஆனால் இன்றைக்குக் கம்பு, கேழ்வரகு என்றாலே முகத்தைச் சுளிக்கும் இளவட்டங்கள் பட்டிதொட்டிகளில்கூட பெருகிவிட்டனர். பாரம்பரியச் சிறுதானியமான கம்பில் மருத்துவக் குணங்கள் அதிகம் என்பது அவர்களுக்குத் தெரியாது.

‘கம்பு குளிர்ச்சியெனக் காசினியிற் சொல்லுவர்காண்’ என்று எழுதி, கம்பங் கூழானது உடலுக்குக் குளிர்ச்சியை அள்ளிக் கொடுக்கும் என்கிறார் சித்தர் அகத்தியர். போர் வீரர்களுக்குப் புஷ்டி கொடுக்கக் கம்பு அடை, கம்பு சோறு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதை வரலாற்று ஆதாரங்களின் மூலம் அறியலாம். நம்முடைய பாரம்பரிய ஊட்டச்சத்து பானங்கள், நெடுங்காலமாகக் கம்பின் துணையுடன் தயாரிக்கப்பட்டவைதான். உடல் வெப்பத்தைக் குறைப்பதுடன் நல்ல பலத்தையும் தருகிறது. கொதிக்கும் கோடைக் காலத்துக்குக் கம்பை அடிப்படையாகக் கொண்ட உணவைத் தாராளமாக உண்ணலாம். அதேவேளையில், தோல் நோய் உள்ளவர்கள் மட்டும் கம்பை அதிகம் பயன்படுத்தக் கூடாது. ‘கவி சக்கரவர்த்தி’ கம்பர்போல, ஏழைகளின் ‘மருத்துவச் சக்கரவர்த்தி’ கம்பு எனலாம்!

நலம் தரும் நன்னாரி 

சுவையாலும் வாசனையாலும் மதிமயங்கச் செய்யும் நன்னாரி சர்பத், மிகச் சிறந்த குளிர்ச்சியூட்டி. நன்னாரி வேரை ஆறு மணி நேரம் நீரில் ஊறவைத்து, பின் லேசாகக் கொதிக்க வைத்து, எலுமிச்சை சாறும், சிறிது பனைவெல்லமும் சேர்த்தால் நலமான நன்னாரி சர்பத் தயார். மொகலாய சக்கரவர்த்தி பாபரின் சுயசரிதையான ‘பாபர் நாமாவில்’ சர்பத் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. `பித்தம் அதி தாகம் உழலை’ என வெப்ப அறிகுறிகளைக் களை எடுக்கும் ஆயுதமாக நன்னாரியைப் பிரயோகிக்கலாம் என்கிறார் தேரையர்.

இது உமிழ்நீர்ச் சுரப்பிகளின் (Salivary glands) செயல்பாட்டை அதிகரித்து, நாவறட்சியைப் போக்குகிறது. உடலில் உண்டாகும் வியர்வை நாற்றத்தைத் தடுப்பதுடன், ரத்தத்தையும் தூய்மை படுத்தும் (Blood purifier) நன்னாரியை, `மருத்துவத் துப்புரவாளர்’ எனலாம். நன்னாரி சர்பத்துடன் இளநீரும், நுங்கு கூழ்மத்தையும் சேர்த்து மது கலக்கப்படாத ஆரோக்கிய `காக்டைல்’ பானம், சில நூற்றாண்டுகளுக்கு முன் பிரசித்தமாக இருந்தது.

நன்னாரியில் சாப்போனின்கள், சைட்டோஸ்டீரால், வேனிலின் என முக்கிய வேதிப்பொருட்கள் உள்ளன. மனதைச் சாந்தப்படுத்தும் பொருட்களும் இதில் இருப்பதாக ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக் கின்றன. பரபரக்கும் அதிவேக மனிதர்களின் மனதைச் சாந்தப்படுத்தும் `மனசாந்தினியாகவும்’ நன்னாரி செயல்படுகிறது.

வெப்பம் தணிக்கும் கரும்புச் சாறு 

சங்க கால மக்கள், கரும்பின் இனிப்பான சாற்றை விருப்பத்தோடு பருகியதாக `கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின்’ என்ற பெரும்பாணாற்றுப்படை பாடல் வரி தெரிவிக்கிறது. தேனின் சுவைக்கு ஒப்புமை கூறும் அளவுக்கு இனிப்பான கருப்பஞ்சாறு, உடலின் அழலைத் தணிக்கக் கூடியது. அதிகரித்த பித்தத்தைக் குறைத்து, வெயில் காலத்தில் உண்டாகும் நீர்க்கடுப்பையும் தடுக்கிறது.

தேகத்தில் நெருப்புபோலத் தகிக்கும் எரிச்சலைக் குறைக்க, `குளு குளு பவுடர்’ விளம்பரங்களை நம்பி ஏமாறாமல், கரும்பஞ்சாற்றோடு தயிர் சேர்த்து அருந்துவதால் தேக எரிச்சல் நிவர்த்தியாகும்’ என்று சவால் விடுகிறது சித்த மருத்துவக் குறிப்பு ஒன்று. கருப்பஞ்சாற்றோடு இஞ்சி, எலுமிச்சை கலந்த பானம், செரிமானத் தன்மையை அதிகரித்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. கருப்பஞ்சாறும் இஞ்சிச் சாறும் செரிமானத்துக்குத் தேவையான சுரப்புகளை (Digestive juices) அதிகரிக்கும் தன்மை கொண்டவை.

