Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2012
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,307 முறை படிக்கப்பட்டுள்ளது!

அம்மா வந்தாள் – சிறுகதை

வர்ஷாவின் வருகைக்குப் பின்தான் நரேனுக்கு வியாபாரம் சூடு பிடித்தது என்று சொல்லலாம். வீடு வாங்கியது; ஒன்றுக்கு இரண்டாக கார் வாங்கியது; நளினிக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணி கிடைத்தது எல்லாம் வர்ஷாவின் வருகைக்குப் பின்புதான் ஒவ்வொன்றாக நிகழ்ந்தது என்றே சொல்லலாம். வீடு என்றால் அரசு அலுவலர்கள் வாங்குவது போல ஃபிளாட்டில் ஒரு டபுள் பெட்ரூம் வீடு அல்ல. தனியாக ஒரு பங்களாவே வாங்கி இருந்தார்கள்.

நரேன் தொடங்கிய சிறு வியாபாரத்தில் இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு வளர்ச்சி வந்திருக்கும் என்பதை எவராலும் நினைத்துப் பார்க்க முடியாது. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் பங்கு பெற்றால் கூட பனிரெண்டு இலட்சத்தை எட்டுவது சிரமம். ஆனால் நரேன் தன் வியாபாரத்தில் பனிரெண்டு கோடிகளை எளிதாகவே தாண்டியிருந்தான். இத்தனைக்கும் அவன் செய்தது அலாரம் வியாபாரம்தான். அப்படி என்ன விசித்திரமான அலாரம் என்று கேட்கிறீர்களா? திருடர்கள் கதவைத் திறந்தால் திறந்தவுடன் கத்தி, காட்டிக் கொடுக்குமே அந்த அலாரம். ‘டோர் அலாரம்’ என்பார்களே அதுதான். திருடர்களிடம் இருந்து வீட்டைக் காக்கும் காவல் அதிகாரி அது.

அவன் அந்த வியாபாரத்தைத் தொடங்கிய போது யாரிடமோ வாங்கி தான் விற்றுக் கொண்டிருந்தான். வீடு வீடாக ஒரு நாள் முழுவதும் அலைந்தாலும் ஒரு அலாரம் விற்பதே குதிரைக் கொம்பாக இருக்கும். சலிப்புடன் திரும்புவான்.

“பூட்டிய வீட்டில் கொள்ளை ” என்று செய்தித்தாள்களில் அடிக்கடி செய்திகள் வந்ததைப் பார்த்தான். இவனுக்கு ஒரு யுக்தி உதித்தது. அந்தத் திருட்டுப் போன பகுதிகளில் வியாபாரத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தான். செய்தித்தாள்களில் இந்தச் செய்தியைத் தேடிப் பிடித்துப் படிப்பான். திருட்டுப் போன பகுதிக்கு உடனே சென்று விடுவான். ‘கெட்டிக்காரன் பூட்டுக்கு எட்டுச் சாவி என்பது போல’ அவர்கள் அந்த அச்சத்தில் இருக்கும் போதே, தன் வியாபாரத்தை ஏக போகமாக முடித்து விடுவான். அப்பரமென்ன? திருடர்களுக்குத் திண்டாட்டம். இந்த அலாரப் புலிக்குக் கொண்டாட்டம்.

சிலர் “இந்தச் சத்தம் போதாது. இன்னும் வால்யூமை அதிகப் படுத்திக் கொடுங்கள்” என்றனர். சிலர் “வேறு மாடல் வேண்டும்” என்றனர். கொஞ்சம் வியாபாரம் சூடு பிடித்ததும் யார் யார் எப்படி கேட்டாலும் அப்படியே செய்து கொடுக்க வேண்டி தானே அலாரம் செய்யும் தொழிற்சாலையைத் தொடங்கினான். இப்போதெல்லாம் மொத்த ஆர்டர்கள்தான்.  வெளி நாடுகளுக்கு மட்டும் மாதத்திற்குப் பத்தாயிரம் டோர் அலாரம் ஏற்றுமதி ஆகின்றன. இதைத் தவிர உள்நாட்டு வியாபாரம் வேறு.

