Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2012
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,490 முறை படிக்கப்பட்டுள்ளது!

முத்து (பற்கள்) நம் சொத்து!

சிறிய வயதில்தான் சொத்தைப் பற்கள் வர அதிக வாய்ப்புண்டு. எனவே அதிக கவனம் சிறிய வயது குழந்தைகளிடம் தான் தேவை. முக்கியமாக தாய்ப்பால் மற்றும் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் வாயில் பாட்டிலை கடித்துக் கொண்டே தூங்கி விடுவதுண்டு.

தாய்ப்பாலில் சர்க்கரை கிடையாது. தாய்ப்பாலுக்குப் பதிலாக நாம் கொடுக்கும் பசும்பால், புட்டிப் பால் முதலியவற்றில் நாம் சர்க்கரையை சேர்த்துதான் கொடுக்கிறோம். இது சரியல்ல. சர்க்கரை சேர்க்காமல் அப்படியே தான் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் பாட்டிலைக் கடித்துக் கொண்டே தூங்கும்போது பால் மற்றும் பழச்சாற்றில் இருக்கும் சர்க்கரை நீண்ட நேரமாக வாயிலேயே இருக்கிறது இதுதான் சொத்தைப் பல்லையும், பல்லில் துவாரத்தையும் உண்டாக்கும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு முறை பால் கொடுத்து முடித்த பின்பும் ஒரு சுத்தமான மெல்லிய ஈரத் துணியை ஆட்காட்டி விரலில் சுற்றிக்கொண்டு குழந்தையின் ஈறுகளை நன்கு சுத்தம் பண்ணிவிட வேண்டும்.

என்றைக்கு குழந்தையின் வாயில் பற்கள் தெரிய ஆரம்பிக்கிறதோ அன்றைய தேதியிலிருந்தே குழந்தைகளுக்கு பிரஷ் பண்ண ஆரம்பித்து விட வேண்டும். பிரஷ் கொண்டு அல்ல, நான் ஏற்கனவே சொல்லியபடி மெல்லிய சுத்தமான ஈரத்துணியை வைத்துதான். இவ்வாறு சுத்தம் பண்ணும்போது குழந்தை நமது விரலை கடிக்கவும் கூடும். தப்பல்ல. அதிலும் ஒரு சந்தோஷம் கிடைக்குமல்லவா! எல்லா பற்களும் முளைத்தபிறகு பல் துலக்கலாம் என்று நினைக்காதீர்கள்.

நிறைய குழந்தைகள் கை சப்புவதை நாம் பார்த்திருப்போம். குழந்தைகள் கை சப்புவது ஒரு இயற்கையான காரியம் தான். குழந்தைகளுக்கு நிரந்தர பற்கள் முளைப்பதற்கு முன்பு இந்த கை சூப்பும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். சில குழந்தைகள் மூன்று அல்லது நான்கு வயதிற்குள் தானாகவே நிறுத்திவிடும்.

சில குழந்தைகள் பத்து வயதை தாண்டிய பின் கூட விரல் சூப்பும் பழக்கத்தை விடாது. விரல் சூப்பும் பழக்கம் நிறுத்தப்பட வில்லையென்றால் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கும்போது பல் சீராக வரிசையாக வளராமல் இடுக்குப்பல் மற்றும் தெத்துப்பல் என்று பற்கள் தாறுமாறாக வளர ஆரம்பித்துவிடும். இதனால் பற்களில் நிறைய பிரச்சினைகள் பின்னாளில் வர வாய்ப்புண்டு.

நாம் சொல்வதை புரிந்துகொள்ளும் பக்குவம் வந்த நாளிலிருந்தே குழந்தைகளுக்கு பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என்று கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொடுக்க வேண்டும். பல் டாக்டரைச் சந்தித்து பற்களை பிரஷ் கொண்டு எப்படி துலக்க வேண்டும் என்பதை நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

நாம் தினமும் பல் துலக்குகிறோம். ஆனால் நாம் பல் துலக்குகிற முறை சரியானதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சராசரியாக நூறு பேரில் சுமார் பத்துப் பேர்தான் சரியான முறையோடு பல் துலக்குகிறார்கள். மீதி தொண்ணூறு பேரும் பல் துலக்கியாக வேண்டுமே என்ற கடமைக்காக தினமும் பல் துலக்குகிறார்களே தவிர, சரியாக முறையாக ஒழுங்காக பல் துலக்குவதில்லை.

குழந்தைகளுக்கு உறுதியான நல்ல பற்கள் வளர சத்தான உணவு மிகமிக முக்கியம். கால்சியம், புரோட்டின், வைட்டமின் சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் பற்களுக்கு கண்டிப்பாக தேவை.

