Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,054 முறை படிக்கப்பட்டுள்ளது!

உயிர் காக்கும் முதலுதவிகள்

மனிதன் என்னென்னவோ ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறான். எதை எதையோ கண்டு பிடிக்கிறான். ஆனால் அடுத்த நொடியில் என்ன நடக்கக் கூடுமென்பதை அறிந்தவன் ஆண்டவன் ஒருவனே! நமது வாழ்வில் பற்பல நல்ல சம்பவங்களும் நடக்கின்றன, பற்பல விபத்துகளையும் சந்திக்க நேரிடுகிறது. அப்படி ஏதாவது ஒரு நெருக்கடி நிலை நேரிட்டால் தம்மையும் காத்துக் கொண்டு பிறரையும் எப்படிக்காப்பது என்பது தெரிந்திருப்பது நலமல்லவா? எனவே பொதுவாக நேரக்கூடிய விபத்துகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும் ஆலோசனைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை.

விபத்துகளின் பொழுது உங்களை நீங்களே சில மணி நேரம் காப்பற்றிக்கொள்ள முடியும். பிறருக்கும் அவசர காலங்களில் உதவவும் முடியும். அதற்குத் தனிப்பட எந்தக் கருவிகளும் தேவையில்லை. தேவையானதெல்லாம் நிதானமும் சமயோசித புத்தியும்தான். ஆபத்தின் பொழுது பீதியடையாமல் இருப்பது மிக முக்கியம். அது கடினம்தான் என்றாலும், பயமும் பதட்டமும் நம்மைச் செயல்பட விடாமல் தடுத்துவிடும். ‘ ஒரு விபத்தில் சிக்கிக்கொண்ட பின் அதில் தப்பித்தவர்களுக்கும் தப்பிக்காமல் இறந்தவர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்னவெனில் தப்பிப்பவர்கள் தமது பயத்தை வெற்றிகொண்டு, நான் என்ன செய்யவேண்டும் என்று யோசித்து இறுதிவரை போராடுவதுதான்’ என்கிறார் முதலுதவிகள் குறித்து வகுப்புகள் நடத்தும் ஒரு பிரபல நிபுணர்.

அலுவலத்திலும் சரி, வீட்டிலும் சரி, அல்லது எங்காவது வெளியூருக்குச் செல்வதானாலும் சரி, கீழ்க்கண்ட பொருட்களைக் கொண்ட ஒரு முதலுதவிப் பெட்டியை தயாராக வைத்திருப்பது அவசியம். அவை – ஒரு பட்டை ஆஸ்பிரின் மாத்திரை, ஒரு பட்டை பாரசிடமால் மாத்திரைகள், ஒரு பட்டை ப்ரூபின் மாத்திரைகள், பாண்டேஜ் துணி, காயங்களுக்குப் போடக்கூடிய மருந்து, பாண்ட் எய்ட், வலி அல்லது வீக்கத்திற்குப் பயன்படுத்தும் மாத்திரை ORS பாக்கெட் (உப்பு சர்க்கரைக் கலவை) ஆகியவை. எக்காரணம் கொண்டும் இப்பெட்டியைப் பூட்டவேண்டாம். பின் அவசரத்தின்பொழுது இதற்கு சாவியைத் தேடி அலையவேண்டி வந்துவிடும். அதே நேரம் இந்தப் பெட்டி சிறுகுழந்தைகளின் கைக்கு எட்டாதவாறு பார்த்துக் கொள்வதும் அவசியம்.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில தகவல்கள்:
எந்த அவசர நிலையிலும் பதட்டமின்றி இருப்பது முக்கியம். முதலுதவி தேவைப்படுபவருக்கு காற்று கிடைக்கவும், அவர் எளிதில் மூச்சு விடவும் ஏற்பாடு செய்தல் வேண்டும். கழுத்திலோ, முதுகுப்புறமோ அடிபட்டிருப்பின் கூடியமட்டும் அவரைத் தூக்கி இடம் மாற்றுவதைத் தவிர்க்கவேண்டும். பாதிக்கப்பட்டவரிடம் அமைதியாகவும் நிதானமாகவும் பேசி அவரைத் திடப்படுத்தவேண்டும். பாதிக்கப் பட்டவர் மயக்க நிலையில் இருக்கும்பொழுது வாய்மூலம் எதுவும் கொடுக்கக் கூடாது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

நமக்கே ஏதாவது ஆபத்து நேர்கையில்:

