Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2005
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,248 முறை படிக்கப்பட்டுள்ளது!

படித்தவள்

டெலிபோன் கிலுகிலுத்தது! அவளாகத்தானிருக்கும்! ஆயிஷாவாகத்தானிருக்கும்! அக்பர் ரிஸீவரை எடுத்துக் காதுக்கருகே கொண்டுபோகும் முன்பே அவள் பொரிந்து தள்ளினாள்!

“என்னங்க – நீங்க இன்னும் புறப்படலியா?”

“கொஞ்சம் பிஸியாயிருக்கேன், ஆயிஷா! அமைதியா இரு – இன்னும் அரைமணி நேரத்துல வந்துடறேன்!”

அவன் முடிக்கு முன்பே அவள் தொணதொணத்தாள் “சே! வேலை – வேலை! எப்பத்தான் நீங்க பிஸியா இல்லாம இருப்பீங்க! எல்லாம என் தலைவிதி!” அவள் நங்கென்று ரிஸீவரை வைப்பது அவன் காதுக்குள் இடித்தது!

ஒரு பெருமூச்சோடு ரிஸீவரை வைத்தான். பார்த்துக் கொண்டிருந்த ஃபைல் பற்றிய சிந்தனைத் தொடர் அறுபட்டிருந்தது. மறுபடியும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும்! சிந்தனையோட்டத்தின் சரளம் நின்று அறைகுறையாய் அடைபட்டுப்போன குழாயிலிருந்து தடைட்டு வரும் தண்ணீர் போல விட்டுவிட்டு விளங்கியது. ஃபைல் குறிப்புகள்! ஃபைலை மூடிப் போட்டான்.

கொஞ்சம் நேரம் கண்களை மூடிக்கொண்டு இருந்தான்! நெற்றியை நீவிவிட்டுக் கொண்டான்!

ஏதோ விசாரிக்கவேண்டும் என்று அறையுள் நுழைந்த அமீர் – ஹெட்கிளார்க், ஓசைப்படாமல் திரும்பிச் சென்றார்!

‘காபி சாப்பிடடால் என்ன?’ என்ற நினைப்பு – ஆனால் அந்த நினைப்பு முடியும் முன்பே, ‘ஆமா! அதுதான் கொறைச்சல்’ என்ற சலிப்பு! அலுப்பு!

காலையில் புறப்படும்போதே பின்னைறையின் வாசலில் நின்றிருந்த அம்மா ஏதோ சொல்ல நினைத்ததை அவன் யூகித்துக் கொண்டான்.

அவள் சராசரித்தாயல்ல – அவனை உருவாக்க அவள் பட்ட கஷ்டங்களையெல்லாம் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது!

உடனே ஓடிப்போய் அவளிடம் விவரம் கேட்க வேண்டும் என்றுதான் அவன் துடித்தான்! ஆனால் …, ஆயிஷா அவனருகில் நின்றாள்! அவனையும், அவனது அம்மா ஆமினாவையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே!

அவளது துடிப்பையும்,

அவனது தவிப்பையும்

ஆராய்ந்து கொண்டே! அவன் என்ன செய்கிறான் என்று மேலாண்மை செய்து கொண்டே, நின்றாள்! அவள் தான், இறுதியில் வென்றாள்!

அம்மாவைப் புறக்கணித்துவிட்டு, ஆபீஸுக்குப் புறப்பட்டதைப் பார்த்த பிறகுதான், அவள் நகன்றாள்!

அம்மா துடித்துப் போயிருப்பாள் – அவனது அலட்சியத்தை – மனைவிக்கு அடங்கிய கையாலகாத்தனத்தை நினைத்து மருகியிருப்பாள்! உள்ளுக்குள் அழுதிருப்பாள்!

ஆனால், அவனுக்குத் தெரியும் – அவன் அம்மா அவனை ஒரு போதும் சபித்திருக்க மாட்டாள்!

அவன் அவளைக் கொலையே செய்தாலும் கூட ஏற்றுக்கொள்ளும் மனவலிமை மிக்க பாசத்தாய் அவள் என்பது அவனுக்குத் தெரியும்!

