மகளிர் இட ஒதுக்கீடு: உள்ளொதுக்கீடு … தாமதம் கூடாது!
கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ரப்பராய் இழுக்கப்பட்டு திருமதி சோனியா காந்தியின் கடும் முயற்சியில், கலைஞர் போன்ற கூட்டணித் தலவர்கள், இடது சாரிகள், பிரதான எதிர்க்கட்சியான பாஜக உதவியுடன் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டு மசோதா தாக்கலாகியிருக்கிறது. ராஜ்ய சபாவில் வாக்கெடுப்பும் நடந்து வெற்றி பெற்றிருக்கிறது.
லோக்சபாவிலும் நிறைவேறி அது சட்டமாகிவிடும் என்ற நம்பிக்கை உறுதிப்பட்டிருக்கிறது.
லாலுவும், முலாயமும் முறையே பீஹார், உ.பி. மாநில முஸ்லிம்களின் பேராதரவில் ஆட்சியதிகாரம் பெறுவதற்கு வழியமைத்துக் கொண்டவர்கள். அவர்களாகவே ‘தங்களுக்குத்தான் என்றைக்கும் முஸ்லிம்களின் ஆதரவு’ என்று நினைத்துக் கொண்டு முஸ்லிம் விரோத சக்திகளுடனும் கொஞ்சிக் குலவத் தொடங்கிதன் காரணமாகவும்,
காங்கிரஸின் ராகுல் காந்தி போன்ற இளந்தலைவர்களின் வாக்குறுதிகளில் நம்பிக்கை பெற்று முஸ்லிம்கள் காங்கிரஸின் பக்கம் மீண்டும் தொடர்புகொள்ளத் தொடங்கியதாலும் அந்த ஆதரவை மீண்டும் பெறும் முயற்சியில் இருப்பவர்கள். எங்கே காங்கிரஸ் இந்த சட்டவடிவின் மூலம் தங்களை செல்லாக்காசாக்கிவிடுமோ என்ற பீதியில் அவைகளில் ‘உள்ளொதுக்கீடு கோரி ‘ ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; மசோதாவை எதிர்க்கின்றனர். ஆனால் 33% ஒதுக்கீடு நிறைவேறிய பிறகு முஸ்லிம்களுக்கும், தலித்களுக்கும் உள்ளொதுக்கீடு செய்துகொள்ளலாம் என்பது மத்திய அரசின் நிலை.
காலவரையறையின்றி இந்தப் பிரச்சினையைத் தள்ளிப்போடாமால் சட்டம் நிறைவேறிய சூட்டிலேயே உள்ளொதுக்கீடு பற்றிய கருத்துப் பரினர்த்தனைகள் தொடங்கப் படவேண்டும். காலதாமதம் சிறுபான்மை முளிம்களுக்கும், தலித்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
இப்படிப்பட்ட வாக்குறுதிகளைக் கொடுப்பதும், பிறகு அதனை காலம் கடத்தி இழுத்தடிப்பதும் நிஜம்தான்.
பாபரி-மஸ்ஜிதை அக்கிரமமாக தகர்க்க மத்திய அமைச்சே உதவிவிட்டு -அதே இடத்தில் மஸ்ஜித் என்று அப்போதைய பிரதமர் நரசிம்மராவே வாக்குறுதியளித்து விட்டு- இடிக்கப்பட்ட சூட்டுடனேயே ‘தறகாலிகக் கோயில்’ என்று பெயரிட்டு பலத்த பாதுகாப்புடன் அதனை 18 வருடங்களாக இழுத்தடித்து வரும் தவறைச் செய்துவருவது ஒன்றும் ரகசியமான விசயம் அல்ல.
மறுபடியும் அத்தகைய தவறை மத்திய அரசு செய்யாது என்பது நமது நம்பிக்கை.
திருமதி சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தமிழ்நாடு சட்டமன்ற புதிய கட்டட திறப்புவிழாவில் கலைஞரைப் புகழ்ந்து பேசிய பேச்சுக்கள் உண்மையானவை என்பதை நம்பும் அந்த மக்கள் கலைஞர் உள்ளொதுக்கீட்டுப் பிரச்சினையை உடனே கையில் எடுப்பார் என்று நம்புகிறோம்!
நன்றி: நர்கிஸ் – தலையங்கம் ஏப்ரல் 2010