Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,542 முறை படிக்கப்பட்டுள்ளது!

முன்மாதிரி அரசியல் தலைவர்

ஹதீஸ் விளக்கம் : புஹாரி 2739 – மௌலவி இஸ்மாயில் ஸலபி

‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளிக் காசையோ, தங்கக் காசையோ), அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளைக் கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும் தர்மமாக வழங்கிச் சென்ற ஒரு நிலத்தையுமே அவர்கள் விட்டுச் சென்றார்கள்’ அறிவிப்பவர்: ஜுவைரியா பின்த் ஹாரிஸ் (ரலி) நூல்: புகாரி 2739, 2839, 2912, 3098, 4461

பத்து ஆண்டுகள் பேரரசராக ஆட்சி புரிந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்களின் பெயர்ப்பட்டியலையே இந்த ஹதீஸ் எமக்குத் தெளிவு படுத்து கின்றது.

ஆட்சியதிகாரம், நிர்வாகப் பொறுப்புகள், பதவி பட்டங்கள் என்பன அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட அமானிதங்கள், ஆதலால் அவற்றை உரிய முறையில் நிறைவேற்றுவது அவசியமாகின்றது. அவற்றைத் துஷ்பிரயோகம் செய்த நிலையில் மரணிப்போரின் மறுமை நிலையோ மகா பயங்கரமாகவே இருக்கும். நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தார்கள்.

‘நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148

அல்லாஹ்வின் தூதரே! என்னை நீங்கள் பதவிக்கு நியமிக்க மாட்டீர்களா? என்று நான் கேட்ட போது அவர்கள் தன் கையால் என் தோளைத் தட்டி விட்டு ‘அபூதர்ரே! நீ பலவீனமானவன். ஆனால் பதவி (அதிகாரம்) என்பதோ அமானிதமாக இருக்கிறது. யார் அப்பதவிக்கு வந்து பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுகிறாரோ அவர் தவிர ஏனையோருக்கு அது இழிவையும் வருத்தத்தையுமே கொடுக்கும்’ எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 1825)

பாராளுமன்ற, மாகாண, நகர, உள்ளூராட்சி போன்ற தேர்தல்களுக்காக இலட்சக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொட்டி அக்கிரமம், அநியாயம், அச்சுறுத்தல் போன்ற அசுத்தங்களிலும் ஈடுபட்டு இஸ்லாமிய நெறிமுறைகள் எதையுமே பேணாது, எப்படியும் வெற்றி பெற்று உலக சுகபோகங்களில் திளைக்க வேண்டுமென்ற மோகத்தில் பலர் அரசியலில் ஈடுபட்டிருக்கும் இக்காலத்தில் தான் நபி(ஸல்) அவர்கள் தமது பாசறையில் வளர்த்த உத்தமர் ஒருவர் சமுதாய நலனை மாத்திரமே கருத்திற் கொண்டு பதவி கேட்டதற்கு மேற்கண்டவாறு உபதேசிக்கிறார்கள். இது அண்ணலாரின் அரசியல் ஆளுமையையே காட்டுகிறது.

இஸ்லாமியக் கடமைகள், ஒழுக்கம் மற்றும் பண்பாட்டுப் போதனைகள், நடத்தை சார்ந்த விஷயங்கள் போன்ற துறைகளில் வழி காட்டிய அண்ணல் நபி(ஸல்) அவர்கள், தன்னை ஒரு ஆன்மீகவாதியாக அடையாளப்படுத்திய அதே நேரம் தான் ஒரு முன்மாதிரி மிக்க அரசியல்வாதி என்பதையும் நிரூபித்து விட்டே சென்றிருக்கிறார்கள். தனக்கிருந்த ஆன்மீகப் பலத்தை வைத்து அரசியல் இலாபம் பெற அவர்கள் ஒரு போதும் முற்படவில்லை என்பதை நாம் விளக்க முற்பட்டுள்ள ஹதீஸை நடுநிலையோடு சிந்திக்கும் எவரும் விளங்கிக் கொள்ளலாம்.

