Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,221 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோயற்ற வாழ்க்கையா? நோய் பெற்று சிகிச்சையா?

இன்றைக்கு பரபரப்பாகப் பேசப்படும் திட்டம், அரசின், “மருத்துவ காப்பீடு திட்டம்!’ அது ஆட்சியாளர்களின் பெயரிலேயே அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட வருவாய் பிரிவில் உள்ள அனைத்து மக்களையும் கவரும் விதமாக அது உருவாக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய, பல்துறை சிறப்பு மருத்துவப் பிரிவுகள் கொண்ட மருத்துவமனைகளில், பணக்காரர்களுக்கு கொடுக்கப்படும் உயர்தர சிகிச்சைகள் கூட, சாதாரண ஏழைக்கும் கிடைக்கும் என்பது இத்திட்டத்தின், “கவர்ச்சி!’ இதனால், இது பெரும் வரவேற்பைப் பெற்றது ஆச்சரியமில்லை. இதே மாதிரி திட்டங்கள், வேறு சில மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன. இதை ஆட்சியாளர்கள் அமல்படுத்தியதில், “ஓட்டு வங்கி அரசியல்’ எனும் உள்நோக்கம் இருப்பதாக குற்றச்சாட்டுகளும் உண்டு. இத்திட்டத்திற்கு செலவு செய்யப்படும் தொகை, இதை ஏற்று நடத்தும் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும், “பிரிமியம்’ தொடர்ந்து செயல்படுத்த, மாநில அரசுகளின், “நிதிநிலை’ இடம் கொடுக்குமா என்பதும் ஒரு கேள்வி. “இது ஆளும் கட்சிக்கு சாதகமான, ஓட்டை கருத்தில் கொண்ட திட்டம்’ என, எதிர்க்கட்சிகள் சந்தேகிப்பது ஒருபுறம். அதோடு, காப்பீடு நிறுவனங்களுக்கு செலவிடப்படும் பிரிமியத்தைப் பயன்படுத்தி, மாநிலத்தின் அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டால், அதனால் மக்களுக்கு அதிக பயன் நிரந்தரமாக கிடைக்கும் எனும் நிலை மறுபுறம் என்று விவாதங்கள் தொடர்கின்றன.

மாறிவரும் புதிய உணவுப் பழக்க வழக்கங்கள், “பாஸ்ட் புட்’ கலாசாரம், மன அழுத்தத்தை அதிகமாக்கும், “விரைவு வாழ்க்கை’ முறை, குடும்பத்தில் கணவன் – மனைவி இருவரும் பொருள் ஈட்ட வேண்டிய அவசியம் என்ற, பல்வேறு சூழ்நிலைகள் ஒருபுறம், சாக்கடைகளை, குப்பைத் தொட்டிகளாய் மக்கள் மாற்றியதாலும், ஆரோக்கியமற்ற, சத்து குறைவான மற்றும் கலப்பட உணவுப் பொருட்களால் பெருகி வரும் புதுப்புது நோய்கள் – அவ்வப்போது தோன்றும் தொற்று நோய்களால், புயலுக்கு பெயர் வைப்பது போல, புதிய புதிய பெயரால் உலாவரும் உள்நாட்டு, வெளிநாட்டு நோய்கள்; இவற்றோடு 30 – 40 ஆண்டுகளாக அதிகமாகி வரும், சர்க்கரை, கேன்சர் மற்றும் இதய நோய்கள், ஜீரண உறுப்பு உணவுப் பாதை நோய்கள் என, நோய்களின் பரந்து விரிந்த சாம்ராஜ்யம் மறுபுறம் – இதன் காரணமாக உருவாகி வரும், “பல்துறை சிறப்பு மருத்துவமனைகள்’ காது, மூக்கிலிருந்து, உடலின் ஒவ்வொரு அங்கங்களுக்கும் தனி மருத்துவர் என்ற நிலை- இப்படியே போனால், ஒவ்வொரு விரலுக்கும், நகத்துக்கும் தனிச்சிறப்பு மருத்துவர் என்ற நிலை வரும் காலம் வெகு தொலைவில் இருக்காது.

பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் துவங்கிய போது, தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆங்கிலேயர்கள், இங்கு, “பொது சுகாதாரத்தை’ கடுமையாக அமல்படுத்தினர். இதன் விளைவு, “ஊர் பராமரிப்பில்’ சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் எண்ணிக்கை பெருகியது. இதன் விளைவாக, நோய் வராமல் தடுக்கும் செயல்பாடுகள் வளர்ந்தன. “நோய் நாடி… நோய் முதல் நாடி…’ என்பது நம் முன்னோர் வாக்கு. மேற்கத்திய நாடுகள், வளர்ந்த நாடுகள் இவ்விஷயத்தை நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டன. பொது சுகாதாரத்தை விரிவுபடுத்தினர்; நிலைப்படுத்தினர். அதனால், நோய் தடுப்பும், நோய்கள் உருவாகாத நிலையும் ஏற்பட்டன. “பொது சுகாதாரம்’ என்பது மூன்று அடுக்குகளாக பராமரிக்கப்பட வேண்டியது என்பதை, வளர்ந்த நாடுகள் செயல்படுத்தி வெற்றி கண்டன.

  • மக்கள் தொகை முழுவதற்கும் நோய்த் தடுப்புத் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள்.
  • காய்ச்சல் – காயங்கள் போன்ற அன்றாட தேவைக்கான மருத்துவ சேவைகள்; நோய் முன் தடுப்பு திட்ட ஏற்பாடுகள்.
  • சிறப்பு நோய்களுக்கான சிறப்பு மருந்துகள் – மருத்துவச் சாலைகள்.

1992ம் ஆண்டு முதல் தமிழகத்தில், பொது சுகாதார அமைப்பும், அதை செயல்படுத்தும் துறையும் செயல்பட்டு வருகிறது. 1940களில் ஆங்கில மருத்துவத்தில், “ஆன்டிபயாடிக்குகள்’ கண்டுபிடிக்கப்பட்டு, நோய்த் தடுப்பு எனும், “வருமுன் காப்பது’ பின்னுக்குத் தள்ளப்பட்டு, வந்த நோய்க்கான சிகிச்சைக்கு முன்னுரிமை ஆரம்பமானது. பொது சுகாதார அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிக்கப்பட்டு, அதன் அடிப்படை பணிகளிலிருந்து அவ்வப்போது வரும் நோய்களை விரட்டும் பணிக்கு திருப்பி விடப்பட்டது. இப்படி, மலேரியா ஒழிப்பு, தட்டம்மை, பெரியம்மை ஒழிப்பு, இளம்பிள்ளை வாத ஒழிப்பு என, பெரிய பெரிய முகாம்கள் நடத்தப்பட்டன; இவற்றிற்கு பலன் கிடைக்காமல் இல்லை. “நோய்கள் அறவே ஒழிக்கப்பட்டு விட்டது’ என, முகாம்கள் முடிந்து, புள்ளி விவரம் வந்தவுடனேயே, அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன. அதனால், சிறிது காலத்துக்குள்ளேயே, அதே நோய்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தன. காரணம், ஒருமுறை நடத்தப்படும் நோய் எதிர்ப்பு பணிகள் முடிந்தவுடனேயே, எல்லாம் முடிந்தது என, அடுத்தப் பணிக்கு,பொது சுகாதார ஊழியர்களை அனுப்பியதால் வந்த விளைவு. மேலை நாடுகளில், அப்பணியின் தொடர்ச்சி இருந்து கொண்டே இருப்பதால், நோய்கள் மீண்டும் எட்டிப் பார்ப்பதில்லை. நம் நாட்டில் அந்நிலை இல்லாதது, நோயை மீண்டும் புத்துயிர் பெற வைக்கிறது.

