Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,594 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொட்டலில் பூத்த புதுமலர் 4

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 6

சீனத்துப்பட்டு, பீங்கான், சாவகத்தீவின் வாசனைப்பொருட்கள், சிங்களத்தீவின் தேயிலை, பாக்கு மற்றும் நறுமணப்பொருட்கள்!

கண்ணைக்கவரும் வண்ண வண்ணக்கைவினைப்பொருட்கள்! முற்றிலும் அவர் எதிர்பார்த்திராத அபூர்வப்பொருட்கள்.

இவ்வளவு பொருட்களையும் எதற்காக இந்தக்குடிசைக்குள் வைத்திருக்கறீர்கள்? என்று தேவரைப்பார்த்துக்கேட்டார்.

‘விற்பதற்கு’ ஒரே வார்த்தையில் பதில் வந்தது.

‘நானே வாங்கிக்கொள்கிறேன்’.

சரக்குப்பொதிகள் அனைத்தும் செட்டியாரின் சரக்கு உட்பட பிரித்துப்பார்த்து அரபு வியாபாரி வாங்கிக்கொண்டார். இந்த பேரத்தில் தேவர் வகைக்கு நல்ல இலாபம் கிடைத்தது.

அதிகாலையிலேயே பன்னாட்டுக்குழு தெற்கு நோக்கிப் பயணத்தைத்துவக்கிய சிறிது நேரத்தற்குள்ளேயே பங்காரு செட்டியார் வந்து சேர்ந்தார்.

நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பால் மிகவும் சோர்ந்து போயிருந்தார். கலவரத்துடன் தேவரை அணுகி போய் வந்த விஷயம் பற்றி சுருக்கமாக கூறினார்.

மனைவிக்கு அடிக்கடி வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டதால், சரியாக உணவு உட்கொள்ள முடியவில்லை. உடல் நிலை மிக அபாயமான கட்டத்தை எட்டிவிட்டது.

மருத்துவரை அழைத்து வைத்தியம் செய்த பின் உடல் நிலை சீராகி விட்டது. எழுந்து நடமாடக்கூடிய அளவுக்கு வந்ததும் தேவரிடம் ஒப்படைத்து விட்டுப் போன சரக்குகளை எடுத்து விற்பனை செய்யும் நோக்கத்தோடு இங்கு திரும்பிவிட்டார்.

இது தான் அவர் சொன்னதன் சாரம்.

தேவர் புன்னகையுடன் செட்டியாரிடம் நடந்த விஷயம் பற்றிக் கூறினார் நல்ல ஆதாயத்தோடு சரக்குகளை அரபு வியாபாரிக்கு விற்றுவிட்டதாக கூறி பணத்தைக்கொடுக்க முன்வந்தார்.

பங்காரு செட்டிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. தேவரை மனமார வாழ்த்தினார். கண்களில் மகிழ்ச்சி பொங்க ‘ஐயா! நீங்கள் எனக்குச்செய்துள்ள பேருபகாரத்திற்கு என்றென்றும் நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். என் மனைவிக்கு இன்னும் பூரண சுகமாகவில்லை. அவளுக்கு அங்கு யாரும் துணையில்லை. இங்கு கொள்முதல் செய்த சரக்கு தேங்கிக்கிடக்கிறது. இரண்டுக்குமிடையில் நான் அல்லாடிக்கொண்டிருக்கிறேன். இந்நிலையில் நீங்கள் செய்த உதவி பசித்த வயிற்றுக்கு பால் வார்த்தது போல் இருக்கிறது. …’ என்று சொல்லிக்கொண்டே போனவர் தற்செயலாக அங்கிருந்த குடிசையைப்பார்த்ததும் அடடே! இது என்ன இது? புதிதாக முளைத்திருக்கிறது? யார் இதை அமைத்தது? என்று கூறி கிட்டேப்போய் உள்ளே எட்டிப்பார்த்தார்.

உள்ளே செல்லம்மாளும், பஞ்சவர்ணமும் சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.

செட்டியார் மலைத்துப்போய் நின்றுவிட்டார். மூளையில் ஏதோ பொறிதட்டியது போல் இருந்தது. ஒரே தாவலில் தேவரிடம் வந்தார்.

ஐயா, என் கஷ்டத்திற்கு விடிவுகாலம் வந்துவிட்டது. இப்பொழுது எனக்கு பணம் தரவேண்டாம். இதைக்கொண்டு புதிய சரக்குகள் கொள்முதல் செய்துவையுங்கள்.

