Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2016
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,309 முறை படிக்கப்பட்டுள்ளது!

உணவு அரசியல்!

புனிதமான தொழிலாக இருந்த மருத்துவத் துறை இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குள் இருக்கிறது. சுயநல சக்திகள் அறிவியலை வைத்து மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றன. நிறுவனங்களின் நிதியுதவியுடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதால் இறுதியில் எது அறிவியல், எது அரசியல் என்று தெரியாமல் போய்விடுகிறது. உணவு அரசியல் இங்கிருந்துதான் தொடங்குகிறது.

நம் மருத்துவர்களை மட்டும் குறைகூற முடியாது. அமெரிக்க இதய அமைப்பு (American Heart Association) குறைந்த கொழுப்பு உணவைப் பரிந்துரைக்கிறது. அதற்குப் பதிலாக உயர்கொழுப்பு உணவை ஒரு மருத்துவர் பரிந்துரைத்தால் என்ன ஆகும்? தடுக்கி விழுந்தால் வழக்கு போடும் மனப்பான்மையுள்ள அமெரிக்க மக்கள், நாளை வேறொரு காரணத்தால் மாரடைப்பு வந்தாலும், மருத்துவர் மேல் வழக்கு போடுவார்கள், இல்லையா? அறிவியல் பின்புலன் இல்லாத நீதிபதிகள், நீங்கள் ஏன் அமெரிக்க இதய அமைப்பு பரிந்துரைத்த டயட்டை கொடுக்கவில்லை?’ எனக் கேட்டு கோடிக்கணக்கான டாலர் நஷ்ட ஈடு கொடுக்கச் சொல்லி தீர்ப்பளிப்பார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களும் அவர்களின் லாபியும் மருத்துவர்களை அணுகுவதை விட இதுபோன்ற அதிகாரபீடங்களை அணுகினாலே போதும் என்பதை எளிதில் உணர்ந்து விட்டன. இதற்குச் சில உதாரணங்களை காண்போம்.

அமெரிக்க அரசின் புள்ளி விவரத்தின்படி, 60% அமெரிக்கர்கள் அதிக எடையுடன் இருக்கிறார்கள். 25% அமெரிக்கர்கள் உடல் பருமனாக (Obesity) உள்ளார்கள். எனவே, இயல்பான எடையுடன் இருக்கும் அமெரிக்க மக்களின் சதவிகிதம் வெறும் 15% மட்டுமே!

மீதமுள்ள 85% பேரும் என்ன செய்வார்கள்? எடையைக் குறைக்க உடற்பயிற்சி நிலையங்களில் சேர்வார்கள், மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள், எடையைக் குறைக்கும் உணவுகளை (சீரியல்கள், புரோட்டீன் பார்கள்) நாடுவார்கள். நல்ல உடல்நிலையில் இருக்கும் பலரையும் கூடுதல் எடை, உடல் பருமன் என சொல்லியதால் ஏற்பட்ட விளைவு இது. இதன் அரசியல் மிகவும் மோசமானது.

உடல் பருமன், அதிக எடை என்பதைக் கணக்கிடும் பி.எம்.ஐ. (Body Mass Index, BMI) எனும் முறை 1830-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்படி பி.எம்.ஐ. 25-க்கும் அதிகமாக இருந்தால் ஒருவர் அதிக எடை, 30 என்றால் உடல் பருமன் என்று கூறப்பட்டது. ஆனால் பி.எம்.ஐ. அளவீடே அடிப்படையில் அறிவியல் ஆதாரம் அற்றது. இந்த முறை ஜோசியத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆம், பி.எம்.ஐ. கணக்கீட்டு முறையை உருவாக்கிய க்விட்லட் (Adolphe Quetelet) என்பவர் ஒரு ஜோதிடர். கிரகங்களை வைத்து மனித எடையைக் கணிக்க முடியுமா என்று அறியவே பி.எம்.ஐ. கணக்கீட்டை உருவாக்கினார்.

