சிறந்த வேலையை எட்டிப் பிடிக்கும் சூட்சுமங்கள்!

  42p1புத்தகத்தின் பெயர் : கிராஜுவேட் டு எ கிரேட் கேரியர் (Graduate to a Great Career)

ஆசிரியர் : கேத்ரின் கபூடா (Catherine Kaputa) –  பதிப்பாளர் : Nicholas Brealey

ல்லூரியில் நன்கு படிக்கும் மாணவர்கள்கூட நல்ல புரஃபஷனல்களாக மாறும் வித்தை தெரியாமல் இருக்கிறார்கள். அது மாதிரியானவர்களுக்கு கேத்ரின் கபூடா என்னும் பெண்மணி எழுதிய ‘கிராஜுவேட் டு எ கிரேட் கேரியர்’ புத்தகம் நல்ல வழிகாட்டி.

  புத்தகத்தின் நோக்கம்!

42p2நீங்கள் தற்போது கடைசி வருடம் கல்வி பயிலும் மாணவ மாணவியா? கல்லூரிப்படிப்பு முடிந்தபின்னர் இப்போது உங்களுக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கப் போகிறது. அப்பா, அம்மாவிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காத ஒரு நபராக, ஒரு சுதந்திரப் பிறவியாக நீங்கள் மாறப்போகிறீர்கள். இதுவும் ஒரு மறுபிறவிதானே?

உங்களுக்கான மறுபிறவி அடையாளம் எப்படி உருவாகப் போகிறது? நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேலையில் இருந்துதானே? நீங்கள் வேலை பார்க்கும் துறை மற்றும் நிறுவனமே உங்கள் தனிப்பட்ட பிராண்டை நிர்ணயித்துக்கொள்ள உதவுகிறது இல்லையா?

இந்த முக்கியமான தருணத்தில் உங்கள் கைவசம் இருப்பது நீங்கள் என்ற ஒரே ஒரு முக்கியமான சொத்து மட்டுமே. உங்களின் மதிப்பை எப்படி அதிகரித்துக் கொள்வது என்ற வித்தையை நீங்கள் எந்த அளவுக்கு கற்று வைத்துக்கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு  நீங்கள் வெற்றி பெற்ற எக்ஸிக்யூட்டிவ்வாக ஆகிவிடுவீர்கள். அதைச் சொல்லித் தருவதுதான் இந்தப் புத்தகம்.

  என்ன சொல்கிறது?

கல்லூரியின் கடைசி வருடத்தில் வேலை தேடும் படலம் ஆரம்பிக்கும்போது நிஜமாகவே கொஞ்சம் கண்ணைக் கட்டவே செய்யும். எந்த வேலைக்கு விண்ணப்பித்தாலும் இதுக்கு நாம் தகுதியானவர் தானா என்ற சந்தேகம் கொஞ்சம் நம் மனதினுள் குடையவே செய்யும். என்னதான் தயாராகச் சென்றாலுமே இன்றைக்கு எங்கள் நிறுவனத்தைப் பற்றி ஒரு செய்தித் தாளில் வந்துள்ளதே என்று கேட்டு நம்மை சாய்த்துவிடுவார்கள்.  ஏனென்றால், இன்டர்வியூவுக்குப் பக்கம் பக்கமாக படித்த நாம் அன்றைய பேப்பரைப் படிக்காமல் விட்டிருப்போம். ஆனால், த்ரீ-டி பிரின்ட்டிங் பற்றி உன் பாட்டிக்கு எப்படி  புரிய வைப்பாய் என மொக்கை கேள்விகளைக் கேட்டுக் கலங்கடிப்பார்கள். இதற்கும் வேலைக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் நாம் கேட்க முடியாது.

படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமேயில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ராப்பகலாக படித்தாலுமே உங்களைப் பற்றி உங்களால் மார்க்கெட் செய்யமுடியா விட்டால் வேலைக்கான நேர்காணல்களில் உங்களால் வெற்றி பெறவே முடியாது.

