Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2012
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,109 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாருங்கள் உலகை வெல்லலாம்-1

1. உயர்ந்த எண்ணங்கள் உங்களை உயர்த்தும்

சிறுவர்களே அன்புச் சிறுமியர்களே எப்போதும் நல்ல எண்ணங்களையே எண்ணுங்கள். நல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. அவை உங்களுக்கு நல்லதையே கொண்டு வந்து சேர்க்கும். வீரத்துறவி விவேகானந்தர் சொல்கிறார், நீங்கள் உங்களை வலிமையானவராக நினைத்தால் வலிமையானவர்களாக மாறுவீர்கள். பலவீனராக நினைத்தால் பலவீனராகி விடுவீர்கள். உங்கள் எண்ணங்களுக்கு அவ்வளவு வலிமை உண்டு. எனவே எப்பொழுதும் எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து ஆரோக்கியமான நல்ல எண்ணங்களுக்கு மட்டுமே மனதில் இடம் கொடுங்கள்.

கற்பக மரத்தைப் பற்றிய கதை உங்களுக்குத் தெரியும் அல்லவா? காலம் காலமாக அந்தக் கதை சொல்லப்பட்டு வருகிறது. இருந்தாலும் அதில் பொதிந்து இருக்கின்ற உண்மையின் ஒளி நமது இருட்டான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆற்றல் வாய்ந்தது.

காட்டு வழியே செல்கிறான் ஒரு மனிதன். கோடைக்காலத்து உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறது. தாகம் தொண்டையை வறட்டுகிறது. பசி வயிற்றை இழுத்துப் பிடித்து மேலே நடக்க விடாமல் தடுக்கிறது. கால்கள் தள்ளாடுகின்றன, கண்கள் பஞ்சடைகின்றன. அந்த மனிதன் ஒரு மரத்தின் நிழலில் வந்து படுக்கிறான். குளுகுளு வென காற்று வீசுகிறது. வெயிலில் அல்லல்பட்டு வந்த எனக்கு குளிர்ச்சியான நிழல் கிடைத்தது, இப்படியே கொஞ்சம் குளிர்ந்த நீரும் கிடைத்தால் தாகம் தணித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான் அவன். அவன் முன்னால் ஒரு மண்ஜாடியில் குளிர்ந்த நீர் தோன்றியது. ஆச்சரியம் தாங்க முடியவில்லை அவனுக்கு, உடனே அந்த தண்ணீரை எடுத்து மடக் மடக்கென்று குடித்தான். பிறகு சுற்று முற்றும் பார்த்தான் யாருமே இல்லை. தாகம் தீர்ந்து விட்டது. பசி எடுக்கிறதே, சுவையான பலகாரங்கள் கிடைத்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று நினைத்தான். உடனே அவன் எதிரே சுவையான சூடான பலகாரங்கள் பல தட்டுக்களில் தோன்றின. மகிழ்ச்சியின் எல்லையில் மிதந்த அவன் தன் பசி அடங்கும் வரையில் அந்த பலகாரங்களை வயிறு புடைக்க சாப்பிட்டான். இப்படியாக அவன் தனக்குத் தேவையான கட்டில் , பஞ்சமெத்தை, ஆகியவற்றை மனதில் நினைத்த மாத்திரத்தில் பெற்றுவிட்டான். இதற்கு காரணம் அவன் தங்கியிருந்தது நினைத்ததை கொடுக்க வல்ல கற்பக மரத்தின் நிழலில்.

இப்போது அந்த மனிதனுக்கு பயம் வந்து விட்டது, இது என்ன? மந்திர மாயமாக இருக்கிறேதே. நான் கேட்டது அத்தனையும் கிடைத்து விட்டதே, இந்தக் காட்டில் ஒரு புலி வந்து என்னை அடித்து விடுமோ என்று பயந்தான். அவ்வளவு தான் அடுத்த நொடியில் அவன் முன்னால் ஒரு வேங்கைப்புலி தோன்றியது. கண் இமைக்கும் நேரத்தில் உறுமிக் கொண்டே அவன் மீது பாய்ந்து அடித்துக் கொன்றது.

இந்தக் கதையின் மூலமாக நாம் அறிவது என்ன? கற்பக மரம் என்று குறிக்கப்படுவது ஒரு மனிதனின் மனம் தான். மனதிற்கு மனிதன் விரும்புகின்றவற்றை கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது. நாம் நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை நினைத்தால் கெட்டது நடக்கும்.