இந்தியாவின் மருத்துவப் பாதுகாப்பு, 3,500 ஆண்டு கால பழமை கொண்டது. தற்போதைய அரசு, நாட்டின் மொத்த உற்பத்தி குறியீட்டில், 110 கோடி மக்களுக்கு, 1.3 சதவீதமே செலவு செய்கிறது. இதில், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரமும் அடக்கம். இது மிக மிகக் குறைவு. ஐ.மு.கூ., அரசு முதன் முதலாக பொறுப்பேற்ற போது, இந்த ஒதுக்கீட்டை, 2லிருந்து 3 சதவீதம் வரை உயர்த்துவதாக, அவர்களின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் வாக்குறுதி கொடுத்தது; 2010 வரை அது நிறைவேற்றப்படவில்லை. பொது சுகாதாரத்திற்கு செலவிடும் நாடுகளில், உலகிலேயே நாம் கடைசி ஐந்து நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம். நமக்குக் கீழ், புரூண்டி, மியான்மர், பாகிஸ்தான், சூடான் மற்றும் கம்போடியா உள்ளது என்றால், நம் நிலை என்ன என்பது நமக்குப் புரியும். மக்கள் தொகை உயர உயர, இதற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய ஆட்சியாளர்கள், 1980ல், 3.95 சதவீதம், 2005ல் 2.4 சதவீதம், தற்போது அதுவுமின்றி 1.3 சதவீதம் என குறைத்தனர். பொது சுகாதாரத்தின் மீதுள்ள அக்கறையின்மைக்கு இது சான்று.

வளர்ந்த நாடுகளில், வாழ்க்கை முறை மாற்றத்தால் மக்களுக்கு ஏற்படும் புதிய நோய்களுக்காகவே, பல்துறை சிறப்பு மருத்துவர்கள், மருத்துவமனைகள் உண்டானது. ஆயினும், பொது சுகாதார பராமரிப்பை முழு மூச்சோடு தொடர்ந்தனர். நம் நாட்டில், பொது சுகாதாரத்தை அனாதைக் குழந்தையாக்கி, பல்துறை சிறப்பு மருத்துவம் மற்றும் மருத்துவமனை பக்கம் திருப்பினர். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை… ஆட்சியாளர்களுக்கு ஓட்டை அள்ளித் தரும் அட்சயப் பாத்திரமாகவே இவை விளங்குகின்றன. அதோடு, இவற்றிற்கான மருந்து தயாரிப்பு, மருத்துவமனை லைசென்ஸ், மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீடுகள் என்ற வகையில், பெரும் லாபங்கள் வந்தடைவதாலும், அரசியல்வாதிகளின் முழு கவனமும் இதன் மேல் திரும்பியது. ஊரை சுத்தமாக வைத்திருந்து, அதனால் ஆரோக்கியம் பெருகினால், மக்கள் அளப்பரிய ஆனந்தம் அடைந்து, ஆள்கிறவர்களுக்கு ஓட்டு போட்டு விடுகின்றனரா? இல்லையே… ஆனால், பெரிய பெரிய மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை என்றாலோ, இலவச மருத்துவக் காப்பீடுகள் மூலம், உயர்தர மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்கும் என்றாலோ அல்லவா ஓட்டுகள் அவர்களுக்கு குவிகிறது. மக்களின் இந்த மனோபாவத்தை நன்கு அறிந்ததால், “நோய் தடுப்பு’ கைவிடப்பட்டு, “நோயைக் கொடுத்து’ சிகிச்சை அளிப்பது முன்னுக்கு வந்தது.

