Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,072 முறை படிக்கப்பட்டுள்ளது!

அடையாள அட்டை!

    • பெயர்: வட்டி
    • புனைப்பெயர்: இரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சி, உயிரைக்கொள்ளும் உயிர்க்கொல்லி
    • உடன்பிறந்தோர்: ஒரு பைசாவிலிருந்து பல பைசா வட்டிகள், கந்துவட்டி,மீட்டர்வட்டி, இன்சூரன்ஸ்,லோன், பைனான்ஸ்
    • நண்பர்கள்: பணக்காரர்கள்,சேட்டுகள், வட்டிக்காகக் கடன் கொடுப்போர், லாவாதேவிக்காரர்கள்
    • எதிரி: தர்மம்,ஸகாத்
    • தொழில்: பொருட்களைச்சுரண்டுதல்
    • உபதொழில்: உயிரைப்பரித்தல்,நஷ்டஈடாக கற்பை சூறையாடுதல்
    • சுற்றுலாத்தலம்: பேங்க், நகைக்கடை,அடகுக்கடை
    • அலர்ஜி: வட்டியில்லாக்கடன்
    • விரும்புவது: உயிர்,சொத்து
    • விரும்பாதது: தனக்கெதிரான பிரச்சாரம்
    • எதிர்காலத்திட்டம்: கோடிக்கணக்கான பணம்சேர்ப்பது, பொருள்சேர்ப்பது
    • சாதனை: உலக வங்கியில் கடன் வாங்கியதில் இந்தியாவிற்கு முதலாவது இடம்
    • பரிசு: நிரந்தர நரகம்

எனவே அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, எந்தவிதமான கஷ்ட காலங்களிலும் வட்டியின்பக்கம் மட்டும் தலைசாய்த்து விடாதீர்கள். ஏனெனில் வட்டி சம்பந்தப்பட்ட அனைத்தையும் அல்லாஹ் வெறுக்கின்றான். இதைப்பற்றி, அல்லாஹ் தன்திருமறையில்,

2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

3:130. ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.

இன்னும் அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்:‘வட்டி வாங்குபவர்கள், வட்டி கொடுப்பவர்கள், அதை எழுதுபவர்கள் மற்றும் ஸதகா கொடுக்க மறுப்பவர்கள் – இவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி.

5347. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்:பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

இப்படி அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் வெறுக்கின்ற வட்டியின் பக்கம் நாம் ஏன் போக வேண்டும்.

சிலர், பிறரிடம் உதவி கேட்டால் தர மறுக்கிறார்கள்.வட்டியில்லா கடனும் கொடுக்க மறுக்கிறார்கள்.பிறகு என்ன தான் செய்வது? வட்டிகுதான் கடன் வாங்க வேண்டி வருகிறது என்று கூறுகிறார்கள். பணம் இல்லாவிட்டால் வட்டிக்குப்பணம் கிடைக்கும் என்ற எண்ணம் இருப்பதால்தானே வட்டியின் பக்கம் போகிறோம்.வட்டி என்பதே கிடையாது என்று நினைத்தால் போவோமா? சற்று சிந்தியுங்கள். பன்றிமாமிசம் ஹராம் என்று எல்லோருக்கும் தெரியும். எந்த அளவு பசியிருந்தாலும் பன்றி மாமிசத்தை உண்ண மாட்டோமல்லவா? உணவு எதுவும் கிடைக்காத உயிர்போகும்பட்சதில் பன்றிமாமிசத்தை உண்ணலாம் என்று சலுகை இருந்தும் நாம் உண்ண மாட்டோம். அதே போன்றே இந்த வட்டியையும் ஒரு பன்றிமாமிசமாகக் கருத வேண்டும்.

ஏனெனில் இந்த வட்டியின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் தான் எத்தனை? தனது கற்பைப் பரிகொடுத்த பெண்கள் தான் எத்தனை? தனது பெற்றோர், பிள்ளைகள், உறவினர்களை இழந்தோர் தான் எத்தனை? இவை யாவற்றையும் கணக்கிட முடியாது. அந்த அளவிற்கு இந்த வட்டியின் கொடுமை தலை விரித்தாடுகிறது. வட்டிக்காகப் பணம் கொடுப்பதும், வட்டிக்குப் பணம் வாங்குவது மட்டுமல்ல. அதற்காக சாட்சிக் கையெழுத்துப் போடுவதும் பாவமேயாகும். இதற்கு மறுமையில் மிகப்பெரும் வேதனை மட்டுமல்ல, நிரந்தர நரகமும் கூட. இதைப்பற்றி அல்லாஹ் தன திருமறையில்,

2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

இன்னும் 2085. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:“இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!

“அவர் யார்?’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ‘ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!” எனக் கூறினார்கள்.” என ஸமுரா(ரலி) அறிவித்தார்.

எனவே அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே,

நம்மில் வசதியுள்ளவர்கள் கண்டிப்பாக வட்டியில்லாக்கடன் கொடுக்க முன்வர வேண்டும்.வசதியற்றவர்கள் வட்டிக்காகப் பணம் வாங்குதலும், நகை அடகு வைத்தலும் செய்யாமல் இருக்க வேண்டும். வட்டியை ஒழிக்கப்போராட வேண்டும். வட்டியில்லாக்கடன் திட்டத்தை ஒவ்வொரு ஊரிலும் ஏற்ப்படுத்த வேண்டும். அப்போது இந்த உயிர்க்கொல்லி இந்தஉலகை விட்டு ஒழியும்.இன்ஷா அல்லாஹ்.

நிச்சயமாக நல்லது செய்வோருக்கு அல்லாஹ் எப்போதும் துணையிருப்பான்.

ஆக்கம்: ஹாஜிரா தாஜுன் – நவி மும்பை நன்றி: சுவனத்தென்றல்.காம்