BMI அளவை எப்படிக் கணக்கிடுவது?

பி.எம்.ஐ. = உடல் எடை / உயரம் (மீ.) * உயரம் (மீ.)

உங்கள் எடை 72 கிலோ. உயரம் 1.72 மீ. (172 செ.மீ)

எனில், உங்கள் பி.எம்.ஐ. = 24

பி.எம்.ஐ. அளவால் எவ்வித மருத்துவரீதியான பலனும் கிடையாது. பி.எம்.ஐ. சொல்கிறபடி சரியான எடையுடன் உள்ளவர் அதிக பி.எம்.ஐ. உள்ளவரை விடவும் அதிகநாள் உயிர்வாழ்வார் என்று எந்த ஓர் அறிவியல் ஆய்வும் கூறவில்லை. அறிவியல் கூறுவது என்னவென்றால், மிக ஒல்லியாக இருப்பவர்களும், மிக குண்டாக இருப்பவர்களும் அதிக அளவில் மரணமடைகிறார்கள் என்பதே. இதன்படி பி.எம்.ஐ. 35 என்கிற அளவை விட அதிகமாக உள்ளவர்களே அதிக அளவில் மரணம் அடைகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 10% மட்டுமே.

அறிவியல் இப்படி இருக்கிறது. ஆனால் மருத்துவப் பரிந்துரைகளோ வேறு மாதிரி உள்ளது. பி.எம்.ஐ. 25-ஐ தாண்டினால் ஆபத்து, 30 என்றால் பேராபத்து என ஊடகங்களும், அரசு அமைப்புகளும் மக்களை அச்சம் கொள்ள வைக்கின்றன. முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அதிக எடை கொண்டவர் என்று நாம் கருத முடியுமா? ஆனால் பி.எம்.ஐ. அளவீடுகளின்படி அவர் அதிக எடை உடையவர்.

பி.எம்.ஐ.-க்கும் மரணத்துக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த ஆய்வுகள், எவ்வித தெளிவான முடிவையும் அளிக்கவில்லை. 2004-ல் ஜாமா (JAMA) எனும் மருத்துவ ஆய்விதழில் வெளியான ஆய்வு, உடல் பருமனும், உடற்பயிற்சியின்மையும் ஆண்டுக்கு 4 லட்சம் மரணங்களை ஏற்படுத்துவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. ஆனால் அந்த ஆய்வு முடிவுகளை வெளியுலகில் கிடைக்கும் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டபோது நிலைமை தலைகீழாக இருந்தது.

உதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் அமெரிக்க மக்கள் மரணமடைகிறார்கள் (2010- 2011 வருடப் புள்ளிவிவரம்). இதில் 75% பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த 75% பேரில் அதிக எடை மற்றும் உடல் பருமன் (பி.எம்.ஐ. 25-க்கு மேல்) என்று கூறப்படுபவர்கள் இயல்பான எடை என்று சொல்லக்கூடிய பி.எம்.ஐ. அளவு 25-க்குக் கீழ் இருப்பவர்களை விட அதிக ஆண்டு உயிர் வாழ்ந்துள்ளார்கள்.

இவர்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால் சுமார் 6 லட்சம் மரணங்கள் ஆண்டுதோறும் அமெரிக்காவில் நிகழ்கின்றன. இந்த 6 லட்சம் மரணங்களில் அதிக அளவிலான மரணங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பவை – விபத்து மற்றும் புற்றுநோய். மூன்றாம், நான்காம் இடங்களில் தான் மாரடைப்பு, சர்க்கரை நோய் போன்றவை வருகின்றன. ஆக, இந்த 6 லட்சம் மரணங்களில் 4 லட்சம் மரணங்களுக்கு காரணம் உடல் பருமன் எனக் கூறுவது எப்படி என விவரமறிந்த விஞ்ஞானிகள் கேள்விகளை எழுப்பினாலும் ஊடகங்கள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. உடல் பருமனைக் கட்டுப்படுத்தினால் ஆண்டுக்கு 4 லட்சம் மரணங்களைத் தடுக்கலாம் எனப் பிரசாரம் செய்யப்பட்டது.