சுகாதார சீர்கேடுகளால் உருவாகும் தொற்று நோய்களிலிருந்து, வாழ்க்கை முறை மாறுபாட்டால் ஏற்பட்ட இதய நோய், சர்க்கரை, கேன்சர் போன்ற நோய்களை தீர்க்கவே, மூன்றாவது அடுக்கான சிறப்பு நோய் மருத்துவர்கள் உருவாயினர். வளர்ந்த நாடுகளில், முதல் அடுக்கான பொது சுகாதாரம், இரண்டாவது அடுக்கான தொற்று நோய்த் தடுப்பு, இரண்டையும் சீரிய முறையில் செய்து, அப்பணியை நிரந்தரமாக்கிய பிறகே, மூன்றாவது அடுக்கிற்கு வந்தனர். அதோடு, முதல் இரண்டு அடுக்குமுறை நடைமுறைகளையும் கண்காணிப்பது, அதில் மேலும் ஆராய்ச்சி செய்வது, புதிய விஷயங்களை கண்டுபிடிப்பது, அதை செயலாக்கம் செய்வது, இவற்றிற்கெல்லாம் நிதி உதவி செய்வது என்ற நான்கிற்கும், ஒரு நிரந்தர அமைப்பை ஏற்படுத்தினர். நோய்களுக்கான மத்திய ஆராய்ச்சி நிலையம் என்ற அமெரிக்க மாதிரியை தான், நம்மை விட அதிகம் மக்கள் தொகை கொண்ட சீனா உட்பட ஐரோப்பிய நாடுகளும் பின்பற்றுகின்றன. அங்கு பொது சுகாதாரம் இதனால் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. மாநிலங்களை பொறுத்தமட்டில், பொது சுகாதாரத் துறை அதன் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களில், நிதி ஆதாரமில்லை. அதனால், மத்திய அரசு அவ்வப்போது போடும் பொதுத் திட்டங்களையே (உதாரணம்: இளம்பிள்ளை வாத சொட்டு மருந்து) செயல்படுத்த வேண்டியுள்ளது. காரணம் இதற்கான முழு நிதி அதற்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கிறது. ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் போதும், ஐந்தாண்டுத் திட்டங்களின் போதும், இதற்கான அரசின் திட்டங்களில் மாற்றம் வருவதும், (நிலையான கொள்கையின்மை) பொது சுகாதார வளர்ச்சியின்மைக்கு மேலும் ஒரு காரணம்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், நல்ல தண்ணீருக்கான நீர் ஆதாரங்கள் குறைவு. இந்தியாவிலேயே நகர்ப்புறங்கள் அதிகமாக இருக்கும் மூன்றாவது மாநிலம், ஏராளமான கோழிப்பண்ணைகள், மூன்று பன்னாட்டு விமான நிலையங்கள் இருப்பதும், நோய் பரப்பும் காரணிகளாக உள்ளன. அதுவுமின்றி, நாம் வெளியேற்றும் கழிவுநீரில், 27 சதவீதமே சுத்திகரிக்கப்படுகிறது. மீதி கழிவுநீர், குடிநீர் ஆதாரங்களிலும், ஆறுகளிலும், கடலிலும் கலந்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இவையும், நோய்ப் பரப்பும் காரணிகளுக்கு வலுசேர்க்கின்றன. கடந்த 1983ல் வெளியிடப்பட்ட மத்திய அரசின் குறிப்பில், “2000ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் மருத்துவ வசதி’ என்றனர். சரியான மருத்துவ வசதியின்மையால், ஆண்டுதோறும் பத்து லட்சம் பேர் மரணமடைகின்றனர். இந்த புள்ளி விவரங்களைக் குறைக்க வேண்டுமென்றால், நோய்த் தடுப்பே புத்திசாலித்தனமானது. ஆனால், மூன்றாவது அடுக்கான சிறப்பு நோய்களுக்கான பல்நோக்கு சிகிச்சை மருத்துவமனைகள், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பெருகி வருகின்றன. இந்த வகையான சிகிச்சை சந்தை, 2007ல், ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2020ல், 12 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயாகவும் உயருமென்று, ஒரு கணிப்பு கூறுகிறது. அப்படியாயின், அமெரிக்கா போல மருத்துவ சிகிச்சைச் செலவு, இந்தியாவில் வானமளவு எட்டி உயரப் போகிறது. மருத்துவ சிகிச்சை, ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விடும் அபாயம் உள்ளது.

