Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2013
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,302 முறை படிக்கப்பட்டுள்ளது!

பேமிலி இங்கயா? ஊர்லயா?

அபுதாபியில் இருக்கும் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, எப்பவும் பேசிமுடித்ததும் ஞாபகம் வரும் ஒருவிஷயம், அன்று நல்லவேளை பேசும்போதே ஞாபகம் வந்தது. ”உன் கொழுந்தனுக்குப் பெண் பார்த்துகிட்டிருந்தீங்களே என்னாச்சு?” என்றேன். ”ம்.. ஒரு பொண்ணு பாத்துருக்காங்க, கல்யாணம் ஒரு 6 மாசம் கழிச்சு இருக்கும்” என்றாள். ”ஆமா, உன் கொழுந்தனுக்கு துபாயிலதானே வேலை. கல்யாணம் ஆனதும் ஃபேமிலியைக் கூட்டிவர்றதுக்கு வசதியா, அவளை இப்பவே பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணிவைக்கச் சொல்றதுதானே? உனக்கு கல்யாணத்துக்கப்புறம் எடுக்கும்போது ரொம்ப லேட் ஆச்சே?” என்று தெரியாமல் சொல்லிவிட்டேன்.

“என்னது, பாஸ்போர்ட்டா, இப்பவேவா? கிழிஞ்சுது போ!! பெண்ணைப் பற்றி விசாரிக்கும்போதே பாஸ்போர்ட் இருக்குன்னு தெரிஞ்சா உடனே ரிஜக்ட் பண்ணிடுவாங்க. அதெல்லாம் கல்யாணமாகி குறைஞ்சது ஒரு வருஷம் கழிச்சு, மாமியார் பெர்மிஷன் கிடைச்சாத்தான் பாஸ்போர்ட் அப்ளை பண்ணனும்” என்றாள்!! ”ஓ, அப்ப அந்த ஒரு வருஷமும் ப்ரோபஷனரி பீரியட்னு சொல்லு. மருமகப் போஸ்டிங்ல பெர்ஃபார்மன்ஸ் ஓக்கேன்னாதான் பாஸ்போர்ட்டு, ஆன் ஸைட்டெல்லாம் அப்ரூவல் ஆகுமோ??!!” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டோம்.

பேசிமுடித்த பின்னரும் அதைக் குறித்த சிந்தனைகள் மனதை நிறைத்தன. பலப்பல வருடங்களாக, தமிழக முஸ்லிம்கள் அரபு நாடுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். ஒரு 20 வருடங்கள் முன்பு வரை, அரபு நாட்டில் வேலை செய்யும் ஒருவர் குடும்பத்தோடு இருப்பது என்பது மிகமிக அபூர்வம். அதன் காரணங்கள் குறித்து யோசித்தால், அரபு நாடுகளில் தமிழக முஸ்லிம்களில் எத்தனை பேர் குடும்பத்தை உடன் அழைத்துச் செல்லுமளவு நல்ல வேலைகளில் இருந்தார்கள்? அதற்குண்டான கல்வியறிவு குறைவான சமுதாயமாக அல்லவா (அப்போது) நாம் இருந்தோம் என்பது புரிந்தது.

பின்வந்த வருடங்களில், முஸ்லிம்களிடையே இஸ்லாமிய விழிப்புணர்வோடு, கல்வி குறித்த தெளிவும் ஏற்பட ஆரம்பித்திருந்தது. ஆகையால், படிப்படியாக நம்மவர்களும் நல்ல வேலைகளில் காலூன்ற ஆரம்பித்தனர். இருப்பினும், நான் திருமணமாகி கணவரோடு அமீரகம் வந்தபோது, அதற்கு முன்பிருந்ததுபோலவேதான் குடும்பங்கள் அரிதாக இருந்தது. நல்ல வேலைகளில் இருந்தவர்கள் பலர், ஏன் இப்போது இருப்பவர்கள்கூட சிலர் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டே இருந்தது ஏனென்று புரியவில்லை. பின்னர் பேசிப் பார்க்கும்போதுதான் புரிந்தது, காரணங்களில் முக்கியமான ஒன்று:புகுந்த வீட்டினர்!!