சேர்வதற்குக் கடினமான மிகப் பெரிய கல்லூரி/பல்கலைக்கழகம், சூப்பர் ராங்க் போன்றவற்றை கொண்டவர்களே இது போன்ற பிரச்னைகளைச் சந்திப்பதில்லை. ஏனைய அனைவருமே இதுபோன்ற பிரச்னைகளைச் சந்திக்கவே செய்கின்றனர்.?42p3

வேலை தேடும் எக்கச்சக்க புத்தம் புதிய பட்டதாரிகளில் நீங்களும் ஒருவர். நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த வேலையைச் செய்வீர்களா என்கிற கேள்விக்கு பதிலளிப்பதை விட இன்டர்வியூவுக்கு  வந்திருக்கும் இருநூறு பேர்களை விட உங்களால் இன்னமும் சிறப்பாக ‘இம்ப்ரஸ்’ செய்ய முடியுமா? என்றுதான் பார்ப்பீர்கள்.

நீங்கள் முதலில்  புரிந்துகொள்ள வேண்டியது, நாட்டின் பொருளாதாரங்கள் வளரும் வேகம், ஆரம்ப நிலை ஊழியர்களை மிக அதிக அளவில் பணியில் அமர்த்தும் அளவில் வளர்வதில்லை. இதனாலேயே கல்லூரியை விட்டு வெளியில் வரும் அனைவருக்கும் ஒரு நல்ல வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாகி விடுகிறது.

‘உங்க அப்பா காலத்து ஜாப் மார்க்கெட் இப்ப கிடையாது. நல்லா படிடா! நல்ல வேலை கிடைக்கும்’ என்று சொல்லி அப்பா  வளர்த்திருப்பார். நம் உலகமானது, ஒரு வேலையில் இருப்பது என்ற நிலைமை போய், வேலையில் தொடர்ந்து இருப்பதற்குத் தேவையான தகுதிகளுடன்  இருப்பது என்ற நிலைமைக்கு மாறிவிட்டது. படிக்கும் திறனுக்கும் வேலைத் திறனுக்கும் இப்போது சம்பந்தமே இல்லாது போய்விட்டது. சொல்லப்போனால் பள்ளி, கல்லூரிகளில் எந்த குணமெல்லாம் உங்களைப் படிப்பில் வெற்றி பெற உதவியதோ, அவை எல்லாம் உங்களை வேலையில் வெற்றி பெற உதவாது.

பள்ளி, கல்லூரி, கல்வி என்பது உங்கள் தனி உழைப்பைக் கொண்டுக் கணிக்கப்படுவது. நன்றாகப் படித்து உருண்டுபுரண்டு கஷ்டப்பட்டு மார்க் வாங்கிவிடலாம். ஆனால், பள்ளி, கல்லூரியில் அடுத்தவருடன் சேர்ந்து பரீட்சை எழுதினால் (காப்பி அடித்தல்) அது கொலைக் குற்றம். ஆனால், வேலையிலோ அடுத்தவர் களுடன் எந்த அளவு சேர்ந்து பணிகளைச் செய்கிறோம் என்பதில்தான் ஒருவரது வெற்றியே இருக்கிறது.  பணியாளர்கள் படிப்பு பாதி, நடப்பு பாதி என கலந்து செய்த கலவையாக இருக்க வேண்டுமென்று நிர்வாகங்கள் நினைக்கின்றன.