இந்தியாவில் ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஓமியோபதி மற்றும் ஆங்கில மருத்துவம் எல்லாம் சேர்ந்து, ஆண்டுக்கு ஐந்து லட்சம் புதிய மருத்துவர்கள் உருவாகின்றனர். இவர்கள் நாடு முழுவதும் உள்ள, 650 மருத்துவக் கல்லூரிகளிலிருந்து வெளியே வருகின்றனர். சிறப்பு சிகிச்சைகளை ஊக்குவிக்க அரசும், தனியார் மருத்துவமனைகளும் சேர்ந்து, மருத்துவச் சுற்றுலா என்ற புதிய, புதிய உத்திகளை கையாள்கின்றன. இந்த வியாபாரம் ஆண்டுதோறும், 4.5 லட்சம் வெளிநாட்டினர், இந்தியாவில் சிகிச்சை பெற்றுக் கொள்வதால் மேலும் வளர்கிறது. இதனால், ஏழை இந்தியனுக்கு என்ன பயன் என்று தான் தெரியவில்லை. இப்படி காலம் ஓட ஓட, மருத்துவ சிகிச்சை என்பது, மலைமேல் ஏறி நிற்பதால், பெரிதும் பாதிக்கப்படுவது இந்தியாவின் 70 சதவீத மக்களே. இவர்களை கருத்தில் கொண்டு, நோயற்ற வாழ்வுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு, பொது சுகாதார திட்டங்களுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். இன்றுள்ள கலப்படம் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட சட்டங்கள், பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்டவை; அவை, தண்டிப்பதை அடிப்படையாகக் கொண்டவை. மாறுபட்ட இன்றைய சூழ்நிலைக்கு தகுந்த, புதிய சட்டங்கள் இயற்ற வேண்டும். உணவுக் கலப்படத்தை தடுக்க, உணவின் தரத்தை உயர்த்த, உணவுத் தயாரிப்பாளர்களையும் பொறுப்பாக்கி, அவர்களோடு கலந்தாலோசித்து, சட்டங்களில் மாறுதல் செய்ய வேண்டும். கிராமப் பஞ்சாயத்துகள், பொது சுகாதாரத்தின் ஆணி வேர். அங்கே இதை செயலாக்க, தீவிர வழிவகைகள் செய்ய வேண்டும். சுகாதார சீரழிவின் உச்சம், நகரங்களாகவே இருக்கிறது.

மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால், நோய் பரப்பும் காரணிகள் இங்கேயே அதிகமாக உருவாகிறது. எனவே, தொட்டுக்கோ, துடைத்துக்கோ என்று திட்டமிடாமல், நிரந்தர மற்றும் தொடர்ந்த செயல்பாடுகள், இங்கு அவசியமாக்க வேண்டும். துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை, அதிகமாக்க வேண்டும். இன்னும் தமிழகத்தின் பல நகரங்களில், நகர சுத்தி தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவு என்பது மட்டுமல்ல, பெரும்பாலோர் தற்காலிகப் பணியாளர்களே; அதை அதிகமாக்கி, நிரந்தரமாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், செவிலியர்கள் எண்ணிக்கை, மக்கள் நலப் பணியாளர்கள் என்பனவெல்லாம், பொது சுகாதாரத்தை வலுப்படுத்தும் காரணிகள். இவற்றை அதிகப்படுத்த வேண்டும்.

இதைவிடுத்து, நோய்க்கு மருந்து, உயர்தர சிகிச்சை, பல்துறை மருத்துவமனைகள், மருத்துவக் காப்பீடுகள் என்பன எல்லாம், ஓட்டைப் பானையில் தண்ணீர் பிடிப்பது போலத் தான். நோய் வந்து மருந்து உண்பதை விட, வருமுன் காத்து, நோயற்ற வாழ்வு வாழலாமே! email: srseghar@gmail.com

தினமணி – எஸ்.ஆர்.சேகர், அரசியல் சிந்தனையாளர்