நான் நாளையே புறப்பட்டுப்போய் என் மனைவியை அழைத்து வந்துவிடுகிறேன். இது மாதிரி ஒரு சின்ன குடிசையை அமைத்துக்கொண்டு இங்கேயே தங்கி விடுகிறேன். அவளுக்கும் பாதுகாப்பு, எனக்கும் அலைச்சல் மிச்சம். தயவு செய்து எனக்கு அனுமதி கொடுங்கள்’ என்று கெஞ்சுங்குரலில் கேட்டார்.

தேவருக்கு இது உள்ளூர மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏற்கனவே இரண்டு குடும்பங்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக ஒரு குடும்பம் வந்தால் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்க முடியும்.

அவரது மிகப் பெரிய கனவுத் திட்டத்திற்கு ஆள் பலம் அவசியம். ஒரே மொத்தமாக ஆட்களை திரட்ட முடியாது. சன்னஞ் சன்னமாகத்தானே சேர்க்க வேண்டும்.

மறு நாட்காலையில் செட்டியார் புறப்பட்டுச் சென்று விட்டார்.

ஒவ்வொரு நாளும் புதுப்புது இடங்களை பார்ப்பதிலும், அதில் என்ன பயிரிடலாம் என்று ஆராய்வதிலும் தேவர் ஈடுபட்டார்.

கடம்பன் முட்புதர்களை அகற்றி இடத்தை சீர்திருத்தும் பணியை மேற்கொண்டான்.

செல்லமாளும் பஞ்சவர்ணமும் சமையல் வேலை முடிந்ததும் ஊர்க்கதைகள் பேசுவதில் நேரத்தைக் கழித்தார்கள்.

ஒரு வாரம் வரை இவ்வாறு கழிந்தது. பொதுவாக எல்லோருக்கும் இது ஓர் புதிய அனுபவமாகயிருந்தது. அதே நேரத்தில் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கக்கூடியதாகவும் இருந்தது.

அந்த உற்சாகத்தையெல்லாம் சிதறடிக்கக்கூடிய சம்பவம் ஒன்று விரைவில் நிகழவிருக்கிறது என்பதை யாரும் அறியவில்லை.

மதியம் உணவு முடிந்த பின் உடை மர நிழலில் எல்லோரும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

தென் திசைக் காற்று சுழன்று சுழன்று வீசியது. புழுதியை வாரியடித்தது. கண்களை திறந்து பார்க்க முடியவில்லை. இருக்க இருக்க காற்றின் உக்கிரம் வலுத்தது.

குப்பை கூளங்களும் இலை சருகுகளும் ஆகாயத்தில் பறந்தன.

பெரும் சுழற்காற்று ஒன்று ஆயிரம் நாகசர்ப்பங்களின் சீற்றத்தை ஒன்றாகத் திரட்டியது போல் சீறிப் பாய்ந்து வந்தது. எல்லோரும் புழுதி கண்ணுக்குள் புகாமல் கைகளால் மறைத்துக் கொண்டனர்.

ஒரே நிமிடம். வந்த வேகத்தில் மறைந்து விட்டது. கண்களைத் திறந்துபார்த்தார்கள்.

என்ன கொடுமை! கடம்பனும் பஞ்சவர்ணமும் அரும்பாடு பட்டுக்கட்டிய குடிசையைக் காணோம். குடிசையிருந்த இடத்தில் வெறும் கட்டாந் தரை தான் இருந்தது.

குடிசை எங்கே? சுற்றுமுற்றும் பார்த்தார்கள் வெகு தூரத்தில் சிதைந்த பறவைக்கூடு போல் சின்னா பின்னமாக சிதைந்து கிடந்தது அந்த குடிசை.

தேவரும் கடம்பனும் அர்த்த புஷ்டியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

‘புரிகிறது’ என்பது போல் கடம்பன் தலையை ஆட்டிக் கொண்டான். களிமண் புற்றுமண் பற்றி தேவர் சொன்னது இப்போது அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

செல்லம்மாளும், பஞ்சவர்ணமும் பீதியால் மிரண்டு போய் நடுநடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

வந்த வேகத்தில் சூறாவளி அடங்கி விட்டது.

