Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2012
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 24,907 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை போண்டா வடை!

வெஜிடபிள் போண்டா

தேவையானவை: (மேல் மாவுக்கு) கடலை மாவு – 1 கப், ஆப்ப சோடா – சிட்டிகை, உப்பு – ருசிக்கேற்ப, கலர் (விருப்பப்பட்டால்) – ஒரு சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு. (பூரணத்துக்கு) உருளைக் கிழங்கு – 1, கேரட் – 1, பீன்ஸ் – 4, பட்டாணி – ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, மிளகாய்தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், மல்லித்தழை – சிறிது, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அத்துடன் காய்கறிகளையும் மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்குங்கள். காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் கரம் மசாலா தூள், எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள். ஆறியதும் உருண்டை பிடித்து வையுங்கள். பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, காய்கறி உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.

தவலை வடை

தேவையானவை: பச்சரிசி – அரை கப், கடலைப்பருப்பு – அரை கப், பாசிப்பருப்பு – அரை கப், துவரம்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு – அரை கப், ஜவ்வரிசி – ஒரு கைப்பிடி, தேங்காய் பல் பல்லாகக் கீறியது – கால் கப், காய்ந்த மிளகாய் – 6, துருவிய இஞ்சி – 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை – ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயம் – 1 டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், உப்பு – ருசிக்கு, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை: அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊறவையுங்கள். உளுத்தம்பருப்பையும் பாசிப்பருப்பையும் தனியாக ஊறவையுங்கள். ஜவ்வரிசியை தனியே ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியபிறகு, அரிசியுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். பிறகு, ஊறிய பருப்புகளை சேர்த்து, கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைத்த மாவில் பெருங்காயம், தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்த்து இட்லி மாவை விட சற்றுக் கெட்டியாக வைத்துக்கொள்ளுங்கள். கடுகைப் பொரித்து அதில் சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவை ஒரு குழிவான கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றுங்கள். சிறு தீயில் நன்கு வேகவிட்டு எடுங்கள். மாலை நேரத்துக்கு ஏற்ற மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் இது.

மைசூர் போண்டா

தேவையானவை: உளுத்தம்பருப்பு – 1 கப், பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி – 1 துண்டு, பச்சை மிளகாய் – 2, மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 10, பெருங்காயம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை: உளுத்தம்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக ஊற வையுங்கள். ஒரு மணிநேரம் ஊறியதும் நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து, அரையுங்கள். இஞ்சி, மிளகாய், பெருங்காயம் மிக்ஸியில் அரைத்து மாவில் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, தேங்காய், மிளகு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். மிகவும் பாப்புலரான இந்த மைசூர் போண்டா, மாலைச் சிற்றுண்டிக்கும் விருந்துகளுக்கும் ஏற்றது.

மசால் வடை

தேவையானவை: கடலைப்பருப்பு – 1 கப், சின்ன வெங்காயம் – அரை கப், புதினா – சிறிது, மல்லித்தழை – சிறிது, கறிவேப்பிலை – சிறிது, உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையானது. அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 2 பல், பச்சை மிளகாய் – 2, காய்ந்த மிளகாய் – 1, சோம்பு – அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலம் – தலா 2.

செய்முறை: பருப்பை 2 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, 1 டேபிள்ஸ்பூன் பருப்பை தனியே வைத்துவிட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கரகரப்பாக அரைத்தெடுத்து மாவுடன் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, தனியே எடுத்து வைத்த பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் கொள்ளுமளவு போட்டு, நடுத்தர தீயில் மொறு மொறுப்பாக வேக விட்டு எடுங்கள்.

மெது போண்டா

தேவையானவை: கடலை மாவு – 1 கப், டால்டா – 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி – 1 துண்டு, காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிது, முந்திரிப்பருப்பு – 6, ஆப்ப சோடா – கால் டீஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: டால்டா, உப்பு, ஆப்ப சோடா மூன்றையும் ஒன்றாக குழைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவு, பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு சேர்த்து பிசறுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து சற்று தளர பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு வெந்ததும் அரித்தெடுங்கள். திருமணங்களில் இடம் பெறும் ஸ்பெஷல் அயிட்டம் இது.

