Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,681 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரூபாய் மதிப்பு : வீழ்ச்சியும், விளைவுகளும்

இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மதிப்பு குறிப்பாக அமெரிக்க டாலருக்கு எதிராக பெருமளவு குறைந்திருக்கிறது. நவம்பர் 22ல் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.52.32. மார்ச் 2009க்குப் பின்னர் இதுவே மிகப் பெரும் சரிவு. இந்த ஆண்டில் இதுவரை 17 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆசிய நாடுகளில் இந்தியாவிற்கே மிகக் கடுமையான பாதிப்பு. ஆனால் மறுபுறத்தில், நம்மை விட பொருளாதாரம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் அமெரிக்காவின் டாலர் உயர்வது கூடுதல் வேடிக்கை. ஏன் இந்த முரண்பட்ட நிலைமை என்பதும் இன்று விளக்கப்பட வேண்டியதொன்றாகும். இவற்றிற்கெல்லாம் விடை தேடுவதற்கு முன்னர் அந்நியச் செலாவணி மதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பது குறித்து அறிந்து கொள்வது அவசியம்.

செலாவணி மதிப்பு

ஒவ்வொரு நாட்டின் நாணயமும் தத்தம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட அளவிலான பண்டங்களை அல்லது சேவைகளை (A unit of Goods and services) வாங்குவதற்கான சக்தி படைத்தவை. இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அந்தஸ்திலான உணவுக்கு ரூ.100 கொடுக்க வேண்டுமென்று வைத்துக்கொள் வோம். அதே போன்ற அந்தஸ்துள்ள உணவிற்கு அமெரிக்காவில் 10 டாலர் (ரூபாய் மதிப்பில் ரூ.500) கொடுக்க வேண்டியதிருக்கலாம். அதே போன்று இந்தியாவுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் விமானப் பயணத்திற்கு குறைவாகவும், இரயில் பயணத்திற்கு கூடுதலாகவும் கட்டணங்கள் இருக்கின்றன. விலைகளில் இப்படி பல முரண்பட்ட நிலைமைகள் இருந்தாலும் நடைமுறையில் இரு நாடுகளின் நாணயங்களுக்கு இடை யில் ஒரு சராசரி சமநிலையினைக் கணக்கிடுவது என்பது சாத்தியமே. அதுவும் இன்றைய கணினி யுகத்தில் இதுவெல்லாம் ஒன்றும் பெரிதல்ல. அதாவது, நாணயங்களின் வாங்கும் சக்தியின் அடிப்படையில் நாணய மாற்று மதிப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், அத்தகைய நியாயத்தினை சர்வதேச முதலாளித்துவம் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, எந்த நாட்டுப் பண்டங்களுக்கு அல்லது நாணயத்திற்கு மற்றொரு நாட்டில் கிராக்கி இருக்கிறதோ அதைப் பொறுத்து பரஸ்பரம் இரு நாடுகளின் நாணயங்களின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. எனவேதான், டாலர் நம் நாட்டிற்குள் நுழையும் போது ரூபாய்க்கான கிராக்கி உயர்ந்து, அதன் விளைவாக நமது ரூபாயின் மதிப்பு உயர்கிறது; மறுபுறத்தில் ரூபாய்க்கு எதிராக டாலரின் மதிப்பு குறைகிறது. அதே போன்று டாலர் நாட்டினை விட்டு வெளியேறும்போது டாலருக்கான கிராக்கி உயர்ந்து, அதன் விளைவாக டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைகிறது.

டாலர் மதிப்பு

பொருளாதார மந்தத்தில் அதிகமாகச் சிக்கியுள்ள அமெரிக்காவின் நாணயமான டாலரின் மதிப்பு இந்தக் காலத்தில் எவ்வாறு உயர்கிறது என்பதைப் பார்ப்போம்.