“அத்தா அக்பரு! மத்த மத்தத் தாய்ங்க மாதிரி நான் உன்னோடவிருப்பத்துக்கு மாறா பொண்ணுபாத்து வச்சிகிட்டு வற்புறுத்தலே! பணத்தையும், சொத்துப் பத்தையும் கொண்டாந்து கொட்டுறதுககு கோடிப்பேரு நிக்கிறாக! எல்லாம் உன்படிப்புக்கு இருக்கிற மரியாதை! ஆனா பணத்தை நான் பெரிசா நெனைக்கல! உன்னோட படிப்புக்கேத்த படிச்ச பொண்ணாத்தான் பாக்கணும்! நம்ம ஊரிலே நாலு எழுத்துப் படிச்சதுக ஒண்ணுமில்லே! அதுனாளே தான் வெளியூர்ல பாக்கச் சொல்லியிருந்தேன் – புரோக்கர் பக்கீர் மைதீன் காலைல சொன்ன .இடம் எனக்கு ரொம்பப் புடிச்சுப் போச்சு! ‘எம்மே’ படிச்சிருக்குதாம்ல அந்தப் புள்ளே? நம்ம புள்ளைங்கள்ல யாரு இவ்வளவு படிச்சிருக்கப் போகுதுக? – நீ விரும்புனா நாளைக்கே நான் போயிப் பாத்துட்டு வர்ரேன்த்தா – என்ன சொல்றே?” என்று அந்தத் தாய் அவனிடம் அன்று வெளிப்டையாக பேசியபோது அவன் வார்த்தையின்றி மெய் மறந்து நின்றான்!

படிக்கதாத அந்தக் கிராமத்துத் தாய்க்கிருந்த மனப்பக்குவம், அறிவு முதிர்ச்சி அவனை மெய்சிலிர்க்க வைத்தது!

ஐந்தாவதோடு படிப்பை நிறுத்தி விட்ட தன் அண்ணன் மகளைக் கட்டி வைத்துவிட அவள் அடம் பிடிப்பாள் என்று நினைத்துக் கொண்டிருந்த போது, அவளாகவே இப்படியொரு பெரிய மனசைத் திறந்து காட்டினால், ஆச்சரியமாக இருக்காதா, என்ன?

பணத்தை – சீர் சீராட்டை, குடும்பப் பின்னணியை எதையுமே பார்க்காமல் “எம்மே படித்தவள்” என்ற ஒரே தகுதிக்காக அழைத்து வரப்பட்டவள் தான் ஆயிஷா!

“டாக்டருக்குப்படிச்ச ஹமீதுக்கு ஏழாவது படிச்ச பொண்ணுதான் கெடச்சது! வக்கீல் ரஹ்மானுக்கு அதுகோட இல்ல – மூணாங்கிளாஸ் படிச்ச மூமினாதான்! ஆனா, எம்மகனுக்குப் பாத்தியா? எம்மே படிச்ச பொண்ணாக் கொண்டாந்திருக்கேன்” என்று அம்மா பீற்றிக கொண்டு திரிந்ததையும் அக்பர் இப்போது நினைத்துக் கொண்டான்!

அவன் கண்கள் பனித்தன!

அதே அம்மா ஒரு மாதத்துக்குள் ஆயிஷாவின் நடவடிக்கைகளில் அதிர்ந்து நின்றாள்! வெளியிலும் சொல்ல முடியாமல், வெப்புசாரத்தில் வெந்து குமைந்தாள்! பட்டணம் தேடிப்போய்க் கொண்டு வந்த, படித்த மருமகளைப் பற்றி பொய்யாகவே, வெளியில் புகழ்ந்துரைத்தாள்.

ஆறு மாதங்களுக்குப் பின்னரும் அதே கதை தான்! இன்று மாறிவிடும், நாளை மாறிவிடும் என்ற எதிர்பார்ப்பில், காலம் கரைகிறது – ஆயிஷா மாறுவதற்கான சூசகம் கூட இல்லை!

அவளது வார்த்தைச சாட்டையில் அம்மாவும், தம்பி தங்கைகளும் படும் அவஸ்தை அவனுக்கு நரக அவஸ்தையாகியிருக்கிறது.

