Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,579 முறை படிக்கப்பட்டுள்ளது!

நம்பும் படியே நடக்கும்!

அமெரிக்கப் பத்திரிக்கையாளரும், பேராசிரியருமான நார்மன் கசின்ஸ் (Norman Cousins) கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மனித உணர்வுகள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி ஆராய்ச்சிகளும் நடத்தியவர். அவர் ஒரு பேட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடந்த ஒரு கால் பந்துப் போட்டியின் போது நேரில் கண்ட தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். பெருந்திரளாக அந்த விளையாட்டைக் காண வந்திருந்த ரசிகர்களில் சிலர் திடீரென்று நோய்வாய்ப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்த குளிர்பான எந்திரம் ஒன்றிலிருந்து குளிர்பானம் குடித்திருப்பது தெரிய வந்தது. அது தான் காரணமாக இருக்கும் என்று மருத்துவர்கள் நினைத்ததால் உடனடியாக ஒலிப் பெருக்கியில் அறிவித்தனர். யாரும் அந்த குளிர்பான எந்திரத்தில் இருந்து குளிர்பானம் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். அதைக் குடித்தவர்களுக்கு ஏற்பட்டிருந்த உடல்நலக்குறைவின் அறிகுறிகளையும் விவரித்தனர். உடனே அதில் குளிர்பானம் வாங்கிக் குடித்திருந்து அது வரை நோய்வாய்ப்படாதவர்களும் அந்த நோய் அறிகுறிகளை உணர ஆரம்பித்தனர்.
 
பலரும் மயங்கி விழ ஆம்புலன்ஸ்கள் பெருமளவு அங்கே தேவைப்பட்டன. எல்லோரிடமும் பயம் பரவியது. உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்ப ஆரம்பித்தன. அதற்குள் அந்த திடீர் நோயிற்குக் காரணம் அந்த குளிர்பானம் அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதுவும் அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட பிறகு நோயின் அறிகுறிகளை தங்கள் உடல்களில் உணர ஆரம்பித்தவர்கள் கூட சரியாக ஆரம்பித்தார்கள். மயங்கி விழுந்தவர்கள் கூட திடீரென்று நலமடைந்தார்கள். சிறிது நேரத்தில் ஆரம்பத்தில் நோய்வாய்ப்பட்டவர்களைத் தவிர எல்லோரும் நலமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
 
அந்த நிகழ்ச்சியில் முதலில் நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் அந்த குளிர்பான எந்திரத்தில் இருந்து குடித்ததால் தான் அந்த நோய் ஏற்பட்டது என்று அறிவித்தவுடன் அதில் இருந்து குளிர்பானம் குடித்த அத்தனை பேரிடமும் அந்த நோயின் அறிகுறிகள் காண ஆரம்பித்ததும் பிரச்சினை அந்த குளிர்பான எந்திரத்தில் அல்ல என்பதை அறிவித்தவுடன் அந்த நோயின் அறிகுறிகள் காணாமல் போனதும் மனதினால் சாதிக்கப்பட்டவை. அது தான் அந்த நிகழ்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
மனதின் நம்பிக்கைகளின் சக்தி இது போன்ற எத்தனையோ ஆராய்ச்சிகளில் விளக்கப்பட்டுள்ளது. ஹார்வர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் ஹென்றி பீச்சர் (Dr. Henry Beecher) இது குறித்து விரிவான ஆராய்ச்சிகள் பலவற்றை செய்துள்ளார். அதில் ஒரு ஆராய்ச்சி நம்பிக்கைகள் ஏற்படுத்தும் உடலியல் மாற்றங்கள் குறித்தது. அந்த ஆராய்ச்சியில் 100 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டு புதிய மருந்து வகைகளைக் கண்டுபிடித்திருப்பதாகவும் அதன் சக்தி பரிசோதனைக்காக இந்த ஆராய்ச்சி என்றும் அந்த மாணவர்களுக்குச் சொல்லப்பட்டது.
 
சிவப்பு மாத்திரை (capsule) உடனடியாக அதிக சக்தி தரும் ஊக்க மருந்தாகவும் (super-stimulant), நீல மாத்திரை உடனடியாக அமைதிப்படுத்தும் மருந்தாகவும் (super-tranquilizer) மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த மாத்திரைகள் மாணவர்கள் அறியாமல் மாற்றப்பட்டிருந்தன. சிவப்பு மாத்திரை அமைதிப்படுத்தும் மருந்தாகவும், நீல மாத்திரை சக்தியை அதிகரிக்கும் மருந்தாகவும் இருக்க அவற்றை மாணவர்களுக்கு உட்கொள்ளக் கொடுத்தார்கள். ஆனால் ஐம்பது சதவீதம் மாணவர்கள் தாங்கள் என்ன மருந்து சாப்பிட்டோம் என்று தவறாக நம்பினார்களோ அதற்கேற்ற விளைவுகளையே தங்கள் உடலில் கண்டார்கள். இது வரை மருந்தே அல்லாத ஒன்றை மருந்தென்று (Placebo Effect) நம்பி அதற்கேற்றவாறு குணமான பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் டாக்டர் ஹென்றி பீச்சர் உண்மையான மருந்தையே கொடுத்து அதற்கு நேர் எதிரான ஒரு விளைவை மனிதன் தன் நம்பிக்கையால் ஏற்படுத்திக் கொள்கிறான் என்று கண்டுபிடித்தது தான் இந்த ஆராய்ச்சியின் சிறப்பு.
 