ஆனால் என்ன? அன்று வீடு வீடாக அலைந்ததால் வீடு வர வெள்ளி முளைத்து விடும். சுமார் 500 பேர் கொண்ட தொழிற்சாலையை நிர்வகிப்பது என்பது சும்மாவா. இப்போதும் அதே நிலைதான்.

நரேன் தினமும் வர்ஷா தூங்கிய பின் வருவான். அவள் விழிப்பதற்கு முன் சென்று விடுவான். ஞாயிற்றுக் கிழமையில் அல்லது என்றாவது வர்ஷா சீக்கிரம் விழித்தாலோ தான் தன் அப்பாவைப் பார்ப்பாள். அம்மாவுடன் தினமும் மூன்று அல்லது நான்கு மணி நேரம் இருக்க முடியும். மற்ற நேரமெல்லாம் வர்ஷாவுக்கு ஒரே அடைக்கலம் சாந்திதான்.

சாந்தி ப்ரெத்யேகமாக வர்ஷாவைப் பார்த்துக் கொள்வதற்காகவே வந்தவள். அவர்கள் வீட்டிலேயே தங்கி வர்ஷாவைப் பார்த்துக் கொள்ளும் பதிமூன்று வயது பெண் அவள். அவள் திருநெல்வேலிக்கு அருகில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவள். அவளுக்கு இங்கு புதிய வசதி. புதிய வாழ்க்கை. அவசர அவசரமாக, அரையும் குறையுமாக வேலை முடிப்பாள். மற்ற நேரமெல்லாம் டிவியே கதி என்று அதன் முன்னால் தன்னை மறந்து உட்கார்ந்திருப்பாள்.

சில நேரம் சீரியலைப் பார்த்துக்கொண்டே வர்ஷாவின் மூக்கில் சோற்றை ஊட்டி விடுவாள். பாவம் குழந்தை தும்மி, இருமி.. தானே, கைக்கு எட்டாத வாஷ் பேசினில் ஸ்டூல் போட்டு ஏறி தன் சின்னஞ்சிறு கையால் மூக்கையும் முகத்தையும் கழுவிக் கொள்வாள். சில நேரங்களில் மியூசிக் பார்த்துக் கொண்டே ஜட்டி மாற்றி விடுகிறேன் என்று ஒரே கால் ஓட்டையில் இரண்டு கால்களையும் மாட்டி விட்டு விடுவாள். வர்ஷா திண்டாடி திணறி கழட்டி மீண்டும் தானே சரியாகப் போட்டுக்கொள்வாள். இப்படி தினம் தினம் குட்டி குட்டி சீரியல் கலாட்டாக்கள். ஆனால் அவளும் நல்ல பெண் தான். என்ன டி.வி. பைத்தியம் அவ்வளவுதான்.

அவள் அப்படி டி.வி பார்ப்பதனாலோ என்னவோ வர்ஷாவுக்கு டி.வி என்றாலே பிடிக்காமல் போனது. விளம்பரங்கள் வரும்போது மட்டும் கண்களைச் சிமிட்டாமல் பார்ப்பாள். ஆனால் சாந்தி விளம்பரங்கள் வந்தாலே சேனலை மாற்றிவிடுவாள்.

அம்மா அருகில் இல்லாத ஏக்கம், சாந்தி அடிக்கும் லூட்டி எல்லாம் சேர்ந்து வர்ஷா நளினியைப் பார்த்தவுடன் ஏதாவது ஒரு சாக்கில் அழத்தொடங்குவாள்.

“எனக்கு மட்டும் ஏம்மா முடி நீளமா இல்லை” என்று விளம்பரத்தைப் பார்த்து வர்ஷாவும் அதே கேள்வியை நளினியிடம் கேட்டு நச்சறிப்பாள்.  நளினியும்  “நானும் அந்த ஆண்ட்டி மாதிரி வேலைக்குப் போகிறேன்லம்மா,  அதனாலதான்  தலைக்கு எண்ணெயெல்லாம் தேச்சி குளிப்பாட்டி விட நேரமில்லை. நீ வளந்து பெரியவளா ஆனதும் உன்னை மாதிரியே பெரிசா முடியும் வளத்து ஜடை பின்னிக்கலாம்” என்று சொல்லி சமாதனப்படுத்துவாள்.  வர்ஷாவும் கோபத்துடன் பாய்கட் பண்ணிய தன் குட்டிக் கூந்தலைக் கோபத்துடன் பிய்த்துக்கொண்டு இதையேதான் நீ எப்பவும் சொல்லுவே, நான் எப்ப வளருவேன் என்று கண்ணீருடன் குதித்துக் கொண்டே கேட்பாள்“ இன்னும் இரண்டே வருடத்தில் வளந்துருவடா கண்ணு” என்று நளினி கட்டியணைத்துச் சமாதானப்படுத்துவாள்.

