கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்தறிவது..?
ஆங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்கு தமிழில் அர்த்தம் சொல்வதென்றால் ‘ஒரு மனிதரைப் பற்றியோ, ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம் மனதிற்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மனப்பிம்பம், அல்லது அதைப்பற்றிய நமது கண்ணோட்டம், கருத்து’ எனலாம்.
அவ்வாறு நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்து சரியானதாகத்தானிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்தறிவதும்கூட 100% மெய் என்று சொல்வதற்கில்லை, அதற்குரிய தெளிவான அறிவை அல்லாஹ் நமக்கு வழங்கினாலேயொழிய!
Stephen Covey என்பவர் எழுதிய “The 7 Habits of Highly Effective People” என்ற நூலில் ஒரு சம்பவத்தை உதாரணமாகக் காட்டி இதை விளக்குகிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் அவர் நியூயார்க் நகர சுரங்க ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். பயணிகளில் சிலர் செய்தித்தாள்களை புரட்டிக் கொண்டிருந்தனர். சிலர் ஏதோ சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தனர். வேறு சிலர் கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். சூழ்நிலை மிக அமைதியாக இருந்தது.
அப்போது ஒரு நபர் தனது குழந்தைகளுடன் அந்த ரயில் பெட்டியில் ஏறினார். ஸ்டீஃபனுக்கு அருகில் இருந்த இருக்கையில் அவர் ‘அக்கடா’ என அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார். அவரது குழந்தைகள் அவ்வாறு அமைதியாக உட்காரவில்லை. கூச்சலிட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஓடுவதும், பொருட்களை எறிவதும், இதர பயணிகளின் செய்தித்தாள்களை இழுப்பதுமாக களேபரப் படுத்திக்கொண்டிருந்தார்கள். அமைதியாக இருந்த சூழ்நிலை சடாரென மாறிவிட்டது.
பயணிகள் அனைவருமே எரிச்சலடைந்தனர். ‘உச்..உச்’ என்று ஒலி எழுப்பினர். ஆனால் அந்த நபரோ ஒன்றுமே நடக்காதது போல கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தார். குழந்தைகளை அதட்டவோ கட்டுப்படுத்தவோ அவர் எதுவும் செய்யவில்லை. ஸ்டீஃபனின் பொறுமை எல்லை கடந்தது. இந்த அளவிற்கு பொறுப்பற்றவராக ஒரு தந்தை இருக்க முடியுமா? என்ன மனிதர் இவர்? குழந்தைகளை கொஞ்சம் அதட்டினால் என்ன? இவ்வளவு சத்தமும் காதில் விழாதவரைப் போல கண்ணை மூடிக் கொண்டு தியானத்தில் இருக்கிறாரே? ஸ்டீஃபனின் மனதில் அந்தத் தந்தையைப் பற்றிய paradigm உருவாகிக் கொண்டிருந்தது. அதற்கு அவர் கண்ணால் காணும் காட்சிகளும், காதில் விழும் சத்தங்களுமே ஆதாரம்!
பொறுமையிழந்த அவர் அந்த நபரின் தோளை தட்டி, “நண்பரே, உங்கள் குழந்தைகளை கொஞ்சம் அதட்டினால் என்ன? அவர்கள் இங்கிருக்கும் அனைவரையுமே தொந்தரவு செய்கின்றனரே?” என்றார். திடுக்கிட்டு கண்விழித்த அவர், சற்று நேரம் ஒன்றும் புரியாதவரைப் போல பார்த்துவிட்டு, “ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான். நான் ஏதாவது செய்ய வேண்டும்தானே? எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்தக் குழந்தைகளின் தாயான என் மனைவி சிறிது நேரத்திற்கு முன்பு மருத்துவமனையில் இறந்து விட்டார். நாங்கள் அங்கிருந்துதான் வருகிறோம். இந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்று என் குழந்தைகளுக்கும் தெரியவில்லை போலிருக்கிறது.” என்றார்.
