காசிமுக்கு வயது ஏழுதான். ஆனால் துருதுருப்பான சிறுவன். அதீத புத்திசாலி! பெரிய மனிதன் போலப் பேசுவான்! அதனால் அவனது பெற்றோர்க்கும் ஆசிரியர்களுக்கும் அவன் ஒரு செல்லப்பிள்ளை!
அவனது அத்தா காதர், அவன் கேட்கும் பொருட்களையெல்லாம் மறுக்காமல் வாங்கிக் கொடுப்பார் – அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்வார்!
அன்று காலை மதரஸாவிலிருந்து திரும்பிய காசிமின் முகத்தில் சோகத்தின் ரேகை. அம்மா ஆமினா தான் அதை முதலில் கவனித்தாள்! கணவனிடம் சொன்னாள்!
“ஏத்தா காசிம் ஒரு மாதிரியா இருக்கே?” என்று கேட்டார் அவர்.
“சும்மாதான்” என்றான் காசிம், சுரத்தில்லாமல்.
“சும்மாதான்னு சொல்றே – ஆனா உங்கிட்டே சுறுசுறுப்பக் காணோமே?” அவர் தொடர்ந்து கேட்டார்.
அவன் மெளனமாக நின்றான்!
“எங்கிட்ட சொல்லத்தா – அத்தா நீ கேட்டதுலாம் வாங்கித் தருவேன்ல – எங்கிட்ட எதுக்கு மறைக்கனும்?” – அவர் மிகவும் கனவோடு கேட்டார்!
காசிம் பேச ஆரம்பித்தான்!
“இன்னிக்கு மதரஸாவுல தீனியாத் பாடம் நடத்தினாங்க!”
“அப்படியா? ரொம்ப சந்தோஷம்! ஆரம்பத்துலேயே நல்லா கத்துக்க — மனசுல நல்லா பதிய வச்சுக்கோ!” என்றார்.
“இஸலாத்தோட பர்லு அஞ்சுன்னூ சொன்னாங்கமா! கண்ணு பர்லு அஞ்சுதான் – எங்கே என்னென்னு சொல்லு பார்ப்போம்”.
கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத்து, ஹஜ்” – என்று இழுத்து இழுத்து ராகத்தோட சொன்னான்!
“வெரிகுட்! சரியாகச் சொல்லிட்டே! கலிமா எத்தனை?”
“அஞ்சு”
“குட்! வெரிகுட் – தொழுகை?”
“தொழுகையும் அஞ்சு வேளை – ஃஜ்ரு.. லுஹரு.. அஸலு.. மஃரிப், இஷா!”
“ரொம்ப கரெக்ட்! எங்கண்ணுன்னா கண்ணுதான்! ரமலான் நோன்பு – மொத்த வருமானத்துல (சேமிப்பில்) 2.5 சதம் கட்டாய ஏழை வரியான ஜக்காத் – வசதியானவங்க வாழ்க்கையில் ஒரு முறையாச்சும் மக்காவுல உள்ள கஃபத்துல்லாவுக்கு போய் வர்ர ஹஜ்! எல்லாம் தெரிஞ்சுக்கிட்டிருப்பியே?”
“ஆமாத்தா -எல்லாம் தெரியும் – அப்படியே மனப்பாடம் பண்ணிட்டேன்!”
“அது சரி காசிம், அதுக்கும் நீ கவைலையா இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?”
“அவன் மெளனமாக இருந்தான்“
“சொல்லுத்தா!” – காதர் வறுபுறுத்தினார்!
“இல்லே.. அஞ்சு கடமையையும் சரியா கடைப் பிடிக்காட்டா முஸ்லிமுன்னே சொல்லிக்க முடியாதாமே?”
அவன் குரலில் சோகம் இழைந்து வந்தது!
“ஆமா, அதுல என்ன சந்தேகம்? – இஸ்லாம் நடைமுறை மார்க்கம் – மார்க்கக் கடமைகளை கண்டிப்பா அனுசரிக்கனும்!
“நெஜமாவா?” அவன் முகம் இன்னம் சோகமானது!
“ஆமாத்தா – ஹஜரத் சொன்னது நூத்துக்கு நூறு சரிதான்”
காசிம் நிமிர்ந்தான் – அவன் முகம் தீவிரமானது!”
“அப்ப ஏன்த்தா நீங்களும் அம்மாவும் தொழறதே இல்ல? நீங்க ரெண்டு பேரும் நோன்பு வைக்கிறது கூட இல்லியே?..
பிடரியில் அறைந்தது மாதிரி இருந்தது காதருக்கு!
கையைப் பிசைந்து கொண்டு நின்றாள் ஆமினா!
இருவரது முகங்களும் கருத்துச் சிறுத்துப் போயின!
“இன்னிலேந்து எல்லோரும் ஒழுங்கா தொழ ஆரம்பிச்சிடுவோம் கண்ணு! நீ கவலைப்படாதே” என்று காதர் மகனை அணைத்துக் கொண்டார்.
ஆமினாவின் கண்கள் கண்ணீரில் ஒளுச் செய்து கொண்டிருந்தன.