இன்னொரு நாள்  ”எங்க ஸ்கூல்ல இன்னைக்கு ஸ்போர்ட் டே, நீங்க மட்டும் ஏம்மா வரவே மாட்டேங்கறீங்க? என்று  தொடங்குவாள். “அடுத்த வருஷம் ஸ்போர்ஸ் டேக்கு நானும் அப்பாவும் கண்டிப்பா வரோம்மா”  என்பாள் நளினி. இப்படியே சொல்லி ஏமாத்தறதத் தவிர உனக்கு வேற எதுவும் தெரியாதா? நீ நல்ல அம்மாவே இல்ல போ….” என்று கோபித்துக் கொண்டு டைனிங் டேபிளுக்குக் கீழே போய் உக்கார்ந்து கொள்வாள் வர்ஷா. கெஞ்சி கூத்தாடி அவளைச் சாப்பிட வைக்கும்போதே அவளுக்கும் தூக்கம் வந்துவிடும்.  நளினிக்கும் அரைத்தூக்கம் வந்துவிடும்.

தினந்தோறும் நளினி வந்தவுடன் வர்ஷாவிடமிருந்து சாந்தியைப் பற்றி ஒரு கம்ப்ளெயிண்டாவது இருக்கும். ஒரு அடமாவது இருக்கும். அன்று தொடங்கியது புது வித அடம். “அம்மா இந்த சாந்தி என்னோட கொஞ்ச நேரம் கூட விளையாட மாட்டேங்கறா. எனக்கு விளையாட ஒரு தங்கச்சிப் பாப்பா வேணும்” என்று லேசாகத்தான் அழ ஆரம்பித்தாள். எப்போதும் போல கூட அடம் கூட செய்யவில்லை.

ஆனால் நளினிக்கு ஒரு அமைதியான குளத்தில் கல்லை எரிந்தது போல ஒரு கலக்கம். ஒரே குழப்பமாக இருந்தது. குழந்தை மூலமாக கடவுள் தன்னிடம் ஏதோ உரைத்ததாக உனர்ந்தாள். அவள் மனத்தில் ஏன் இன்னொரு குழந்தையைத் தத்து எடுக்கக் கூடாது என்ற எண்ணம் முளை விட்டது.

அன்றும் நரேன் வழக்கம் போல லேட்டாகத்தான் வந்தான். ஆனால் மிகவும் உற்சாகமாக இருந்தான். அவனிடமும் ஒரு பரபரப்பு இருந்தது. வந்தவன் ”நளினி நான் பார்ட்டியில ஃபுல்லா பிடிச்சுட்டு வந்துட்டேன். எனக்கு சாப்பாடு வேண்டாம்; சீக்கிரம் வா ஒரு குட் நியுஸ் சொல்லனும்” என்று சொல்லிக்கொண்டே உடை மாற்றி விட்டு படுக்கையில் விழுந்தான்.

“சாந்தி! இந்தா பால்” என்று அவளுக்கு ஒரு டம்ளர் பாலைக் கொடுத்து விட்டு நரேனுக்குப் பாலை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள் நளினி. நரேன் பாய்ந்து அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு “என்னை வணிகர்கள் சங்கத்தலைவராகத் தேர்ந்தெடுத்து இருக்காங்கடா” என்றான் மகிழ்ச்சியாக. நளினியும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். இவர்களின் துள்ளலில் பாலும் துள்ளிக் குதித்தது. நல்ல வேளை கீழே சிந்தவில்லை.

