Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,767 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிகரெட்டுக்கு நோ சொல்லுங்க!

வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டு, போய் ஒரு தம் அடித்துவிட்டு வரலாம் என்று எழுந்து செல்பவரா நீங்கள்? சற்றுப் பொறுங்கள். அதற்கு முன் இந்தக் கட்டுரையை படியுங்கள். சிகரெட் நுனியில் நீங்கள் பற்ற வைக்கும் தீ, நீங்கள் உங்களுக்கே வைத்துக்கொள்ளும் தீ என்பது புரியும்.

முதலில் சில புள்ளிவிவரங்கள்.

  • உலகம் முழுவதும் தற்போது 110 கோடி பேருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது.
  • 2025வாக்கில் இந்த எண்ணிக்கை 160 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஒவ்வொரு நிமிடமும் உலகில் 1 கோடி சிகரெட்கள் வாங்கப்படுகின்றன.
  • பதின் வயதில் (teenage) இருப்பவர்களில் ஐந்தில் ஒருவர் 13 வயதிலேயே புகைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
  • ஒவ்வொரு 8 விநாடிக்கும் ஒரு முறை புகையிலை பயன்படுத்தியதன் காரணமாக ஒருவர் இறக்கிறார். அதாவது வருடத்திற்கு 50 லட்சம் பேர்.
  • தமிழ்நாட்டில் புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்களில் 58 சதவீதம் பேருக்கு இதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றித் தெரியவில்லை.

உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று புகையிலை பயன்பாடு. புகையிலையை சிகரெட், ஹூக்கா, பொடி, அப்படியே மெல்லுவது என பல வடிவங்களில் மக்கள் பயன்படுத்திவருகிறார்கள். இப்படி புகையிலையின் பயன்பாடு அதிகரித்தபடியே இருப்பது உலகம் முழுவதும் இருக்கும் சுகாதார இயக்கங்களுக்கு கவலையளித்திருக்கிறது.

புகையிலையைப் பயன்படுத்துவதால் உடலின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. உடலின் ஒட்டுமொத்த நலனே பாதிக்கப்படுகிறது. இளைஞர், வயதானவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாத் தரப்பினரிடமும் புகைபிடிக்கும் பழக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. புற்றுநோய், வாய் புற்றுநோய், வயிறு, சிறுநீர் பை, சிறுநீரகம், குடல் பகுதிகளில் புற்றுநோய், ஆண்மைக் குறைவு, இதயநோய்கள், பக்கவாதம் போன்றவை புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும்.

புகையிலையை ஒரு சில தடவைகள் பயன்படுத்திவிட்டு விட்டுவிடலாம் என்று இருக்க முடியாது. புகையிலையைப் பயன்படுத்துபவர்கள் மிக எளிதில் அதற்கு அடிமையாகிவிடுவார்கள். புகையிலையில் இருக்கும் நிகோடின் மீண்டும் மீண்டும் அதைப் பயன்படுத்தத் தூண்டும். நிகோடின் மூளையில் ஏற்படுத்தும் ரசாயன மாற்றம் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். உடலில் நிகோடின் குறையக் குறைய, அந்த உற்சாகமும் குறையும். இதனால், நிகோடின் குறையும்போது மீண்டும் புகைக்கத் தோன்றும். இது முதலில் உணர்வுரீதியான வேண்டுதலாகவே இருக்கும். ஆனால், அடுத்தகட்டத்தில், இது உடல் ரீதியான வேண்டுதலாக மாற ஆரம்பிக்கும். சிகரெட் புகைக்காவிட்டால் உடலே சோர்வானது போலத் தோன்றும். பிறகு அந்த நபர் வாழ் நாள் முழுவதும் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்.

சிகரெட்டில் இருக்கும் நிகோடின் மட்டும்தான் உடலுக்குத் தீமை விளைவிக்கும் ரசாயனம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நிகோடின் தவிர சிகரெட் புகையில் தாரும் இருக்கிறது. இந்தத் தார் சுமார் 4,000 ரசாயனங்களைக் கொண்டது. சயனைடு, பென்சீன், ஃபார்மால்டிஹைடு, அசிட்டிலின், அம்மோனியா போன்ற இந்த ரசாயனங்கள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை. நுரையீரல், இதயம், எலும்பு, தோல் ஆகியவற்றில் நோய்களை உருவாக்கும் தன்மை கொண்டவை.

புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. தொடர்ந்து சிகரெட் குடிப்பவர் சில மணி நேரம் சிகரெட் குடிக்காமல் இருந்தாலே, தலைவலி, எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதயத் துடிப்பு குறைவது, இரத்த அழுத்தம் குறைவது போன்றவையும் ஏற்படும். மிகுந்த மன உறுதியும் தகுந்த சிகிச்சை முறைகளுமே சிகரெட்டிலிருந்து விடுதலை பெற உதவும்..

உடல்நல காரணங்கள், வாழ்க்கைச் சூழல் மாற்றம், குழந்தை, சிகரெட்டின் விலை உயர்வு, சிகரெட் பழக்கத்தால் குடும்பத்தில் யாராவது இறந்துபோவது போன்ற காரணங்களால் பலர் சிகரெட் குடிப்பதை விடுகிறார். மன உறுதியின்மையால்தான் பலரால் அந்தப் பழக்கத்திலிருந்து வெளிவர முடிவதில்லை.

புகையிலையும் ஒரு போதைப் பொருள் என்றாலும் பிற போதைப் பொருள்களைப் போல சப்ளையே இல்லாமல் தடுப்பது என்பது இயலாத காரியம். இதனால், சுகாதார இயக்கங்களுக்கு இருக்கும் ஒரே வழி, புகையிலையால் ஏற்படும் தீமையைப் பற்றி பெரிய அளவில் விளம்பரம் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான்.

இதனால், உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. புகையிலைப் பொருள்களின் மேலட்டையின் மீது படங்களுடன் கூடிய எச்சரிக்கையை வெளியிட வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இதனால், புகையிலைப் பழக்கத்தின் தீமை, படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் சென்று சேரும் என்று நம்புகிறது அந்த அமைப்பு. சிகரெட்டின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இம்மாதிரி நடைமுறைகள் புகையிலையின் தீமையைக் குறைக்க உதவும் என உலக சுகாதார நிறுவனம் கருதுகிறது.

புகைபிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தவென்று உலக சுகாதார நிறுவனம் விதித்திருக்கும் நடைமுறைகளை பல்வேறு நாடுகள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருப்பது நல்ல செய்தி. இந்தியாவிலும் மே 30க்குப் பிறகு தயாரிக்கப்படும் சிகரெட் பாக்கெட்களிலும் பிற புகையிலைப் பொருகளின் வெளி அட்டைகளிலும் அதன் தீமையை குறிக்கும் விதமான படங்களைப் பொறிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

புகைப்பிடிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் விலை வெறும் சிகரெட்டின் விலை மட்டுமல்ல. அதனால், ஏற்படும் உடல்நலக் கேடுகளைச் சரி செய்ய ஆகும் விலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் புகைப்பிடிப்பதை விட்ட ஒரு மாத்திலேயே உங்கள் உடல் நலத்திலும் பர்சிலும் மாற்றம் தெரியும்.

நன்றி: http://www.hi2web.com/forum