ஒரு முஸ்லிம் அரசியல்வாதியைப் பொறுத்தவரை தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுடன் இதய சுத்தியுடனேயே நடந்து கொள்ள வேண்டும். மக்கள் நலனையே மையப்படுத்தி மறுமை விமோசனததிற்கான சீர்திருத்தப் பணிகளையே அவர் முன்னெடுக்க வேண்டும். அபிவிருத்தி நிமித்தம் பெறும் நிதிகளில் சுயலாபம் பெறுவதோ, அவற்றை துஷ்பிரயோகங்களில் ஈடுபடுத்துவதோ கூடாது. இலஞ்சம், ஊழல், மோசடி போன்ற தீய விவகாரங்களை விட்டும் அவர் முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய மார்க்க விழுமியங்கள் பேணப்பட்டதாகவே அண்ணலாரின் அரசியல் வாழ்வு அமைந்திருந்தது.

இன்று எமது அரசியல்வாதிகளில் பலர் அதிகாரத்தைத் தமது சுயநலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதைக் காண்கிறோம். தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் சொத்துக்கள் வாங்கிக் குவித்தல், அறுசுவை உணவுகளுடனும், அரண்மனை வாசத்துடனும் சொகுசு வாழ்வு மேற்கொள்ளல், ஆடம்பரப் பொருட்கள் பாவனை, அதிவுயர் உடைகள், மற்றும் குளிரூட்டப்பட்ட வாகன வசதிகள் ஏற்பாடு என அவர்களது ஆடம்பரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இதனால்தான் அரசியல்வாதிகள், அரசு நிர்வாகிகள் போன்றோரின் அதிகார துஷ்பிரயோகங்களால் ஏற்படும் இலஞ்ச ஊழல்களை விசாரிக்கவென ‘இலஞ்ச ஊழல் ஆணைக் குழு’ என்றொரு திணைக்களம் அரசாங்கத்தால் ஏற்படுத்தப் பட்டிருப்பதையும் பார்க்கிறோம். ஆனால் நபி(ஸல்) அவர்களின் அரசியல் நடவடிக்கைகளோ இவை எல்லாவற்றையும் விட முற்றிலும் வித்தியாசமாகவே காணப்படுகின்றது.

எமது அரசியல்வாதிகளுக்கும் செல்வாக்கை விட பன்மடங்கு செலவாக்கே அன்று மாமன்னர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இருந்தது. நுபுவ்வத்தின் பணியை பூரணமாக நிறைவேற்றி இஸ்லாமிய மார்க்கத்தின் ஒரே ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்த மாநபி(ஸல்) அவர்கள் மக்களால் எவ்வளவு மதிக்கப்பட்டார்கள் என்பதையும் கூறத் தேவையில்லை.

நபிகளாரின் நடவடிக்கைகள் அனைத்தையும் சம்பூரணமாகப் பின்பற்றக் கூடிய தொண்டர்களையும் அவர்கள் பெற்றிருந்தார்கள். இப்படி எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீகத் தலைமையும், அசைக்க முடியாத ஆட்சித் தலைமையும் அவர்களிடம் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தி அவர்கள் பொருள் திரட்ட வில்லை. வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வில்லை. தமது பெயரிலும் தமது குடும்பத்தினர் பெயரிலும் சொத்துக்கள் வாங்கிக் குவிக்க வில்லை. அரண்மனையுடன் கூடிய சொகுசு வாழ்கை வாழவில்லை என்பதையே நாம் விளக்க முற்பட்டுள்ள ஹதீஸ் எடுத்தியம்புகிறது.