தூரத்தில் பரிதாபமாகக் கிடந்த குடிசையைச் சுட்டிக் காட்டி கடம்பனிடம் சொன்னார் தேவர் ‘அது இனிநமக்குப்; பிரயோசனப்படாது. நான் ஏற்கனவே சொன்னபடி களிமண் சுவர் வைத்து பனஞ்சட்டம் வைத்துக் கூரை போட்டால் தான் மழை, வெள்ளம், காற்று மூன்றுக்கும் தாக்குப் பிடிக்கும். அதிருஷ்டவசமாக காற்று மட்டும் வீசியதால் குடிசையோடு போயிற்று. குடிசைக்குள் சரக்குகளும் இல்லை. ஒரு வேளை சரக்கும் இருந்து மழையும் காற்றும் சேர்ந்து கொண்டால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா!’

கடம்பன் காதுகளை பொத்திக் கொண்டு, ‘போதும் அண்ணா! அதைப் பற்றி மேலும் பேச வேண்டாம். நடக்க வேண்டிய காரியத்தைப் பார்ப்போம். நீங்கள் சொன்னபடி நாளையே சுவர் வைக்கும் வேலையை ஆரம்பித்து விடலாம்’ என்று பேச்சை முடித்தான்.

அன்று இரவு திறந்த பொட்டல் வெளியில் அனைவரும் உறங்கினார்கள்.

பகலவன் பள்ளியறையில் இருந்து எழுவதற்கு முன்பாகவே அனைவரும் எழுந்து விட்டனர். காலைக் கடன்களை முடித்து விட்டு அன்று செய்ய வேண்டிய வேலைகள் பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டார்கள்.

ஒவ்வொருவரும் அவரவர் அபிப்பிராயத்தைக் கூறினார்கள். முடிவில் தேவரின் முடிவு என்னவென்று தெரிந்து கொள்வதற்காக அவரது முகத்தையே அனைவரும் பார்த்தார்கள்.

தேவர் சிறிது நேரம் சிந்தனை செய்து விட்டுஇ’கடம்பா! வீடு கட்டுவது என்பது சுலபமான காரியமல்ல. வாயால் சொல்வது சுலபம். கட்டி முடிப்பது கடினம்.

பெண்கள் இந்த வேலையில் ஈடுபட முடியாது. நாம் இருவர் மட்டுமே இதைச் செய்து முடிப்பதென்பது இயலாத காரியம்.

பேசாமல் திருப்பாலைக்குடிக்குப் போ! இந்த மாதிரி வேலையில் கைதேர்ந்த ஆட்கள் அங்கு இருக்கிறார்கள்.

பனை வெட்டி சட்டம் செதுக்குவதற்கும், மணல் சுமப்பதற்கும், சுவர் வைப்பதற்கும் குறைந்த பட்சம் பத்து பன்னிரெண்டு ஆட்களாவது தேவைப்படும். உடனே போய் அழைத்துக் கொண்டு வா. கூடமாட ஒத்தாசையாக நாமும் இருப்போம்’ என்று கூறி, கைச் செலவுக்கு சிறிது பணமும் கொடுத்து கடம்பனை அனுப்பி வைத்தார்.

கடம்பன் புறப்பட்டுப் போய் இரண்டு நாழிகை இருக்கும். தேவர் மகன் நாகலிங்கம் தன் மனைவி மக்களுடன் அங்கு வந்து சேர்ந்தான். பங்காரு செட்டியும் தன் மனைவியுடன் வந்து விட்டார்.

மகன், மருமகள், பேரன் பேத்திமாரை ஒரு சேரக் கண்டதும் செல்லம்மாள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

‘வா நாகு! குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இந்த அத்துவானக் காட்டுக்கு ஏன் வந்தாய்? அப்பாவுக்கு உடல் தேறியதும் அங்கு வந்து விடுவோமே! அதற்குள்’ என்று கூறி முடிப்பதற்குள் நாகு தந்தையைப் பார்த்து அதிர்ச்சியுடன், என்னப்பா இப்படி இளைத்துப் போய் விட்டீர்கள்? எப்படி இருந்த உடம்பு! ஏன் இப்படி உடம்பைக் கெடுத்துக் கொள்கிறீர்கள்?. நான் தான் சொன்னேனே! பேசாமல் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு ஓய்வாக இருங்கள் என்று. நான் சம்பாதிப்பது போதாதா? நடந்த வரை சரி இனிமேலாவது வியாபரத்துக்கு முழுக்குப்போட்டுவிட்டு வீட்டில் வந்து நிம்மதியாக இருங்கள்’ என்று பாசத்தோடும் சிறிது கண்டிப்பும் கலந்த குரலில் கூறினான்.