பொதுவாகவே, மருமகள் வந்தால், மாமியாருக்கு மிக உதவியாக இருக்கும் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பும். அதற்கேற்றாற்போலவே மருமகள்களும் பெரும்பாலும் அனுசரணையாகவே இருக்கிறார்கள். இருப்பினும், மகன் வெளிநாட்டில் இருந்தால், மகனோடு அவரின் மனைவியும் செல்வதென்பது, மாமியாரின் அதிகாரத்தை மீறிய செயலாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம், மகன் மீதான தங்கள் பிடி விலகிவிடுமோ என்ற பயமும், மறுபக்கம் மருமகளைக் கூட்டிச் சென்றால் மகனின் செலவுகள் அதிகமாகி, பெற்றோருக்கு அனுப்பும் பணம் குறைந்துவிடும் என்ற எண்ணமும் கூட இதற்குக் காரணம்.

வெளிநாடுகளில் வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணங்கள், மருத்துவம், அன்றாடச் செலவுகள் எல்லாமே இந்தியாவைவிட அதிகம்தான். ஆகையால், செலவுகள் அதிகமாகும்தான். ஆனால், அதற்காக மகன், தன் மனைவியைப் பிரிந்தே இருக்கவேண்டுமென நினைப்பது முறையல்லவே. அதிலும் மூத்த மகனாக இருந்துவிட்டால், தம்பி, தங்கைகள் எல்லாருமே அவரின் பொறுப்பு என்பது சொல்லப்படாத நியதியாகிவிட்டதால், அந்தத் தியாகத்தைச் செய்தே ஆகவேண்டுமென சமூகம் எதிர்பார்க்கின்றது. தம்பி, தங்கைகளின் படிப்பு, நல்வாழ்வு ஆகியவற்றில் அண்ணனுக்கு பங்கில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், அதைச் சாக்கிட்டு, அண்ணனின் குடும்ப வாழ்வில் கைவைப்பது ஏன்?

இஸ்லாம் கணவன் மனைவியரை “ஒருவருக்கொருவர் ஆடையாக இருக்கிறீர்கள்” என்று சொல்கிறது. ஆடை எப்போதுமே அணிந்திருக்க வேண்டிய ஒன்று என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனில், முறையான காரணங்கள் இல்லாமல் கணவன் மனைவி பிரிந்திருக்கலாகுமா? பிரித்து வைத்தலாகுமா?

ஒரு ஆணுக்கு, குடும்பத்திற்குச் சம்பாதிப்பது மட்டுமே பொறுப்பு அல்ல. சிறந்த குடும்பத் தலைவனாக இருக்கும் பொறுப்பும் இருக்கிறதென்று“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு உண்டு; அதுகுறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான்.” என்ற ஹதீஸ் தெரிவிக்கிறது. மனைவிக்குக் கணவனாக மட்டுமல்ல, பிள்ளைகளுக்குத் தகப்பனாக ஆற்ற வேண்டிய கடமைகளை யாராலும் ரீப்ளேஸ் செய்ய முடியாது. மனைவியாவது கட்டாயத்தினால் சூழ்நிலைகளைப் புரிந்து தன் கவலையை மறைக்கலாம். ஆனால், சிறுகுழந்தைகள்? குழந்தைகள் தந்தையின் அன்பை முழுதாகப் பெற முடியாதவர்களாகவே வளர்கிறார்கள்.

இத்தனை கடமைகள் அந்த ஆணுக்கு தன் மனைவி, மக்களின் பேரில் இருந்தாலும், தாய்தந்தையர் விரும்பவில்லை என்ற காரணத்தினால் மனைவியை வெளிநாட்டுக்கு, அதற்கான வசதியிருந்தும் அழைத்து வராத ஆண்கள் இன்னும் உண்டு!! விளைவு? பிள்ளைகள் தகப்பனிடம் ஒட்டுதல் இல்லாமலே இருக்கிறார்கள். தகப்பனின் கண்டிப்பும் இல்லாததால் இளவயதினர் வழிகேட்டில் ஆகும் நிலைகளையும் பார்க்கிறோம். சில பெண்களும் பொருளாதாரத்தைச் சரியாகப் பேணத்தெரியாமல், கணவன் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைத் தொலைக்கின்றனர்.

