Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,292 முறை படிக்கப்பட்டுள்ளது!

எத்தனை தடவை சொன்னாலும்…

இன்றைய பெற்றோர் பலரின் பிரச்சினையே, `எத்தனை தடவை சொன்னாலும் பிள்ளைகள் படிப்பில் அக்கறை காட்டவே மாட்டேங்கிறாங்க’ என்பதாகத்தான் இருக்கிறது. பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பில் படிக்கும் பிள்ளைகள் உள்ள வீட்டில் இந்த ஆதங்கக்குரல் சற்று அதிகமாகவே கேட்கிறது.

இத்தனைக்கும் பிள்ளைகள் பெற்றோருக்கு அடங்கி நடக்கும் கட்டாயத்தில் உள்ளவர்கள் தான். அவர்களிடம் நல்ல தன்மையாக சொன்னாலே கேட்டுக் கொள்வார்கள்.

ஆனால் என்ன நடக்கிறது? அவர்கள் செய்யும் சின்னத்தவறும் விசாரணை என்ற பெயரில் பெற்றோர் முன் பெரிதாக்கப்படுகிறது. இதுவே முதலில் அந்தப் பிள்ளைகளை எரிச்சலூட்டுகிறது. `இதைச்செய்யாதே. இனி செய்யாதே’ என பக்குவமாக சொன்னால் போச்சு. அதை விடுத்து விசாரணை கமிஷன் மாதிரி குற்றத்தை பட்டியலிடத் தொடங்கினால் அது பிள்ளைகள்-பெற்றோருக்கான ஒரு இடைவெளியையே ஏற்படுத்தி வைக்கும்.

இதை பல பெற்றோர் உணர்வதில்லை. கண்டித்தால் மட்டுமே பிள்ளைகள் சரியான இலக்கை அடைவார்கள் என்பது அவர்கள் எண்ணம். ஒரு கட்டத்தில் பிள்ளைகளிடம் இருந்து இதற்கு எதிர்ப்பு வலுக்கும்போது, தங்கள் வீட்டுப்பிள்ளைகள் படிக்கும் ஆசியர்கள் வசம் விஷயத்தை கொண்டு போய் விடுகிறார்கள். இது பிள்ளைகளின் தன்மானத்தை உசுப்பி விட்டு விடுகிறது. இதனால் பெற்றோரை எப்படி பழி வாங்கலாம் என்ற கோணத்தில் அவர்கள் சிந்திக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

அதற்காக பிள்ளைகள் எடுக்கும் ஆயுதம் தான் `சரிவரப் படியாமை இயக்கம்’. `உன்னை எப்படியாச்சும் டாக்டராக்கிப் பார்க்கணும்… நீ என்ஜினீயர் ஆனாத்தான் நம்ம குடும்பத்துக்கே முதல் என்ஜினீயர்ங்கற பேர் கிடைக்கும்…’

இப்படி தங்கள் விருப்பத்தை பிள்ளைகளிடம் திணித்து பிள்ளைகளையும் அந்த போராட்ட களத்தில் பல பெற்றோர் இறக்கி விட்டிருப்பார்கள். இந்த களத்தில் ஓடத்தொடங்கியிருக்கும் தங்கள் வீட்டுக்குழந்தைகள் சரியான இலக்கில் ஓடிக்கொண்டிருக்கிறார்களா என்பதை பார்க்கும்விதமாக அவ்வப்போது பெற்றோர் மூக்கை நீட்டும்போதுதான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

இந்த மூக்கை நீட்டல் அதோடு நின்று விடாமல் கண்டித்தல், பள்ளிஆசிரியர் வசம் குற்றவாளியாக தங்கள் வாரிசை நிறுத்தல் போன்ற டிராக்கில் பயணிக்கும்போது, `என்னை படிக்கவைக்கத்தானே இப்படி போராளி ஆயுதம் எடுக்கிறீர்கள்? பார்த்துக் கொள்கிறேன் அதையும்’ என்ற மவுனப்புரட்சிக்கு பிள்ளைகள் வித்திட்டு விடுகிறார்கள்.