அரசியல்வாதிகளில் பலர் இன்று தாம் பெற்றுள்ள அதிகாரத்தைத் தம்மையும், தமது குடும்பத்தையும் வளப்படுத்திக் கொள்ளவே பயன்படுத்துகின்றார்கள். அறுசுவை உணவுகளுக்கும் விதவிதமான பானங்களுக்கும் பணங்கள் பல்லாயிரக் கணக்கில் வீண்விரயமாக்கப் படுகின்றன. ஆனால், இறைவழிகாட்டலில் நின்று ஆட்சி நடத்திய அப்பேரரசர் முஹம்மத் (ஸல்) அவர்கள் உட்கொண்ட உணவைப் பார்க்கின்ற போது மிகப்பெரும் ஆச்சரியமாகவே இருக்கின்றது. அரசர்கள் உண்ட உணவுகளை அவர்கள் கண்டதில்லை. ஏன் சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் தொடர்ந்து உண்டதில்லை என்பதற்கு அவர்களின் தூய வரலாறு எமக்கு தக்க சான்றாக இருக்கின்றது.

‘எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்பு பற்ற வைக்கப் படாமலே கழிந்திருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தது. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள் அதை அருந்துவோம்’ என விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: உர்வா (ரலி), நூல்: புகாரி 2567,6459)

‘நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிராற உண்டதில்லை’ என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: புகாரி 5374)

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன். உடனே என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் வந்து இதைக் கூறினேன். ‘அதற்கவர்கள், என்னிடம் ஒரேயொரு ரொட்டித் துண்டும், சில பேசீச்சம் பழங்களும் தான் உள்ளன. அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய் விடும்’ என்றார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியாளர் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 3802)

‘ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டார்கள். அப்போது அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரைக் கண்டார்கள். இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக் காரணம் என்ன? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்க, அவ்விருவரும் ‘பசி’ என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் எதற்காக வெளியே வந்துள்ளீர்களோ அதற்காகவே நானும் வெளியே வந்துள்ளேன்’ என்றார்கள்…(ஹதீஸ் சுருக்கம்) நூல்: முஸ்லிம் 3799)

மேற்படி ஹதீஸ்களும், இதுபோன்றே இன்றும் பல ஹதீஸ்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பதவியைப் பயன்படுத்தி பொருள் திரட்டவோ, செல்வத்தைக் குவிக்கவோ முனையவில்லை என்பதைத் தெளிவுற விளக்குவதை அறியலாம்.

ஆன்மீக நெறியுடன் கூடிய அரசியல் பாசறையில் தன்னால் வளர்க்கப்பட்ட அதிகாரிகளிடம் கூட இலஞ்ச, ஊழல் வாடை வீசுவதையோ, மோசடிகள் இடம் பெறுவதையோ அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறவே விரும்பவில்லை. அமானித்தைப் பேணுவதில் அதிகாரிகளிடம் காட்டிய கண்டிப்பு, அன்னாரது முன்மாதிரி மிக்க அரசியல் கலாச்சாரத்தையே எடுத்துக் காட்டுவதாக இருக்கிறன்றது.

‘நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் ‘இப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்த போது ‘இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா? என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில் யாரேனும் அந்த ‘ஸகாத்’ பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், மாடாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்’ என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி ‘இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) நூல்: புகாரி 2597, 6636, 6679)

தந்தைக்கிருக்கும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பிள்ளைகளும் அரசியல்வாதிகளின் நெருங்கிய உறவினர்களும் சகாக்களும் எமது மக்களின் வரிப்பணமாகிய அரசுக் கருவூலத்தில் கையாடல்கள் செய்வதும் அவற்றை வீண் சுகபோகங்களுக்காக அள்ளி இறைப்பதும் தற்கால அரசியலில் உணரப்படாத தீமைகளாகவே காட்சியளிக்கின்றன. திறை சேரிப் பணங்களின் இத்தகைய துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு அரசியல் வாதிகளின் பூரண ஒத்துழைப்பும் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், முன்மாதிரி மிகு அரசியல்வாதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திறைசேரி விடயத்தில் தன்னையும் சுத்தப்படுத்தி, தனது குடும்பத்தினரையும் எந்தளவு பாதுகாத்து இருக்கிறார்கள் என்பதை பதவிக்கு வரும் ஆட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் நிர்வாகிகளும் தம்மை ஒருமுறை சுய விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் எனும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரன் ஒருவர் அவற்றிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து ‘துப்பு துப்பு’ என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். (நூல்: புகாரி 1485, 1491, 3072)