தந்தையில்லாத ஒரு நண்பர், தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து, வெளிநாடு வந்து குடும்பத்தின் வறுமை நிலையைப் போக்கி, தங்கைகள் இருவருக்கும் திருமணம்முடித்து, சீர்வரிசைகள் செய்து, தம்பியை வேலைக்கமர்த்தி, பின் 30+ வயதில் திருமணம் செய்துகொண்டார். விடுமுறைக்குப் பின் (தனியாகத்தான்) வெளிநாடு கிளம்பிய அவரிடம் சகோதரி சொல்கிறார், “காக்கா, நீ எனக்குப் போடவேண்டியதில் இன்னும் 8 பவுன் பாக்கி இருக்கு, மறந்துடாதே!!” ஞாபகப்படுத்தவில்லையென்றால், அண்ணன் பணம் முழுவதையும் மனைவிக்கு அனுப்பிவிடக்கூடுமோ??!!

இன்னும் சில பாசமலர் சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்களின் கணவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும், அதற்கான வசதி இல்லாததால் தம் மனைவியை அழைத்துச் செல்ல முடியாததால் இங்கிருப்பார்கள். இவர்களுக்கு, தம் சகோதரன் மட்டும் மனைவியை அழைத்துச் செல்வது பொறுக்காது. ஏதாவது சொல்லி, தம்பதியரிடையே பிரச்னைகளை உருவாக்குவார்கள்.

அமீரகத்தில் இருக்கும் ஃபௌஸியாவுக்கு, வெள்ளிக்கிழமை என்றாலே பயம். அன்றுதானே மாமியாரிடம் தொலைபேசியில் பேச வேண்டும்!! மகனைத் தன்னிடமிருந்து பிரித்து(!!) அழைத்துத் தனிக்குடித்தனம் சென்று விட்டதுபோல கோபமாகவே பேசுவார். இத்தனைக்கும், ஃபௌஸியாவின் கணவர் தன் பெற்றோருக்கும், உடன்பிறப்புகளுக்கும் (திருமணமானவர்கள் உட்பட) எந்தக் குறையும் வைத்ததில்லை. இருப்பினும் மாமியார் வன்மத்தோடே குத்திப் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

மதுரையைச் சேர்ந்த நசீமா, திருமணமாகி 15 வருடங்கள் கணவர் சவூதியிலும், கணவன் அழைத்துச் செல்ல முடிந்தாலும், மாமியார் தடை போட்டதால் மிகப் பொறுமையோடு, மாமியாரின் காரணமற்ற ஏச்சுபேச்சுகளைத் தாங்கிக் கொண்டு மதுரையில்தான் இருந்தாள். கணவரிடம் சொன்னால், “எனக்காகவும், இறைவனுக்காகவும் என் தாயைப் பொறுத்துக் கொள்” என்பதுதான் ஒரே பதில்!!

இவரைப் போலத்தான் பலரும். ஏன் இவர்களால் தன் தாயிடம் இதைக் குறித்துப் பேச முடிவதில்லை? தாயின் காலடியில் சொர்க்கம் என்பதால்,சொர்க்கம் செல்லக் கிடைக்கும் எளிய வழி அடைபட்டுப் போகுமோ? தாயின் தவறை எடுத்துச் சொன்னால்கூட இறைவன் குற்றம் பிடிக்கக்கூடும் என்கிற தவறான புரிதல்.