இதற்குப்பிறகு புத்தகம் திறந்திருக்கும். பார்வை அங்கிராது. வாய் முணுமுணுக்கும். கவனம் அங்கிராது. வழக்கத்தை விட அதிக நேரம் விழித்திருப்பார்கள். புத்தகம் திறந்தும் மனம் மூடியும் இருக்கும். இதைப்பார்க்கும் பெற்றோர், விஷயம் புரியாமல் `நம் அதிரடி அஸ்திரம் தான் இப்படி விழித்திருந்து பிள்ளைகளை படிக்க வைக்கிறது’ என்று தங்களுக்குள் சபாஷ் போட்டுக்கொள்வார்கள்.

ஆனால் தங்கள்அதிரடி முயற்சி எதிர்மறையான பலனைத் தந்திருப்பதை அவர்கள் உணர்ந்து அதிர்வது பரீட்சை ரிசல்ட் வரும்போது தான். இந்த நேரத்திலும் மதிப்பெண் குறைந்த அவர்கள் வாரிசுகள் முகத்தில் கவலையை ஒட்டவைத்தபடி உள்ளுக்குள் உற்சாக உலா

வந்துகொண்டிருப்பார்கள். அப்போதும் கூட பல பெற்றோருக்கு தாங்கள் எடுத்த அதிரடி அஸ்திரம் தான் தங்கள் பிள்ளைகளை இப்படி குப்புற மண் கவ்வ வைத்திருக்கிறது என்பதை உணரத் தோன்றாது. தங்கள் பகீரத முயற்சிக்குப் பலன் இல்லாது போய் விட்ட கதையைத்தான் சோகமாக சொல்லிச்சொல்லி மாய்ந்து கொண்டிருப்பார்கள்.

இந்த மாதிரியான ஏமாற்றம் பெற்றோருக்கு ஏற்படாதிருக்க அவர்கள் செய்யவேண்டியது என்ன?

பிள்ளைகளை தட்டிக்கொடுங்கள். அதுவரை சரியாகப் படித்தவர்களை `இந்த வகுப்பிலும் நீ உன்திறமையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்’ என்று தட்டிக் கொடுங்கள். ஒருபோதும் `இந்த வருஷம் மட்டும் கோட்டை விட்டுட்டா படிப்பு சாம்ராஜ்யமே சரிந்து விடும்’ என்கிற மாதிரி பயமுறுத்தாதீர்கள். ரொம்பவும் கடினப்படுத்தும் பாடத்துக்கு அவசியப்பட்டால் திறமையான ஆசிரியர் வைத்து சிறப்புப்பயிற்சி கொடுங்கள்.

பிள்ளைகளுக்கு படிப்பு விஷயத்தில் எல்லாமே செய்து விட்டோம். இனி படிப்பது அவர்கள் கடமை என்று எண்ணி நீங்கள் சீரியல் பார்க்க உட்கார்ந்து விடக்கூடாது. முக்கிய பரீட்சை நாட்களிலாவது உங்கள் நேரத்தை பிள்ளைகளுடன் செலவழிக்க வேண்டும். பாடத்தில் பிள்ளைகள் கேட்கிற சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் அளவுக்கு நீங்கள் கற்ற கல்வி உதவும் என்றால், அதையும் தயங்காமல் செய்யுங்கள். நம் கல்வி முயற்சியில் பெற்றோரின் பங்களிப்பு அதிகம் என்று பிள்ளைகள்உணர்ந்தாலே அவர்கள் படிப்பில் இன்னும் அதிக அக்கறையாகி விடுவார்கள். `நம்மை நேசிக்கும் பெற்றோருக்காவது நாம் சிறப்பான வெற்றியை பெற்றாக வேண்டும்’ என்ற எண்ணம் அவர்களிடம் நிலைவரப் பெற்று எப்படியாவது சாதிக்கத் தூண்டும். இந்த நிலை நீடிக்கும்போது ஆண்டுத் தேர்வு அவர்களை கல்வியில் சாதித்தவர்களாகவும் வெளிப்படுத்தும்.

அன்பான அணுகுமுறைக்கு எப்போதுமே பலன் நிச்சயம்.

நன்றி: உங்களுக்காக