யேல் பல்கலைக்கழக பேராசிரியர் (Dr. Bernie Siegel) அன்னியன் திரைப்படத்தில் வருவது போல பல ஆட்களாய் ஒருவரே மாறும் (Multiple Personality Disorders) வியாதியைப் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்தவர். அப்படி வேறொருவராக மாறும் போது வியக்கத்தக்க வகையில் அவர் உடலும், குணாதிசயங்களும் மாறுவதாக அவர் பரிசோதித்து கண்டிருக்கிறார். அந்த திரைப்படத்தில் வருவது போன்ற மாற்றங்கள் வெறும் கற்பனை அல்ல என்று இதன் மூலம் தெரிகிறது.
 
இந்த ஆராய்ச்சிகளும், நம்முடைய சில அனுபவங்களும் சொல்லும் மகத்தான உண்மை இது தான் – மனம் எதை உண்மையென நம்புகிறதோ அதை உருவாக்க வல்லது. அந்த நம்பிக்கையின் ஆழத்திற்கேற்ப உருவாக்கத்தின் தன்மையும் இருக்கும்.  இருட்டில் கையில் பிடித்தது கயிறாக இருந்தாலும் அதை பாம்பு என்று எண்ணி பயக்கும் வரையில் உடலில் ஏற்படும் அத்தனை விளைவுகளும் பாம்பைப் பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளாகவே இருக்கும். விளக்கைப் போட்ட பின் அது கயிறென்று உணர்ந்த பின் தான் அந்த பயத்தின் மாற்றங்கள் விலகும்.
 
உடலில் மட்டும் தான் நம் நம்பிக்கையின் விளைவுகள் வெளிப்படும் என்பதில்லை. எல்லாவற்றிலும் நம் நம்பிக்கைகளின் ஆதிக்கம் உண்டு. எதை நம்புகிறோமா அதற்கேற்ற தன்மைகளை நாம் நம்மிடம் உருவாக்கிக் கொள்கிறோம். அடுத்தவர்களிடமும் உருவாக்கி விடுகிறோம்.
 
மனம் அந்த அளவு சக்தி வாய்ந்தது என்றால் நாம் எப்படிப்பட்ட நம்பிக்கைகளுடன் வாழ்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி நாம் கவனமாக இருக்கிறோமா? நம்முடைய நம்பிக்கைகளில் எத்தனை நம்மை பலப்படுத்துவனவாக இருக்கின்றன? எத்தனை நம்பிக்கைகள் நம்மை மெருகேற்றுவனவாக இருக்கின்றன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களில் தான் நம் வாழ்க்கையின் போக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
 
நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்று திடமாக நம்பும் ஒருவன் அப்படி அதிர்ஷ்டம் இல்லாதவனாகவே வாழ்ந்து மடிகிறான். ஒருசில விஷயங்களில் தொடர்ந்து சில முறை தோல்விகளும், சிக்கல்களும் ஏற்படலாம். அதை வைத்து உடனடியாக அதிர்ஷ்டமில்லாதவன் என்று நம்ப ஆரம்பிப்பது அப்படியே நம் வாழ்வைத் தீர்மானித்து விடுவது போலத் தான். அதே போலத் தான் நல்ல நம்பிக்கைகளும் நம் வாழ்வில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்தவை. ‘எனக்கு கடவுள் பக்கபலமாக இருக்கிறார்’ என்ற நம்பிக்கையில் இருப்பவன் எல்லா சிக்கல்களிலும், பிரச்சினைகளிலும் முடிவில் ஏதாவது ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கிறான். கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ, கடவுள் அருள் அவனுக்கு உண்டோ, இல்லையோ, அந்த நம்பிக்கை அவனை அந்த மோசமான சூழ்நிலைகளிலிருந்து காப்பாற்றி விடும் என்பது உண்மை.
 
ஆழமாக எதை நம்பினாலும் அதற்கேற்ற சூழ்நிலைகளையும், தன்மைகளையும் ஈர்க்கக் கூடிய சக்தி நமது ஆழ்மனதிற்கு உண்டு. அதற்கேற்றபடி நம்முடன் பழகுபவர்களின் இயல்புகளை மாற்றும் சக்தியும் நமது ஆழ்மனதிற்குண்டு. அது சரி தவறு என்று பகுத்தறியும் சிரமத்தை அது எடுத்துக் கொள்வதில்லை. அதனால் அந்த சிரமத்தை நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நம் அறிவைப் பயன்படுத்தி நம் நம்பிக்கைகளில் நமக்கு நன்மை அல்லாதவற்றை அவ்வப்போது கண்டு களைந்து எறிந்து விட வேண்டும். நல்ல வலுவான நம்பிக்கைகளையே நம்மிடம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
 
எனவே வாழ்க்கையில் எல்லா சமயங்களிலும் நல்லதை நம்புங்கள், வலிமையை நம்புங்கள், சுபிட்சத்தை நம்புங்கள். நம்பிக்கையின் படி சில நேரங்களில் நடக்காமல் போகலாம், எதிர்மாறாகக் கூட சில நேரங்களில் நடக்கலாம். அதை விதிவிலக்காக எண்ணுங்கள். உங்கள் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். தொடர்ந்து நம்பி நன்மைகளை எதிர்பாருங்கள். விரைவில் அந்த நம்பிக்கையின் படியே நல்ல பாதைக்கு வாழ்க்கை நிகழ்வுகள் திரும்புவதை நீங்கள் காணலாம்.
 
நன்றி:  -என்.கணேசன் – ஈழநேசன்