இதுவா இஸ்லாம் சொல்லித் தந்தது? மனைவியைத் தன் தாய் வேலைக்காரி போல நடத்துவதையோ, கணவனுடன் சேர்ந்து வாழ்வதைத் தடுப்பதையோ எதிர்க்காமல் மௌனமாக இருப்பதா இஸ்லாம் சொல்லித் தரும் வழிமுறை? தாயை எதிர்த்துப் பேசாமல் இருப்பதால், மகன் சுவர்க்கத்துக்குச் சென்றுவிடலாம், இறைவன் நாடினால். ஆனால் அந்தத் தாய்? நீங்கள் சொர்க்கப் பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டு, தாயை நரகிற்கு அனுப்பும் வழியல்லவா காட்டிக் கொடுக்கிறீர்கள்?

தஞ்சாவூர் ஷம்சின் தாயார், முதுமை, நோய் காரணமாக வீல் சேரில்தான் வாசம். துணைக்கு வேலையாள் மட்டுமே. எனினும், ஒரே மகன் ஷம்சுக்குத் திருமணம் செய்வித்து, மருமகளையும் அபுதாபிக்கு உடன் அனுப்பி வைத்திருக்கிறார். தன் நோயையை, முதுமையைக் காரணமாகக் காட்டி அவர்களைப் பிரிக்க நினைக்காத அவரின் பெருந்தன்மையைப் பாராட்ட வார்த்தைகளில்லை.

ஷார்ஜாவில் உள்ள மரியமின் மாமனார், மாமியார் சென்னையில் தனியேதான் இருக்கிறார்கள். ஒரு மகன் ஷார்ஜா, ஒரு மகன் அமெரிக்கா. எனினும்கூட மகனையோ, மருமகளையோ குறை சொன்னதில்லை. சென்ற வருடம் இங்கு வந்திருந்த அவர்களைச் சந்தித்தபோது, தம்பதியர் ஒன்றாக வாழவேண்டியது, இக்காலக் குழந்தைகள் பெற்றோருடன் இருந்து வளரவேண்டியது போன்ற எதார்த்தங்களை உணர்ந்தவர்களாகவே உரையாடினார்கள்.

ஒருத்தன்கிட்ட, ஒரு கற்புக்கரசி பேரு சொல்லுன்னா, அம்மா, மனைவியெல்லாம் விட்டுட்டு கண்ணகின்னானாம். அதுமாதிரி நான் என் மாமியாரை விட்டுட்டு யாரு மாமியாரையெல்லாமோ சொல்லிகிட்டிருக்கேன். என்னவர் அபுதாபி வந்த நாள்தொட்டு நான் இங்க அபுதாபியிலத்தான் இருக்கேன். என் நாத்தனாரின் கணவர்(மட்டும்) வெளிநாட்டில் என்ற போதிலும், இன்றும் என்னுடைய வீட்டுத் தேவைக்கான பெரும்பான்மையான பொருட்கள் வாங்கி அனுப்பித் தருவது, ஆலோசனைகள் கூறுவது எல்லாம் மைனிதான்.

இவர்களையெல்லாம் போலப் பார்த்துவிட்டு, ஒருசில மாமனார்-மாமியார், நாத்தனார்களால் மட்டும் ஏன் இதுபோல இருக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், தவறு செய்பவர்களுக்கு அதை எடுத்துச்சொல்லாமல், அவர்களுக்கு தந்தை/கணவர்கள்/மகன்கள் ஒத்துப்போவதால், ’பெண்கள் அடிமைப்படுத்துதல்’ என்று இஸ்லாம் மேல் பழி விழும் சூழ்நிலையாகிறது.

ஒருவர் பிறந்ததிலிருந்து, இறக்கும்வரை அவருக்கு தாய் காலடியில் சுவர்க்கம்தான். ஆனால், திருமணத்திற்குப் பிறகுதான், தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது என்பதே சில இளைஞர்களுக்குப் புரியும். அதுவரை, தாயை எப்படியெல்லாமோ உதாசீனப்படுத்தியிருப்பார்கள். மனைவி வந்ததும், தான் அதுவரை செய்த அலட்சியங்களுக்குப் பகரமாக, தன் பெற்றோரைக் கவனிக்கவேண்டிய தன் கடமையை, பொறுப்பை லாகவமாக மனைவியின் தோள்களுக்கு இடம்மாற்றிவிட்டு, அவளை அடிமையாக நேர்ந்து விடுகிறார்கள்.