இதன்பின் நடந்ததுதான் காமெடி. இந்தச் செய்தியின் பரபரப்பு எல்லாம் அடங்கி ஒரு சில ஆண்டுகள் கழித்து சாவகாசமாக ‘4 லட்சம் என்பது தவறு. 2 லட்சமாக இருக்கலாம். அதையும் கூடத் தோராயமாகத்தான் சொல்ல முடியும்’ என ஒரு திருத்தத்தை தம் வலைத்தளத்தில், யார் கண்ணுக்கும் தென்படாத ஒரு பகுதியில் பதிப்பித்துவிட்டு இந்த ஆய்வை செய்த சி.டி.சி (center for disease control) எனும் அமைப்பு தன் பொறுப்பிலிருந்து நழுவிக்கொண்டது.

இது அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல 1990-களில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 1985-ல் அமெரிக்கச் சுகாதார மையம், பி.எம்.ஐ. அளவு 27.8 இருந்தால் ஒருவர் அதிக எடை கொண்டவர் எனக் கருதலாம் என நிர்ணயித்தது. இதன்படி ஐந்தடி ஏழு அங்குலம் (168 செ.மீ.) உயரம் உள்ள ஒருவர் 77 கிலோ எடை இருந்தால் அவர் இயல்பான எடை என்னும் வகையைச் சேர்ந்தவராகக் கருதப்படுவார். ஆனால் 1990-களில் திடீரென இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. பி.எம்.ஐ. 25-க்கு கீழே இருந்தால்தான் இயல்பான எடை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரே நாளில் சுமார் 3.7 கோடி அமெரிக்கர்கள் அதிக எடை கொண்டவர்கள் ஆனார்கள். அதாவது, இரவில் 77 கிலோ எடையுடன், பி.எம். ஐ அட்டவணைப்படி இயல்பான எடையுடன் உறங்கச் சென்றவர், அடுத்தநாள் காலையில் அதே 77 கிலோ எடையில் பி.எம்.ஐ. அட்டவணைப்படி அதிக எடை கொண்டவராக மாறினார்! (பழைய பி.எம்.ஐ. முறைப்படி 168 செ.மீ. உயரம் உள்ள ஒருவர் 77 கிலோ வரை எடை இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் புதிய முறைப்படி அவரது எடை 69 கிலோவுக்குள் இருக்கவேண்டும்.)

chlolestrolஇதனால் உண்டான விளைவுகள்? பி.எம்.ஐ. அட்டவணைப்படி அதிக எடை என்று முத்திரை குத்தப்பட்டவர்களை மருத்துவர்கள் உடற்பயிற்சி செய்யவும், உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கவும் பரிந்துரை செய்தார்கள். நோயாளிக்கு கொலஸ்டிரால் இருந்தால், கொலஸ்டிரால் மருந்தான ஸ்டாடின் பரிந்துரைக்கப்பட்டது. இதனால் அமெரிக்கர்களின் இன்சூரன்ஸ் கட்டணங்கள் உயர்ந்தன.

எதனால் இந்த பி.எம்.ஐ. அளவு குறைக்கப்பட்டது? இதுபோன்ற முடிவுகளை எடுப்பவர்கள் – அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளுமே. இவர்கள் அனைவரும் தங்களுடைய தேர்தல் நிதிக்கு மருந்து நிறுவனங்களையும் பிற உணவு நிறுவனங்களையுமே மிகவும் நம்பியிருக்கிறார்கள். மேலும் பி.எம்.ஐ. பரிந்துரைகளைச் செய்யும் மருத்துவ அமைப்புகள் பலவும் அந்த நிறுவனங்களிடம் நன்கொடை பெறுபவை. இவற்றில் பணிபுரியும் விஞ்ஞானிகள் பலரும் அந்த நிறுவனங்களிடம் நிதி பெற்று ஆராய்ச்சி செய்பவர்கள். அரசியல்வாதிகள் ‘விஞ்ஞானிகளே சொல்லிவிட்டார்கள்’ எனச் சொல்லி இதுபோன்ற முடிவுகளைச் சட்டமாக்கி விடுவார்கள். இது மருத்துவப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெறும். மருத்துவக் கல்லூரியில் ‘பி.எம்.ஐ. 25-க்கு கீழே இருந்தால் தான் இயல்பான எடை’ என்கிற பாடமே கற்றுத் தரப்படும். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில் அதிக எடை என்று முத்திரை குத்தப்பட்டவர் என்ன செய்வார்? நைக்கி ஷூவும், கெல்லாக்ஸ் சீரியலும், காடரேடும் வாங்குவார் (காடரேட் (Gatorade) என்பது நடைப்பயிற்சி, ஓட்டப்பந்தயம், ஜாக்கிங் மேற்கொள்ளும்போது பருகும் பானம். இந்தியாவிலும் விற்பனைக்கு உள்ளது. அமெரிக்காவில் இது இல்லாமல் யாரும் ஜாக்கிங் செல்ல மாட்டார்கள். http://www.gatorade.co.in/). பிறகு, வெயிட் வாட்சர்ஸ் (weight watchers) நிறுவனத்தின் எடைக்குறைப்புத் திட்டத்திலும் பணம் கட்டுவார்.

அதிகமோ, குறைவோ, எடைக்குறைப்பு நல்லதுதானே? அதனால் ஏதோ சில விஷயங்களை மிகைப்படுத்திச் சொன்னால்தான் என்னவாம் என்று கேட்கலாம்.

உடல் பருமனை மரணத்துக்குக் காரணமாக காட்டி மிகைப்படுத்துவதால் மக்கள் உடல்நலனை விட்டுவிட்டு வெயிட் வாட்சர்ஸ் போன்ற நிறுவனங்களில் பணம் கட்டி உடலை இளைக்க வைக்க மெனக்கெடுகிறார்கள். இந்தியாவிலும் இதுபோன்று உடலை இளைக்க வைக்க எத்தனை பேர் பணத்தையும் நேரத்தையும் இஷ்டத்துக்குச் செலவு செய்கிறார்கள்? ஒரு போலியான பயத்தை உண்டு பண்ணி எதற்காக அதைவைத்து நம் பணத்தையும் நேரத்தையும் பறிக்கவேண்டும்?

இதனால் சீரியல், ஓட்மீல் மாதிரியான உணவுகள் அதிகம் விற்பனையாகின்றன. எந்த வியாதியும் இல்லாமல், ஆனால் உடல் பருமனுடன் இருக்கும் சிலர் மருத்துவமனைக்குச் சென்று உடல் பருமனைக் குறைக்க அறுவைசிகிச்சையும் செய்து கொள்கிறார்கள். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உடல் பருமனாக இருப்பவர்களிடம் அதிகச் சந்தா தொகையை வசூலிக்கின்றன. மெக்டானல்ட்ஸ், கோகோ கோலா போன்ற நிறுவனங்களும் இதைப் பயன்படுத்தி ‘மாட்டிறைச்சி பர்கருக்குப் பதில் சிக்கன் பர்கரைச் சாப்பிடுங்கள், வழக்கமான கோக் வேண்டாம், கலோரி இல்லாத கோக்கைக் குடியுங்கள்’ என்று விளம்பரம் செய்து ஆரோக்கிய உணவு என்கிற பெயரில் குப்பை உணவுகளை விற்கின்றன. உடல் எடையைக் குறைக்கும் மருந்துகள் பல்லாயிரம் கோடி டாலர்களைச் சந்தையில் ஈட்டுகின்றன. அமெரிக்காவில் இடி இடித்தால் இந்தியாவில் மழை வரும் எனும் கதையாக அங்கே நடக்கும் இந்தக் கூத்துக்கள் அனைத்தும் இந்தியாவிலும் நடக்கின்றன. உலகெங்கும் இந்த உடல் பருமன் வணிகம் களைகட்டுகிறது.

