Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2011
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,089 முறை படிக்கப்பட்டுள்ளது!

மின் தடைக்கு நிர்வாகக் குளறுபடி காரணமா!

மின் வாரியம் ஏற்க மறுப்பு: ஒரே நாளில் 1,400 மெகா வாட் மின்சாரம் வீண்

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்தும், மின் வாரியம் வாங்க மறுப்பதால் மின் தடை குறையாததோடு, காற்றாலை மின் உற்பத்தியாளர்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் தொழிற்சாலை, விவசாயம் மற்றும் குடியிருப்புகளுக்குச் சேர்த்து, மொத்தம் 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது, 2 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு மின்சார பற்றாக்குறை இருப்பதாக மின் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் 3 மணி நேரம் வரை தினமும் மின்தடை அமல் படுத்தப்படுகிறது.  நீண்ட இடைவெளிக்குப் பின், சென்னையிலும் ஒரு மணி நேர மின் தடையை மின் பகிர்மானக் கழகம் அறிவித்து, மின் பற்றாக்குறையை உறுதி செய்துள்ளது. மின்தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்து வருவதால், தமிழகத்தில் தொழில் துறையின் எதிர்காலமே இருண்டு கிடப்பதாக தொழில் அமைப்புகள் அச்சத்தில் உள்ளன. இதன் வெளிப்பாடாக, மின்தடையைக் கண்டித்து போராட்டத்திலும் குதிக்கத் தயாராகி விட்டன.

தினமும் 50 கோடி ரூபாய்க்கு வெளி மாநிலங்களில் மின்சாரம் வாங்கியும், மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று விளக்கம் கூறி, மின் வாரியம் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது. ஆனால், மின் உற்பத்தி குறைவு என்பதை விட, மின் பகிர்மானக் கழகத்தின் நிர்வாகக் கோளாறுதான் மின் தடைக்குக் காரணம் என்று அடித்துச் சொல்கின்றனர் தொழில்துறையினர். இதனை தெளிவாக நிரூபித்துள்ளது மின் வாரியம். இந்த ஆண்டில், தென்மேற்குப் பருவகாற்று, எதிர்பார்த்ததை விட முன்பாகவே துவங்கி விட்டது. அதனால், காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கத் துவங்கியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 5,852 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனுடைய காற்றாலைகள் உள்ளன. காற்று வீசுவதற்கேற்ப, காற்றாலை மின் உற்பத்தியாகிறது. பருவகாற்று பலமாக வீசத்துவங்கியிருப்பதால், கடந்த சில நாட்களாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த 28ம் தேதி, 1,800 மெகா வாட் அளவுக்கு காற்றாலை மின் உற்பத்தி இருப்பதாக, மின் வாரிய அதிகாரிகளே தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அன்று இரவு 7.10 மணிக்கு 1,381 மெகா வாட் மின்சாரம் மட்டுமே, மின் வாரியத்தால் பெறப்பட்டுள்ளது. மீதியிருந்த 400 மெகா வாட் மின்சாரம் மின் தொகுப்பில் (கிரிட்) ஏற்கப்படவில்லை. இதனால் மின் உற்பத்தி இருந்தும், மின் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால், ஏராளமான காற்றலைகள் அன்று முழுமையாக இயங்க முடியவில்லை. குறைந்தபட்சமாக 3 மணி நேரத்திலிருந்து அதிகபட்சமாக 12 மணி நேரம் வரை, காற்றாலைகள் இயங்காமல் முடக்கப்பட்டுள்ளன. ஏப்.28 இரவு 1.30க்கு 320 மெகா வாட் உற்பத்தி செய்யும் அளவுக்கே காற்றாலைகள் இயங்கின; 1,500 மெகா வாட் மின்சாரம் ஏற்கப்படவில்லை.