மேலே சொன்ன நசீமாவும் 15 வருடங்களாக கடமையை ஏற்று, பொறுமையாகத்தான் செய்துவந்தாள். ஆனால், ‘இவ எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாடா. ரொம்ம்ம்ப நல்லவ’ என்கிற ரீதியில் கடுமைகள் குறையாமல் போகவே, பெற்றோர்களோ, உடன்பிறந்தவர்களோ ஆதரவுக்கு இல்லாத அப்பேதைப்பெண் தற்கொலை ஆயுதத்தைக் கையில் எடுத்த பின்பே ஒருவழியாய் கணவர் சவூதிக்கு அழைத்துச் சென்றார்.

போராடிச் சென்றவளுக்கு, ஹஜ் செய்ய ஆசை, பேராசை. ஆனால், மாமியார் தானும் இந்தியாவிலிருந்து வரும்போது தன்னுடன்தான் ஹஜ் செய்யவேண்டும் என்று சொல்லிவிட, மக்காவைத் தொட்டுவிடும் தூரத்தில் இருந்தாலும்கூட காத்திருக்கிறாள் – மூன்றாண்டுகளாக!! பல காரணங்களால் மாமியார் வருவது தள்ளிப் போகிறது. அடுத்த வருடம், பிள்ளைகளின் படிப்பை முன்னிட்டு, மீண்டும் ஊர் திரும்ப வேண்டியிருப்பதால், இவ்வருடமே கடைசி வாய்ப்பு, இன்ஷா அல்லாஹ். அதன்பிறகு இந்தியாவிலிருந்து பெரும் பணம் செலவழித்து வருவதென்பது விரைவில் கைகூடும் நிலையிலில்லை.

வெளிநாடுகளில் வீட்டு வாடகை, செலவினங்கள் அதிகம் என்பது சிலருக்குக் குடும்பத்தை அழைத்துவர ஒரு முட்டுக்கட்டை. ஆனால், நானறிந்த ஒருவருக்கு இலவசமாகத் தங்கும் இடம் கிடைத்தபோதும் மனைவி குழந்தைகளை அழைத்து வரமுடியவில்லை. காரணம்? அவரின் சகோதரிக்கு சொந்த வீடு இல்லாததால், ஒரு வீடு வாங்கிக் கொடுத்துவிட்டு, பின் அவர் இஷ்டப்படி நடந்துகொள்ள வேண்டுமாம், தாயின் ஆணை! நகை, வரதட்சணை, சீர் கொடுத்து திருமணம் முடித்து, பின்னரும் பலப்பல சீர்கள் செய்து, தங்கை கணவரின் தொழில் ஆதாரத்துக்கும் முடிந்த உதவி செய்த அவரால் முடிந்தால் வீடென்ன, பங்களாவே வாங்கிக் கொடுத்திருப்பார். அவரும் மிகச் சொற்ப சம்பளத்தில் இருப்பவரே. 40 வயது தாண்டி, பெண் குழந்தைகள் வைத்திருக்கும் மகனை எப்படித்தான் இப்படிப் பிழிய மனம் வருகிறதோ பெற்ற தாய்க்கு?

மனைவியை இங்கு அழைத்து வந்து வைத்திருப்பவர்களில் ஒரு சிலர், ஏதோ அவர்கள் மனமிரங்கி மனைவிக்குக் கருணைப்பார்வை காட்டியதால்தான் இந்த அரபு நாட்டு வாசம் மனைவிக்குக் கிட்டியதென்பதாக அக்கணவர்களின் நடவடிக்கைகள் இருக்கும்.
இன்னும் மிகச்சிலர், ’நான் நினைச்சா இப்பவே உன்னை ஊருக்கு அனுப்பிவிட முடியும்’ என்று ‘நாடுகடத்தலை’ சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகளின்போதுகூட மனைவிக்கு ஞாபகப்’படுத்து’வார்கள். கீழ்க்காணும் இறைவாக்கையும், ஹதீஸையும் அறிந்திராத அவர்களின் வெளிநாட்டு வாழ்வே, கம்பெனி முதலாளியின் தயவுதான் என்பது மறந்துவிடும். வெளிநாடுகளில் யாருடைய வேலையும் நிரந்தரமில்லை. ஏன், பூலோக வாழ்வே யாருக்கும் நிரந்தரமில்லை!!