ஸ்டீஃபன் திடுக்கிட்டுப் போனார். அந்தக் கணம் வரை அந்த நபரைப் பற்றி அவர் எழுப்பி வைத்திருந்த paradigm சடாரென நொறுங்கி விழுந்தது. அந்தத் தந்தையின் மீதும் அவரது குழந்தைகள் மீதும் பரிதாபம் தோன்றியது. அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமே என்ற எண்ணம் மேலோங்கியது. அந்தக் குழந்தைகள் இன்னும் கூச்சலிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் ஸ்டீஃபனுக்கு அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
சில கணங்களுக்கு முன்பு வரை அவர் அறியாமலிருந்து அப்போதுதான் அறிந்த ஒரு தகவல் அவரது மனதில் ஏற்பட்டிருந்த மனப்பிம்பத்தை நேரெதிராக மாற்றி விட்டது. இதை Paradigm Shift என்கிறார் ஸ்டீஃபன். ஸ்டீஃபன் அந்த நபரிடம் பேசாமலே இருந்தால், அல்லது அந்த நபர் தனது மனைவி இறந்த செய்தியை இவரிடம் சொல்லாமலே விட்டிருந்தால் என்னவாகி இருக்கும்? ஸ்டீஃபன் மனதில் ஏற்பட்டிருந்த Paradigm அப்படியே நிலைத்திருக்கும்!
இந்த Paradigm, Paradigm Shift எல்லாம் முஸ்லிமல்லாதவர்களுக்கு வேண்டுமானால் புதிய கண்டுபிடிப்பாக இருக்கலாம். திருமறை குர்ஆனின் போதனைகளை மனதில் பதிய வைத்திருக்கும் முஸ்லிம்களுக்கு இது புதிதானதல்ல.
“மனிதர்களிலேயே அதிகம் அறிந்தவர் யார்?” என்று இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களிடம் வினவப்பட்டபோது அதற்கு அவர்கள் ‘நான்’ என்று பதில் அளித்தார்கள். ‘அல்லாஹ்தான் மிக அறிந்தவன்’ என்று தன் தூதருக்கு உணர்த்த விரும்பிய அல்லாஹ் ‘இரு கடல்கள் சங்கமிக்கும் ஓர் இடத்தில் உம்மை விட அதிகம் அறிந்த ஓர் அடியார் இருக்கிறார்’ என்று மூஸாவுக்கு வஹி அனுப்பினான்.
அல்லாஹ்விடமிருந்து பிரத்தியேக அருளையும் ஞானத்தையும் பெற்றிருந்த அந்த நல்லடியாரைச் சந்தித்து அவரது அனுமதியுடன் அவரோடு பயணிக்கிறார்கள் மூஸா (அலை) அவர்கள். அந்தப் பயணத்தின்போது அந்த நல்லடியார் செய்த சில செயல்கள் மூஸா (அலை) அவர்களுக்கு விசித்திரமானதாகத் தோன்றுகிறது.
அவர்கள் இருவரையும் சுமந்து சென்ற கப்பலை அந்த நல்லடியார் திடீரெனத் துளை போடத் தொடங்கினார். அதன் உரிமையாளரோ அவ்விருவரையும் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதித்திருந்தார். அதற்காக அவருக்கு கைமாறு செய்வதற்கு நேர் எதிரான செயலில் அவர் இறங்கினார். அவரது செயல், கப்பலில் அமைதியாகப் பயணம் செய்து கொண்டிருந்த மக்களை மூழ்கச் செய்யக் காரணமாகிவிடுமோ என்று நபி மூஸா அவர்களுக்குத் தோன்றியது!
அடுத்ததாக, ஒன்றுமறியா சிறுவன் ஒருவனை அந்த நல்லடியார் கொலை செய்கிறார். அவனோ அவனுடைய தாய் தந்தையரோ மூஸாவுக்கும் அவருக்கும் எவ்விதத் தீங்கும் செய்திருக்கவில்லை.