இதம் தரும் பதநீர் 

பனை மரப் பொருட்களில் இருந்து கிடைக்கும் முக்கிய பானம் பதநீர். உடலுக்குக் குளிர்ச்சியையும் ஊட்டத்தையும் தரவல்லது பதநீர். விரைவில் செரிமானமாகி உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். தென் தமிழகத்தின் அநேக இடங்களில், பதநீரில் ஊற வைத்த நுங்கை ருசிப்பது அலாதியான அனுபவம். சுவையோடு சேர்த்து வெப்பத்தையும் தணிக்கவல்லது இந்தக் கலவை. பதநீரில் சுக்கு சேர்த்துத் தயாரிக்கப்படும் சில்லுக் கருப்பட்டியின் சுவைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை போன்றவையும் பதநீரைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

பனை மரப் பொருட்களில் இருந்து கிடைக்கும் முக்கிய பானம் பதநீர். உடலுக்குக் குளிர்ச்சியையும் ஊட்டத்தையும் தரவல்லது பதநீர். விரைவில் செரிமானமாகி உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். தென் தமிழகத்தின் அநேக இடங்களில், பதநீரில் ஊற வைத்த நுங்கை ருசிப்பது அலாதியான அனுபவம். சுவையோடு சேர்த்து வெப்பத்தையும் தணிக்கவல்லது இந்தக் கலவை. பதநீரில் சுக்கு சேர்த்துத் தயாரிக்கப்படும் சில்லுக் கருப்பட்டியின் சுவைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை போன்றவையும் பதநீரைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

காலங்களைத் தாண்டிய எலுமிச்சை 

எலுமிச்சை சாற்றோடு, பனை வெல்லம் அல்லது உப்பு சேர்த்து அருந்துவதால் உற்சாகம் கரைபுரள்வதோடு, உடலின் நீர்ச்சத்தும் அதிகரிக்கும். மாரத்தான் போட்டியாளர்களும் அக்காலத்தில் மலைகளைக் கடந்து பயணம் செய்வோரும் ஆற்றலுக்குப் பயன்படுத்தியது எலுமிச்சையைத்தான். பொன் நிறத்தில் வறுக்கப்பட்ட சிறிதளவு சீரகத்தை எலுமிச்சை சாற்றில் கலந்து அருந்த, சூட்டினால் வரும் பேதி தடைபட்டு நிற்கும்.

பாரம்பரிய பானங்கள் 

அரிசியைக் கழுவிய கழுநீரில் பனைவெல்லமும், சிறிது வெண்ணெயும் கலந்த காலை பானம் வெயிலுக்கு உகந்தது. சுகப் பிரசவம் உண்டாக்க, கர்ப்பிணிகளுக்கு இன்றும் சில கிராமங்களில் இந்தப் பானம் அறிவுறுத்தப்படுகிறது (அரிசி கழுவிய நீருக்குப் பதில், சீரகம்/ சோம்பு கலந்த நீரையும் பயன்படுத்தலாம்). வெப்பத்தால் ஏற்பட்ட சோர்வைப் போக்க, மோர் சேர்ந்த கேழ்வரகுக் கூழுடன், பச்சை வேர்க்கடலையைக் கலந்து கொடுக்கும் வழக்கம் வடஆர்க்காடு மாவட்டத்தில் அதிகம் உள்ளது. வெட்டிவேர், சீரகம், வெந்தயம் கலந்த தண்ணீர் உள்ளுறுப்புகள்வரை குளிர்விக்கும்.

கோடை விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு நோயுண்டாக்கும் `ஃபிரிட்ஜ்’ நீருக்குப் பதிலாக, நீரில் கருப்பட்டி கரைத்த இனிப்பு பானத்தைக் கொடுத்து மகிழ்விக்கலாம். பன்னெடுங்காலமாக உள்ள நீராகாரம், கோடைக்கு ஏற்ற இதமான பானம்.

இவை மட்டுமல்லாமல் அனைத்து பானங்களுக்கும் அடிப்படையான தண்ணீரை மண்பானைகளில் சேமித்து வைத்து, ஒரு நாளைக்கு 3 4 லிட்டர்வரை அருந்துவது அவசியம். கற்றாழைக்குள் இருக்கும் கூழ் போன்ற பகுதியை எடுத்து மோர், சீரகம் சேர்த்து மத்தைக்கொண்டு கடைந்து கிடைக்கும் குளிர்ச்சிமிக்க பானத்தை, வேனிற் காலத்தில் பயன்படுத்தலாம். கிர்ணி (முலாம்), சாத்துக்குடி, மாதுளை, திராட்சை ஆகிய இயற்கை பழச்சாறுகளைத் தாராளமாகப் பருகலாம். பழச்சாறுகளைவிட பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. இருந்தாலும் வெயில் காலத்தில் நீரிழப்பை சமன் செய்வதற்குப் பழச்சாறுகளை அருந்துவதில் தவறில்லை. சுவையூட்டச் சர்க்கரைக்குப் பதில் வெல்லத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

செயற்கை பானங்களைத் தவிர்த்து, நம்மோடு உறவாடும் இயற்கை பானங்களுக்கு வாக்களித்து கோடைக் காலத்தைக் குளுமையாகக் கடத்துவோம்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் , தொடர்புக்கு: drvikramkumar86 at gmail.com