அன்பாய் – அணுசரனையாய்ச் சொன்ன புத்திமதிகள் பலிக்காமல் – அதட்டிப் பார்த்தும் அடங்காமல், அவள் பாட்டுக்கு ஆதிக்கம் செலுத்துகிறாள். அமைதியும் மகிழ்ச்சியும் எங்கோ போய் ஒளிந்து கொள்ள – பெருமூச்சும், மூட்டமும் குடும்பத்தில்!

அலுவலகத்தல் கூட நிம்மதியாய்ப் பணியைச் செய்ய முடியாத அளவுக்கு தொந்தரவு!

வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க வேண்டும்.

திருமணம் முடித்துக் கொடுத்திருந்த பெரியதங்கை உடல் நிலை சரியில்லாமல் வீட்டுக்கு வந்திருந்தாள். அதை வைத்து ஏதேனும் பிரச்சினை முளைத்திருக்கலாம்.

அவன் எழுந்து வெளியே வந்தான் –

ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தான் –

வெளிககேட்டைத் திறக்கும்போதே தலைவாசற்படியில் ஆயிஷா நிற்பதைப் பார்த்தான்!

மெளனமாக அவன் அவளைக் கடந்ததும், அவள் சூடானாள்!  “என்ன, நான் பாட்டுக்கு நின்னுகிட்டே இருக்கேன். நீங்க பாட்டுக்கு கண்டுக்காமப் போய்க்கிட்டே இருக்கீங்க?” என்று கத்தினாள்.

உள்ஹால் வெறிசோடிக் கிடந்தது – அவன் கண்கள் அம்மாவையும், சகோதரிகளையும் தேடின.

“அம்மா எங்கே?” – அவன் அவளிடம் கேட்டான்!

அந்த விசாரணை அவளை மேலும் உசுப்பியது!

‘குய்யோ முறையோ’ என்று பிலாக்கணம் பண்ண ஆரம்பித்தாள். நச்சு வார்த்தைகளை வீசினாள்!

அதையும் பொருட்படுத்தாது அவன் உள்ளே சென்றான் –

அடுக்களை வாசலில் சோகமே உருவாக அம்மா – கன்னத்தில் கைவைத்துக் கொண்டு – அவள் மடியில் சின்ன தங்கை ஹஸீனா. அருகில் பெரிய தங்கை, தம்பி! ஹஸீனாவைப் பார்த்ததும் அக்பர் பதறிப் போனன் – வாயெல்லாம் ரத்தம்.

அம்மா அவனைப் பார்த்ததும் அழத்தொடங்கினாள்!

நடந்து விட்ட அசம்பாவிதம் விபரீதமானது என்பது புரிந்து போனது – அவன் இதுவரை காத்து வந்த பொறுமை அளவைக் கடந்தது – அவனது அறிவு அவனை ‘இயங்கு’, ‘இயங்கு’ என்றது!

கோபத்துடன் திரும்பினான் – ஆனால் அவனுக்கு வேலை வைக்காது ஆயிஷாவே அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்!

“ஏய், ஆயிஷா, என்ன காரியம் செஞ்சிருக்கே? உனக்கு மனுசத்தன்மையே இல்லையா?” என்று கத்தினான்.

“அட, பெரிசா தங்கச்சிக்குப் பரிஞ்சுக்கிட்டு வர்ரீங்களே! அந்த பட்டிக்காட்டுக் கழுத என்ன பேச்சுப் பேசிச்சு தெரியுமா? படிக்காத கைநாட்டுக்கு இவ்வளவு கொழுப்புன்னா எனக்கு எவ்வளவிருக்கும்?” என்று திருப்பிப் பாய்ந்தாள் அவள்!

செய்வதையும் செய்து விட்டு என்ன திமிர் பேச்சு? வார்த்தைக்கு வார்த்தை படிக்காத கைநாட்டு என்று அம்மாவையும தங்கைகளையும் வசைபாடும் அவளது அகம்பாவம் அவனை மேலும் சூடேற்றியது.

 மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு சொன்னான் “ஆமடி! அவங்க கைநாட்டு தான்! பட்டிக்காடுதான்! ஆனா அவங்களுக்கு பண்பாடு தெரியும். பகுத்தறிவு தெரியும். படிக்காத எங்கம்மா, படிச்ச தன் மகனுக்கு, படிச்ச பொண்ணு வேணும்தானுதாண்டி ஒன்னக் கட்டிவச்சாங்க –  படிச்சவகிட்ட பண்பாடு இருக்கும் -பக்குவமா நடந்துக்கிட்டு குடும்பத்துல அமைதி ஏற்படுத்துவா என்ற நம்பிக்கையிலதாண்டி, எத்தனையோ பணக்கார சமபந்தங்கள ஒதறித்தள்ளிவிட்டு ஒன்ன எனக்கு முடிச்சு வச்சாங்க! ஆனா, படிச்ச நீ, படிப்புன்ட பேர்ல என்னத்தைடீ படிச்சிருக்கே? படிப்புங்குற பேருக்கே களங்கமாவுல உருவாகியிருக்கே?

கல்வியல பின் தங்கிக் கிடக்கிற நம்ம சமுதாயத்துல இப்பத்தான் பொம்பளப்பபுள்ளைங்கள கொஞ்சம் படிக்க அனுப்பத் தொடங்கியிருக்காங்க – ஒன்ன மாதிரி படிச்ச பொண்ணுங்க நடந்துக்கறதப்பாத்தா – எல்லா படிச்ச பொண்ணுங்களும் இப்படித் தான் நடந்துப்பாங்கன்னு நெனச்சிக்கிட்டு அதுங்க படிப்பையும் நிறுத்திப் போட மாட்டாங்களாடி, அறிவு கெட்டவளே? நீ படிச்சவ – போஸ்ட் கிராஜுவேஷன் படிச்சவ – ஏதோ வாயால எங்கம்மா தங்கச்சி பேசுனாங்கங்கறதுக்காக அவசரப்பட்டு கையை நீட்டிட்டே! நீ ஒருத்தி தான்! ஆனா, அவங்க நாலுபேரு! ஒன்ன ஒரு பிடி பிடிச்சிருந்தாங்கண்ணா நீ முழு உருவமா இப்படி எம்முன்னாலே நிக்க முடிஞ்சிருக்குமாடி? ஏன் அவங்க அதைச் செய்யல யோசிச்சுப் பாத்தியா? அவங்க காலேஜுக்குப் போயிப் படிக்காவிட்டாலும், வாழ்ககை இலக்கணங்களைப் படிச்சிருக்காங்க! அந்தப் பண்பாட்டுக்கு களங்கம் ஏற்படுத்திக்காம அதுக்கு மேலும் மெருகேத்துறமாதிரி அமையனுன்டீ நாம் படிக்கிற படிப்பு! அதுதான் படிப்போட தத்துவார்த்தமே! சீ! படிச்சவ படிச்சவணடு இனிமே நீ சொல்லிக்காதடி- ஒன்ன மாதிரி பாமரப் பொம்பிளைய நான் பார்த்ததே இல்லே!” என்று பொரிந்து தள்ளினான் அவன்!

வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்துப் பேசும் ஆயிஷா, வழக்கத்துக்கு மாறாக அவன் இவ்வளவு கோபமாகப் பேசியதற்கு பெரிய எதிர்ப்பைக் காட்டுவாள் என்று எதிர் பார்த்த அம்மாவும், தங்கைகளும் அவள் அப்படியே அச்சடித்த சிலையாய் உறைந்து நிற்பதை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்!

அக்பர்கூட அதை எதிர்பார்க்கவில்லை! ஒரு வார்த்தை கூட பேசாமல் அவள் அங்கே நிற்பதையும் அவளையும் மீறி அவளது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுவதையும் அவன் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்தான்! அவளை நோக்கி நகர்ந்தான்!

“ஸாரிங்க” என்ற அவள், அவன் நெஞ்சில் சரிந்தாள் – அம்மா கண்களைத் துடைத்துக் கொண்டாள்!

நன்றி: தமிழ்அருவி