Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,148 முறை படிக்கப்பட்டுள்ளது!

எழுச்சியும், வீழ்ச்சியும் நட்பை சார்ந்ததே!

நட்பினால் உயர்ந்தோர் பலர் இருக்க, அதனால் தாழ்ந்தோரும் அதிகம் உள்ளனர். நட்பு என்றால் என்ன என்பதை புரிவதுதான் இங்கே முக்கியம்.

“உன் நண்பனைக் காட்டு
நீ யாரென்று சொல்கிறேன்”

“நல்ல நண்பர்களைப் பெற்றவன்
இவ்வுலகையே வெல்வான்”

“கூடா நட்பு கேடாய் முடியும்”

“நட்பு அனைத்து எல்லைகளையும் கடந்த ஒன்று”

போன்ற பலவித புகழ்பெற்ற பொன்மொழிகள் நட்பைக் குறித்து சொல்லப்பட்டவை.

இந்த உலகின் சக்தி வாய்ந்த அம்சங்களில் ஒன்று நட்பு. ஒரு மனிதனின் மனநிலை கட்டமைப்பில் நட்பும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்களின் ஆளுமையில் நண்பர்களுக்கு பங்குள்ளது. சமயத்தில், குடும்பமும், உறவினர்களும் செய்ய முடியாதவற்றை நண்பர்கள் செய்து விடுகிறார்கள்.

கவிஞர் துளசிதாஸ் கூட, “உங்களின் ஆளுமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமெனில், தவறான நட்பிலிருந்து விலகுங்கள்” என்று கூறியுள்ளார்.

உங்களை பாதிக்காதா?

கெட்ட நண்பர்களின் சகவாசம் உள்ள சிலர் இவ்வாறு கூறுவார்கள், “என் நண்பர்களிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்கள் என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது. அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும், ஆனால் எனக்கு நண்பர்களாக இருந்தால் போதும்” என்று சொல்வார்கள்.

ஒரு சந்தனக் கட்டையை சுற்றியிருக்கும் விஷப் பாம்புகளால் அந்த சந்தனக் கட்டைக்கு விஷம் ஏறிவிடாது என்று ஒரு வழக்கு சொல்லப்படுவதுண்டு. அது சந்தனக் கட்டைக்கு பொருந்துமே ஒழிய, ஒரு மனிதனுக்குப் பொருந்தாது.

நட்பு காரணமாகாது

தனது நண்பர்கள் மனம் நோகக்கூடாது மற்றும் நட்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக பலர், நண்பர்கள் செய்யும் தீமைகளை, அவர்களது வற்புறுத்தலின் பேரில் தாங்களும் செய்யத் துணிகின்றனர். நட்பை இதற்கு ஒரு காரணமாக காட்டுகின்றனர். ஆனால் உண்மை நட்பு என்பது ஒருவனை கெடுக்காது இருப்பதுதான். எனவே, யார் நல்ல நண்பர் என்பதைக் கண்டுபிடிக்கும் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டும். ஏனெனில் நல்ல நண்பர் என்ற போர்வையில், நம் வாழ்வை கெடுக்கும் எதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சீரிய பண்புகளைக் கொண்ட மனிதர்களிடம் நட்பு பாராட்டவும். உங்களின் நன்மதிப்பை நீங்கள் விரும்பினால், கெட்ட நண்பர்களிடம் சகவாசம் கொள்வதைவிட, தனித்திருப்பதே மேலானது.    – ஜார்ஜ் வாஷிங்டன்

இந்த ஜார்ஜ் வாஷிங்டன் சாதாரணமானவரல்ல. அமெரிக்காவின் சுதந்திரப் போரை தலைமை தாங்கி நடத்தி, வெற்றிகண்டவர். நல்ல நண்பர்கள் அவருக்கு கிடைத்ததால்தான், அவரால் இந்த வெற்றியை எட்ட முடிந்தது. ஜார்ஜ் வாஷிங்டன் மட்டுமல்ல, கார்ல்மார்க்ஸ், லெனின் உள்ளிட்ட பல மாபெரும் உலகப் புரட்சியாளர்கள் நல்ல நட்பினாலேயே சாதித்தார்கள்.

தீய பழக்கங்களுக்கு அடிமையாக்குதல்

“புகைப் பிடிக்கவில்லை என்றால் நீ ஒரு ஆம்பிளையே இல்லை” என்று உசுப்பேற்றும் நண்பர்கள் ஏராளம். நட்பை மதிப்பவனாயிருந்தால், ஒழுங்கா புகைப்பிடி என்று அன்பான எச்சரிக்கை கொடுத்து பலரை புகைக்கு அடிமையாக்குபவர்களும் ஏராளம். நண்பர்களின் மனம் கோணக்கூடாதே என்பதற்காக புகைப்பிடித்து, அதற்கு அடிமையாகி, தங்களின் ஆரோக்கியத்தை பலிகொடுத்தவர்கள் பலர்.