இங்கே நபி (ஸல்) அவர்களின் பேரனாக இருந்தவர் அப்போது சிறுவயதுப் பாலகர். குழந்தைகளின் தவறுகளுக்கு இறைவனும் தண்டனை கொடுப்பதில்லை. இத்தகைய தவறுகளை மனிதர்களில் எவரும் பொருட்படுத்துவதுமில்லை. இருப்பினும் அரசுக் கருவூலம் என்பது அமானிதமாதலால் அதை எம்முறையிலும் துஷ்பிரயோகம் செய்யலாகாது என்ற நபிகளாரின் உறுதிமிகு கொள்கையே வாயில் போட்ட ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட விழுங்க விடாமல் துப்பச் செய்தமைக்கான காரணமாக இங்கே அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மாபெரும் தலைவராகத் திகழ்ந்த பெருமானார் (ஸல்) அவர்களது ஆடம்பரமில்லாத எளிமையான அரசியலுக்கும், தான், குடும்பம், உறவினர் என்ற சுயநலமில்லா நடவடிக்கைகளுக்கும் இன்னும் பல சான்றுகளை அவர்களது தூய வரலாறு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

ஒரு முறை யுத்தக் கைதிகள் பலர் பிடிபட்டிருந்தனர். அப்போது வீட்டு வேலைகள் செய்து கையில் தழும்புகளும் ஆடைகள் அழுக்கடைந்து முகம் வாடி வதங்கிய நிலையிலும் காணப்பட்ட தன்னுடைய மனைவி பாத்திமா (ரலி) அவர்களைப் பரிதாபக் கண்கொண்டு பார்த்த அலி (ரலி) அவர்கள், உன் தந்தையிடம் சென்று உனக்கொரு பணியாளைக் கேட்கலாமே! உனக்கு அது உதவியாக இருக்குமே! என வேண்ட, பெருத்த எதிர்பார்ப்புக்களுடன் தந்தையின் இல்லம் விரைகிறார்கள் பாத்திமா (ரலி) அவர்கள். அங்கு சென்று தந்தையிடம் பணியாள் கேட்ட போது நபி ஸல் அவர்கள், ‘அஹ்லுஸ் ஸுப்பா (திண்ணைத் தோழர்கள்) பட்டினியில் படுத்திருக்க உங்களுக்குப் பணியாளைத் தர என்னால் முடியாது. ஆயினும் பணியாளளை விட சிறந்த ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? எனக் கேட்டு விட்டு, உறங்கும் முன்னர் சுப்ஹானல்லாஹ் 33, அல்ஹம்துலில்லாஹ் 33, அல்லாஹு அக்பர் 34 விடுத்தம் கூறுமாறு கற்றுக் கொடுத்தார்கள். இதனை அன்னையவர்களும் திருப்தியாக ஏற்றுக் கொண்டார்கள். (பார்க்க: பத்ஹுல் பாரி 6318 ஆம் ஹதீஸ் விளக்கவுரை)

பாத்திமா (ரலி) அவர்கள் யார்? பெருமானார் (ஸல்) அவர்களின் அளவில்லா அன்பிற்கும் பாசத்திற்கும் உரித்தான அன்பு மகள். சுவனத்துப் பெண்களின் தலைவி. இப்படியிருந்தும் பொதுச் சொத்துக்கள் பாவனை விடயத்தில் குடும்பத்திற்கே கொடுக்காமல் கண்டிப்புடன் அண்ணலார் அரசியல் நடாத்தியிருக்கிறார்கள் என்றால் அது பேராச்சரியம் தான்.

