Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,148 முறை படிக்கப்பட்டுள்ளது!

பறவைகள் பலவிதம்

நமது விரல் நீளமும் (இரண்டேகால் இஞ்ச்) 1.6 கிராம் எடையுமே உள்ள மிகச் சிறிய பறவையான ‘ஹம்மிங்பர்ட்’ (பாடும் பறவை) முதல் 9அடி உயரமும் 156கிலோ எடையும் கொண்ட நெருப்புக் கோழி வரை பறவைகள் பலவிதம் தான்.

அதிக எடையுள்ள ‘பறக்கும்’ பறவையான ‘பஸ்டார்ட்’ 18கிலோ வரை பெருக்கும்.

பறவைகளின் உள்ளமைப்பு மற்ற வகைகளின் கலவையாக உள்ளது. பறவைகள் முதுகெலும்புள்ளவை. பாலூட்டிகளைப் (அம்மல்ச்) போல நான்கு அறை இதயத்தையும் வெதுவெதுப்பான இரத்தத்தையும் கொண்டவை. இதன் காரணமாக சீரான உடல் வெப்பத்தையும், வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் தன்மையும் பெறுகின்றன. ஆனால் ஊர்வன (றெப்டிலெச்) போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.

சிறகுகள்:
பறவைகளின் சிறகுகளில் உள்ள முக்கிய பொருள் ‘கெரோடின்’. நமது தலைமுடி, விரல் நகம் அகியவற்றில் உள்ள அதே கெரோடின், ஆனால் நமது தலைமுடி, நகங்களைப் போல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகாமல் ஓர் அளவுடன் நின்று விடும். இதனால் பெரும்பாலும் வளர்ந்த பறவைகள் வருடம் ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக் கொள்ளும். இந்த சிறகுகள் எடை குறைவான ஆனால் வலுவான பறப்பதற்கேற்ற ‘ஏரோடைனமிக்’ மேற்பரப்பை பறவைகளுக்கு அளிக்கிறது. பறக்கும் போது சிறகுகள் இடையே சிறு சிறு காற்று பொட்டலங்கள் ஏற்பட்டு மிக வெப்பம், குளிர் அகியவற்றிலிருந்து பறவைகளைக் காக்கிறது.

கண்கள்:
Bird Eye பறவைகள் பெரும்பாலும் கூரிய பார்வை உடையது. ஒரு கண்ணுக்கு மூன்று இமைகள் இருக்கும். மேல் இமை மனிதர்களின் கண் இமையைப் போன்றது. கீழ் இமை தூங்கும் போது மட்டும் மூடிக் கொள்ளும். இது தவிர பக்கவாட்டில் அலகின் அருகிலிருந்து துவங்கும் ஒரு மெலிதான தோல் உண்டு. இது ஒளி ஊடுருவக்கூடிய தோல், கண்களை ஈரப்படுத்தவும், காற்று, அதிக வெளிச்சத்திலிருந்து காக்கவும் உதவுகிறது.

காது:
பறவைக்கு காது மிக முக்கியமானது. ஆனால் முழுவதும் உள்புறமாகவே அமைந்துள்ளது. கண்ணுக்குச் சற்று கீழே சிறிய துவாரம் இருக்கும். பெரும்பாலும் சிறிய இறகுகளால் மூடப்பட்டிருக்கும். பறவைகளுக்கு காது ஒலியைக் கேட்பதற்காக மட்டுமல்லாமல் பறக்கும் போது பேலன்ஸுக்கும் தேவைப்படுகிறது.

மூளை:
பறவைகளின் மூளை பலவிதங்களில் முழுமை பெற்றது. பறக்கும் போது விமானத்தைப் போல உடலில் அனைத்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பு, உள்ளூணர்வு, உடனடியாக உணர்ந்து கொண்டு திசை மாறுதல் போன்றவற்றை செயல்படுத்துகிறது. பறவைகளின் அறிவுத் திறனும் ஆச்சரியகரமாக சிறப்பாக உள்ளது. மனித மூளையில் உள்ள சிந்திக்கும் பகுதியான ‘செரிபெரல் கார்டெக்ஸ்’ (Cereberal Cortex) பறவைகளில் மிகப் பின்னடைந்த நிலையிலேயே உள்ளது. ஆனால் ஹைபர்ஸ்ட்ரியாடம் (Hyperstriatum) என்னும் மனிதர்கள் மற்றும் பாலூட்டிகளில் இல்லாத ஒரு பகுதி பறவைகளில் மூளையில் உள்ளது. இந்த பகுதியே பாடும் பறவைகள் பாட்டுக்களைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. பறவைகளின் அறிவுத்திறனிற்கும் இதுவே காரணமாக இருக்கலாமென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