ஒருபக்கம் உடல் பருமனை உருவாக்கும் குப்பை உணவுகளை பன்னாட்டு நிறுவனங்கள் கூவிக்கூவி விற்கின்றன. இதனால் உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு பன்னாட்டு உணவுகளுக்கு மாறுகிறார்கள். மறுபக்கம் இந்த உணவுகளால் ஏற்படும் உடல் பருமனைக் குறைக்க அதே பன்னாட்டு நிறுவனங்கள் ‘டயட் கோக் (Diet Coke), சப்வே சாண்ட்விச் (Subway Sandwich)’ போன்ற அதே குப்பை உணவுகளின் மறுவடிவங்களையும் விற்பனை செய்கின்றன. ஒரு நிறுவனத்தின் உணவுகளைக் கெடுதல் என்று அறிகிற மக்கள், அதேபோன்ற குப்பை உணவுகளை விற்கும் இன்னொரு நிறுவனத்தை நம்பி ஆரோக்கியம் என்கிற பெயரில் பணத்தை வீண் செய்கிறார்கள். இப்படிக் குப்பை உணவுகளால் வியாதிகள் வந்தபின் அவற்றைக் குணப்படுத்த மருந்துகளை நாடுகிறார்கள்.

இந்தச் சூழலில், கற்பனையான வியாதிகளை புதிதாக உருவாக்கி கல்லா கட்டும் விந்தையை என்னவென்று நொந்துகொள்வது?

இப்படிக் கற்பனையாக கண்டுபிடிக்கபட்ட வியாதிகளில் ஒன்று உயர் கொலஸ்டிரால் என்பது. கொலஸ்டிரால் அளவு 200-ஐ தாண்டினால் ஆபத்து, மாரடைப்பு வரும் எனப் பீதியூட்டப்படுவதால் பலரும் அச்சமடைந்து கொலஸ்டிரால் கட்டுப்பாட்டு மருந்துகளை (ஸ்டாடின்) எடுத்துக்கொள்கிறார்கள்.

ஸ்டாடின்கள், பல மருந்து நிறுவனங்களின் கற்பக விருட்சம். இவை கொலஸ்டிரால் அளவைக் குறைக்குமே ஒழிய மரணத்தைத் தடுக்காது. மேலும் இவற்றின் பின்விளைவுகள் ஏராளம். இந்திய ஜனத்தொகையில் சுமார் 8% பேர் ஸ்டாடின்களை உட்கொண்டுவருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு ஒன்று ‘8% இந்தியர்கள் மட்டுமே ஸ்டாடினை உட்கொள்கிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனக் கூறுகிறது. (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pubmed/24493771)

ஆனால் Open Journal of Endocrine and Metabolic Diseases எனும் அறிவியல் ஆய்விதழில் கட்டுரை எழுதிய மருத்துவப் பேராசிரியர்களான சுல்தான் மற்றும் ஹைம்ஸ் ஆகியோர் ஸ்டாடின்களைக் குறித்து கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்கள்:

ஸ்டாடின் விற்பனை சுமார் 200 கோடி டாலர் (சுமார் 12,000 கோடி ரூபாய்). மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய கறை, ஸ்டாடின்களே. கோடிக்கணக்கான எண்ணிக்கையில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களை நோயாளிகளாக்கி, ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை ஸ்டாடின் மூலம் ஏற்படுத்தியது பன்னாட்டு மருந்து நிறுவனங்களே.

நாம் (மருத்துவர்கள்) மருந்து நிறுவனங்களின் பொய்களில் மயங்கி ஸ்டாடின்களின் பின்விளைவுகளைச் சரியாக ஆராயாமல் விட்டுவிட்டோம்.