[2:228]”…கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு;”

”நீங்கள் நிறைவேற்ற மிகவும் கடமைப்பட்ட நிபந்தனைகள் திருமணத்தின் மூலம் நீங்கள் சுமந்துகொண்ட பொறுப்புக்கள்தான்” (நபிமொழி)
அறிவிப்பவர்: உக்பா(ரலி) நூல் : புகாரி.

இன்னும் சில பெற்றோர்கள் இருக்கின்றார்கள். எல்லாக் கடமையும் முடிந்திருக்கும். இனியாவது மகனும் மருமகளும் சேர்ந்து இருக்கட்டுமே என்றிருக்கலாம்தான். ஆனால், காற்றுள்ளபோதே தூற்றவேண்டுமே. தங்களுக்காகச் சொத்து வாங்க வேண்டும், சேமித்து வைக்க வேண்டும். மகன், தன் குடும்பத்தை அங்கு வைத்திருந்தால் அதற்கெல்லாம் பணம் சேர்க்க முடியாது, ஆகையால் குடும்பத்தை அனுப்பிவிட்டு, தனியாக இரு போதும் என்று சொல்லி, அவ்வப்போது அமைதியாக இருக்கும் மகனின் மனதைச் சலனப்படுத்துவார்கள். தொடர்ச்சியாக, மகன் குடும்பத்தில் சூறாவளிச் சுழலும். பெரியவர்களே, மகனின் மனநிம்மதியைவிடவா பணமும், சொத்தும் முக்கியம்?

கணவரின் வேலை நிமித்தம், வெளிநாடுகளில் வாழும் பெண்கள் அங்கு சுகபோக வாழ்வு அனுபவிக்கவில்லை. கணவரோடு இருக்கிறோம் என்ற நிம்மதி மட்டுமே அவர்களுக்கு. புறாக்கூண்டு போன்ற வீடுகளில்தான் பெரும்பாலோனோர் இங்கு வாழ்கின்றனர். ஏற்கனவே சொன்னதுபோல, இங்கு விலைவாசி அதிகம் என்பதோடு, இந்தியாவில் கணவர் குடும்பத்தினரையும் தன் கணவர் ஆதரிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத் தன் தேவைகள், ஆசைகள், விருப்பங்கள், ஏன் சில அத்தியாவசியங்களைக் கூடக் குறுக்கிக் கொண்டுதான் இங்கிருக்கிறார்கள்.

சில பெண்களின் மாமியார், மாமனார்கள் மகனோடு தங்கியிருக்கலாம் என்று மூன்று மாத விஸிட் விஸாவில் அரபு நாடுகளுக்கு வருவதுண்டு. அவர்களால் ஒரு மாதத்திற்குமேல் இங்கு தாக்குப் பிடிக்க முடியாது. ஒரே அறையில் வாழ்க்கை, அக்கம்பக்கம் பேசிப்பழக ஆட்கள் இல்லை, வெளியே போகவர சிரமம், காலநிலை ஒத்துக்கொள்ளவில்லை, உறவினர்கள் திருமணம், புதுவீடுபுகுவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று பல காரணங்களை அடுக்குவார்கள். யோசியுங்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில்தானே அந்தப் பெண்ணும் இங்கே இருக்கிறாள்? காலை போனால் முன்னிரவு வீடு திரும்பும் கணவன். யாருமே இல்லாத வீடு. இந்தியாவிலோ எல்லாவேலைக்கும் வேலைக்காரர்கள் உண்டு. இங்கே விலைவாசி காரணத்தால் எல்லா வேலைகளையும்கூட அவர்களே செய்துகொள்ள வேண்டும். மேலும் நெருங்கிய உறவுகளின் விசேஷங்கள், வருத்தங்கள் எதிலும் நினைத்தபடி கலந்துகொள்ள முடியாத ஏக்கங்கள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, கணவனோடு, குழந்தைகள் சூழ இருப்பதே போதும் என்று இருக்கிறார்களே?!