தீ விபத்து: ஒருவர் தமது அலுவலகத்தில் தீ விபத்தின் பொழுது சிக்கிக்கொள்கிறார் என்று கொள்வோம். கூடியவரை, புகை பரவாத ஒரு அறைக்குள் புகுந்துகொண்டு விட வேண்டும். முடியுமானால் ஈரமான துணி எதையாவது கதவுக்கடியில் தரையில் விரித்து புகை பரவுவதைத் தடுக்க முயலவேண்டும். உடைகளில் நெருப்புப் பிடித்துவிட்டால், நெருப்பு சிறிய அளவுள்ளதாக இருப்பின் தரையில் படுத்து உருளலாம். வீடாக இருப்பின், கனத்த போர்வை, கம்பளி இவற்றைப் போர்த்துக் கொள்ளலாம். நெருப்பை அணைக்க முற்படுவீர்களானால் அது எந்த வகை நெருப்பு, அதாவது எதனால் உருவான நெருப்பு என்று அறிந்துகொண்டு செயல்பட வேண்டும். நெருப்பை அணைக்கப் போராடுகையில், நீங்கள் வெளியேற வசதியாக நின்று கொண்டு முயற்சி செய்தல் வேண்டும். நெருப்பு அதிகம் பரவுவது போல் தோன்றினால், நீங்கள் வெளிவந்து விடுவது உத்தமம்.

நீச்சலடித்துக் கொண்டு இருக்கையில் தசைப்பிடிப்பு நேரிட்டால்: ஆற்றில் அல்லது கடலில் நீச்சலடித்துக் கொண்டிருக்கையில் (சில்லென்ற நீர் பட்டதும்) கெண்டைக்கால் அல்லது முதுகில்/வயிற்றில் பிடிப்பு ஏற்படலாம். பதற்றத்தில் கன்னாபின்னாவென்று கை காலை அசைக்க முயன்றால் தப்பிப்பது கடினமாகிவிடும். நிதானத்தை வரவழைத்துக்கொள்ளுங்கள். பயப்படாதீர்கள். ஆழ மூச்சு விடுங்கள். வயிற்றுப்பகுதியில் பிடிப்பு ஏற்பட்டிருந்தால், மல்லாந்து படுத்துக்கொண்டு கை கால்களை விரித்தவாறு, வலி குறைந்து மீண்டும் நீந்த முடியும்வரை மெல்ல மிதந்துகொண்டிருக்கப் பாருங்கள்.
கெண்டைக்காலில் பிடிப்பு ஏற்பட்டிருக்குமானால், குப்புறப் படுத்துக்கொண்டு, மெல்ல கால்விரல்களைக் கைகளால் பற்றி நீவி விடுங்கள். பிடிப்பு நீங்கி வலி குறைந்துவிடும். பெரும்பாலும் இப்பிடிப்பு கால்களில்தான் ஏற்படுகின்றன. எனவே, எச்சரிக்கை, பதட்டமின்மை இரண்டுமே அவசியம்.

வெட்டுக்காயங்கள்: எதிர்பாராத விதமாகக் காயமேற்பட்டு இரத்தம் அதிகம் வெளியேறும்பொழுது, ஏதாவது சுத்தமான துணி, கை துடைக்க உதவும் காகிதம், உங்கள் கைக்குட்டை, இவை எதுவுமே கிடைக்கவில்லை என்றால் உங்கள் கைகள் இவற்றைக்கொண்டு காயத்தை நன்கு அழுத்திக்கொள்ளவும். முன்பெல்லாம், வெட்டுக்காயமேற்பட்டால் இறுகக் கட்டவேண்டும் என்பார்கள். இப்பொழுது அது தவறு என்று மருத்துவ உலகம் கருதுகிறது. உங்கள் கையால் காயத்தை அழுத்திக்கொள்கையில், இரத்தம் வெளியேறும் குறிப்பிட்ட இரத்தக் குழாய் மட்டுமே மூடப்படுகிறது. நீங்கள் இறுக்கிக் கட்டுவீர்களானால், அந்த இரத்தக் குழாய் மட்டுமின்றி அந்தப் பாகத்தில் உள்ள அனைத்துக் குழாய்களும் மூடப்படுகின்றன. இதனால், கட்டுக்குக் கீழ் இருக்கும் பாகங்களிலும் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதனால், அந்தப்பகுதி முழுவதுமே செயலிழக்கும் வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

நச்சுப்பொருட்கள்: ஏதாவது நச்சுப்பொருட்களைத் தெரியாமல் உட்கொண்டுவிட்டால், (எவ்வளவு குறைவான அளவாக இருந்தாலும் சரி) மருத்துவரின் உதவியை நாடுவது முக்கியம். நீங்களாகவே ஏதாவது வாந்தி எடுப்பதைத் தூண்டும் மருந்தைச் சாப்பிட்டு வாந்தி எடுக்கமுயல வேண்டாம். ஏனெனில் நீங்கள் உட்கொண்ட ஏதாவது நச்சுப்பொருள் உங்கள் உங்கள் உடலுக்குள் செல்கையில் உங்கள் உணவுக்குழலை சேதப்படுத்தியிருக்கலாம். நீங்கள் வாந்தி எடுத்து அதை வெளிக்கொணர முயல்கையில் உங்கள் உணவுப்பாதையில் மென்மேலும் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு.