கீரை வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு – 1 கப், கடலைப்பருப்பு – கால் கப், அரைக்கீரை (அ) சிறுகீரை (அ) முளைக்கீரை – 1 கட்டு, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – 1 துண்டு, சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊற விடுங்கள். கீரை நன்கு அலசிய பின் மிகவும் பொடியாக நறுக்குங்கள். பருப்பு ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடியுங்கள். பின்னர் மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரை, உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் எண்ணெய் கொள்ளுமளவு போட்டு, நடுத்தரத் தீயில் நன்கு வேக விட்டெடுங்கள்.

மங்களூர் போண்டா

தேவையானவை: மைதா மாவு – 1 கப், சற்று புளித்த தயிர் – அரை கப், ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை, பெருங்காயம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: மைதாவுடன் தயிர், உப்பு, ஆப்ப சோடா, பெருங்காயம், கறிவேப்பிலை சேருங்கள். அதில் கடுகைப் பொரித்து கொட்டுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக கரையுங்கள் (இட்லிமாவு பதம்). எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போடுங்கள். சிவக்க வேக விட்டெடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.

பொட்டுக்கடலை வடை

தேவையானவை: பொட்டுக்கடலை – 1 கப், பச்சரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, பெருங்காயம் – அரை டீஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடியுங்கள். அதனுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து தேவையான தண்ணீரும் சேர்த்து நன்கு பிசைந்து சிறு வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். சில நிமிஷங்களிலேயே தயாரிக்கக் கூடிய இன்ஸ்டன்ட் வடை இது.

தாளிச்ச போண்டா

தேவையானவை: புழுங்கலரிசி – 1 கப், பச்சரிசி – 1 கப், உளுத்தம்பருப்பு – முக்கால் கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 கப், பச்சை மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிது, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊறப்போடுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், நன்கு நைஸாக அரையுங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து மாவில் சேருங்கள். அதனுடன், நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமானதும் அரித்தெடுங்கள்.

கல்கண்டு வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு – 1 கப், பச்சரிசி – கால் கப், கல்கண்டு – ஒன்றேகால் கப், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பு, அரிசியை 1 மணி நேரம் ஊற வையுங்கள். தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, ஒட்ட அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்க வேண்டும். நன்கு நைஸாக ஆட்டுப்பட்டதும் கல்கண்டையும் சேர்த்து அரையுங்கள். எண்ணெயை நிதானமான தீயில் காய வைத்து, மாவை சிறு வடைகளாக தட்டி போட்டு நன்கு வேக விட்டெடுங்கள்.

கார்ன் போண்டா

தேவையானவை: சோளம் – 2, மைதா – 2 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் – 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப், இஞ்சி – 1 துண்டு, பச்சை மிளகாய் – 3, எலுமிச்சம்பழச் சாறு – 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை – சிறிது, உப்பு – ருசியான, எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை: சோளத்தை வேகவைத்து, உதிர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். அரைத்த சோளத்துடன் மைதா, கார்ன்ஃப்ளார், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, கலந்துவைத்த கலவையை சிறுசிறு போண்டாக்களாக கிள்ளிப்போட்டு, பொன்னிறமானதும் எடுத்து, சூடாகப் பரிமாறுங்கள். கண்ணிமைப்பதற்குள் பறந்துவிடும் இந்த கார்ன் போண்டா.

புதினா- – மல்லி வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு – முக்கால் கப், கடலைப்பருப்பு – கால் கப், துவரம்பருப்பு – கால் கப், புதினா – அரை கட்டு, மல்லித்தழை – அரை கட்டு, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – 1 துண்டு, உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பருப்புகளை ஒன்றாக ஊற வையுங்கள். மல்லித்தழை, புதினாவை அலசி மிகவும் பொடியாக நறுக்குங்கள். ஊறிய பருப்பை, தண்ணீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அதில் நறுக்கிய புதினா, மல்லித்தழை, உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் கொள்ளுமளவு போட்டு நடுத்தர தீயில் நன்கு வேக விட்டு எடுங்கள்.

பாசிப்பருப்பு போண்டா

தேவையானவை: பாசிப்பருப்பு – 1 கப், துருவிய சுரைக்காய் – அரை கப், துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1 டேபிள்ஸ்பூன், கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை – சிறிது, உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதனுடன் துருவிய பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், மல்லித்தழை சேருங்கள். சுரைக்காயை நன்கு பிழிந்து பருப்போடு சேர்த்து, உப்பையும் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, நன்கு வெந்ததும் அரித்தெடுங்கள்.