அதற்கும் அடுத்ததாக, ஒரு ஊரில் கீழே விழவிருந்த சுவர் ஒன்றை அந்த நல்லடியார் சரி செய்து நிறுத்துகிறார். அதற்குக் கூலி எதுவும் வாங்கவில்லை. அவ்வூர் மக்கள் அவ்விருவருக்கும் விருந்து அளித்து உபசரிக்கவில்லை. அவர்களின் தகுதி அறிந்து நடந்து கொள்ளவில்லை. இருந்தும் அவர்களுக்கு அவர் உபகாரம் செய்வதுபோல நடந்துக் கொள்கிறார்.
இந்தச் சம்பவங்கள் மூஸா நபிக்கு ஆச்சரியத்தையும் திகிலையும் ஏற்படுத்துகின்றன. பொறுமை இழந்தவர்களாக ஒரு முறைக்குப் பலமுறை ஆட்சேபிக்கவும் கேள்வி கேட்கவும் அவர்களைத் தூண்டுகின்றன.
‘என்ன மனிதர் இவர்? உதவி செய்த கப்பலின் உரிமையாளருக்கு கைமாறு செய்வதற்குப் பதிலாக நன்றி கொன்றவராக நடந்துக் கொள்கிறார்? அழகிய அந்தச் சிறுவனிடம் அன்பு செலுத்துவதற்குப் பதிலாக அவனைக் கொன்று விட்டார். ஆனால் எவ்வித உதவியும் செய்யத் தகுதியற்ற அவ்வூர் மக்களின் உடைமைகளைப் பாதுகாக்க ஆவல் கொள்கிறார்?’ அந்த நல்லடியாரைப் பற்றி மூஸா (அலை) அவர்களின் மனதில் தோன்றிய மனப்பிம்பங்கள் (Paradigm) இவை!
இறைத்தூதராகிய ரோஷமிக்கவரான மூஸா நபி அவர்களால் இந்த விசித்திரமான நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. “இன்ஷா அல்லாஹ், நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்று தாம் முன்பு அளித்த வாக்குறுதியையும் மறந்து விடுகிறார். தமது மறுப்பையும் ஆட்சேபனையையும் வெளிப்படுத்தி அவசர அவசரமாக அது பற்றி வினா தொடுக்கிறார்: “மிகவும் தீயதொரு செயலை நீர் செய்துவிட்டீரே!” (சூரத்துல் கஹ்ஃப் 74). அதற்கு அந்த நல்லடியார் அளித்த பதில்கள் மூஸா (அலை) அவர்கல் மனதில் ஏற்பட்டிருந்த மனப்பிம்பத்தை உடைத்து ‘Paradigm Shift’-ஐ ஏற்படுத்துகிறது.
மூஸா (அலை) அவர்களுக்கோ வேறெவருக்குமோ அளித்திராத ஞானத்தை அந்த நல்லடியாருக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான். அதனைக் கொண்டு அந்த மூன்று நடவடிக்கைகளிலும் அவர் நுண்ணறிவோடு மிகச்சரியாகவேதான் செயல்பட்டுள்ளார். உபகாரம் செய்ய வேண்டிய இடத்தில் உபத்திரம் செய்யவில்லை. உபத்திரத்திற்குப் பதில் உபகாரம் செய்திடவில்லை.
கப்பலில் துளை போட்டு அதன் மூலம் கப்பலின் உரிமையாளருக்கு உபகாரம்தான் செய்தார்கள். அபகரிக்கப்படுவதில் இருந்து கப்பலைப் பாதுகாத்தார்கள். ஏனெனில் அந்தப் பகுதியில் – அந்தக் கரையில் ஓர் அரசன் இருந்தான். குறையேதுமில்லாத நல்ல கப்பல்களையெல்லாம் அபகரித்துக் கொண்டிருந்தான். அதனால்தான் (கப்பலைத் துளைபோட்டு அதனை அபகரிக்காதவாறு பாதுகாத்து) அதன் உரிமையாளரின்
உபகாரத்திற்கும் உதவிக்கும் கைமாறு செய்தார் அந்த நல்லடியார்!