எனவே மாணவர்களே, மாணவிகளே எப்போதும் நல்ல எண்ணங்களையே உங்கள் மனதில் வளர விடுங்கள். நீங்கள் வாழ்வில் உயர்வது நிச்சயம். எந்த ஒரு விஷயத்தையும் நல்லதாகப் பார்த்தால் நன்மை வரும். தீயதாகப் பார்த்தால் தீமை ஏற்படும். வெற்றி நோக்கத்தோடு ஒரு செயலை அணுகினால் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. தோல்வி கண்ணோடு அந்த செயலை செய்தால் தோல்வி ஏற்படுவதை தவிர்க்கவே முடியாது.

ஆப்பிரிக்காவின் கிராமம் ஒன்றில் காலணி கம்பெனி ஒன்று தனது பொருட்களை விற்பனை செய்வதற்காக ஒரு ஆளை அனுப்பியது. அவர் அந்த ஊருக்குச் சென்று சில நாட்கள் தங்கினார். தெருவில் நடப்பவர்களின் கால்களை ஆர்வத்தோடு கவனித்தார். தங்கள் கம்பெனியின் காலணிகளை அங்கே விற்க முடியுமா என்று நோட்டம் விட்டார். அந்த கிராமத்தில் வசித்தவர்கள் யாருமே கால்களில் காலணிகளை அணியாமல் நடந்து சென்றனர். இதைப் பார்த்த விற்பனையாளருக்கு சலிப்பு ஏற்பட்டது. இந்த மக்களுக்கு காலணியின் உபயோகமே தெரியவில்லை. ஏற்கெனவே காலணி அணிந்து அதன் உபயோகம் தெரிந்தவர்கள் என்றால் நமது சரக்குகளை விற்பனை செய்வது எளிது. இங்கே ஒரு ஜோடி காலணிகளைக் கூட விற்பனை செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தார். எனவே தனது கம்பெனிக்குத் திரும்பி சென்றார்.தனது முதலாளயிடம் நடந்தவைகளை தெரிவித்தார்.

கம்பெனி அவருக்குப் பதிலாக மற்றொரு விற்பனையாளரை அதே கிராமத்திற்கு அனுப்பியது. அவர் காலணி அணியாத மக்களைப் பார்த்தார். அடடா நமது சரக்குகளை விற்பதற்கு இதுதான் சரியான இடம். இவர்களுக்கு காலணிகளை அணிவதால் என்னென்ன பயன்கள் ஏற்படும் என்பதை விளக்கி விட்டால் போதும். விற்பனை சூடு பிடித்து விடும் என்று எண்ணமிட்டார். தனது எண்ணத்தை செயல்படுத்தினார். மக்களை ஒரு மரத்தின் நிழலில் கூட்டினார். காலணிகளின் பயன்களை அவர்களுக்கு புரியும் விதத்தில் எடுத்துச் சொன்னார்.

“கல்லிலும் முள்ளிலும் நடந்து செல்லும் நீங்கள், காலில் அடிபட்டால் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டிவரும். இதனால் உங்கள் வேலை தடைப்படும். கூலி குறையும். இதை தடுப்பதற்காக கால்களுக்குப் பாதுகாப்பாக காலணிகளை அணிந்து செல்லுங்கள்” என்றார்.

விவசாயிகளுக்கு அவர் சொல்வதில் உள்ள உண்மை புரிந்தது. அந்த ஊரில் விவசாயத்தில் ஈடுபட்ட பலர், இருட்டு நேரத்தில் காட்டு வழியில் நடந்து வரும்போது பாம்பு கடித்து இறந்து போயிருக்கின்றனர். கால்களில் ஷீக்கள் இருக்குமானால் பாம்பு விஷத்தில் இருந்து தப்பி உயிர் பிழைக்கலாம் என்று அறிந்து கொண்டனர். எனவே போட்டி போட்டுக் கொண்டு காலணிகளை வாங்கி அணிந்தனர். விற்பனையாளருக்கு நல்ல லாபம் கிடைத்தது.

காலணிகளை விற்பனை செய்ய வந்த ஒருவர் எதை தடையாக நினைத்துப் பின்வாங்கினாரோ அதே விஷயத்தை மற்றொருவர் சாதகமாக நினைத்து வெற்றி கண்டார். எனவே நாம் ஒரு விஷயத்தை எப்படி நினைக்கிறோமோ அப்படியே அது மாறிவிடும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி மிகச் சிறந்த உதாரணமாகும்.

எனவே உங்கள் எண்ணம் உயர்ந்ததாக இருக்கட்டும். சுயநலம் அற்றதாக இருக்கட்டும். நல்லதாக மற்றவர்களுக்குப் பயன்படுவதாக இருக்கட்டும். இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களை உயர்த்தும்.

நன்றி:  வேணுசீனிவாசன் – அகல் விளக்கு