பொதுவாக டாலர் மதிப்பு, தங்கத்தின் விலை, சர்வதேச எண்ணெய் வர்த்தகம் ஆகிய மூன்றிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எண்ணெய் வர்த்தகம் ஆகப் பெருமளவில் டாலர் அடிப்படையில் நடைபெறுவதால் டாலருக்கான சர்வதேசக் கிராக்கியும் அதன் காரணமாக அதன் மதிப்பு உயர்வதும் எண்ணெய் வர்த்தகம் கீழிறங்கும் போது டாலர் மதிப்பு குறைவதும் நாம் தொடர்ந்து கண்டு வரும் காட்சிகள். அதே போன்று டாலர் மதிப்பு குறையும் போதெல்லாம் முதலீட்டாளர்கள் தங்களது சேமிப்புக்களை தங்கத்திற்கு மாற்றிக் கொள்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். அண்மையில் சீனா, இந்தியா உட்பட சில அரசாங்கங்கள் தங்கத்தை விலை கொடுத்து வாங்கின. தங்கத்திற்கும் அதே போன்று மற்றொரு அரிய உலோகமான வெள்ளிக்கும் ஏற்பட்ட அத்தகைய கூடுதல் கிராக்கி அவற்றின் விலைகளை எவ்வாறு உயர்த்தின என்பதும் இன்றைய காட்சிகளேயாகும். சில மாதங்களுக்கு முன்பு வரை டாலரின் மதிப்பு சற்றுக் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் அண்மையில் டாலர் மதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. இது எப்படி?

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ‘பிரிக்ஸ்’(BRICKS) நாடுகளின் வளர்ந்துவரும் சந்தைகளை நோக்கி கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய முதலீடுகள் பெருமளவு படை யெடுத்தன. நம் நாட்டிற்கு வந்த முதலீடு பெரும்பாலும் டாலர் அடிப்படையிலானதே. இன்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நெருக்கடியின் பின்னணியில் வலுவிழந்திருக்கின்றன. அந்நிலையில் தங்களது பாலன்ஸ் ஷீட்டுகளை ஓரளவு கவர்ச்சிகரமாகக் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளிலிருந்து தங்களது முதலீடுகளை அவை திரும்பப் பெறுகின்றன. இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவிலிருந்து 2.2 பில்லியன் டாலரை அந்நிய நிதி முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors – FII) திரும்பப் பெற்றிருக்கின்றனர்.

இந்த மூலதனம் நாடுகளுக்கு உள்ளே நுழையும் போது எவ்வாறு நமது ரூபாய் நாணயம் உட்பட அந்தந்த நாடுகளின் நாணயங்களின் மதிப்பு உயர்ந்ததோ அதே போன்று இன்று டாலர் வெளியேறும்போது அந்நாடுகளின் நாணயங்களின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது.

இது தவிர, ஐரோப்பிய நாடுகள் கடுமையான நெருக்கடியிலிருக்கும் பின்னணியில், டாலருக்கு சர்வதேசப் போட்டி நாணயமாகக் கருதப்படும் யூரோ மதிப்பிழந்து வருவது மட்டுமல்லாமல், அதன் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியுள்ளது. சட்டபூர்வமாக இல்லாவிட்டாலும், நடைமுறையில் கிடைத்திருக்கும் சர்வதேச நாணய அந்தஸ்து அமெரிக்காவிற்கு இப்படிப் பல வகையில் உதவி வருகிறது. அமெரிக்காவின் கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் டாலர் உயர்ந்து வரும் கதை இதுதான். தனது நாட்டின் நெருக்கடியினை பிறநாடு களுக்கு எளிதில் ஏற்றுமதி செய்யும் அமெரிக்க சக்தியின் பின்புலமும் இதுவேயாகும்.

நமது நாட்டில்…

ரூபாயின் நாணய மதிப்பு குறைவதன் காரணமாக நமது நாட்டில் பயன் அடைபவர்கள் எவரும் இருக்க முடியாது. வெளி நாட்டில் இருக்கும் தங்களது பிள்ளைகளோ, உறவினர்களோ பணம் அனுப்பும் பட்சத்தில் அத்தகைய குடும்பங்களுக்கு இது சற்று மகிழ்ச்சி அளிக்கலாம். அவர்களுக்கு சற்றுக் கூடுதலாக ரூபாய் கிடைக்கலாம். ஆனால், அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளில் வேலை இழப்புகளும், ஊதிய இழப்புகளும் பெருகி வரும் நிலையில் அவர்கள் கவலை அடைவதையும் தவிர்க்க இயலாது.