ஜீரா வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு – 1 கப், சர்க்கரை – 1 கப், ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு நைஸாக அரையுங்கள். மாவு மெத்தென்று இருக்க வேண்டும். உப்பு சேர்த்து ஒரு ஆட்டு ஆட்டி எடுங்கள். சர்க்கரையை கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைந்து கொதித்ததும் இறக்கி, ஏலக்காய்தூள் சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து மாவை சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து சர்க்கரை பாகில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து எடுங்கள். இதே போல எல்லா மாவையும் செய்து, பரிமாறுங்கள். குழந்தைகளைக் கவரும் வடை இது.

கேசரி போண்டா

தேவையானவை: (கேசரிக்கு) ரவை – அரை கப், சர்க்கரை – 1 கப், பொடியாக நறுக்கிய முந்திரி – 1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், சிகப்பு கலர் – சிறிது. (மேல் மாவுக்கு) மைதா – ஒன்றரை கப், பால் – அரை கப், ஆப்ப சோடா – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: முதலில் கேசரி செய்துகொள்ளவேண்டும். அதற்கு, ஒரு டீஸ்பூன் நெய்யை காயவைத்து ரவையை வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள். மீதமுள்ள நெய்யைக் காயவைத்து, முந்திரிப் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் ஒன்றரை கப் தண்ணீரைச் சேருங்கள். அத்துடன் சிகப்பு கலரை சேருங்கள். நன்கு கொதிக்கும்போது ரவையை சேர்த்து நன்கு கிளறுங்கள். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய்தூள் சேர்த்து, நன்கு சேர்ந்து வரும்வரை கிளறி இறக்குங்கள். ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடித்து வையுங்கள். மேல் மாவுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் மைதா மாவுடன் உப்பு, ஆப்ப சோடா, தேவையான அளவு பால், தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளுங்கள். கேசரி உருண்டைகளை இதில் தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த கேசரி போண்டா.

புளிப்பு கார வடை

தேவையானவை: கடலைப்பருப்பு – அரை கப், துவரம்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு – கால் கப், பச்சரிசி – கால் கப், காய்ந்த மிளகாய் – 8, புளி – சிறிய உருண்டை, பெருங்காயம் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – கால் கப், உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக ஊறப் போடுங்கள். அதனுடன் மிளகாயையும் சேர்த்து ஊறவிடுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து கடுகை பொரித்து கொட்டி கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாக போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். புளிப்பும் காரமும் சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த வித்தியாசமான வடை.

மெதுவடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு – 1 கப், வடித்த சாதம் – 1 கைப்பிடி, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – 1 துண்டு, பெருங்காயம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, மல்லித்தழை – சிறிது, உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சாதத்துடன் சேர்த்து நன்கு அரையுங்கள். பெருங்காயத்தை கால் கப் தண்ணீரில் கரைத்துக்கொண்டு, அவ்வப்பொழுது மாவில் தெளித்து அரையுங்கள். நன்கு அரைபட்டதும் வழித்து எடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, மாவில் சேருங்கள். கறிவேப்பிலை, மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேருங்கள். உப்பு சேர்த்து நன்கு அடித்து பிசைந்து சிறு சிறு வடைகளாக காயும் எண்ணெயில் சுட்டெடுங்கள். பஞ்சு போன்ற மெதுவடை தயார்.

உருளைக்கிழங்கு போண்டா

தேவையானவை: கடலை மாவு – 1 கப், ஆப்ப சோடா – 1 சிட்டிகை, ஆரஞ்ச் ரெட் கலர் (விருப்பப்பட்டால்) – 1 சிட்டிகை, உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு. (மசாலாவுக்கு) உருளைக்கிழங்கு – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – 1 துண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசியுங்கள். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, அதனுடன் கறிவேப்பிலை, மல்லித்தழை, எலுமிச்சம் பழச் சாறு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள். பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால் தன்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போடுங்கள். எண்ணெய் கொள்ளுமளவு போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.

ஸ்பெஷல் வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு – 1 கப், வெங்காயம் – அரை கப், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – 1 துண்டு, பெருங்காயம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சுத்தமாக தண்ணீரில்லாமல் வடியுங்கள். ஆட்டுக்கல்லில் போட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து மெல்லிய வடைகளாக தட்டி, எண்ணெயில் கொள்ளுமளவு போடுங்கள். நடுத்தர தீயில் நன்கு மொறு மொறுப்பாகவும் உள்ளே மெத்தென்றும் வேக வைத்து எடுங்கள்.