அம்மோனியா, ப்ளீசிங் பவுடர், பூச்சிக்கொல்லிகள் இவற்றை முகர்ந்துவிட்டால், தலை சுற்றல் மயக்கம் முதலியவை ஏற்படும். உடனடியாக மூக்கை இறுக மூடிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடவேண்டும். விஷப்பொருட்கள், அமிலங்கள் முதலிவை உங்கள் உடம்பில் பட்டுவிட்டால், அந்த இடத்தை நன்கு நீரால் பலமுறை கழுவுங்கள். பின் மருத்துவ உதவியை நாடுங்கள்.

தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டு மூச்சுத்திணறல் ஏற்படுகையில்: உணவை உண்ணும்பொழுது நிதானமாகவும், நன்கு மென்றும் உண்ண வேண்டியது அவசியம். ஆனாலும், அவசரமாக எதையாவது விழுங்குகையில் அல்லது சில சமயம் அகஸ்மாத்தாக நம் தொண்டையில் ஏதாவது சிக்கிக்கொண்டுவிடக்கூடும். நமது மூச்சுக்குழல் மற்றும் தொண்டைக்குழல் ஆகியவை ஒன்றாக அமைந்திருப்பதால், இந்த அடைப்பு நம்மை மூச்சு விட இயலாதவாறு செய்துவிடும். இதற்கு உடனடியான முதலுதவி, நமக்கு நாமே செய்துகொள்ளக்கூடியது என்ன தெரியுமா? வேகமாகச் சென்று சமையலறை மேடையின் நுனிப்பகுதி, நாற்காலி அல்லது சோஃபாவின் கைப்பிடி இதன்மீது நமது மேல்வயிறு படும்படி வேகமாக இடிக்கவேண்டும். அதாவது, நமது விலா எலும்புக்குக்கீழ் உள்ள மென்மையான வயிற்றுப்பகுதி (உதரவிதானம் என்று அழைக்கப்படுவது) மிகவேகமாக கைப்பிடி அல்லது சமையல் மேடை மீது மோதவேண்டும். இது நம் தொண்டையில் அடைத்துக்கொண்ட பொருள் வெளியில் வரும்படி செய்துவிடும்.இவ்வாறே சிறு குழந்தைகள் காசு அல்லது சிறிய விளையாட்டுப்பொருட்களை வாயில் போட்டுக்கொண்டு அது தொண்டையில் சிக்கிக்கொள்ளுமானால், அவர்கள் முதுகில் வேகமாக அறைந்தால், அடைப்பு நீங்கிவிட வாய்ப்புண்டு.

மாரடைப்பு: உங்கள் மார்பு அல்லது இடப்புறத்தோள்பட்டை மிக அதிகமாக வலிப்பது, மூச்சிறைப்பு ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனடியாக ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை விழுங்குங்கள். இது இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்த வல்லது. மேலும், உடனடியாகப் படுத்துக்கொள்வது நல்லது. வலுக்கட்டாயமாக இருமுங்கள். இது மருத்துவர்கள் மார்பில் குத்தி பிசைந்து இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க முயலும் அதே அளவு தாக்கத்தைக் கொடுத்து உங்கள் இதயத்தை சாதாரண நிலைக்குக்கொண்டு வரக்கூடும். பிறருக்கு இந்த அறிகுறிகள் தோன்றுமாயின் மருத்துவ உதவி வரும் வரையில் மார்பில் குத்திக்கொண்டிருங்கள். ஆஸ்பிரின் மாத்திரையை எப்பொழுதும் உடனடியாக எடுக்கக்கூடிய இடத்தில் வைத்திருப்பது அவசியம்.

நெருக்கடி நிலையில் விரைந்து எடுக்கும் முதலுதவி நடவடிக்கைகள் விலை மதிப்பில்லாத உயிர்களைக் காக்க வல்லது. வேகம் விவேகம் இரண்டையும் கடைப்பிடித்தால் எந்த விதமான சிரமத்தையும் எளிதில் சமாளிக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.

நன்றி: http://www.hi2web.com/forum/