ஏற்றுமதி : ரூபாய் நாணய மதிப்பு குறையும் போது, இந்தியப் பண்டங்களின் விலை குறையும் என்பதால் அது ஏற்றுமதிச் சந்தையில் போட்டியிடுவதற்கு உதவும் என்ற வகையில் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடையக் கூடும். ஆனால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிலவும் பொருளாதார மந்தம் இந்தியப் பண்ட ஏற்றுமதிக்கான கிராக்கியினைக் குறைத்துவிட்டது. எனவே அவர்களும் மகிழ்ச்சியாக இல்லை. இது தவிர, ஒரு டாலருக்கு ரூ.47 என்ற விலையின் அடிப்படை யில் ஏற்கனவே செய்துகொண்ட முன்பேர வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இன்று ரூ. 52 வரை குறைந்திருக்கும் சாதகத்தினை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் இழந்திருக்கின் றனர். ரூபாயின் மதிப்பு இவ்வளவு குறையும் என அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஏமாற்றமடைந்த வேறு சில ஏற்றுமதியாளர்களும் இருப்பார்கள்.

இறக்குமதி : இறக்குமதியின் நிலைமை மிகவும் மோசமடையும் என்பதை விளக்கவே தேவையில்லை. இதனுடைய உடனடி விளைவு, அண்மைய பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்திலேயே தெரிந்துவிட்டது. ஏற்கெனவே, கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் என நமது உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GDP) 22சதவீதம் வரை நாம் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை உள்ளது. உலக பருப்பு வகை உற்பத்தியில் 21 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்து வருகிறோம். நமது உணவுப் பண்டங்களின் விலைகள் மேலும் உயரப்போகின்றன என்பது மேலும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.

கார்ப்பரேட் கடன்கள் : குறைவான வட்டியில் எங்கு கடன் கிடைக்கும் என சாமானிய மக்கள் உள்நாட்டில் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், உள்நாட்டு வங்கிகளில் வட்டி விகிதம் குறித்து பேரம் பேசும் சலுகை பெற்ற பெருமுதலாளிகள், வட்டி குறைந்த வெளிநாடுகளில் கடன் வாங்குவதற்கும் அனுமதி பெற்றிருக்கின்றனர். உள் நாட்டுக் கடனைத் தீர்ப்பதற்குக் கூட அத்தகைய வெளிநாட்டுக் கடனை அவர்கள் பெற்றிருக்கின்றனர். இன்று ரூபாய் மதிப்பு குறைந்ததன் காரணமாக ரூ.25,000 கோடி (சுமார் 5 பில்லியன் டாலர்) அதிகமாக கட்ட வேண்டியுள்ளது. குறைந்த வட்டியில் கிடைத்த அனுகூலங்கள் அனைத்தையும், குறைந்து போன ரூபாய் மதிப்பு அடித்துக் கொண்டு போய்விட்டது.

நடப்புக் கணக்கு : இவ்வாண்டு ஜனவரி-மார்ச் முதல் காலாண்டில் 5.4 பில்லியன் டாலராக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (ஏற்றுமதி- இறக்குமதி இடை வெளி, + நாடுகளுக்கிடையில் வரவு – செலவு இடைவெளி ) ஜூன்-மார்ச் காலாண்டில் 14.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இப்படி ஒட்டுமொத்தத்தில் நாம் பிற நாடுகளுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தின் அளவு ரூபாய் மதிப்பில் பன்மடங்கு அதிகரிக்க உள்ளது. இது ஏற்கனவே பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நமது பொருளாதாரத்தினை மேலும் பலவீனப்படுத்தும்.

ரூபாயின் மதிப்பு இவ்வாறு குறைந்து வரும் வேளையில், மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பில், ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளில் இருக்கும் தங்களது பணத்தினை பெறுவதைத் தாமதப்படுத்துவார்கள். அதே போன்று இறக்குமதியாளர்கள் மேலும் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் உடனடியாக தங்களது இறக்குமதித் தேவைக்கான டாலர்களை வாங்கிக் குவிப்பார்கள். இது நிலைமையினை மேலும் சிக்கலாக்கும்.

என்ன செய்வது

இத்தகைய சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி தலையிட முடியாது எனக் கூறிவிட்டது. வெளிநாடுகளில் இருக்கும் இருப்பு அனைத்தையும் நம் நாட்டிற்குக் கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது. அரசாங்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் செக்யூரிட்டிகளில் அந்நிய முதலீட்டின் உச்ச வரம்பினை தலா 5 பில்லியன் டாலர் உயர்த்தியுள்ளது. இதைத் தாண்டி எதையும் செய்வதற்கு ரிசர்வ் வங்கி தயாராக இல்லை.