பெரியவர்களே! உங்கள் மருமகள் இங்கு இருப்பதால், அதிக வசதி உங்கள் மகனுக்குத்தான், மருமகளுக்கல்ல. தனியே பேச்சிலர்களாக இருப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள், அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் புரியும். மனைவி உடன் இருப்பதால், சுத்தமான ஆரோக்கியமான உணவு. உடல்நலப் பாதுகாப்பு. பெற்ற குழந்தைகளின் குறும்புகளைப் பார்த்து ரசிக்கும் பாக்கியம், மனதுக்கும் மகிழ்ச்சி. வேற்று நாட்டில், தகிக்கும் வெப்பத்தில் வேலை செய்து வீடு திரும்பும் உங்கள் மகனுக்கு மனைவி-மக்களின் கையால் ஒரு கோப்பை குளிர்ந்த நீர் குடிக்கக் கிடைப்பதென்பது எத்தனை ஆறுதல்? வீட்டுச்சூழல் திருப்தியாக இருக்கும்போது, வேலைசெய்யும் நிறுவனம் தரும் நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறன் கூடும். இவையெல்லாம் இல்லாமல், தனிமைச் சிறையில் இருப்பதுபோல இந்தப் பாலைவனத்தில் உங்கள் மகன் தவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இன்று பரவிவரும் இஸ்லாமிய அறிவாலும், மகன்களின் தூண்டுதலாலும், திருமணத்தின்போது வரதட்சணையைத் தவிர்த்து விடுகின்றனர். வரதட்சணையை வேண்டாமென்று சொல்லுமளவு பெருந்தன்மை உடையவர்கள், மகனின் சுகத்தை, நிம்மதியைக் குலைத்து, அவர்களிடம் பணம் பணம் என்று பிழிந்து எடுக்க நினைப்பது ஏன்? மருமகள்தான் அதற்குத் தடையாக இருப்பதாக அவதூறு சொல்வதும், மகனிடமிருந்து அவளைப் பிரித்துவிட நினைப்பதும் ஏன்?

இந்தத் தூண்டிலில் சில மகன்களும் விழுந்து விடுகின்றனர் என்பதுதான் வேதனையான உண்மை. பெற்றவர்களை மதிக்க வேண்டும், அவர்களின் பராமரிப்பு பிள்ளையின் பொறுப்பு என்பதில் மறுகருத்து இல்லவே இல்லை. ஆனால், அவர்கள் சொல்வதையெல்லாம் – தவறாகவே இருந்தாலும்- வேதவாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நம்மீது கடமையில்லை. மனிதர்களான அவர்களும் தவறு செய்யக்கூடியவர்களே என்பதை உணர்ந்து, தவறுகளை எடுத்துரைக்க வேண்டும். இதோ தவறுகளுக்கு உடந்தையாகக்கூடாது என்பதைத் திடமாக உரைக்கும் இறைவாக்கு பாருங்கள்!

[58:22] அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினர்களாக இருந்தாலும் சரியே!

மனைவியிடமே ஆறுதலும், அமைதியும் கிடைப்பதாகச் சொல்லும் பின்வரும் இறைவசனங்கள் ஒருவருக்குப் பெற்றோர் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மனைவியும் முக்கியம் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இருதரப்பிற்கும் உரிய கடமைகளைத் தவறாது செய்து, ‘பேலன்ஸ்’ செய்வதற்காகத்தான் ஒரு ஆணிற்கு ‘அதிகப் பொறுப்பு’ கொடுத்து, ‘மேன்மையானவர்’ ஆக்கப்பட்டுள்ளது.