மின் துறை அளித்துள்ள புள்ளி விபரப்படி, ஏப்.28 அன்று 212 மில்லியன் யூனிட் மின்சாரம், தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது; இதில், 24 மில்லியன் யூனிட் மட்டுமே, காற்றாலையிலிருந்து பெறப்பட்டுள்ளது. இது வெறும் 11 சதவீதம் மட்டுமே. மொத்தம் 1,800 மெகா வாட் மின்சாரத்தையும் எடுத்திருந்தால், 30 சதவீதம் வரை மின் தேவை பூர்த்தியாகியிருக்கும். அதனைக் கொண்டு, தொழிற்சாலைகளை கூடுதல் நேரத்துக்கு இயங்க வைத்திருக்கலாம்; பொது மக்களுக்கு மின் தடையிலிருந்து தற்காலிக விடுதலை அளித்திருக்கலாம். காற்றலை மின்சாரத்தை வாங்கிப் பயன் படுத்தும் அதிகாரத்தை, மண்டலப் பொறுப்பிலுள்ள அதிகாரிகளுக்கு அளிக்காததால்தான் உடனடி முடிவு எடுக்க முடியாமல் ஏராளமான மின்சாரம் வீணடிக்கப்பட்டுள்ளதாக காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்கன் கூறியதாவது: காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும்போதெல்லாம் அதனை வாங்கிப் பயன் படுத்திக்கொள்வதாகத்தான் மின் வாரியம் எங்களுக்கு உறுதி அளித்தது. அதன்படி, உரிய நேரத்தில் முடிவெடுத்து, காற்றாலை மின்சாரத்தை வாங்கி, மக்களுக்கு விநியோகம் செய்திருக்க வேண்டியது மின் வாரியத்தின் கடமை. ஆனால், காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ள சூழ்நிலையில், மின்சாரம் பெறாமல் தவிர்ப்பதன் மூலமாக மின் வாரியம் கடமை தவறியுள்ளது வெளி மாநிலத்தில் யூனிட் 10 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கும் மின் வாரியம், யூனிட் 2 ரூபாய் 75 பைசாவுக்கு நாங்கள் தரும் மின்சாரத்தை வாங்க மறுப்பதன் காரணம் புரியவில்லை. ஏற்கனவே, 1,200 கோடி ரூபாய் பாக்கி வைத்திருந்தாலும் நாங்கள் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்நிலையில், காற்றாலைகளை முழுமையாக இயங்க விடாமல் முடக்குவது, இத் தொழிலின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும். இவ்வாறு கஸ்தூரி ரங்கன் தெரிவித்தார்.

கடந்த 16 ஆண்டுகளாக, ஒரு மெகா வாட் மின்சார உற்பத்தியைக் கூட அதிகரிக்க மின் வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் பங்களிப்பில்தான் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வாங்கி விநியோகிப்பதைக் கூடச் சரியாகச் செய்யவில்லை என்றால், இத்துறையின் நிர்வாகக் குளறுபடியைத் தவிர அதற்கு வேறெதுவும் காரணமாக இருக்க முடியாது.

டாடா காட்டிய டாட்டா! கடந்த ஆண்டில், டாடா நிறுவனம் தமிழகத்தில் 100 மெகா வாட் உற்பத்தி செய்யும் திறனுடைய காற்றாலைகளை நிறுவியது. ஆனால், இந்த ஆண்டில் ஒரு மெகா வாட் காற்றாலையைக் கூட இங்கே நிறுவவில்லை. மாறாக, குஜராஜ் மாநிலத்துக்கு தன் முதலீடுகளைத் திருப்பி விட்டுள்ளது. அங்கு காற்றாலைகளில் பெறப்படும் மின் உற்பத்திக்கு 15 நாட்களில் தொகை தரப்பட்டு விடுகிறது. தமிழகத்தில், கடந்த ஆகஸ்ட்டிலிருந்து காற்றாலை மின் உற்பத்தியாளருக்கு பைசா காசைக் கூட, தமிழக மின் துறை வழங்கவில்லை.

நன்றி: தினமலர்