Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,087 முறை படிக்கப்பட்டுள்ளது!

நாம் நாகரிகமானவர்களா? நதிகளைக் கேளுங்கள்

நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நாம் நாகரிகமானவராகக் (Civilised,Fashionable) காட்டிக்கொள்வதில் மிகுந்த அக்கறை காட்டுகிறோம். உடுக்கும் உடை, உண்ணும் உணவு, சிகை அலங்காரம், ஓட்டும் ஊர்தி, உபயோகிக்கும் தமிழ் அல்லது தமிழிஷ் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அடிக்கடி நமக்குள் வரும் சர்ச்சைகளில் பல, எது நாகரிகம்? எவர் நாகரிமானவர்? என்பதைச் சுற்றி இருப்பதைக் கவனிக்கிறோம்!!

உதாரணமாக, காதலர்தினத்தைக் கொண்டாடுபவர் தான் நாகரிகமானவர்? அல்லது நாகரிகமில்லாதவர்? என்பது போல!!

சரி, நாகரிகம் என்றால் என்ன?

நாகரிகம் என்பது நாடோடிகள், பழங்குடிகள் போல இல்லாமல் பலர் நகர வாழ்க்கையை மேற்கொண்டு விவசாயத்தைப் பயன்படுத்தும் நிலையையும், விளையும் பொருட்களை வணிகம், மற்றும் இதர தொழில்களிலும் ஈடுபடும் சமூக நிலையையும் குறிக்கும் சொல்லாகும்!!

இந்தியத் துணைக்கண்டத்தில் எத்தனை நூற்றாண்டுகளாக நாகரிகமாக மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள்? முதலில் எங்கே குடியிருந்தார்கள்? இது போன்ற கேள்விகளைக்கு விடை தேடினால், நாம் இந்தியத் துணைக்கண்டத்தில் தோராயமாக 4500 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும், நம் முன்னோர்கள் அனைவரும் நதிகளின் படுகைகளிலேயே முதலில் வாழ ஆரம்பித்ததாகவும் தெரிகிறது!!

இதனாலேயே நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்கள் தில்லி, ஆக்ரா, மதுரா, காசி, ஹம்பி, பாட்னா என அனைத்தும் நதிக்கரையிலேயை உள்ளதைக் காணலாம். தமிழ்நாட்டை எடுத்தால் சோழர்கள் காவிரிக்கரையிலும், பல்லவர்கள் பாலாற்றங்கரையிலும், பாண்டியர்கள் வைகையாற்றின் கரையிலும் ஆட்சி செய்தனர்!!

இதில், கங்கை, காவிரி போன்ற நதிகளைப் பாராட்டாத கவிகள் இல்லை எனலாம்!! தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் போன்றவற்றில் காவிரியின் பங்கு முதன்மையானது!! 2200 ஆண்டுகளுக்கு முன்னர், காவிரியின் குறுக்கே கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும் நம் முன்னோர்களின் திட்டமிடல், ஆட்சித்திறன் போன்றவற்றை பறைசாற்றுவதாக உள்ளது!! காவிரியின் கொடையால் தான் தஞ்சை, குடந்தை போன்ற ஊர்கள் நெற்களஞ்சியங்களாக கூறப்பட்டது. மக்கள் நாகரிகமாக வாழ்ந்து வந்ததன் அடையாளம் தான் சோழர்களின் கட்டடக்கலையும், பிரமிப்பூட்டும் கோயில்களும்!!

இப்படி நமது பண்பாடு, நாகரிகம் போன்றவை மேம்படக் காரணமாக இருந்த நதிகளின் இன்றைய நிலை கவலைக்கிடமாக உள்ளது!! ஒன்று நதிகள் சீரழிக்கப்படுகின்றன அல்லது நதிகளின் பெயரால் மோதல்கள் நடக்கின்றன!!

இன்று நாம் நாகரிகமாக கருதும் ஒவ்வொரு செயல்பாடும், தயாரிப்பும் நதிகளை சீரழிப்பதாகவே உள்ளது. எகனாமிஸ்ட் என்னும் வாராந்திரி, “கங்கையைப் பாருங்கள், இந்தியாவில் ஏன் ஒவ்வொரு நாளும் 1000 குழந்தைகள் நீர் சார்ந்த தொற்று நோயில் இறக்கிறார்கள் என்பது தெரியும்” என்று கூறுகிறது. புனிதத் தலமாகக் கருதப்படும் காசியில், “கங்கையில் குளிப்பது 120 மடங்கு தீங்கானது” என்னும் ஆய்வறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழகமும் இதற்கு எந்த வித்திலும் சளைத்ததல்ல. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகர்களின் மனிதக்கழிவுகளும், சாயப்பட்டறைக் கழிவுகளும் கலந்த காவிரி நீர் தான் கருர், திருச்சி போன்ற நகரங்களின் குடிநீர். பெரும் நகரத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கலாம், ஆனால் கொடுமுடி, முசிறி போன்ற ஊர்களுக்கு அருகில் உள்ள கிராமங்களில் என்ன செய்வார்கள்!! அவர்களும் மனிதர்கள் தானே!! நெசவுத்தொழிற் கழிவு, காகிதாலைக் கழிவு, தோல் தொழிற்சாலைக்கழிவு என அனைத்துமே கலப்பது ஏதாவது ஒரு நதியில் தான்!!

