Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 18,361 முறை படிக்கப்பட்டுள்ளது!

அட்டகாசமான சுவையில் 30 மசாலா குருமா – 3

தால் மக்கானி!

தேவையானவை:கறுப்பு முழு உளுந்து- 1கப், பெ.வெங்காயம்-1, தக்காளி-3, இஞ்சி, பூண்டு விழுது -2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் -2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, வெண்ணெய் – 3

டேபிள் ஸ்பூன், பட்டை – 1 துண்டு, சீரகம் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.

செய்முறை:உளுந்தை நன்கு கழுவி, சுமார் 7 மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய தண்ணீருடன் சேர்த்து, உளுந்தை குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடம் வைத்து இறக்குங்கள் (உளுந்து நன்கு குழையவில்லையெனில், மீண்டும் 2 விசில் வைத்து இறக்கலாம்). வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்போது, ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெயை உருக்கி, அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன் தக்காளி, தேவையான உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். நன்கு வதங்கியதும், வேகவைத்த பருப்பை இதில் சேர்த்து, நன்கு கொதிக்கவிடுங்கள்.

ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெயை உருக்கி, அதில் பட்டை, சீரகம் தாளித்து, பருப்பில் சேருங்கள். நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். மீதம் உள்ள வெண்ணெயை மேலாக தூவினாற்போல் வைத்துப் பரிமாறுங்கள். மேலும் ருசிக்கு, ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கலாம்.

டபுள் பீன்ஸ் மசாலா!

தேவையானவை:டபுள் பீன்ஸ் – அரை கிலோ, பட்டாணி – அரை கப், பெ.வெங்காயம் – 2, தக்காளி – 3, வெள்ளரி விதை (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 4.

தாளிக்க: எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை:டபுள் பீன்ஸை தோல் உரித்து, பட்டாணியுடன் சேர்த்து, உப்புப் போட்டு வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்கு அரைத்தெடுங்கள். வெள்ளரி விதையைத் தனியாக அரையுங்கள். இப்போது, எண்ணெயைக் காயவைத்து, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து, வதக்குங்கள். நன்கு வதங்கியதும், அத்துடன் தக்காளியையும் அரைத்த விழுதையும் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள். இதனுடன், வெந்த டபுள் பீன்ஸ், மற்றும் பட்டாணியை அவற்றை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து, தண்ணீர் வற்றி, சுருண்டு வரும் வரையில் கிளறி, வெள்ளரி விதை விழுதைச் சேர்த்து இறக்குங்கள்.

ராஜ்மா மசாலா!

தேவையானவை: ராஜ்மா பயறு – 1 கப், தக்காளி – 5, மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள், கரம் மசாலா தூள் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.

அரைக்க: பெ. வெங்காயம் – 3, இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல்.

தாளிக்க: சீரகம் – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், பட்டை – 1, நெய் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: ராஜ்மா பயறை, சுமார் 7 மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு, அதை உப்பு சேர்த்து, குக்கரில் 5 முதல் 6 விசில் வரும்வரை வைத்து இறக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்கு அரையுங்கள். தக்காளியை நறுக்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக, எண்ணெயைக் காயவைத்து, அதில் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, கூடவே அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறுங்கள். அதில் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கி, நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்குங்கள். கடைசியாக, அதனுடன் வேகவைத்த ராஜ்மா, சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

கோஸ் குருமா!

தேவையானவை: முட்டைகோஸ் – கால் கிலோ, பெ. வெங்காயம்-1, தக்காளி-2, தேங்காய்த் துருவல் – 1 கப், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.

தாளிக்க: பட்டை, ஏலக்காய், லவங்கம் – தலா 1, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: பச்சை மிளகாய் – 4, சோம்பு – 1 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், பூண்டு – 1 பல்.

செய்முறை: முட்டைகோஸ் இலைகளைக் கழுவி, பொடியாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்குங்கள். தேங்காய்த் துருவலையும் பொட்டுக் கடலையையும் அரைத்துத் தனியே வையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து விழுதாக்குங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், கோஸ், சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள். பின்னர் தக்காளி சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

தக்காளி தால்!

தேவையானவை: மசூர் தால் – 1 கப், தக்காளி – 4, இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், பச்சை மிளகாய் – 2, மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு, மல்லித்தழை – சிறிதளவு, கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேகவையுங்கள். தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மல்லித்தழையைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து, அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். இதனுடன், தக்காளி, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, இதை அப்படியே பருப்பில் சேருங்கள். இதில் தேவையான உப்பு போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். கடைசியாக, எலுமிச்சைச் சாறு, மல்லித்தழை சேர்த்துப் பரிமாறுங்கள்.

குறிப்பு: தாளிக்கும்போது, எண்ணெயைக் குறைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால், ருசியும் மணமும் அதிகரிக்கும்.

முந்திரி மசாலா!

தேவையானவை: முந்திரிப் பருப்பு – 100 கிராம், பச்சைப் பட்டாணி – அரை கப், பெ. வெங்காயம் – 2, தக்காளி – 2, கரம் மசாலா தூள் -அரை டீஸ்பூன், தேங்காய்ப் பால்-ஒன்றரை கப், உப்பு-தேவைக்கு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல் (இதைத் தனியே அரையுங்கள்).
முந்திரிப்பருப்பு – 6, வெள்ளரி விதை – 2 டீஸ்பூன், கசகசா – 1 டீஸ்பூன் (இதைத் தனியே அரையுங்கள்).

செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, அதில் வெங்காயம், ப.பட்டாணியைப் போட்டு வதக்கி, முந்திரியையும் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்குங்கள். இதனுடன் தக்காளி, அரைத்த இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். அடுத்து, அதனுடன் அரைத்த முந்திரி விழுதையும் தேங்காய்ப் பாலையும் சேருங்கள். இந்தக் கலவை சற்றுக் கெட்டியாகும் வரை விடாமல் கிளறி, கொதிக்கவிடுங்கள். கடைசியில், கரம் மசாலா தூளைத் தூவி இறக்குங்கள்.
மொகலாய பாணி மசாலாவான இது விருந்துகளுக்கு ஏற்றது!

தால் பனீர் மசாலா!

தேவையானவை: பாசிப்பருப்பு – 1 கப், பனீர் – 200 கிராம், தக்காளி – 3, இஞ்சி – 1 துண்டு, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த் தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து மலர வேகவையுங்கள். பனீர், தக்காளியை சிறு துண்டுகளாக்குங்கள். இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க கூறியவற்றைத் தாளியுங்கள். இதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, தக்காளி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து, மேலும் 2 நிமிடம் வதக்குங்கள். இதனுடன் பனீர், வேகவைத்த பருப்பு, தேவையான உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு, இறக்குங்கள். மல்லித்தழை தூவி, சூடாகப் பரிமாறுங்கள்.

பலாக்காய் சொதி!

தேவையானவை: பிஞ்சு பலாக்காய் – 1, பெ. வெங்காயம் – 2, தக்காளி – 2, உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

அரைக்க: தேங்காய்த் துருவல் – 1 கப், பச்சை மிளகாய் – 3, சோம்பு – அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 6, பூண்டு – 1 பல், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பலாக்காயை தோல் நீக்கி, உள்ளே இருக்கும் நடுப்பகுதி, பால் ஆகியவற்றை நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பலாக்காயுடன் சிறிது உப்பும் ஒரு கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்குங்கள். பிரஷர் அடங்கியதும் திறந்து, பலாக்காயைத் தண்ணீர் வடித்து, எடுத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை 2 நிமிடம் வதக்கி, ஆறவைத்து, நைஸாக அரைத்தெடுங்கள். அடுத்து, மீதமுள்ள எண்ணெயைக் காயவைத்து, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் இதனுடன் தக்காளியைச் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கி, அரைத்த விழுதையும் சேருங்கள். இதில், தேவையான தண்ணீர், வேகவைத்து எடுத்த பலாக்காய் துண்டுகள் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். செட்டிநாட்டு ஸ்பெஷலான இது, டிபன் அயிட்டங்களுக்கு மட்டுமல்ல, சாதத்துக்கும் ஏற்றது!

பெப்பர் கோபி!

தேவையானவை: காலிஃப்ளவர் – சிறியதாக 1, பெ.வெங்காயம் – 2, தக்காளி – 4, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை-சிறிதளவு, உப்பு-தேவைக்கு, எண்ணெய்-3 டேபிள் ஸ்பூன்.

வறுத்து பொடிக்க: மிளகு – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 10 இலை.

செய்முறை: காலிஃப்ளவரை பக்குப்படுத்தி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். மிளகு, சோம்பு, கறிவேப்பிலையை வெறும் கடாயில் வறுத்துப் பொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இதனுடன் மஞ்சள் தூள், காலிஃப்ளவர் சேர்த்து தீயை மிதமாக வைத்து வதக்குங்கள். இதனுடன், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, நன்கு வதக்குங்கள். இதை மூடிவைத்து அவ்வப்போது திறந்து கிளறுங்கள். பச்சை வாசனை போய், காலிஃப்ளவர் நன்கு வெந்ததும், மூடியை எடுத்துவிட்டு, நன்கு சேர்ந்து வரும்வரை கிளறுங்கள். இதனுடன் வறுத்து அரைத்த பொடியைத் தூவி, கிளறி இறக்குங்கள். சுவையில் சூப்பராக இருக்கும் இந்த பெப்பர் கோபி!

கீரை சன்னா மசாலா!

தேவையானவை: சன்னா – 1 கப், சுக்காங்கீரை (மார்க்கெட்டில் கிடைக்கும்) – 1 கட்டு, தக்காளி-3, மிளகாய்த் தூள்-2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன், உப்பு -தேவைக்கு, எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்.

தாளிக்க: சீரகம் – அரை டீஸ்பூன், பட்டை – 1, பூண்டு – 8 பல், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: சன்னாவை சுமார் 7 மணி நேரம் நன்கு ஊறவிட்டு, உப்பு சேர்த்து வேகவையுங்கள். அரை கப் தண்ணீர் அளவுக்கு சன்னாவுடன் வைத்துவிட்டு, மீதியை வடித்துவிடுங்கள். கீரையை அலசி, சுத்தம் செய்து, பொடியாக நறுக்குங்கள். தக்காளியை கொஞ்சம் பெரிதாகவே வெட்டுங்கள். அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். தக்காளி வெந்ததும், அதில் பொடியாக நறுக்கிய கீரை, வேகவைத்த சன்னா (தண்ணீருடன்) சேர்த்து, நன்கு கொதிக்க விடுங்கள். மற்றொரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க உள்ளவற்றைத் தாளித்து, மசாலாவில் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள் (சுக்காங்கீரைக்குப் பதில் அரைக்கீரை, புளிச்ச கீரையையும் உபயோகிக்கலாம்). பிரெட், சப்பாத்திக்கு சத்தான சைட் டிஷ் இது!

நன்றி : ‘சமையல் திலகம் ‘ரேவதி சண்முகம்