இதே போன்றுதான் மது பழக்கமும். “தண்ணியடிக்காதவனை எந்தப் பொண்ணும் ஆம்பிளை என்று மதிக்கமாட்டாள்” என்று அபத்தமாக சொல்லி, அதற்கு பழக்கிவிடும் நண்பர்களும் அதிகம். பலர், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போதே, புகை மற்றும் போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். எனவே பள்ளி சான்றிதழ் மற்றும் கல்லூரி பட்டங்களுடன், பல கெட்டப் பழக்கங்களையும் தீய நண்பர்களின் மூலம் நாம் உள்வாங்கிக் கொள்கிறோம்.

புகை மற்றும் மதுப் பழக்கம் மட்டுமின்றி, வேறு பல ஒழுக்கக்கேடான விஷயங்களிலும் நமது ஆர்வத்தைத் தூண்டி, ஏதாவது ஒரு பொருந்தாத காரணத்தை சொல்லி, நம்மை அந்த ஆபத்தில் ஈடுபட வைக்கிறார்கள். இதன் மூலம் நாம் நமது கவனத்தை இழப்பதோடு, உயிர்கொல்லி நோய்கள் உள்ளிட்ட சில ஆபத்துக்களுக்கும் ஆளாகிறோம். மேலும், ஒழுங்காக படித்து, ஆராய்ச்சி செய்யும் ஒரு மாணவனை கிண்டலடிப்பதோடு, வயசுப் பையன் அல்லது பெண் இவ்வாறு இருக்கக்கூடாது என்றும், வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறி மனதைத் திருப்புகின்றனர். ஆனால் அந்த சந்தோஷம் என்பது சில வருடங்களுக்குத்தான் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. இளமையில் முயற்சி செய்யாமல், தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் மாணவர்கள், தமது வாழ்நாள் முழுவதும் சீரழிவார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு சவால்கள் அதிகம். எனவே, பெற்றோர்கள் இந்த விஷயத்தில் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். நண்பர்கள் தங்களின் மகிழ்ச்சி மற்றும் சோகத்தைப் பகிர்ந்துகொள்ள, மதுவை ஒரு துணையாக்கிக் கொள்கின்றனர்.

நல்ல நண்பன் யார்?

ஒரு நல்ல நண்பன், எப்போதுமே, தனது சக நண்பனின் முன்னேற்றம் மற்றும் நலன் சார்ந்த விஷயங்களிலேயே அக்கறையாக இருப்பான். தனது நண்பன் தீமைகளின் பக்கம் சென்றால்கூட, புத்திசொல்லி திருத்த முயற்சிப்பான். ஒருவேளை, தான் ஏதேனும் கெட்டப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாலும்கூட, தன் நண்பன் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகாதபடி தடுப்பான். அந்த நல்ல நண்பன் சீரிய சிந்தனைக்கும், அறிவு முன்னேற்றத்திற்கும், ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கும் எப்போதும் துணை நிற்பான். அவனும் உயர்வதோடு, தன்னை சார்ந்தவன் உயரவும் அவன் காரணமாக இருப்பான்.

நாம்தான் தீர்மானிக்க வேண்டும்

எனவே, மாணவர்களே, தயவுசெய்து நல்ல நண்பர்கள் என்றால் யார்? என்று அடையாளம் காண பழகிக் கொள்ளுங்கள். ஒரு மனிதனின் ஆதரவுக்கும், முன்னேற்றத்திற்கும்தான் நட்பே ஒழிய, அது ஒருவரின் வீழ்ச்சிக்கு காரணமாக முடியாது. ஒரு நட்பால் நீங்கள் பல கெட்டப் பழக்கங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி வீழ்ச்சியடைவீர்கள் என்று தெரிந்தால், எந்த தயக்கமுமின்றி, அந்த நட்பை அமைதியாக துண்டித்து விடவும். அதனால் உங்களுக்கு சிறியளவில் பாதிப்பு ஏற்படும் நிலை வந்தால்கூட, பெரிய ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.

நமது பெற்றோரையும், உடன்பிறந்தோரையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நமது நண்பன் யாராக இருக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்.

நட்பு என்பது ஒருவரின் வாழ்வையே திசைமாற்றும் வல்லமைக் கொண்டதால், அது விஷயத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் தீவிர எச்சரிக்கையும், கவனமும் தேவை.

நன்றி: கல்விமலர்