குழந்தைகளின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது எப்படி? – பெற்றோர்கள் கவனத்துக்கு
தற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குறிப்பாக பழக்கிவிடப் படுகின்றனர். இதற்கு பெரும்பான்மையான காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு முறையே. மேலும், பல குழந்தைகள் பிரச்னைகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதை விடுத்து, ஒதுங்கி செல்லவே துணிகின்றனர். எதையும் தைரியமாக ஒப்புக்கொள்ளும் அல்லது தைரியமாகப் போராடும் நிலையும் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் பெரும்பாலும் ஒரு சில குடும்பங்களில் ஒரு குழந்தையே போதும் என்ற தங்களது சுயநலம்தான் காரணம். இதனால் குழந்தைகள் தனித்து விடப்பட்டு, சுயநலமாகவே வாழப் பழகிவிடுகின்றனர். தனக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுக்கும் பண்பு தானாகவே வளர்ந்து, அது ஆரோக்கியமான பழக்கமாகிவிடும்.
சின்னச் சின்ன தவறுகளும், புறக்கணிப்புகளும் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கி தவறான முடிவுகளுக்கு கொண்டு சென்று விடுகின்றனர். எது அவமானம், எது பாராட்டுக்குரியது என்பதை அறியாமலே அந்த உணர்வுகளை தங்களுக்குள் எடுத்துக் கொண்டு சரியான முடிவு எடுக்க முடியாமல் பல குழந்தைகள் திணறி வருகின்றனர்.
இதற்கு எல்லாம் காரணம் தன்னைச் சுற்றி உள்ளவர்களை நம்பிக்கை இல்லாதவர்களாக மாற்றி வருவதே. யாரையும் நம்பாதே, எதன் மீதும் பற்றுக் கொள்ளாதே, உதவப் போனால் உபத்திரம் ஏற்படும், ஒருவரிடம் உதவி கேட்டு நிற்கும் நிலையில் இருக்காதே இப்படி பெற்றோர்கள் கண்டிப்பு என்கிற பெயரில் தவறான போதனைகள் கொடுத்து வருகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த பிரச்னைகளே. இதை தங்கள் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்கும் பொழுது, அவர்கள் முன் கூட்டியே அந்த பிரச்னைகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் நினைக்கின்றன.
இதனால் குழந்தைகள் வளரும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை யாரிடமும் நம்பகத்தன்மையாக முன் வந்து அதற்கான தீர்வுகளை தேடுவதில்லை. இணையதளம், சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்களுக்கான தீர்வுகளை தேடுகின்றனர். அந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபட, மற்றொரு பிரச்னைகளின் வசம் சிக்குகின்றனர்.
இப்படி குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம்,
* பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதை தவிருங்கள்.
* ஒரு தோல்வி ஏற்பட்டால், அதுதான் வெற்றிக்கான முதல் படி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
* ஏமாற்றங்கள் தோல்விகள் அல்ல என்பதை எடுத்து கூறுங்கள்.
* அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள். எது அத்தியாவசியம், எது அத்தியாவசியம் இல்லாதது என்பதை சொல்லிக் கொடுங்கள்.
* ஒரே குழந்தை இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எல்லாமே தனக்கானது என்கிற மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே கற்றுக் கொடுங்கள்.
* அடிக்கடி உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கிருக்கும் குழந்தைகளோடு ஒன்று கலந்து பழகும் சூழலை உருவாக்குங்கள்.
* ஆண், பெண் வித்தியாசம் பற்றி கற்றுக் கொடுங்கள்.
* இரண்டும், மூன்று குழந்தைகள் இருப்பின், ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, குறை சொல்லிப் பாராட்டுவது போன்றவற்றை விட்டுவிட்டு, தட்டிக் கொடுத்து சமமாக நடத்துங்கள்.
* உங்கள் வீட்டுக்கு வருபவர்களிடம் கொடுக்கும் பொருட்களை, உங்கள் குழந்தைகளின் கரங்களாலேயே கொடுக்க வையுங்கள்.
* பள்ளிக்கூடங்களில் பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதை வீட்டிலும் கற்றுக் கொடுங்கள்.
* கணவன், மனைவி இடையே பிரச்னையோ, உறவினர்களிடம் மனஸ்தாபமோ இருந்தால் அவற்றை உங்கள் குழந்தைகள் முன்பு காட்டிக் கொள்ளாதீர்கள்.
* செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்.
* போதும் என்கிற மனப்பான்மைக்கு பழக்குங்கள்.
* அவர்களுடன் நட்புடன் பழகுங்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மறைக்காமல் உங்களிடம் குழந்தைகள் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.
-வே. கிருஷ்ணவேணி