Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2016
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,479 முறை படிக்கப்பட்டுள்ளது!

தரமும் – நன்னெறிகளும்

getting-the-best-from-yourself-and-others“இந்த பொருள் ஜப்பானில் வாங்கியது … என்னதான் சொல்லுங்கள், சிங்கப்பூர் …சிங்கப்பூர்தான், அவங்க கூட நம்ம பொருள்கள் போட்டி போட முடியாது’ என்பது போன்ற சொற்றொடர்கள் முன்னரெல்லாம் அடிக்கடி நம் செவிகளில் விழும். அயல் நாட்டுப் பொருள்களின் மீதான மோகமும், அந்தப் பொருள்களுக்கு இணையான தரம் வாய்ந்த பொருள்கள் இங்கே நம் நாட்டில் தயாரிக்கப்படவில்லை என்பனவுமே இதற்கான காரணங்களாக இருந்தன.

 உற்பத்தி செய்யப்படும் பொருள்களானாலும் அல்லது வாடிக்கையாளர்களுக்கு செய்யப்படும் சேவைகளானாலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு என்ற ஒன்று இருக்கிறது. அதனை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், எவ்வளவு பெரிய நிறுவனமானாலும் தமது வாடிக்கையாளர்களை இழந்து விடும்.

 சேவை தொடர்பான ஒரு சூழலைப் பார்ப்போம்: பல தனியார் நிறுவனங்களில், வாடிக்கையாளர்களை முகமன் கூறி வரவேற்பது- அவர்களது தேவைகளைக் கவனத்துடன் கேட்டறிவது – குறிப்பிட்ட நடவடிக்கையை அல்லது சேவையை எவ்வளவு காலக் கட்டத்தில் முடிக்கமுடியும் என்று தெரிவிப்பது – நடவடிக்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிப்பது என, சேவை – துரிதமாகவும் ஒழுங்காகவும் நடக்கும்.

 ஆனால், பெரும்பாலான அரசு அலுவலகங்களில் நுழைந்தால் கிடைக்கும் அனுபவமே வேறு மாதிரியானது.

 என்ன … ஏது என்று கூட கேட்காமல் – போய் வரிசையில் நில்லுங்கள் என்பதும், வரிசையில் நின்று அருகில் வரும்போது, “நீங்கள் தவறான “கெளன்ட்டரில்’ வந்துவிட்டீர்கள், அடுத்த கடைசி “கெளன்ட்டரில்’ போய் விசாரியுங்கள் என்பதும், அலுவலகத்துக்கு வெளியில் ஃபாரம் கிடைக்கும், அதனை வாங்கி, நிரப்பிக் கொண்டு வாருங்கள் என்பதும், மதியம் மணி பனிரெண்டு ஆனாலும், “சார், அந்த கிளார்க் இன்று அரை மணி நேரம் “பெர்மிஷன்’, அதனால் தாமதமாகத்தான் வருவார், நீங்கள் நாளை வாருங்கள்’ என்பதும் சர்வ சாதாரணம்.

 இவ்வளவு கூட பரவாயில்லை, மேசை முன்னால் ஆள் நிற்பதையே கவனிக்காத மாதிரி சிலர் வெகு மும்முரமாக கோப்புகளைப் பார்ப்பதையும், நம்மில் பலரும் நல்ல அனுபவமாகப் பெற்றிருக்கக் கூடும்.

 இதனால், வாடிக்கையாளர்கள் குறித்த இரு வேறு அணுகுமுறைகளையும் உணர முடிகிறது. இப்படி பொருள்களாக இருப்பினும் – சேவையாக இருப்பினும் அவற்றின் மதிப்பு, அவற்றின் தரம் குறித்தே அளவிடப் படுகிறது.   இப்போது, தரம் குறித்த விழிப்புணர்வு வாங்குபவர்கள் இடையே பெரிதும் அதிகரித்து இருப்பதால் உற்பத்திச் சங்கிலியில் தரம் என்ற ஒன்று மிக முக்கியமான வளையமாக இருக்கிறது.

 தொழிற்கூடங்களில், தயாரிப்புகளின் தரம் குறித்து நிர்ணயம் செய்யவும் – தரத்தினை உறுதி செய்யவும் – மூலப் பொருள்கள் வாங்குவதிலிருந்து – உற்பத்தி செய்யப்படும் போதும் – விநியோகம், விற்பனைக்கு பின்னரான பராமரிப்பு சேவை என கண்காணிக்கவும் தனிப் பிரிவுகள் உள்ளன.

 இப்படி தரமான பொருள்கள் அல்லது சேவை, சந்தையை சென்று அடையும் போது, நல்ல பெயர், லாபம் பெற்றுத் தருகிறது. பொதுவாக, ஒரு நாடு தயாரிக்கும் பொருள்களின் தரத்துக்கும் அல்லது தரும் சேவைகளின் தரத்துக்கும், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதன் காரணமாக, மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

 தரமான பொருள்களை உற்பத்தி செய்யும் நாடுகளிலும், தரமான சேவைகளைத் தரும் நாடுகளிலும் மக்களின் வருவாய் அதிகரித்து, அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்வது கண்கூடு. நமது அரசு அலுவலகங்களின் அலட்சியமான, தவறான போக்குகளும் முதலீட்டாளர்களை விரட்டுகின்றன என்பதும் நம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயராது இருக்க ஓரளவுக்கு காரணம் என்பது சிந்திக்கத் தக்கது.

 ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை – சில அளவுகோல்கள் மூலம் மதிப்பிடுவது வழக்கம். முதலாவதாக அடிப்படை தேவைகள், இரண்டாவதாக வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த விஷயங்கள், மூன்றாவதாக மனித உரிமை சார்ந்த விஷயங்கள் என்று பிரிக்கப்படுகின்றன.

 அடிப்படைத் தேவைகள்: உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், குடியிருப்பு வசதி, சராசரி வருவாய் – சராசரி ஆயுள்காலம். வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த விஷயங்கள்: அடிப்படைக் கல்வி, தொலைத் தொடர்பு வசதி, மருத்துவ வசதி. மனித உரிமை சார்ந்த விஷயங்கள்: தனி மனித உரிமைகள் – உயர் கல்விக்கான வாய்ப்பு, சராசரி மின்சார உபயோகம் உள்ளிட்ட விஷயங்களும் ஒரு நாட்டின் வளர்ச்சி அல்லது அம்மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து அளவிடப் பயன்படும்.

 உதாரணத்துக்கு, பரப்பளவில் சிறியதான நார்வே நாட்டை எடுத்துக் கொண்டால் சராசரி ஆயுள்காலம் – 82 ஆண்டுகள், சராசரி ஆண்டு வருவாய்- சுமார் 66,000 அமெரிக்க டாலர்கள் (ரூ.42.90 லட்சம்), தனிமனிதனின் சராசரி மின்சாரப் பயன்பாடு- 65,992 யூனிட்டுகள், கல்வி பெற்றவர்கள்- அநேகமாக நூறு சதவீதம், சராசரி கல்விக்காலம்-17 ஆண்டுகள்.

 இந்தியாவின் அளவீடுகளை எடுத்துக் கொண்டல், சராசரி ஆயுள்காலம் – 68 ஆண்டுகள், தனிமனித சராசரி ஆண்டு வருவாய்-சுமார் 1600 அமெரிக்க டாலர்கள் (ரூ.1 லட்சத்து 4 ஆயிரம்), சராசரி மின்சாரப் பயன்பாடு-1010 யூனிட்டுகள், அடிப்படைக் கல்வி பெற்றவர்கள்- அநேகமாக 75%, சராசரி கல்விக்காலம்- 11 ஆண்டுகள்.

 இந்த அடிப்படைகளில் பார்க்கும்போது, வளர்ச்சியடைந்த உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் நம் நாடு இன்னும் பயணிக்க வேண்டிய தொலைவு மிக அதிகம் என்பது மட்டும் தெளிவு.

 வாழ்க்கைத் தரம் என்பது வேறு, மனிதனின் தரம் என்பது வேறு.
வாழ்க்கைத் தரத்தினை செல்வம் நிச்சயிக்கலாம். ஆனால், மனிதனின் தரத்தை அவன் கடைப்பிடிக்கும் நன்னெறிகளே நிச்சயிக்கின்றன. நன்னெறிகள் அவற்றைக் கடைபிடிக்கும் மனிதனை உயர்த்துகின்றன. ஆனால், அதனினும் மேலாக அவன் சார்ந்த மக்களையும் – சமுதாயம் – நாடு ஆகியவற்றையும் உயர்த்தவல்லது.

 அதற்கு நேரெதிராக, ஒருசிலர் நெறி பிறழ்ந்து தம் வாழ்க்கைத் தரத்தை மட்டும் உயர்த்திக் கொள்ளும்போது, அவர்கள் அதனால் பலன் பெறுவதுபோல் தோன்றினாலும், அவர்களைச் சார்ந்த சமுதாயம் – அல்லது நாடு பலன் பெறுவதில்லை. நன்னெறி பிறழ்ந்து – தவறுகளை அரசனே இழைக்கும்போது, அந்த நாடு மீள முடியாத வீழ்ச்சியடைகிறது. இதற்கான சான்றுகளை சரித்திரம் அடுக்குகின்றது.

 நன்னெறிகளைக் கற்றுத் தருவது யார்? நம் பழக்கத்திலும் – ரத்தத்திலும் கூட ஓரளவுக்கு அவை கலந்து கிடக்கின்றன. நம் முன்னோர் விட்டுச் சென்ற ஏராளமான நூல்கள் நமக்கு வழிகாட்ட இருக்கின்றன. ஆனாலும் அதைப் பயன்படுத்தும் பெரும் பொறுப்பு பெற்றோருக்கும் ,கல்வி புகட்டும் ஆசிரியர்களுக்கும் உள்ளது.

 வாழ்க்கைத் தரம் என்பது செல்வத்தினை அடிப்படையாகக் கொண்டது; நன்னெறிகள், சமுதாய நலன் – நாட்டின் நலன் கருதி வகுக்கப்பட்டவை. இவை இரண்டுமே முக்கிய அம்சங்கள்தான். வள்ளுவர் சொல்வது போல, செல்வத்தினை, பால் என்று கருதினால், நன்னெறிகள் – பண்புகள், அதனைத் தாங்கும் கலயமாக விளங்கும்…

 எனவேதான், பொருள் சேர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வள்ளுவர், செய்க பொருளை…… என்று நமக்கு ஆணையிடுகிறார். ஆயினும், அதனை நல்வழியில் – நல்ல நெறிகளின்மூலமே அடைய வேண்டும் என்று கூறுகிறார், “பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந் தற்று’ என்று விளக்குகிறார்.
நமக்கு, வள்ளுவர் சொல்லினை விட சிறந்த சொல் வேறு ஒன்று உண்டோ?

இரா. கதிரவன்