டேபிளில் பாலை வைத்த நளினி “அவனைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்தாள். எனக்குத் தெரியும் நீங்க சாதிப்பீங்கன்னு….. இது எவ்வளவு பெரிய பெருமை…. உங்க உழைப்புக்குக் கெடச்ச பரிசுங்க இது” என்று சொல்லும் போதே அவளது கண்களில் கண்ணீர் அரும்பியது. ”அட என்னடா செல்லம், சந்தோஷமான நேரத்துல அழற……” என்று அவளை அப்படியே அள்ளி எடுத்துத் தன் மடிமீது சாய்த்துக்கொண்டான். தன் இதழ்களால் அவள் கண்களில் துளிர்த்த கண்ணீரை ஒற்றி எடுத்தான். மென்மையாக அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.  அவள் முகத்தருகே குனிந்து, இதை நாம் எப்படிடா கொண்டாடலாம்? என்று கொஞ்சலாகக் கேட்டான்.

“வர்ஷா வந்தப்பரந்தான் நமக்கு எல்லாம் வந்ததுன்னு நான் நெனக்கிறேன் நரேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்றாள் அவன் கைகளை மெல்ல வருடிக்கொண்டே.

“அதிலென்ன சந்தேகம், நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லன்னு தெரிஞ்சதுக்கப்பரம் இந்த நல்ல முடிவை நீதானே தைரியமா சொன்னே. நானும் தலையாட்டினேன். வர்ஷாவும் வந்தா. கூடவே வசந்தத்தையும் கூட்டிட்டு வந்தா; சந்தோஷமா இருக்கோம். இப்ப என்னடா செல்லம் அதைப்பத்தி” என்றான் நெகிழ்வாக.

“அப்படின்னா அவ சந்தோஷமா இருக்கனுமா இல்லையா நரேன்?” என்று ஒரு வினாவைத் தொடுத்தாள். அதிர்ந்த நரேன் “ஏன் அவளுக்கென்ன? என்ன நடந்துச்சு? தத்து எடுத்த விவரம் தெரிஞ்சு போச்சா?” என்று படபடத்தான்.

“இல்ல….. இல்ல… அவளோட விளையாட யாருமே இல்லைன்னு அழறா. ஒரு தங்கச்சி வேணும்னு அடிக்கடி அடம் பிடிக்கறா. எனக்கும் ஏன் இன்னொரு குழந்தையைத் தத்து எடுக்கக் கூடாதுன்னு தோனுது நரேன். கடவுள் நமக்கு இவ்வளவு வசதியைக் கொடுத்திருக்கும் போது நாம ஏன் இன்னொரு குழந்தைக்கு நல்ல வசதியைச் செஞ்சு கொடுக்கக் கூடாதுன்னு தோனுது நரேன்” என்றாள் கெஞ்சலாக.

“அப்பாடா கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன். அம்மா.. தாயே…. இதுக்கு நீங்க கெஞ்சவெல்லாம் வேண்டாம். அம்மா ஆணை… தட்டமுடியுமா? ஆனா என்ன, ஏன் இதெல்லாம் எம் மரமண்டைக்குத் தோனவே மாட்டேங்குது….” என்று விளையாட்டாகத் தலையில் தட்டிக்கொண்டான். அவள் “போதும் விளையாடாதீங்க…. சீரியசா பேசிட்டு இருக்கும்போது..” என்று அவன் கன்னத்தில் செல்லமாக ஒரு அறை கொடுத்தாள். “செஞ்சிடலாம். நாளைக்கே வர்ஷாவோட பிறந்த இடத்திற்குப் போகலாம். குட்டி வர்ஷாவோட வரலாம், போதுமா?” என்று சொல்லிக் கொண்டே விளக்கை அணைத்தான்.

மறுநாள் நளினி வர்ஷாவிடம் “உனக்கொரு தங்கச்சிப் பாப்பாவைக் கூட்டிட்டு வரப் போறோம். வாடா… வாடா செல்லம்…; சீக்கிரம் கிளம்பு..” என்று வர்ஷாவைத் தயார் படுத்தினாள். ஹையா! என்று குதித்துக் கொண்டே வர்ஷா வேக வேகமாகக் கிளம்பியது.

வர்ஷாவுக்கு, விளையாடத் தனக்கு ஒரு துணை வருவதில் சொல்லத் தெரியாத சந்தோஷம். நளினிக்கு நல்ல காரியம் ஒன்னு செய்யப் போகிறாள் என்பதால் சொல்ல முடியாத சந்தோஷம். நரேனுக்கு நளினியின் ஆசையை நிறைவேற்றுவதில் அளவில்லாத சந்தோஷம். விஷ்ராந்தி இல்லத்திற்குள் நுழைந்த நளினி நரேன் தம்பதியினரைக் கண்டதும் இல்ல நிர்வாகிகளுக்கும் அதை விடவும் சந்தோஷம்.