மத்திய அரசின் நிலை இன்னும் வேடிக்கையானது. நாட்டை விட்டு வெளியேறும் மூலதனத்தை தடுப்பதற்காக அத்தகைய பணத்தின் மீதான வரிவிதிப்பு உள்ளிட்ட எதையும் செய்ய மாட்டோம் என மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியிருக்கிறது. மாறாக, மேலும் அந்நியக் கடன்கள் உள்ளே வருவதற்கான முயற்சிகளே அரசுத் தரப்பில் இருக்கும் என உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டிற்குள் டாலர் அதிகம் நுழையும் போது, ஏற்றுமதிச் சந்தையினைப் பாதிக்கும் வகையில் ரூபாய் மதிப்பு ஏறாமல் ரிசர்வ் வங்கி பார்த்துக் கொள்வதுண்டு. டாலரை விலை கொடுத்து வாங்கி, டாலருக்கு ஒரு செயற்கையான கிராக்கியினை உருவாக்கி, ரிசர்வ் வங்கி நிலைமையினைச் சமாளிக்கும். ஆனால், டாலர் வெளியேறும் போது ரூபாய் மதிப்பினை உயர்த்துவதற்கு ரிசர்வ வங்கியால் அப்படி எதுவும் செய்ய முடியாது. டாலர் மதிப்பினை உயர்த்துவதும், ரூபாய் மதிப்பினைக் குறைப்பதும் உள்நாட்டுச் சந்தை சம்பந்தப்பட்டது. எனவே அதை ரிசர்வ் வங்கி செய்துவிட முடிகிறது. ஆனால் சர்வதேசச் சந்தையில் ரூபாய் மதிப்பினை உயர்த்தும் அளவிற்கு அதாவது டாலரின் மதிப்பினைக் குறைக்கும் அளவிற்கு நம்மால் ஏதும் செய்துவிட முடியாது. நமது வெளி நாட்டுக் கடன் 317 பில்லியன் டாலர். நமது செலாவணிக் கையிருப்போ 314 பில்லியன் டாலர் மட்டுமே. இதை வைத்துக் கொண்டு என்ன பெரிதாக செய்து விட முடியும்? மூலதனப் போக்குவரத்தினை நாட்டின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் கட்டுப்படுத்தவில்லை என்றால் இத்தகைய துயரங்கள் தொடர்வதை தவிர்க்கவே இயலாது.

மூலதனப் போக்குவரத்தினை பெருமளவு தளர்த்திவிட்டாலும் இன்னும் கூட சில கட்டுப்பாடுகள் அரசின் கைகளில் உள்ளன. ஆனால் இதையும் கூட கைவிடுவது என்ற ரீதியில் ஐ.மு.கூட்டணி அரசு செயல்பட்டு வருவது துரதிருஷ்டமே. அமெரிக்காவில் நூற்றுக்கு மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டு விட்டன. இன்றைக்கும் 865 வங்கிகள் பிரச் சனைக்குரிய நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க ஃபெடரல் டிபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் கூறியுள்ளது. இதையெல்லாம் இந்திய அரசு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. நிதி நிறுவனங்களை அந்நியருக்குத் திறந்துவிட்டு, இந்திய மக்களின் சேமிப்பினை அவர்களுக்குத் தாரை வார்க்கும் வகையில், இன்சூரன்ஸ், வங்கி, பென்ஷன் நிதியம் குறித்த மசோதாக்கள் இன்று நாடாளுமன்றத்தில் காத்திருக்கின்றன.

“செய்தக்க அல்ல செயக் கெடும்
செய்தக்க செய்யாமையானும் கெடும்” – (குறள்)

இன்று ஐ.மு.கூட்டணி- 2 அரசு, செய்ய வேண்டியதைச் செய்யாமலும், செய்யக் கூடாததைச் செய்து கொண்டும் இருக்கிறது. அனுபவத்திலிருந்து பாடம் கற்க வேண்டும். கற்காவிட்டால், மக்கள் அவர்களுக்குத் தக்க பாடம் கற்பிப்பார்கள்.

நன்றி: இ.எம். ஜோசப் –  மாற்று