சிறுவனைக் கொலை செய்ததன் மூலம் அவனுடைய தாய் தந்தையருக்கு அவர் உபகாரம் செய்தார். “(அவர் கூறினார்) அந்தச் சிறுவனின் விஷயம் என்னவெனில், அவனுடைய தாய் தந்தையர் இருவரும் நம்பிக்கையாளராக இருந்தனர். அவன் தனது அத்துமீறலாலும் நிராகரிப்பினாலும் அவ்விருவருக்கும் சிரமம் கொடுப்பானோ என்று நாம் அஞ்சினோம். ஆகையால் அவர்களுடைய இறைவன் அச்சிறுவனுக்கு பதிலாக அவனை விடவும் சிறந்த – குடும்ப உறவுகளைப் பேணக்கூடிய பிள்ளைகளை அவர்களுக்கு வழங்கிட வேண்டுமென நாம் விரும்பினோம்” (சூரத்துல் கஹ்ஃப் 80–81)
கீழே விழும் நிலையிலிருந்த “அந்தச் சுவரின் விஷயம் யாதெனில், அது அந்த ஊரிலிருந்த இரு அநாதைச் சிறுவர்களுக்குரியது. அதன் அடியில் அவர்களுக்குரிய புதையல் ஒன்று இருந்தது. அவ்விருவரின் தந்தை நல்ல மனிதராக இருந்தார். ஆகவே அவ்விருவரும் தம் வாலிபத்தை அடைய வேண்டும் என்றும் தங்களது புதையலை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உம் இறைவன் நாடினான். இது உம் இறைவன் புரிந்த அருளாகும். இவற்றையெல்லாம் எனது அதிகாரத்தின்படி நான் செய்யவில்லை. (அல்லாஹ்வின் ஆணையின் பேரில்தான் செய்தேன்) உம்மால் பொறுமை கொள்ள முடியாதிருந்த விஷயங்களின் உண்மை நிலை இதுதான்” (சூரத்துல் தஹ்ஃப் 82) என அந்த நல்லடியார் விளக்கினார்.
திருமறைக் குர் ஆனின் ‘குகை’ அத்தியாயத்தில் (சூரா கஹ்ஃப்) கூறப்பட்டிருக்கும் இச்சம்பவத்தின் மூலம் தெரியும் உண்மையாதெனில், இறைத்தூதராகவே இருந்தால்கூட மனித அறிவு என்பது முழுமையானதல்ல. அல்லாஹ் எந்த ஞானத்தை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று நாடுகிறானோ அவருக்கே அதை உரிய நேரத்தில் அளிக்கிறான். அறியாமலிருந்த தத்துவங்கள் வெளிப்படும்பொழுது எத்துணை ஆச்சரியம்! புறவடிவத்திற்கும் யதார்த்த நிலைக்கும் இடையே எவ்வளவு பெரிய இடைவெளி! உண்மை இவ்வாறிருக்க, சில மனிதர்கள் தமது அரைகுறை ஞானத்தை வைத்துக்கொண்டு, எல்லாம் அறிந்தவர்கள் போல எப்படித்தான் வாதாடுகிறார்களோ!! தம்மிடம் உள்ள சிற்றறிவைக் கொண்டு பிறரை ‘பொய்யர்’ ‘கள்ளப் பேர்வழி’ ‘வேஷதாரி’ ‘போலி’ என்றெல்லாம் பழிப்பதற்கு இவர்களுக்கு எங்கிருந்துதான் துணிவு வருகிறதோ!!
இந்த உலகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் காலம் தோறும், ஒவ்வொரு காலத்திலும் காலத்துக்கேற்ப புதிய நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்து கொண்டுதானிருக்கும். நாள் தோறும் தனது ஆச்சரியங்களை அது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. தன்னுடைய இரகசியங்களை அது தொடர்ந்து வெளிப்டுத்திக் கொண்டிருக்கிறது! மனித அறிவிற்கு முடிவே கிடையாது. அறிவின் இறுதிநிலை நமது சக்தியை விட்டும் வெகு தொலைவில் உள்ளது. மனிதர்களில் எல்லாம் அறிந்தவர்கள் என்று எவரும் கிடையாது.
“கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!” (சூரா யூசுப் 76)
சிந்தனை: இப்னு பஷீர் – www.asibrahim.blogspot.com