நளினி கொண்டு போயிருந்த இனிப்பையும் டிரஸ்ஸையும் ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுத்தாள். அப்படியே வர்ஷாவின் தங்கையாக இருக்க, பொருத்தமான ஒரு குழந்தையையும் தேர்ந்தெடுத்தாள். அது நகத்தைக் கடித்தபடி நளினியைப் பார்த்து ஞே என்று விழித்தபடி நின்றிருந்தது.

பக்கத்தில் அரிசியைப் புடைத்துக் கொண்டிருந்த ஒரு பாட்டியம்மாவின் கருப்பும் வெள்ளையுமாக நீண்ட முடியைப் பிடித்துக் கொண்டு “உங்களுக்கு மட்டும் இவ்வளவு முடி இருக்கு…… எனக்கும் இப்படி வளத்துத் தருவீங்களா?” என்று கேட்டுக்கொண்டிருந்தாள் வர்ஷா.
அவளை அழைத்தாள் நளினி. அருகில் வந்த வர்ஷாவிடம், “இந்தத் தங்கச்சியை உனக்குப் பிடிச்சிருக்காடா செல்லம்? நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாமா” என்று நளினி கேட்டாள்.

“இல்லம்மா இந்த கிரேண்ட்மாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்மா” என்றாள் ஓடிப் போய் அந்தப் பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு. அம்மா இவங்கள வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்மா. பாட்டி வந்தா எனக்கு நிறைய கஹை சொல்வாங்க. நான் தூங்கும்போது என்னைத் தட்டிக் கொடுப்பாங்க. நிலாவைக் காட்டி எனக்குச் சாப்பாடு ஊட்டுவாங்க. எனக்கு உடம்பு சரியில்லேன்னா கஷாயம் வச்சுக் கொடுப்பாங்க. என் தலைமுடி நல்லா வளர மூலிகை எண்ணெய் காய்ச்சிக் கொடுப்பாங்க. தங்கச்சி பாப்பாவை விட இவங்க வந்தாங்கன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. நீங்க வரதுக்கு லேட்டானா கூட நான்  இவங்களோட விளையாடிக்கிட்டு இருப்பேன். இவங்க வந்தாங்கன்னா கிரேன் பேரண்ட் டே அன்னக்கு இவங்கள எங்க ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போய் இவங்கதான் எங்க பாட்டின்னு எல்லார்கிட்டயும் சொல்லுவேன். அதனால இந்தப் பாட்டிய வீட்டுக்குக் கூட்டிட்டுப் பொலாம்மா” என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தாள் வர்ஷா.

நளினி நரேனைப் பார்த்தாள். நரேன் லேசாகத் தலையை ஆட்டி சம்மதத்தைச் சொன்னான். பாட்டியும் வந்தாள் வர்ஷாவுக்கு.

வர்ஷாவைத் தூக்கிக் கொண்டு வீட்டு வாசலில் நின்ற கமலாவை (பாட்டியை) ஆரத்தி எடுத்து வரவேற்றனர் நளினியும் நரேனும்.

”வாங்க! வாங்க! கிரேன்மா நான் என் பொம்மையெல்லாம் காட்டறேன்” என்று பாட்டியின் சுருக்கம் நிறைந்த கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக உள்ளே போனாள் வர்ஷா. பாட்டியும் குழந்தையாக அவள் பின்னே உள்ளே போனாள்.

“ஒரு மகளைக் கொடுத்தான். இப்ப நமக்கு ஒரு அம்மாவக் கொடுத்திருக்கான். கடவுள் ஒரு கதவை மூடினா இன்னொரு கதவைத் திறப்பான்னு சொல்லுவாங்க. நமக்கு ஒரு கதவை மூடிட்டு, ரெண்டு கதவைத் திறந்திருக்கான்ல நரேன்” என்று நரேனின் காதில் ரகசியமாகச் சொன்னாள் நளினி.……….

ஆதிரா பார்வைகள்  –  குமுதம் (25-07-12)