[2:187] அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்

[2:228] கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு;”

[4:19] …இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும், அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.

[30:21] இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.

மேற்கண்ட இறைவசனங்கள் மனிதனுக்கு மனைவியின் அவசியத்தையும், அவளை நல்லமுறையில் நடத்த வேண்டியதையும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

”உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர்” என்பது நபிமொழி. இதைச் சற்றே கூர்ந்து பார்த்தால், இதன் அருமையான அர்த்தமும், அதன் தாக்கமும் புரியும். ஒருவர் உலகவாழ்வில் எப்பேர்ப்பட்ட பெரிய மனிதராகவோ, செல்வந்தராகவோ, பெரும்புகழ் பெற்றவராகவோ, அதிக நண்பர்கள் அமைந்தவராகவோ இருக்கலாம். அவரை மக்கள் போற்றலாம், புகழலாம், பின்பற்றலாம். ஆனால், அவர் தனது வீட்டினுள், தம் குடும்பத்தாருக்கு – அதாவது மனைவிக்கு – நல்லவராக இருக்கிறாரா என்பதுதான் முக்கியம். ஏனெனில், வீட்டில்தான் அவரது முழு குணம் வெளிப்படும். தாய், தந்தை, சகோதர-சகோதரிகள், பெற்ற பிள்ளைகள் ஆகியோர் இவரிடம் கோபம் இருந்தாலும், அது ரத்த பாசத்தினால் மறக்கப்பட்டு மன்னிக்கப்படலாம். அதேபோல, இவருக்கும் தொப்புள்கொடி உறவுகளிடத்தில் கோபம், வருத்தம் ஏதேனும் இருந்தாலும், ’தான் ஆடாவிட்டாலும், தன் சதை சதை ஆடும்’ என்பதாகத் தன் கடமைகளை விடாது செய்துவிடுவார்.

‘மனைவி’ என்ற உறவுக்கு ரத்தபந்தம் இல்லை. ஆனால், அந்த உறவுதான் இரத்த உறவுகளையும்விட ஒரு மனிதனுக்கு உணர்வளவில், உடலளவில் நெருக்கமானது. அதேசமயம் அந்த உறவுதான் பலசமயங்களில் ”taken for granted” ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவேதான், எந்த ரத்தத் தொடர்பும் இல்லாத உறவான மனைவியிடம், உங்கள் அகம்-புறம் முழுமையாக அறிந்த – உங்களின் ‘மறுபக்கத்தை’, ‘நிஜமுகத்தை’ அறிந்த அந்த உறவிடம், நீங்கள் ‘சிறந்தவர்’ என்று பேர் எடுக்கவேண்டுமென்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து, மனைவியை நீங்கள் எவ்வளவு கவனமாக, சிரத்தையோடு பேணி கண்ணியப்படுத்த வேண்டும் என்பது புரியும்.

இஸ்லாம் பெண்களுக்கு அதிக உரிமைகள் கொடுத்துள்ளது. அதைப் பெருமையுடன் பறைசாற்றவும் செய்கின்றோம். ஆனால், “உடையவன் கொடுத்தாலும் இடையவன் விடமாட்டான்” என்ற கதையாக, ஒரு சில பெண்களுக்குத் தம் கணவனுடன் சேர்ந்து வாழும் அடிப்படை உரிமைகூட கணவன் மற்றும் அவனைச் சார்ந்தவர்களின் தயவில் இருக்கும்படி உள்ளது. இந்தத் தவறைச் செய்யும் சகோதரர்கள் மொத்த இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே என்றாலும் அதன் பாதிப்பு பெரிது என்பதால் இத்தவறைத் திருத்திக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

[7:189] அவனே, உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான்; மேலும் அதிலிருந்தே அதனுடைய துணையைப் படைத்தான்; அதனிடம் அது அமைதி பெறுவதற்காக!

ahmed ritharudeen