சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், பிரிட்டனின் பிரபல தினசரியான “தி கார்டியன் (The Guardian)”, இஸ்லாம் குறித்த ஒரு சுவாரசியமான கட்டுரையை வெளியிட்டிருந்தது. “கறுப்பின மக்கள் ஏன் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் (Why are black people turning to Islam?)” என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த பதிவை எழுதியவர் ரிச்சர்ட் ரெட்டி (Richard Reddie) அவர்கள்.
இஸ்லாத்தை தழுவிய பலரிடம் நேர்க்காணல் செய்து அந்த கட்டுரையை எழுதியிருந்தார் அவர். அவருடைய ஆய்வு அடங்கிய அந்த பதிவு இங்கே உங்கள் பார்வைக்கு…
Black
“கறுப்பின மக்கள் இஸ்லாத்தை தழுவுவதென்பது புதிய நிகழ்வு அல்ல. காலங்காலமாகவே அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
ஆனாலும், ஏன் அதிக கறுப்பின பிரிட்டன் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் என்று ஆழமாக சென்று ஆய்வு செய்தேன். நான் முஸ்லிமில்லை என்றாலும் எனக்கு இஸ்லாம் மீது எப்போதுமே ஆர்வம் இருந்ததுண்டு.
என்னுடைய வாழ்வில், நான் ஹீரோக்களாக காணும் மால்கம் எக்ஸ், முஹம்மது அலி, பிரின்ஸ் பஸ்டர் என்று மூவருமே இஸ்லாத்தை தழுவியவர்கள். இவர்களை எந்த வகையில் இஸ்லாம் கவர்ந்தது?, அது அவர்களது வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கியது? என்பதை அறிய விருப்பம்.
என்னுடைய ஆய்வின் ஆரம்பத்திலேயே நான் புரிந்து கொண்ட ஒரு விஷயம், இஸ்லாத்தை தழுவிய இந்த மக்களில் பலர், தாங்கள் “கறுப்பின முஸ்லிம்கள் (Black Muslims)” என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை. உலகளாவிய முஸ்லிம்களில் தாங்களும் ஒரு பகுதி, தங்கள் இனத்தை பார்த்து தங்களை அடையாளப்படுத்த வேண்டாம் என்றே கூறுகின்றனர். அது போல, இந்த மக்களில் சிறு பகுதி, தங்களை கறுப்பின முஸ்லிம்கள் என்று அழைத்தாலும் பரவாயில்லை என்று கருதுகின்றனர்.
இஸ்லாம், கறுப்பின மக்களின் இயற்கை மார்க்கமென்றும், ஆன்மீகரீதியாகவும், உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்க வந்த மார்க்கம் என்றும் கூறுகின்றனர்.
நான் நேர்க்காணல் செய்த மக்கள் அனைவருமே ஒப்புக்கொண்ட ஒரு கருத்தென்றால், அது, இஸ்லாம் தங்களுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக உருவாக்கியது என்பதும், ஆன்மீகரீதியாக ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது என்பதும் தான்.
அதுமட்டுமல்லாமல், Materialism மற்றும் Moral relativism போன்றவற்றால் சீரழிந்த இந்த சமூகத்தை எதிர்த்து நிற்கக்கூடிய ஊக்கத்தையும் வலிமையையும் இஸ்லாம் தங்களுக்கு தந்துள்ளதாக கூறுகின்றனர்.’
நான் நேர்க்காணல் செய்த பெண்களோ, இஸ்லாம் தங்களுக்கு மிகுந்த கண்ணியத்தை அளித்துள்ளதாகவும், பெண்களை அழகு பொருட்களாக காணும் சமூகத்திலிருந்து தங்களை விடுவித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
இந்த ஆய்வின் மூலம் நான் கண்டறிந்த மற்றொரு முக்கிய தகவல், இவர்களில் பலர், இஸ்லாத்தை தழுவதற்கு முன்பு கிருத்துவத்துடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள். சர்ச்சுக்கு செல்பவர்களாகவோ அல்லது சர்ச்சுடன் தொடர்புடையவர்களை உறவினர்களாகவோ கொண்டவர்கள். இது இஸ்லாத்தை ஏற்கும் வெள்ளையின மக்களுடன் ஒப்பிடும்போது சற்று வித்தியாசமானது. ஏனென்றால், இஸ்லாத்தை தழுவும் பல வெள்ளையர்கள் அதற்கு முன் எந்த ஒரு மார்க்கத்தின் மீதும் பற்று இல்லாதவர்களாகத் தான் இருப்பர்.
அதுபோல நான் அறிந்துக்கொண்ட ஒரு சுவாரசியமான விஷயம், இஸ்லாம் என்றால் என்னவென்று இவர்களை, குறிப்பாக ஆண்களை, பார்க்க வைத்ததில் மால்கம் எக்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றார். நான் பேசிய பலருடைய மனதிலும் மால்கம் எக்ஸ் என்ற அந்த சகோதரர் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். (மால்கம் எக்ஸ் குறித்த கட்டுரையை காண சுட்டவும்).
அமெரிக்காவைப் போன்று பிரிட்டனிலும், குற்றவாளிகளை திருத்தி அவர்களை நல்வழிப்படுத்துவதில் கறுப்பின முஸ்லிம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இப்படி திருத்தப்பட்ட பலர், தங்களை நல்வழிப்படுத்திய கொள்கையை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்வதில் மும்முரமாக இருக்கின்றனர். இதில் அவர்கள் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை.
இறுதியாக நான் சொல்ல விரும்புவது, வாழ்வின் முக்கிய கேள்விகளுக்கு கிருத்துவத்தில் பதிலில்லாத போது, அதனை முன்வைத்தவர்களுக்கு சரியான மாற்றாக இருப்பது இஸ்லாம்.
சிலர், தங்கள் ஹீரோக்ககளை பார்த்து இஸ்லாம் என்றால் என்னவென்று அறிந்து கொண்டு இஸ்லாத்தை தழுவுகின்றனர். மற்றவர்களோ, தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தங்களை தேடி முடிவில் இஸ்லாத்தை வந்தடைகின்றனர்.
எது எப்படியோ, இஸ்லாத்தை ஏற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை”
சுப்ஹானல்லாஹ்….
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக…ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
நன்றி: சேக் காதர் வலைப்பூக்கள் – தகவல்: அபூ ஜக்கிய்யா