Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2012
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,540 முறை படிக்கப்பட்டுள்ளது!

காளான் வளர்ப்பு – லாபம் நிரந்தரம்

இப்பதிவின் இறுதியில் காளான் வளர்ப்பைப் பற்றிய காணொளி இருக்கிறது. நிச்சயம் அந்த காணொளியைப் பாருங்கள்.. உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு அவை விடையளிக்கும்.

OYSTER MUSHROOM PRODUCTIONசெய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். நாம் முன்னேற வேண்டுமானால் உலகில் பல வழிகள் இருக்கிறது. பல தொழில்கள் இருக்கிறது. அதிலும்  சுயமாக முன்னேற நினைப்பவர்களுக்கு உதவுபவை சிறுதொழில்கள். அதிக முதலீடு இல்லாமல், விரைவில் தொழில் தொடங்க இத்தகைய சிறுதொழில்களே மிகவும் சிறந்தவையாக இருக்கிறது. பாருங்கள்! சிறுதொழில் செய்து இப்போது நாட்டில் பலரும் பெரிய தொழிலதிபர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக் காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். இனி சிப்பிக்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக..

மருத்துவ பலன்களும், உணவு முறையும்:

இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது.  இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.

சிப்பிக்களானின் பருவம் மற்றும் இரகங்கள்

இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை.  எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.

இத்தொழிலை எப்படிச் செய்வது?

மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.

காளானின் ரகங்கள்:

நம் நாட்டின் காலநிலைக்கு உகந்தது இந்த ரகங்கள் : வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்)ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை

காளான் குடில் எப்படி அமைப்பது?

ஒன்றும் பிரமாதம் இல்லை. கூரைவேய்ந்த சாதாரண வீடே போதும். 16 அல்லது 18  சதுர மீட்டர் பரப்பு இருந்தால் போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளான் வளர்க்கவும் தேவைப்படும்.

வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும்.

வித்து பரப்பும் அறையின் வெப்பநிலை: 25-300 செல்சியசும் வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு இந்த இரு அறைகளிலும் இருட்டு இல்லாமல், நல்ல காற்றோட்டத்தோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

குடிலினுள் அத்தோடு 75-80% ஈரப்பதமும் இருக்க வேண்டும். இந்த அளவீடுகளை கணக்கிட தெர்மாமீட்டர் போன்ற ஈரப்பதத்தை கணக்கிட என கருவிகள் Electric shopகளில் கிடைக்கும்.

காளான் வித்து உருவாக்குவது எப்படி?

காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள்: மக்காச்சோளம், கோதுமை, சோளம் ஆகியவை முக்கிய பொருள்களாக பயன்படுகிறது.

சரி. வித்துக்களை எப்படி தயார் செய்வது?

மேற்குறிப்பிட்ட தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து காற்றில் உலர்த்த வேண்டும். அதனுடன் 2% சுண்ணாம்பும் கலந்து-  காலியான குளுக்கோஸ்(Empty clucose bottle) பாட்டில்களில் நிரப்ப வேண்டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும்.

அடுத்து அதிலுள்ள நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.

வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும்.

பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு: இத்தனை சிரமத்திற்கு இப்போது காளான் வித்துக்களையும் விற்கிறார்கள். நல்லதரமான வித்துக்களை வாங்கி உபயோகிக்கலாம்.

காளான் படுக்கை எவ்வாறு அமைப்பது?

காளான் படுக்கை அமைக்க ஏற்ற பொருட்கள்:  கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கருது, வைக்கோல்

மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும்.  அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். கைகளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். கிட்டதட்ட 65% ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

காளான் பைகள் – படுக்கைகள் எப்படி தயார் செய்வது?

காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60 X 30 செ.மீ அளவுள்ள , இருப்பக்கமும் திறந்த பாலீத்தின் பைகளை பயன்படுத்த வேண்டும். இருபக்கமும் திறந்த பைகள் என்றால் பாலீதீன் பையின் மூடிய பகுதியை கிழித்துவிடலாம்.

அந்த பாலித்தீன் பையை ஒருபுறம் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவில் இடையில் 2 ஓட்டை போடவேண்டும்.

வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட பாலீதீன் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும். இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து முறை செய்யவேண்டும்.  ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பையை நன்றாக இறுக்கி கட்டிவிட வேண்டும். இதற்கு ரப்பர்பேண்டை பயன்படுத்தலாம். பிறகு பாலீதீன் பையை குடிலினுள்   உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விடவேண்டும்.

விதைத்த பதினைந்து , இருபது நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதைக் காணலாம்.  பிறகு சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.

தினமும் கைத்தெளிப்பான் கொண்டு காளான்படுக்கையில் தண்ணீர் தெளிப்பது அவசியம்.

இப்படி வளர்த்த காளானை எவ்வாறு அடைவடை செய்வது?

பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும்.

இருபத்துமூன்று நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண்ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறுவடை செய்துவிட வேண்டும். தினமும் அறுவடை செய்யலாம். அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் உங்கள் விருப்பம் எதுவோ அப்படி அறுவடை செய்துகொள்ளலலாம்.

முதல் அறுவடைக்கு பின் ஒரு தகடு போன்ற பொருள் கொண்டு காளான் படுகையை இலேசாக சுரண்டுவிடுவதால்,  அல்லது பாலிதீன் பைகளின் நான்கைந்து துளைகளை கூடுதலாக இட வேண்டும். ஒவ்வொரு பெட்டிலிரந்து இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன்பெறலாம்.  ஒவ்வொரு பையிலிருந்தும் 600 கிராம் வரை காளானை அறுவடை செய்யலாம்.

எப்படி விற்பனை செய்வது? (Marketing)

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 200 கிராம் இருபது ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 100 ரூபாய்க்கும் விற்கலாம். அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு கொடுக்கலாம். காளானைக் கொண்டு பலவித உணவுப்பொருட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக்கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.

முக்கிய குறிப்பு: அறுவடை செய்த காளான்களை ஒரு நாள் வரைக்கும் வெளியில் வைக்கலாம். குளிர்பதனப்பெட்டியில் என்றால் இரண்டு நாட்கள் வரைக்கும் வைக்கலாம். இரண்டிற்கு மேற்பட்ட நாட்கள் வைத்திருந்தால் அவை அழுகி கெட்டுவிடும்.

செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே நமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகிறது.

காளன் வளர்ப்பு முறைகளை காணொளியில் கண்டு தெளியுங்கள்..!!

தயவு செய்து முழுமையாக இந்தக் காணொளியைக் காணவும். அப்பொழுதுதான் காளான் வளர்ப்பு முறையில் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள முடியும்.

காளான் வளர்த்து வெற்றி வாகை சூடிய பெண்மணியின் அனுபவ பேட்டி இந்தக் காணொளியில் காணலாம்.

இந்த காளான் வளர்ப்பைப் பற்றி மேலும் தகவல்கள் பெற உங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலகங்களையோ அல்லது வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்கமையங்களையோ அணுகி தேவையான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி – தங்கம்பழனி