ஸ்டாடின்களால் நன்மையடைபவர்கள் யார் என்றால், ஏற்கெனவே மாரடைப்பு வந்த நடுத்தர வயது ஆண்கள்தான். வேறு யாருக்கும் ஸ்டாடினால் நன்மை கிடையாது. ஆனால், மாரடைப்பு வந்த நடுத்தர வயது ஆண்களுக்குக்கூட ஸ்டாடின் அளிக்கும் நன்மை என்பது தினம் ஆஸ்பிரின் சாப்பிடுவதை விட குறைவான அளவு நன்மைதான்!

ஸ்டாடின் உட்கொள்பவர்களில் 10,000 பேரில்…

* 307 பேருக்கு கண்புறை (cataract) வரும். ஸ்டாடின் பயன்படுத்துபவர்களுக்கு கண்புறை வரும் வாய்ப்பு 50% அதிகம்.

* 23 பேருக்கு சிறுநீரகம் பழுதடையும்.

* 40 பேருக்குச் சரிசெய்யவே முடியாத அளவு ஈரல் பழுதடையும்.

* பெண்களுக்கு அதிக அளவில் சர்க்கரை வியாதி வர காரணமாக ஸ்டாடின் அமையும்.

* வயதான பெண்கள் ஸ்டாடின் உட்கொண்டால் சர்க்கரை வியாதி வருவதற்கான சாத்தியக்கூறு 9% அதிகம்.

* பார்கின்சன் வியாதி வரும் வாய்ப்பும் ஸ்டாடினால் உண்டு.

* இதயத்தில் உள்ள சுவர்களில் சுண்ணாம்பு (calcium) படிய ஸ்டாடின்கள் காரணமாக உள்ளன. இது மாரடைப்பு வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

இந்த விளைவுகளால் ஸ்டாடின்கள் கொலஸ்டிராலைக் குறைக்கும் மருந்தே தவிர, இதய அடைப்பைத் தடுப்பதில் அவை துளியும் பயனற்றவை என்கிறது இந்த ஆய்வு.

மருந்து நிறுவனங்கள் உருவாக்கிய அடுத்தக் கற்பனை வியாதி – மன அழுத்தம். உலகில் மன அழுத்தம் அனைவருக்கும் வருவதுண்டு. ஆனால், இதையே ஒரு வணிகமாக்கி கோடிகளில் சம்பாதிக்கின்றன நிறுவனங்கள். மன அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகளின் விற்பனை, உலக மருந்து விற்பனையில் முதல் பத்து இடங்களில் உள்ளது. ஏதோ தாங்க இயலாத சோகத்தைப் போக்க இந்த மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்று மட்டும் எண்ணவேண்டாம். சோகத்துக்கு மட்டுமல்ல, மாதவிலக்கு சமயங்களில் உண்டாகும் எரிச்சல், விவாகரத்து, பணிச்சுமையால் உண்டாகும் மன அழுத்தம் போன்றவற்றுக்கும் இந்த மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

சோகமோ, மன அழுத்தமோ ஏற்பட்டால் முன்பு நண்பர்கள், குடும்பம், தியானம், கோயில் என்று பலவழிகளில் அதைச் சரிசெய்யமுடியும். ஆனால், இன்று எல்லாவற்றுக்கும் மருந்தே தீர்வாக எடுத்துச் சொல்லப்படுகிறது. இதற்கு ஏராளமான பின்விளைவுகள் உண்டு.

உடல் பருமன், மன அழுத்தம் போன்றவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் இன்னொரு பிரச்னை, பாலியல் சார்ந்த பிரச்னைகள். ஆண்குறி எழுச்சியின்மை (erectile dysfunction) வியாதியும் மருந்து நிறுவனங்களின் கற்பக விருட்சம். வயகராவின் கதையையும் அதன் விற்பனை குறித்தும் நாம் அறிவோம். இந்த வியாதியாவது 40, 50 வயதில் ஆண்களுக்கு வரக்கூடிய ஒரு பிரச்னை. ஆனால் மானுட வரலாற்றில் இல்லாத புதுமையாக, பெண் பாலியல் ஆர்வமின்மை (female sexual dysfunction) எனும் வியாதியைக் கண்டுபிடித்துள்ளன மருந்து நிறுவனங்கள்.