இன்றைக்கு பணி செய்யும் இடத்தில் விடாமுயற்சி, பேச்சின் தன்மை, சக பணியாளர்களுடனான உறவை வளர்த்தெடுத்தல், தன்னை முன்னிறுத்தி செயல்படுதல் (Self promotion), தலைமைப் பண்பு, ஸ்ராட்டஜிக் நெட்வொர்க்கிங் போன்றவை படிப்புக்கு சரிநிகர் சமானமாக தேவைப்படுகிறது. ஒரு தலைமுறைக்குமுன் நன்கு படித்தால் நல்ல வேலை என்றிருந்தது. இன்றைக்கு படிப்பு என்பது நல்லதொரு வேலைக்கு உத்தரவாதம் தரும் விஷயமில்லை.

நல்ல, திறமையான, அதிகம் படித்த பலரும் குறைவான சம்பளத்துக்காக மோசமான வேலைகளில் இருப்பதை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறோம். ஏன் இந்த நிலை?  பெர்சனல் பிராண்டிங் என்ற ஒன்று இல்லாததாலேயேதான். உங்களுடன் பணிபுரிபவர்கள், உங்கள் வாடிக்கை யாளர்கள், உங்களுடன் கணக்கு வழக்கு வைத்திருப்பவர்கள் போன்றவர்களே உங்கள் பிராண்டுக் கான டார்கெட் ஆடியன்ஸ்.  அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பிராண்டாக நான் மாற என்ன செய்ய வேண்டும் என்று கேட்காதீர்கள். சற்று மாற்று யோசனையாக, என்னிடம் அவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என சிந்திக்க ஆரம்பியுங்கள்; உங்களுக்கு சுலபத்தில் வழிகள் திறந்துவிடும்.

  தேவை நம்பிக்கை!

நம்பிக்கை என்பதே வெற்றிக்கான சிறந்த வழி. நம்பிக்கையா, அது நம்மிடம் கொஞ்சம் கூட இல்லையே என்கிறீர்களா? இருப்பது போல் காண்பியுங்கள்.  நீங்கள் நம்பிக்கையாக இருப்பதுபோல் திறமையாக நடித்தால் எதிரே இருப்பவர் நம்பித்தான் ஆகவேண்டும். உடல்மொழி, ஆடைகள் போன்றவை எல்லாம் இதற்கு அரணாக இருந்து உதவச்  செய்யும் அளவுக்கு அது உங்களிடம் இருக்கவேண்டும்.

சுருக்கமாக, தோற்றம் (Visual Identity) + மொழி (Verbal Identity) + செயல்திறமை (Performance skill set) = வேலைக்கான அடையாளம் (Career Identity) என்கிறார் ஆசிரியர். அதாவது, உங்களுடைய சுய முன்னிலைப்படுத்துதல் (Self Presentation) மற்றும் தோற்றம் (presence), ஐடியாக்கள் மற்றும் ஐடியாக்களை வெளிப்படுத்தும் வார்த்தைகள், உங்கள் திறமை என்கிற மூன்றுமே உங்களை வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் செல்கிறது. இறுதியாக, உங்களுடைய கரியரை நீங்கள் தனி மனிதனாக தொடங்கி, செய்ய முடியாது என்பதை அவசியம் புரிந்துகொள்ளுங்கள்.
படிப்பில் மட்டுமே நீங்கள் போடுகிற உழைப்புக்கு பலாபலன் கிடைக்கும். உங்களுக்கு யாரைத் தெரியும், யார் யாருக் கெல்லாம் உங்களைத் தெரியும் என்பதே உங்களை சரியான பணியை நோக்கி இழுத்துச் செல்லும்.

எனவே, நெட்வொர்க்கிங் என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். கிட்டதட்ட 70 சதவிகித அளவிலான நல்ல வேலை களுக்கான பணியாளர்கள் நெட் வொர்க்கிங் மூலமே நியமிக்கப்படுகின்றனர் என்கின்றன ஆய்வுகள். எனவே, நெட் வொர்க்கிங் என்பது கேரியரில் உயர மிக அவசியம்.

கல்லூரியின் இறுதி ஆண்டில் இருக்கும் படிக்கும் மாணவர்கள் அனைவருமே அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

நாணயம் டீம்