அலகு:
Birds பறவைகளின் உணவுமுறைக்கேற்ப அலகுகள் அமைந்துள்ளன. வானம் பாடி போன்ற மலர்களில் தேன் குடிக்கும் பறவைகளுக்கு நீண்ட நுண்ணிய அலகு. கழுகு, ஆந்தை போன்ற அசைவப் பறவைகளூக்கு சதையைப் பிய்த்து உண்ண ஏற்ற உறுதியான கூர் அலகு. மீன்களை உண்டு வாழும் வாத்து போன்ற பறவைகளுக்கு வழுக்கும் இரையை பிடிக்க வாகான ரம்பம் போன்ற விளிம்புடைய அலகு. பழக்கொட்டைகளை உடைக்க உறுதியான அலகு, மரங்கொத்திப் பறவைக்கோ உளி போன்ற உறுதியும் கூர்மையும் கொண்ட அலகு.

உணவு:
பறவைகள் வாழ்நாளில் பெரும்பகுதியை உணவு தேடவும், உண்ணவுமே செலவழிக்கின்றன. அதிக எடை பறப்பதற்கு இடைஞ்சல் என்பதால் பறவைகளால் உடலில் உணவைச் சேமித்து வைக்க இயலாது. சிறிய பறவைகள் அடிக்கடி உண்பது அவசியமாகிறது.

பறவைகளில் சைவமும், அசைவமும் உண்டு. காகம் போன்றவை இரண்டையுமே உண்கின்றன. சில பறவைகள் ஸ்பெஷல் டயட் வைத்துள்ளது, எவர்கிளேட் கைட் என்ற பறவை நத்தைகளை மட்டுமே உண்ணும். பறவைகளின் வயிறு அசாத்தியமானவை. கடினமான கொட்டைகள், செல்பிஷ் போன்றவற்றைக் கூட நொறுக்கி செரிமானம் செய்துவிடும். சில பழக்கொட்டை உண்ணும் பறவைகள் சிறிய கூழாங்கற்களையும் சேர்த்து உண்கின்றன. வயிற்றில் கொட்டைகளை நொறுக்க வசதியாகத் தான்! குஞ்சுகளுக்கு உணவு எடுத்துச் செல்ல பல பறவைகள் வாய்க்குள் சிறிய பை போன்ற பிரதேசங்களை வைத்துள்ளது.

உறக்கம்:
இரவில் வேட்டையாடும் ஆந்தை போன்றவற்றைத் தவிர பெரும்பாலான பறவைகள் பகலில் விழித்து இரவில் உறங்குகின்றன. குஞ்சு பொரிக்கும் காலங்களில் மட்டுமே கூட்டில் உறங்குகிறது. மற்ற நேரங்களில் கிளையோ, மரப்பொந்தோ, சில சமயம் ஒற்றைக் காலிலோ கிடைத்த இடத்தில் உறங்கிக் கொள்ளும். அவைகளுக்கு மனிதனைப் போல நீண்ட நேரத்தூக்கம் தேவைப்படுவதில்லை, மூளைக்கு ஓய்வளிப்பதற்காக் உறங்குவதுமில்லை. தசைகளை தளர்த்தவும், சக்தியைச் சேமிக்கவும் மட்டுமே தூக்கம் தேவைப்படுகிறது.

ஜோடி:
பெரும்பாலான பறவைகள் ஒருவனுக்கு ஒருத்தி கொள்கையைக் கடைப்பிடிப்பவை. குறைந்த பட்சம் ஒரு சீஸனுக்காவது. வழக்கம் போல் இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. பாடுகின்ற பறவைகள் பாட்டாலேயே தங்கள் துணையைப் பிடிக்கின்றன. பெரும்பாலும் சத்தமாக நீளமாக பாடும் ஆணின் பாட்டிற்குத் தான் பெண் மயங்கி வந்து சேரும். மற்ற பறவைகள் தங்கள் இறகு அலங்காரத்தால் துணையை அசத்துகின்றன.

ஆண், பெண் இரண்டுமே முட்டையை அடைகாப்பதுண்டு. வெளிவரும் குஞ்சுகளில் பொதுவாக 10% மட்டுமே ஒரு வருடம் தாண்டி உயிர் வாழ்கிறது.

இடப்பெயர்ச்சி:
உணவுத் தேவைகளுக்காகவும் மிக வெப்பம், மிக குளிர் சீதோஷ்ண நிலைகளை தவிர்ப்பதற்காகவும் பறவைகள் வருடாந்திர இடப்பெயர்ச்சி செய்கிறது. கடல் பறவைகள் மிக அதிக தூரம் (சில வகைகள் ஒரு வருடத்தில் 32,000 கிமீ வரை) பயணிக்கின்றன.

இடப்பெயர்ச்சி செய்யும் போது அது பல அடையாளங்களைக் கொண்டு சரியான இடத்திற்கு சென்று சேர்கிறது. பகலில் சூரியனின் திசையைக் கொண்டும், இரவில் சில நட்சத்திரங்களை அடையாளமாகக் கொண்டும், பூமியின் காந்த அலைகளைக் கொண்டும், சில நில அடையாளங்களைக் கொண்டும், சில தனிப்பட்ட சத்த வித்தியாசங்களைக் கொண்டும் பாதையை உணர்ந்து கொள்கிறது.

பறவைகள் கூட்டமாகச் செல்லும் போது V போன்ற வடிவத்தில் பறப்பதைப் பார்திருக்கலாம். இவ்வாறு செல்லும் போது முதல் பறவையைத் தவிர மற்ற எல்லாப் பறவைகளும் முன்னால் செல்லும் பறவையின் இறக்கை வீச்சில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக எளிதாக பறக்கிறது.

தனியே பறந்து செல்லும் முன்னனுபவமில்லாத சில இளம் பறவைகள் சமயங்களில் வழி தப்பி அதன் இனம் செல்லும் வழக்கமான வழியை விட ஆயிரக்கான கி.மீ.க்கள் தள்ளி வந்து விடுவதையும் காணலாம்.

பரிணாம வளர்ச்சி:
முட்டையிலிருந்து கோழியா? கோழியிலிருந்து முட்டையா? என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். விஞ்ஞானிகள் இதற்கு ஒரு படி முன்னே போய் டினோசாரிலிருந்து பறவையா? என்று அலசியிருக்கிறார்கள். டினோசாரின் ஒரு வகையான தெரொபோட் (Theropod) இனத்திலிருந்து பறவைகள் தோன்றின என்று ஒரு சாராரும். அதற்கு முன்பே தெகோடோன்ட்லிருந்து (Thecodont) (இது டினோசாருக்குத் தாத்தா) பறவைகள் உருவானது என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.

பறப்பதைப் பற்றியும் இரு கருத்துக்கள் உள்ளன. பறவைகளின் முன்னோர்கள் மரத்துக்கு மரம் தாவி அப்படியே பறக்கத் துவங்கினர் என்று சிலர் சொன்னாலும், நிலத்திலிருந்து இரைக் காகவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் தாவித் தாவி பறக்கத் துவங்கியதாக பொதுவாக நம்புகின்றனர்.

இவ்வாறு இரு கருத்துக்கள் இருந்தாலும். ஒரு விஷயம் நிரூபணமாகியுள்ளது. ‘க்ரெடாசியஸ்’ (Cretaceous) யுகத்தில், அதாவது 138 மில்லியன் வருடங்கள் முன்பிலிருந்து 65 மில்லியன் வருடங்கள் முன்பு வரை உள்ள காலகட்டத்தில், பறவைகள் இருந்ததற்கான சான்றுகள் கிட்டியுள்ளன.

நன்றி்: களஞ்சியம்.காம்