சென்னையில் கூவம் என்பது நதியின் பெயர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நமது அன்றாடப் பயன்பாட்டில் சென்னையில் உள்ள சாக்கடைகளுக்குப் பெயர் கூவம்!! கூவம், அடையாறு, விருகம்பாக்கம் கால்வாய், பக்கிங்கம் கால்வாய் என அனைத்துமே கூவம் தான்!! நூறு ஆண்டுகளூக்கு முன்பு கூட கூவத்தில் குளிப்பதும், படகுச் சவாரியும் நடந்தது என்றால், இன்று யாரும் நம்பத் தயாராக இல்லை!!

கோவை நகரைக் கடந்து செல்லும் நொய்யல் நதியில் தான் அன்றாடம் துணிகளைத் துவைத்திருக்கிறோம் என்று என் தந்தை கூறுவதை இன்று என்னால் நம்ப முடிவதில்லை. எனது பாட்டன், முப்பாட்டன், அவர்களது முன்னோர் என அனைவரும் கோவை அருகே உள்ள சூலூரில் நொய்யல் நதிக்கரையில் கொடிக்கால்களை வளர்த்து, இன்ன பிற விவசாயம் செய்து வாழ்க்கையையே நடத்தியிருக்கிறார்கள். என் மூதாதையரை வளர்த்த நொய்யல் நதி இன்று சாக்கடையாக ஊர்ந்து செல்வதைப் பார்த்தால் கண்ணிர் வருகிறது.

இன்று, நதிகளின் பெயரால் போராட்டங்கள் நடக்காத மாநிலங்களே இல்லை என்பது இன்னோரு விஷயம். மனித நாகரிகத்தின் உச்சமாகக் கருதப்படும் நமது ஜனநாயகமும், அரசியலமைப்பும் நம்மை ஆள்பவர்களும் நதிகளால் வரும் மோதல்களை தடுக்கவோ அல்லது உடன்பாடு ஏற்படுத்தவோ முயலவில்லை!! ஐரோப்பாவில் உள்ள டன்யூப் (Danube) நதி பத்து நாடுகளில் பாய்ந்து செல்கிறது. அவர்கள் காவிரி அளவிற்கோ நர்மதா அளவிற்கோ சண்டை இட்டுக் கொள்வதில்லை!! இப்போது கூறுங்கள், யார் நாகரிகமானவர்கள்? யார் பண்பட்டவர்கள்?

நமது பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் போன்றவை குடும்ப அமைப்பு, உடுக்கும் உடை போன்றவற்றால் மட்டும் முடிந்து விடுவதில்லை! நம்மைப் பாராட்டி சீராட்டி வளர்த்த இயற்கையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதிலும் தான் உள்ளது! நம்மை ஆள்வோரிடம் “நதிகளை மீட்க என்ன திட்டம் வைத்துள்ளார்கள்” என்பதைப் பற்றி என்றாவது கேட்டிருக்கிறோமா? கேட்டால் மட்டும் என்ன நடக்கப் போகிறது என்பது வேறு!!

நம்மால் முடிந்தால் நம் வீட்டுக் கழிவுகள், நம் தோட்டத்திற்குச் செல்லும் முறையில் திருப்பினாலே போதுமானது. கழிவுக்குழாய்கள் இல்லாத கிராமங்களில் சென்று பார்த்தால் இந்த முறை கடைப்பிடிக்கப் படுவதைக் காண முடியும்.

நாம் நாகரிகமானவர் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கும் வேளையில் ஒருமுறை “காட் மஸ்ட் பி கிரேசி” என்ற திரைப்படத்தைப் பாருங்கள்!! பிறகு பதில் கூறுங்கள்!!

யார் நாகரிகமானவர்கள்? பழங்குடிகளா? அல்லது நகரத்தாரா? என்று!!

செந்திலின் பக்கங்கள்