இன்றைய அரசியல் காலாச்சாரம் வெறுமனே உலகாதாய சிந்தனைகள் நிரம்பியதாகவே காணப்படுகின்றன. எனவே தான் அரசியல் மேதை நபி (ஸல்) அவர்களது அரசியல் நடவடிக்கைகளின் மேற்படி வெளிப்பாடுகளில் ஒரு துளியைக்கூட இன்றைய அரசியல் வாதிகளிடம் காணக்கிடைக்க முடியவில்லை. உட்பகை, அதிகாரப் போட்டி, பதவி மோகம், உட்கட்சி சண்டைகள், வன்முறைக் கலாச்சாரங்கள், சொகுசு வாழ்வு, சமூக சிந்தனையின்மை என்பன உலகாதாய சிந்தனைகளில் அவர்கள் ஊறிவிட்டனர் என்பதற்குக் கட்டியங் கூறுகின்றன.

அரசியல் பிரவேசத்தின் மூலம் அதிகாரம் பெற்று தம்மை வளப்படுத்திக் கொள்ளும் அடுத்த முக்கிய விடயமே ஆடம்பர வீடும் அதற்கான பாவனைப் பொருட்கள் ஏற்பாடுகளாகும். நன்கு வடிவமைக்கப்பட்ட வீடு, அதற்குள் அலங்கார மின் விளக்குகள் மற்றும் பல நானாவிதப் பொருட்கள் ஆகியன குறுகிய காலத்திற்குள் அரசியல் அதிகாரம் பெறுபவர் சம்பாதித்து விடுபவைகளாகும். ஆனால், பத்து ஆண்டுகள் ஆட்சி புரிந்த மாமன்னர் நபி (ஸல்) அவர்களின் அரண்மனையையும் பாவித்த தளபாடங்களையும் கொஞ்சம் நிதானமாகச் சிந்திப்போம்.

‘நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன் எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜதாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரல்களால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்துவிட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள். (நூல்: புகாரி 382, 513, 1209)

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தமது வீட்டில் தொழுவார்கள். வீட்டின் சுவர் குறைந்த உயரம் கொண்டதாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவதை நபித்தோழர்கள் காண்பார்கள்’. நூல்: புகாரி 729.

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அடையாளம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதியளித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம். அது உங்கள் உடலைப் பாதுகாக்கும் எனக் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று இளைப்பாறி விட்டுச் செல்லக் கூடிய ஒரு பயணிக்கும் அந்த மரத்திற்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவுதான் எனக்கும் இவ்வுலகத்திற்கும் உள்ளது’ எனக் கூறி நிராகரித்து விட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி), நூற்கள்: திர்மிதி 2299, இப்னுமாஜா 4099)

எனவே, பெருமானார் ஸல் அவர்களின் இஸ்லாமிய அரசியல் போக்கில் உலகாதாய சிந்தனைகள் எதுவுமே இழையோடி இருக்க வில்லை என்பதை மேற்படி விளக்கங்களிலிருந்து தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் சுயநலத்துடன் கூடிய உலகாதாய சிந்தனைகளை விட்டும் தூரமாகி இருக்கும் அரசியல்வாதிகளாலேயே இஸ்லாமிய அரசியலின் எதிர்பார்ப்புகளுக்கு செயல் வடிவமும் கொடுக்க முடியும் என்பதும் இதன் மூலம் நிரூபணமாகின்றது. நபிகளார் இதற்கு சிறந்ததோர் முன்மாதிரி! அரசியல் வாழ்வில் இணைந்திருப்போர் சுயவிசாரணையுடன் இதை மேற்கொள்வார்களேயானால் நிச்சயம் ஒரு மறுமலர்ச்சியைக் காணலாம்.