தேவருக்கோ பேரக்குழந்தைகளைப் பார்த்ததில் உள்ளூர மகிழ்ச்சியிருந்தாலும் இரவில் இவர்களை எப்படி தங்க வைப்பது என்ற கவலை முகத்தில் தெரிந்தது.

பொட்டல்வெளி. இருந்த ஒரே குச்சும் போய் விட்டது. ஊரில் வசதியாக இருந்து பழகிய குழந்தைகள் இந்த வெட்ட வெளிப்பொட்டலில் எப்படிக் கஷ்டப்படுவார்கள் என்று நினைத்து மகன் மீதும் மருமகள் மீதும் கோபம் வந்தது.

இருந்தாலும் மனதுக்குள் எழுந்த கோபத்தை மறைத்துக் கொண்டு, தான் திட்டுப் பகுதிக்குள் பிரவேசித்தது முதல் அதுவரை நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் சுருக்கமாக கூறி முடித்தார்.

இறுதிக் கட்டமாக தான் அந்த இடத்தில் தங்கி விட முடிவெடுத்தது, அதன் நோக்கம், மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டம் ஆகிய விவரங்களை மட்டும் சற்று விரிவாகவும் விளக்கமாகவும் கூறினார்.

தந்தையின் பேச்சை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த நாகலிங்கம் பிரமிப்படைந்தான்.

தந்தையை இதுவரை ஓர் சாதாரண வணிகராகவே அவன் கருதிக் கொண்டிருந்தான். வியாபாரம் செய்ய வேண்டும் பணம் சேர்க்க வேண்டும் என்பது மட்டும் தான் அவரது நோக்கம் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

இப்பொழுது அவனது எண்ணம் அடியோடு சரிந்தது. தன் தந்தையை பற்றி இதுகாறும் தான் முழுமையாக புரிந்து கொள்ளமுடிவில்லையே என்று உள்ளூர வெதும்பினான்.

தன்னலமற்ற தியாக சீலராக, உழைப்பால் உயர்வு காண விழையும் உத்தமராக, மாற்றாரும் போற்றும் மாவீரராக அவன் கண் முன் காட்சியளித்தார் தேவர். விண்முகட்டைத் தொடும் மேருவாக உயர்ந்து நின்றார்.

மகனுடைய உள்ளுணர்வுகளை அவன் முகத்தில் பிரதிபலிப்பதன் மூலம் தேவர்   கண்டு கொண்டார். சுயபச்சாத்தாபத்தில் அவன் திக்குமுக்காடுவதை அவர் புரிந்து கொண்டார்.

‘நாகு! நீ ஒருவன் சம்பாதிப்பதன் மூலம் நம் குடும்பம் என்ன, மேலும் இரண்டொரு குடும்பம் கூட திருப்தியாக வாழ முடியும். ஆனாலும் இப்பொழுது நான் மேற்கொண்டிருக்கும் திட்டமோ ஆயிரக்கணக்கான குடு;ம்பங்களை வாழ வைக்கக்கூடியது. இந்த திட்டுப்பகுதியை சுற்றிலும் உள்ள இடங்களை சுற்றிப்பார்த்தாயானால் நான் சொல்வதன் உண்மை உனக்குப்புரியும். இது பொன் விளையும் பூமி. பூலோக சுவர்க்கம். கற்பக தரு, காமதேனு. அனைவரும் இதை அனுபவிக்கலாம். எப்படி? கையில் முள் குத்தாமல் ரோஜா மலரை பறிக்க முடியுமா? உடையில் சேறுபடாமல் தாமரைப்பூவை பறிக்க முடியுமா? தேனீக்களிடம் கொட்டுப்படாமல் தேனைச்சுவைக்க முடியுமா? முடியாது.

அதுபோலத்தான் இந்த சுவர்ண பூமியில் நாம் நினைத்தவை எல்லாம் அடைவதற்கு உழைப்பு, உறுதி, விடாமுயற்சி தேவை. நம் வியர்வையையும், குருதியையும், உயிர் மூச்சையும் இதற்கு உரமாக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் இந்த பொட்டல் வெளியை பொன்னும் மணியும் கொழிக்கும் குபேர புரியாக மாற்றமுடியும்,, என்று கூறி தியானத்தில் இருப்பதைப்போல் சற்று நேரம் கண்களை மூடிய வண்ணம் இருந்தார்.