பெண்களுக்குப் பொதுவாக கர்ப்பம், வயது முதிர்தல், மன அழுத்தம், பணிச்சுமை, ஹார்மோன் சமநிலை தவறுதல் போன்ற காரணங்களால் பாலியலில் ஈடுபாடு இல்லாமல் போக வாய்ப்புண்டு. இதைப் பயன்படுத்தி சந்தையில் இதற்கும் மாத்திரைகள் வந்துவிட்டன. மூன்றில் ஒரு பெண் இவ்வியாதியால் பாதிக்கப்படுவதாக மருந்து நிறுவனங்களால் நடத்தப்படும் ஆய்வுகள் கூறுகின்றன.

பொதுவாக மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் ஆண்டு முழுக்க உறவு கொள்ளாமல் சில மாதங்களே உறவில் ஈடுபடும். மனிதனால் ஆண்டு முழுவதும் உறவுகொள்ள முடியும் என்றாலும் இயற்கையாகச் சிலசமயம் அவனது பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டும், சில சமயம் குறைந்தும் காணப்படும். 45 வயதுக்கு பிறகு ஆண்களின் டெஸ்டெஸ்ட்ரோன் (testosterone) ஹார்மோன் சுரப்பு குறைவதால் ஆண்குறி எழுச்சியின்மை, பாலியல் ஈடுபாடு குறைதல் போன்றவை ஏற்படுவது வழக்கம். ஆனால் எந்த வயதிலும், எந்தச் சமயத்திலும் விருப்பம் உண்டாகும்போது உறவுகொள்ள முடியாவிட்டால் அது நிச்சயம் வியாதிதான் என்கிற கண்ணோட்டம் இந்த நிறுவனங்களால் பரப்பப்பட்டுவிட்டது. மக்களும் அதற்காக மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்நாட்டின் பத்திரிகைகளில்தான் இதுதொடர்பாக எத்தனை விளம்பரங்கள்!

உணவு, மருத்துவம், ஆரோக்கியம், உடற்பயிற்சி என அனைத்துமே பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்ட காலகட்டம் இது. எதை நம்புவது, யாரை நம்புவது என மக்கள் கடும் குழப்பத்தில் உள்ளதால்தான் மாயவலைகளில் சிக்கிகொண்டு பல லட்சம் ரூபாய்களை இழக்கிறார்கள். பேலியோ டயட்டை முன்னிறுத்தும் ஆரோக்கியம் & நல்வாழ்வுக் குழுவில் இதுபோல எடையைக் குறைக்க பன்னாட்டு நிறுவனத்திடம் ஒரு நண்பர் ரூ. 3 லட்சம் கட்டி ஏமாந்த கதை தெரியவந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். அந்த நிறுவனம், காலை உணவாக ஒரு புரோட்டீன் பவுடரைக் கொடுத்துள்ளது. அதை நீரில் கரைத்துக் குடிக்கவேண்டும். புரோட்டீன் உணவு எடுத்துக்கொண்டபோது எடை 10 கிலோ இறங்கியது. ஆனால் அதை நிறுத்தினால் மீண்டும் எடை ஏறியது. ஆயுளுக்கும் அந்த புரோட்டீன் பவுடரையே எடுத்துக்கொண்டு எத்தனை லட்சம் செலவு செய்வது என்று யோசித்து அதிலிருந்து விலகினார் நண்பர். பிறகு பேலியோ டயட்டைப் பின்பற்றி இப்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அதுபோன்ற நிறுவனங்களின் கைப்பிடிக்குள் சிக்கிக்கொண்டு ஏமாறுபவர்களை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது

நன்றி:- நியாண்டர் செல்வன்