கலவை பருப்பு வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – அரை கப், துவரம்பருப்பு – கால் கப், பச்சரிசி – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – 1 துண்டு, சீரகம் – 1 டீஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு, கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக ஒரு மணிநேரம் ஊற போடுங்கள். தண்ணீரை நன்றாக வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம், உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து காயும் எண்ணெயில் சிறு வடைகளாக தட்டி போட்டு வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

வெங்காய வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு – 1 கப், பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் (அல்லது பெரிய வெங்காயம்) – அரை கப், கறிவேப்பிலை – சிறிது, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – 1 துண்டு, பெருங்காயம் – அரை டீஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் ஆட்டுக்கல்லில் போட்டு நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள். காயும் எண்ணெயில் (நடுத்தர தீ) சிறு சிறு வடைகளாக போட்டு, பொன்னிற மானதும் எடுத்துப் பரிமாறுங்கள்.

ஜவ்வரிசி போண்டா

தேவையானவை: ஜவ்வரிசி – 1 கப், நன்கு புளித்த தயிர் – 1 கப், கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1 டேபிள்ஸ்பூன், துருவிய இஞ்சி – 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், பொரித்த கடுகு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – மல்லித்தழை – சிறிதளவு, உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியுடன் உப்பு, தயிர் சேர்த்து ஊறவையுங்கள். 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவேண்டும். பின்னர் அதனுடன் பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு, மல்லித்தழை சேர்த்து (இட்லி மாவை விட சற்று) கெட்டியாகக் கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து ஜவ்வரிசி கலவையை சிறு சிறு போண்டாக்களாகக் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக சிவந்ததும் எடுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற வித்தியாசமான போண்டா.

கார போண்டா

தேவையானவை: பச்சரிசி – அரை கப், புழுங்கலரிசி – அரை கப், துவரம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயம் – 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப், சீரகம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்பை ஒன்றாக ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள்.

தயிர்வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு – அரை கப், புளிக்காத புது தயிர் – 1 கப், பால் – கால் கப், உப்பு – ருசிக்கேற்ப, மல்லித்தழை – சிறிது, மிளகாய்தூள் – அரை டீஸ்பூன், காராபூந்தி (அ) ஓமப்பொடி – (விருப்பத்துக்கேற்ப) சிறிது, எண்ணெய் – தேவையான அளவு, கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன். அரைக்க: முந்திரிப்பருப்பு – 4, பச்சை மிளகாய் – 2, சீரகம் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 1 டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன்.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நைஸாக அரைத்தெடுங்கள். கால் கப் தயிரை எடுத்து வைத்துவிட்டு, மீதியுள்ள தயிரில் அரைத்த விழுதைக் கலந்து, கடுகு பொரித்து கொட்டுங்கள். சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்குங்கள். ஒன்றேகால் கப் தயிருடன், பால், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். ஊறிய உளுந்தை மெத்தென்று அரையுங்கள். உப்பு சேர்த்து கலந்து, பிறகு வழித்தெடுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போடுங்கள். வெந்ததும் எடுத்து தயிர், பால் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊற விட்டு, ஒரு ட்ரேயில் அடுக்குங்கள் (ஒன்றின் மேல் ஒன்று படாமல்). அரைத்த விழுது கலந்துள்ள தயிரை அதன் மேல் சுற்றிலும் ஊற்றுங்கள். அதன் மேல் காராபூந்தி அல்லது ஓமப்பொடி, துருவிய கேரட், மிளகாய்தூள், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.

கோஸ்வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு – 1 கப், பொடியாக நறுக்கிய கோஸ் – 1 கப், இஞ்சி – 1 துண்டு, பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிது, சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

ரச வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு – அரை கப், உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு, மல்லித்தழை – சிறிதளவு. ரசத்துக்கு: பருப்பு தண்ணீர் – 2 கப், புளித் தண்ணீர் – அரை கப், தக்காளி சாறு (வடிகட்டியது) – அரை கப், பழுத்த தக்காளி – 1, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, பெருங்காயம் – அரை டீஸ்பூன். பொடிக்க: மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிது. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, மெத்தென்று ஆட்டுங்கள். அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்து கெட்டியாக ஆட்டி, உப்பு சேர்த்து கலந்து எடுங்கள். பருப்பு தண்ணீருடன் புளி தண்ணீர், தக்காளி சாறு, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம், பொடித்த பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நெய்யில் கடுகு தாளித்து, ரசக் கரைசலை ஊற்றுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய மல்லி சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து ரசத்தில் போட்டு சூடாக பரிமாறுங்கள். (பொடித்த பொடியை புளித் தண்ணீரில் சேர்க்காமல் பாத்திரத்தில் போட்டு, அதில் ரசத்தை இறக்கி ஊற்றினாலும் நன்றாக இருக்கும்).

இனிப்பு போண்டா

தேவையானவை: ரவை – முக்கால் கப், பச்சரிசி மாவு – கால் கப், பொடித்த வெல்லம் – 1 கப், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ரவையை சிறிது தண்ணீர் தெளித்து பிசறி, நன்கு அழுத்திவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். ஆட்டுக்கல்லில் போட்டு, நன்கு கெட்டியாக அரையுங்கள். பின்னர் அதனுடன் வெல்லத்தூள் சேர்த்து அரையுங்கள். நன்கு அரைபட்டதும் பச்சரிசி மாவைத் தூவி, இரண்டு நிமிடம் ஆட்டியெடுங்கள். எண்ணெயை நிதானமான தீயில் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். மாவு இளக்கமாக இருந்தால் சிறு கரண்டியால் எடுத்து ஊற்றி, வேக வைத்தெடுங்கள். (வெல்லத்துக்கு பதில் சர்க்கரையும் சேர்க்கலாம்).

சாம்பார் வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு – அரை கப், உப்பு – தேவைக்கு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – அரை கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை – கால் கப், எண்ணெய் – தேவையான அளவு. சாம்பாருக்கு: துவரம்பருப்பு – அரை கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 3, புளி – நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, உப்பு – ருசிக்கேற்ப. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், நெய் – 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன். வறுத்துப் பொடிக்க: தனியா – 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, வெந்தயம் – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். துவரம்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவிடுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளியையும் சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். தக்காளி கரைந்து வதங்கியதும் புளித்தண்ணீரை சேருங்கள். அதில் உப்பு, பெருங் காயம், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள். பிறகு. துவரம்பருப்பைக் கரைத்து ஊற்றுங்கள். வறுத்துப் பொடித்த பொடியைப் போடுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மல்லித்தழை சேருங்கள். உளுத்தம்பருப்பை சிறிது தண்ணீர் தெளித்து, சிறிது உப்பு சேர்த்து மெத்தென்று ஆட்டிக்கொள்ளுங்கள். சாம்பாரில் இருந்து கால்பகுதி அளவு எடுத்து, அதனுடன் அரை கப் கொதிக்கும் தண்ணீரை சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து ஆட்டிவைத்துள்ள மாவை, சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிற மானதும் எடுத்து, சாம்பார் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊறியதும் எடுத்து, ஒரு டிரேயில் அடுக்கிக் கொள்ளுங்கள். எல்லா மாவையும் இதே போல செய்யுங்கள். பரிமாறும்பொழுது, சாம்பாரை வடைகள் மேல் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.

பருப்பு போண்டா

தேவையானவை: கடலைப்பருப்பு – அரை கப், துவரம்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு – கால் கப், பாசிப்பருப்பு – கால் கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, மல்லித்தழை – சிறிது, கறிவேப்பிலை – சிறிது, தேங்காய் துருவல் – கால் கப், உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவைக்கு, பூண்டு – 5 பல். அரைக்க: சோம்பு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2.

செய்முறை: பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். சோம்பு, மிளகாய் இரண்டையும் அரைத்து அதனுடன் சேருங்கள். வெங்காயம், மிளகாய், பூண்டு, மல்லி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கி சேருங்கள். தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வைத்து எடுங்கள். எண்ணெயைக் காய வைத்து உருண்டைகளாக பொரித்தெடுங்கள்.

இட்லி மாவு போண்டா

தேவையானவை: இட்லி மாவு – 2 கப், சின்ன வெங்காயம் – 1 கப், பச்சை மிளகாய் – 3, தேங்காய் துருவல் – கால் கப், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவைக்கு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கடலைபருப்பு – 2 டீஸ்பூன்.

செய்முறை: எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து, நன்கு கலக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து, சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு, நன்கு வெந்ததும் எடுத்துவிடுங்கள். இட்லி மாவு மீந்துபோகும் சமயங்களிலும் திடீர் விருந்து வரும்போதும் இந்த போண்டாவை செய்து அசத்துங்கள்.

நன்றி: நஸ்ருல்லாஹ்