முன்னர் அவர் கனவில் கண்ட மாயாஜால புரியை மீண்டும் நினைவு கூர்வது போல் இருந்தது அவரது மனநிலை.

மறுபடியும் பேச்சை தொடர்ந்தார்.

”அதோ, அந்த இடத்தில் நேற்றுவரை இருந்த குடிசை சுழற்காற்றில் சிதைந்து போய்விட்டது. புதிதாக வீடு கட்ட ஆட்களை அழைத்துக்கொண்டு வருமாறு சற்று முன்னர்தான் கடம்பனை திருப்பாலைக்குடிக்கு அனுப்பிவைத்திருக்கிறேன்.

ஆட்கள் வந்த உடனே வேலை ஆரம்பித்தாலும் வீடு கட்ட எப்படியும் இரண்டொரு மாதங்கள் ஆகலாம். அதுவரை ஏதாவது ஒரு ஓலைப்பந்நலில் தான் தங்க வேண்டும். அதனால் நீ உன் மனைவியையும், குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஊருக்குப்போ. இங்கு எல்லா வேலைகளும் பூர்த்தியடைந்தபின் உனக்கு தகவல் அனுப்புகிறேன்.

அப்பொழுது வேண்டுமானால் குழந்தைகளுடன் இங்கே வந்து நாலைந்து நாட்கள் தங்கிச்செல்லலாம்’ என்று கூறி மகன் முகத்தைப் பார்த்தார்.

நாகலிங்கம் சிலையாய்ச்சமைந்து நின்றான்.

தந்தையின் தன்னலமற்ற பரந்த மனோபாவமும், தொலைநோக்கும், தியாக உணர்வும் அவனை அதிகம் ஈர்த்தது. இந்த தியாக வேள்வியில் தானும் பங்கேற்க வேண்டுமென்ற ஆர்வம் உள்ளத்தில் பொங்கியது.

”அப்பா! நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் தொலைநோக்குத் திட்டத்தின் சாதனையில் நானும் பங்கேற்க அனுமதியளியுங்கள். உங்களை மட்டும் தனியாக விட்டுவிட்டு நான் ஒதுங்கி கொள்வது முறையாகாது…’ என்று மேலும் பேசும் முன் தேவர் மகனை இடைமறித்து, ‘நாகு! நீ இன்னும் நிலைமையை சரியாகப்புரிந்துகொள்ளவில்லை. இப்பெருந்திட்டத்தில் நீ கலந்து கொள்ள வேண்டாமென்று நான் சொல்லவில்லையே.

சுவரை வைத்துத்தாக் சித்திரம் எழுத வேண்டும் என்பது பொதுமொழி. ஒருவன் பொது வாழ்வில் ஈடுபட விரும்பினால் முதலில் தன்னுடைய குடும்பத்தை நல்ல நிலைமையில் வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் அவன் பொதுவாழ்வில் மக்கள் சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்ளமுடியும்.

இப்பொழுது பார், நீயும், நானும் பொது வாழ்வை மேற்கொண்டால் நம்முடைய குடும்பத்தை யார் கவனிப்பது?. எனவே நான் சொல்வதைக்கேள். நீ வழக்கம்போல் தொழிலை நடத்து. என்னை என் போக்கில் விட்டுவிடு. புரிகிறதா?. நான் சொன்னபடியே உடனே இங்கிருந்து புறப்படு’ என்று வாஞ்சையுடன் கூறினார்.

தந்தை கூறிய விளக்கத்தைக் கேட்டபின் அவரது சொல்லை தட்டமுடியவில்லை.

அதேபடி செட்டியாரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

மறுநாள் ஆட்களுடன் கடம்பன் வந்துவிடுவான். வீடுகட்டும் வேலை முமமுரமாக நடக்கும்.

அதுவரை வேலையில்லாமல் எதற்கு நாம் இங்கு இருக்கவேண்டும்?.

உள்நாட்டில் என்ன நடக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள ஒரு நீண்ட சுற்றுலா பயணத்தைமேற்கொள்வோம்.

சித்தார் கோட்டை –  ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும்