Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,750 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்திய ரூபாய்க் குறியீடு வடிவமைப்பாளர் திரு. த. உதயகுமார்

உலகளவில் வளர்ந்த நாடுகளுக்குப் போட்டியாக உருவெடுத்து வரும் நம் இந்திய ரூபாய்க்கு தனிக்குறியீடு அவசியம் என்பதை பலரும் உணர்ந்ததின் அடிப்படையில் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது ரூபாய்க்கான புதிய குறியீடு.

உலக நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் வேளையில் நாம் மட்டுமே ஏறுமுகமாக இருந்து வருகிற தருணத்தில் ரூபாய்க்கு தனிக்குறியீடு கண்டிருப்பதின் மூலமாக சர்வதேச அளவில் இனி நம் இந்திய ரூபாய்க்கு தனி மதிப்புக் கிடைக்கப் போகிறது.

அமெரிக்க (டாலர்), ஐரோப்பிய நாடுகள் (யூரோ), இங்கிலாந்து (பளிண்ட்-ஸ்டெர்லிங்), ஜப்பான் (யென்) அடுத்து கரன்சிக்கு தனிக்குறியீடு கண்ட ஐந்தாவது தேசம் நம் இந்தியா.

விரைவில் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வரவிருக்கும் இப்புதிய குறியீட்டை உருவாக்கி அளித்திருப்பவர் தான் இம்மாத நேர்முகத்தில் இடம் பெற்றிருக்கும் திரு. த. உதயகுமார்.
பள்ளி வயதிலேயே ஓவியத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தவர். கல்லூரி வாழ்க்கையில் புதிய புதிய வடிவமைப்புகளை உருவாக்கி பலரின் பாராட்டுக்களைப் பெற்றவர்.
கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் துணைப் பேராசிரியராக தற்போது பணிபுரிந்து வருபவர்.
முடியும் வரை முயற்சி என்பது காலம் உள்ளவரை மகிழ்ச்சியைத் தரும். எனவே எடுத்த செயலை முடிக்கும் வரை இடைவிடாது உழைக்க வேண்டும். அந்த உழைப்பின் பயன் தான் இன்று எனக்கு கிடைத்து வருகிற பாராட்டுக்கள். நிரம்ப “தன்னம்பிக்கை” கொண்டவர்.

தான் கற்றதை தன்னிடம் கற்கும் மாணவர்களுக்குக் கொடுத்து நிறைய சாதிப்பாளர்களை உருவாக்குவதே இலட்சியம் என்று செயல்பட்டுவருபவர்.
“ஒவ்வொரு தனி மனிதரும் பிறருக்கு உதாரணமாக விளங்கக்கூடிய வாழ்க்கையை வாழ வேண்டும். அப்போது தான் நாடு நலம் பெறும். நாமும் நிம்மதியாய் வாழ முடியும்” சிந்திக்கவும் சிகரம் தொடவும் அழைத்துச் செல்லும் திறமை நிரம்பப் பெற்ற செல்வன் திரு. த. உதயகுமார் அவர்களுடன் இனி நாம்…

உங்களைப்பற்றி?
சொந்த ஊர் கள்ளக்குறிச்சி. எனக்கு ஐந்து வயது இருக்கும்போது பெற்றோர் (திரு. தர்மலிங்கம், திருமதி. ஜெயலட்சுமி) சென்னைக்குக் குடிபெயர்ந்தனர். உடன்பிறந்தோர் ஒரு அண்ணன், ஒரு தம்பி, ஒரு சகோதரி. பன்னிரண்டாம் வகுப்பு வரை சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்.க்கும், மும்பை ஐ.ஐ.டி., யில் உள்ள இன்டஸ்டிரியல் டிசைன் சென்டரில் எம்.டெஸ் (M.Des) மற்றும் பி.எச்.டி., முடித்தேன். பின்னர் 2010லிருந்து கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். தற்பொழுது இந்திய மொழிகளுடன் எழுத்து வடிவம் குறித்தும் பழமையும் பெருமையும் வாய்ந்த நம்மொழி தமிழ்மொழியின் எழுத்துவடிவம் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.

இந்திய ரூபாய்க்கு குறியீடு உருவாக்குவதற்கான போட்டியில் நீங்கள் பங்கெடுத்துக் கொண்டது குறித்து?
2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய ரூபாய்க்கு குறியீடு உருவாக்குவதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்தியை மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக அறிந்தேன்.

இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்றும் குறியீடானது இந்தியக் கலாச்சாரம், பண்பாட்டை எடுத்துக்கூறும் விதமாகவும், கணினியில் எளிதாக இடம்பெறக் கூடிய எழுத்து வடிவமானதாகவும் இருக்க வேண்டும் என்றும், இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் கடைசி சுற்றுக்குத் தேர்வு செய்யப்படும் ஐந்து பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய ரூபாய்க்கு குறியீடு உருவாக்குவதற்கான அறிவிப்பை அறிந்தவுடன் போட்டியில் பங்கெடுக்க ஆர்வமானீர்களா? இல்லை மற்றவர்களால் தூண்டப்பட்டீர்களா?
பள்ளிப்பருவத்தில் இருந்தே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவனாக இருந்த காரணத்தினாலும் கல்லூரி வாழ்க்கையில் நிறைய புதிது புதிதாக வடிவமைத்து பாராட்டுக்களும் பரிசுகளும் பெற்றதனாலும் இந்திய ரூபாய் குறியீட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு நானாகவே ஆர்வமானேன்.

பலவாறு யோசித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து ‘இம்முறையில் குறியீடு அமைப்பது’ நன்றாக இருக்கும் என தீர்மானித்திருந்திருப்பீர்களே அது எம்முறை?
தீவிர ஆராய்ச்சியின் முடிவில் இந்தி மொழியின் எழுத்து வடிவமான ‘தேவநகரி’ எழுத்துக்களைப் பயன்படுத்துவது என முடிவு செய்தேன். இந்தி மொழியில் உள்ள ‘ர’ என்ற எழுத்து ‘ரூபியா’ என்ற ரூபாயைக் குறிக்கும் முதல் எழுத்து என்பதால் முதலில் அதைத் தேர்வு செய்தேன். ஆங்கில மொழியில் ‘ஆர்’ எழுத்து ரூபாயைக் குறிக்கும் முதல் எழுத்து என்பதால் அதையும் தேர்வு செய்தேன். இவை இரண்டையும் இணைத்து ‘ஆர்’ போன்ற எளிதான எழுத்து வடிவத்தை உருவாக்கினேன்.

நம் நாட்டின் உயர்வையும், இந்தியப் பொருளாதாரம் எப்போதும் மற்ற நாடுகளுக்குச் சமமானது என்பதை உயர்த்தவும் ‘இக்குவல்’ என்ற குறியீட்டை ‘ஆர்’ எழுத்தின் மேல் பகுதியில் இணைத்து இந்திய ரூபாய்க்கு புதிய குறியீட்டை உருவாக்கி போட்டிக்கு அனுப்பி வைத்தேன்.

போட்டி கடுமையாக இருந்திருக்குமே?
பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் என்னைப்போலவே குறியீட்டை அனுப்பி போட்டியில் கலந்து கொண்டார்கள். அதில் 2500 பேர் தேர்வு செய்யப்பட்டு, கடைசி சுற்றுக்கு ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். தமிழகத்தில் இருந்து நானும், மும்பையிலிருந்து மூன்று பேரும், கேரளத்திலிருந்து ஒருவருமாக தேர்வு செய்யப்பட்டோம்.

ஐந்து பேரில் ஒருவர் என்கிற தகவல் கிடைக்கப் பெற்றதும் இறுதியில் வென்றுவிடுவோம் என்று நினைத்தீர்களா?
புதிது புதிதாகச் சிந்திப்பது, உருவாக்குவது எனக்கு பிடித்தமான ஒன்று என்பதால் இப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டேன். இறுதி ஐவரில் ஒருவர் என்றதுமே மகிழ்ச்சி ஒருபுறம் என்றாலும் அடுத்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதில் கவனமானேன். முடியும் வரை முயற்சி செய்வோம். அந்த முயற்சிக்கான பலன் எதுவாக இருந்தாலும் அது நமக்கு நன்மையே என்று நினைத்தேன்.

நேர்முகம் அனுபவம் எப்படி இருந்தது?
இந்திய ரூபாய்க்கான குறியீடு வடிவமைத்தது குறித்து விளக்கம் கேட்க ஏழுபேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு நிதியமைச்சர்கள், இரண்டு RBI  அமைச்சர்கள், மூன்று பெரிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து 3 பேர் வருகை தந்திருந்திருந்தனர். 2010 டிசம்பரில் அவர்களைச் சந்தித்து குறியீட்டுக்கு பயன்படுத்திய ‘தேவநகரி’ எழுத்து வடிவம் குறித்து விளக்கினேன். இந்திய அளவில் இவ்வெழுத்து வடிவத்திற்கு தனிச் சிறப்பு உண்டென்றும் தொங்கும் வடிவில் எழுதக்கூடிய வடிவம் ‘தேவநகரி’ எழுத்து வடிவம் என்றும் அச்சிறப்பிற்குரிய எழுத்து வடிவத்திலிருந்தும், ஆங்கில எழுத்து ‘ஆர்’லிருந்தும் உருவாக்கி இந்தி ஆங்கிலம் என ஒரு “யுனிவர்சல்” வடிவம் கொடுத்திருக்கிறேன் என விளக்கம் தந்து வந்தேன்.

நீங்கள் வடிவமைத்த குறியீடு தான் இந்திய ரூபாய்க்கான குறியீடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்பதை எப்படி எப்போது அறிந்தீர்கள்? அப்போது உங்கள் மன நிலை?
டிசம்பரில் ஏழு நபர் குழுவின் முன் குறியீட்டுக்கான விளக்கம் கொடுத்ததிற்குப் பின்பு முடிவு இரண்டு மாதங்களில் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி முடிவு அறிவிக்கப்படவில்லை. திடீரென 2010 ஜூலை மாதம் நிருபர் ஒருவர் தொடர்புகொண்டு நீங்கள் வடிவமைத்த குறியீடு தான் இந்திய ரூபாய் குறியீடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்றார். எனக்கு உடனே நம்ப முடியவில்லை. அடுத்தநாள் 10 மணி அளவில் தொலைக்காட்சிகளில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது கண்டு நான் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். கடின உழைப்பு தான் இதனை சாத்தியமாக்கியிருக்கிறது என்று நம்பினேன்.

இந்திய ரூபாய்க்கான குறியீடு உருவாக்கியதன் மூலமாக நீங்கள் உணர்வது?
நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருப்பதாக உணர்கிறேன்.

இந்தச் சாதிப்பிற்குப் பின்னால் இவர்கள் எல்லாம் உள்ளார்கள் என்று நீங்கள் குறிப்பிட விரும்புபவர்கள்?
என் ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், நண்பர்கள், என் பள்ளிப்பருவ ஆசிரியர்கள், பெற்றோர், உடன்பிறப்புகள் இப்படி நிறையவே சொல்ல வேண்டும்.

பெற்றோர் குறித்து?
என் ஒவ்வொரு நிகழ்வின் வெற்றிக்கும் பெரிதும் காரணம் என் பெற்றோரின் ஒத்துழைப்பும், அவர்கள் தந்த சுதந்திரமும் தான் காரணம். நான் எடுக்கும் முடிவை ஆதரிப்பதுடன் எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இதைச் செய் அதைச் செய் என எப்போதும் வற்புறுத்தியது இல்லை.

இனி எதிர்வரும் காலத்தில் உங்கள் பணி குறித்து?
உதவிப் பேராசிரியராக கவுகாத்தி ஐ.ஐ.டி., யில் பணிபுரிந்து வருகிற நான், எனது மாணவர்களுக்கு நான் அறிந்தவற்றை நன்கு கற்றுக்கொடுத்து ஒவ்வொருவரையும் சாதனையாளர்களாக உயர்த்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

பி.ஆர்க். துறையில் இருப்பவர்கள் இன்ஜினியரிங், டிசைனிங், கன்ஸ்ட்ரக்சன், இன்டீரியல் என சென்று கொண்டிருக்கும்போது நீங்கள் வேறுபட்டு நிற்க ஏதேனும் காரணம் உண்டா?
பொருள் ஈட்ட வேண்டும் என்பதைவிட பேராசிரியராக இருந்து நல்ல நல்ல மாணவர்களை உருவாக்கி நாடு உயர பாடு படவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு சிறுவயது முதலே இருந்தது. டிசைனிங்கில் இருந்த ஆர்வம் ஐ.ஐ.டி.யில் நுழையத் தூண்டியது. அங்கு கிடைத்த அனுபவங்கள், பாராட்டுக்கள் இன்று சாதிக்க வைத்திருக்கிறது. என் சாதிப்பின் அடுத்த இலக்கு பேராசிரியர் பணியின் மூலம் பல மாணவர்களைச் சாதிக்கத் தூண்டுவது தான்.

வெற்றிக்கு வழி என்று நீங்கள் கருதுவது?
தன்னம்பிக்கையுடன் கூடிய கடின உழைப்பே எப்போதும் வெற்றி தரும்.

இந்திய மொழிகளில் “வடிவ மைப்பு” என்பது நன்மையைத் தருமா?
நன்மை என்பது இப்போது தெரியாமல் போகலாம். எதிர்காலத்தில் நிறையப்பேர் நம் இந்திய மொழிகளில் வடிவமைக்கும் போது தான் நன்மைகள் என்னவென்பது புரிய வரும். மேலும், அவரவர் மொழிகளில் வடிவமைக்கும்போது ஆற்றலுடன் கருத்துக்களை நன்கு வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது.

இந்திய ரூபாய் குறியீடு வடிவமைப்பின் சாதிப்பிற்குப் பின்னால் உதயகுமார் எப்படி?
அப்போதும் இப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கிறேன். இப்போது நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான அழைப்புகள், கௌரவப் பேராசிரியர் பணிகளுக்கான அழைப்புகள் என வந்து கொண்டே இருக்கிறது. ‘நேரம்’ தான் இப்போதைக்கு பிரச்சனை. கவுகாத்தி ஐ.ஐ.டி., யிலேயே பணிபுரிவதற்கு காலம் சரியாக இருக்கிறது. அதனால் அப்போதும் இப்போதும் உழைப்பு உழைப்பு என்பது அப்படியே தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இளைஞர்களுக்கு…
· தன்னம்பிக்கையுடன் இருங்கள்
· எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று கருதுங்கள்
· எதையும் முழு மனதுடன் செய்யுங்கள்
· நேர்மையைக் கடைபிடியுங்கள்
· உண்மையாக இருங்கள்
· நல்லதையே நினையுங்கள். நல்லதே நடக்கும்.

நிறைய வாழ்த்துக்கள் வந்து குவிந்திருக்கும். அதில் இது என்னை நெகிழ வைத்தது என்று நீங்கள் கருதுவது?
வந்த வாழ்த்துக்கள் எல்லாமே நெகிழ வைத்தவை தான் என்றாலும் பிறந்த ஊர் கள்ளக்குறிச்சி மற்றும் மருவூரில் கிடைத்த பாராட்டு அதிகம் நெகிழ வைத்தது. அவர்கள் காட்டிய அன்பு, அவர்கள் அடைந்த மகிழ்ச்சி இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தூண்டிவிட்டது.

நன்றி: தன்னம்பிக்கை