தொண்ணூறு சதவீத நோய்கள் பற்களுக்கு இடையில் தங்கும் உணவுத் துண்டுகளாலும், பிரஷ்ஷின் முனை உள்ளே நுழைய முடியாத இடங்களில் தேங்கும் பாக்டீரியா கிருமிகளாலும்தான் ஏற்படுகின்றன.

நான்கில் மூன்று பேருக்கு ஏதாவதொரு கால கட்டத்தில் பற்களை சுற்றியுள்ள ஈறுகளில் நோய் ஏற்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே சரிவர கவனிக்காவிட்டால் பல்லுக்கு சரியான பலம் கிடைக்காமல் பல் விழுந்துவிட வாய்ப்புண்டு.

பல் ஈறு வீங்கியிருந்தாலோ, ஒரு பக்க கன்னம் வீங்கியிருந்தாலோ வாய் நாற்றம் அடித்தாலோ பல் ஈறுகளின் இயற்கையான நிறம் மாறியிருந்தாலோ பற்களின் அடிப்பகுதியிலுள்ள ஈறு பல்லை விட்டு விலகியிருந்தாலோ, ஒரு பல்லுக்கும் அடுத்த பல்லுக்கும் இடையிலுள்ள இடைவெளி அதிகமாகியிருந்தாலோ, பற்கள் ஆட்டம் கொடுத்தாலோ, பல்லைக் கடிக்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஈறுகளில் நோய் இருக்கிறதென்று கண்டுபிடித்து விடலாம்.

பற்களைச் சிதைக்கும் பாக்டீரியா கிருமிகள் எல்லோருடைய வாயிலும் இருக்கும். வாயிலுள்ள எல்லாப் பற்களின் மேலும் கண்ணுக்குத் தெரியாத மெல்லிய திரை போன்ற ஒரு படலம் உண்டாகும். இந்தப் படலத்தோடு பாக்டீரியா கிருமிகளும், வாயில் தங்கியிருக்கும் உணவுத் துகள்களும் சேரும். இதற்கு `பிளாக்’ என்று பெயர்.

ஒழுங்காக பல் துலக்கிக் கொண்டும், வாய் கொப்பளித்துக் கொண்டும் இருந்தால் பிளாக் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். பிளாக் சொத்தைப் பற்களையும், ஈறு நோய்களையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

பல் ஈறுகளில், ஏற்படும் நோயை முதலிலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால் இந்த பல் இடுக்குகளில் தங்கும் அழுக்கும், கறையும், கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பல்லும், ஈறும், சேரும் பகுதியில் அதிகமாக சேர்ந்து கடினமாகி காறை என்று சொல்வோமே, அது சேர ஆரம்பித்துவிடும். அதிலும் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இந்தக் காறை மற்றவர்களைவிட சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு மிக வேகமாக படிந்து பற்களை வலுவிழக்கச் செய்துவிடும்.

சில பேருக்கு இந்தக் காறை கல் மாதிரி ஆகி பல்லோடு சேர்ந்து பதிந்து விடும். இது பார்ப்பதற்கு பல் அழகையே கெடுத்துவிடும். மிகப்பெரிய படிப்பு படித்தவர்கள் மிகப்பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள், மிகப்பெரிய பணக்காரர்கள் இவர்கள் எல்லோருமே தினமும் பல் துலக்குவார்கள். நல்ல சத்தான உணவை தினமும் சாப்பிடுவார்கள். எல்லாம் ஒழுங்காக தினமும் நடக்கும். ஆனால் அவர்கள் வாயின் உள்பகுதியை கண்ணாடி மூலம் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படிப் பார்த்தால்தான் பற்களின் உள்புறத்தில் லேசான மஞ்சள் கலரில் பற்களின் அழகையே கெடுத்து காறை படிந்திருப்பது தெரியும். அவர்கள் எவ்வளவு பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும் இந்தக் காறையைப் பார்த்தபின் அவர்கள் பற்களை நன்றாக பராமரிக்கவில்லை என்பது தெரிந்துவிடும்.

பற்களின் உட்பக்கத்தை கண்ணாடி மூலம் பார்க்க இவர்களுக்கு வாய்ப்பும் இல்லை. நேரமும் இல்லை. சில பேருக்கு பற்களின் வெளிப் பக்கத்திலேயே கூட இந்தக்காறை படிந்து பார்ப்பதற்கு மிகமிக அசிங்கமான ஒரு தோற்றத்தை உண்டுபண்ணும். பல் டாக்டரிடம் போய்தான் இதை சுத்தம் செய்ய வேண்டும்.

Engr.Sulthan