Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2013
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,620 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிளாஸ்டிக்!

plasticபிளாஸ்டிக் என்னும் சொல்லுக்கு “எளிதாக அச்சில் வார்க்கக்கூடியது” எனப் பொருள். பிளாஸ்டிக் 1862ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது. தொடக்கத்தில் இதனை செல்லுலாய்ட் என அழைத்தனர். இப்போதும் சில இடங்களில் இப்பெயரே வழங்கி வருகிறது. செல்லுலாய்ட் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பல்வேறு வகைப்பட்ட பிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, பல வகைப் பொருட்கள் விற்பனைக்கு வந்து விட்டன. குறைந்த எடை, வளைந்து கொடுக்கும் தன்மை, காற்று, தண்ணீர் ஆகியவற்றால் சிதையாத தன்மை போன்றவற்றால் பிளாஸ்டிக் பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாடு இன்று உலகில் பல்கிப் பெருகி விட்டதால், இக்காலத்தை பிளாஸ்டிக் ஊழி என்றால் அதில் மிகையேதுமில்லை. சிறு பொம்மைகளிலிருந்து மிகப் பெரிய தொழிலகங்களில் பயன்படும் பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்கள் பிளாஸ்டிக்கைக் கொண்டு செய்யப்படுகின்றன. மருத்துவத் துறையிலும் இதன் பயன்பாடு மிக அதிகம்.

தற்காலத்தில் பிளாஸ்டிக் என்பது, அச்சில் வார்த்து வெப்பம் மற்றும் அழுத்தத்தைக் கொண்டு பல்வகை வடிவங்களிலான பொருட்களைத் தயாரிக்கும் பிசுபிசுப்புத் தன்மையுடைய பொருளைக் குறிக்கிறது. இதற்குச் சாயம் பூசி பல்வேறு நிறங்களையும் அளிக்க முடியும். உலோகத்துடன் ஒப்பிடும் போது பிளாஸ்டிக் குறைந்த எடை கொண்டது; காற்று மற்றும் நீரால் பாழாகாது; துருப்பிடிக்காதது. நெருப்பினால் அழியாத ஒரு வகைப் பிளாஸ்டிக்கும் கூட வந்துவிட்டது. சில பிளாஸ்டிக்குகள் கண்ணாடி போன்று நெகிழ்ச்சியுடையவை; பட்டு போன்று மென்மையானவை; எஃகு போன்று உறுதியானவை. பல்வகைப் பண்புக் கூறுகளைக் கொண்ட பல்வேறு பிளாஸ்டிக்குகள் உள்ளன. இவற்றின் தனிச் சிறப்புகள் காரணமாக மின்சாரத் துறைசார்ந்த பொருட்களிலும் கூடப் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது.

பிளாஸ்டிக் வகைகள்:

அறிவியல் முறையில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பல்வகைப்படும். சில வகைகள் பின் வருமாறு: பினோலிக், அமினோ, செல்லுலோசிக், பாலிமைட், பாலியஸ்டர், ஆல்கைட், புரோட்டின், இன்ன பிற.

பினோலிக் மற்றும் அமினோ பிளாஸ்டிக்குகள் சூடாக்கி வார்ப்படம் செய்யப்படுபவை. வார்ப்படமாக உருவாக்கப்பட்ட பின்னர், இவ்வகைப் பிளாஸ்டிக்குகள் உருக்கப்பட முடியாதனவாகும். வார்ப்படங்களாகவும், அச்சுகளாகவும் உற்பத்தி செய்யப்பட்ட இவற்றிலிருந்து பல பொருட்கள் செய்யப்படுகின்றன. இதில் அடங்கியுள்ள செயல்முறை பின்வருமாறு: முதலில் பிளாஸ்டிக் துகள்கள் ஒரு வார்ப்பட அச்சில் அடைக்கப்படுகின்றன; பின்னர் சூடுபடுத்தப்பட்டு அழுத்தப் பெறும்; குறிபிட்ட நேரத்திற்குப் பின்னர் தேவையான பிளாஸ்டிக் தயாராகி விடும். தற்போது எந்திரங்களைக் கொண்டு இச்செயல் முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பினோலிக் பிளாஸ்டிக்:

பினோலிக் பிளாஸ்டிக்கைக் கொண்டு மின்சாரச் சுவிட்சுகள், பிளக்குகள், உருக்கிகள், ஹோல்டர்கள், தொலைபேசிக் கருவிகள், வானொலிப் பெட்டிகள் போன்ற பல பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனைக் காகிதம் அல்லது துணி போன்ற நார்ப் பொருட்களுடன் கலந்து, பல்வேறு பயனுள்ள பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பினோலிக் பிளாஸ்டிக்கின் மெல்லிய படலத்தைப் பரந்த துணி அல்லது காகித்தத்தில் பரப்பி மேசை விரிப்புகள், இருக்கை விரிப்புகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. மேலும் பிளாஸ்டிக் தாள்களைக் கொண்டு பெட்டிகள், புத்தக அலமாரிகள், விமானம், ரயில் போன்றவற்றின் உட்பகுதிப் பாகங்கள் எனப் பலவகைப் பொருட்களும் செய்யப்படுகின்றன. பொறியியல் பகுதிகளான சக்கரங்கள், பற்சக்கரங்கள் போன்றவையும் பினோலிக் பிளாஸ்டிக்கைக் கொண்டு உற்பத்தி செய்யப் படுகின்றன. சுமார் 15-20% மரத்தூளை பினோலிக் பிளாஸ்டிக்குடன் கலந்து மரப்பலகைகளைப் போன்றே பிளாஸ்டிக் பலகைகளும் தயாரிக்கப்படுகின்றன. பிளைவுட் தொழிற்சாலைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

அமினோ பிளாஸ்டிக்:

அமினோ பிளாஸ்டிக்கில் “யூரியா” மற்றும் “மெலாமைன்” வகைகள் மிக முக்கியமானவை. யூரியா பிளாஸ்டிக் மிகவும் உறுதியானது; தனது வடிவத்தை இழக்காது; இது சுவையற்றது, மணமற்றது, எந்த நிறத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. இப்பண்புகள் காரணமாக, வானொலிப் பெட்டிகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், சுவர்க் கடிகாரங்கள், பொத்தான்கள், சமையலறைப் பாத்திரங்கள் போன்ற பலவற்றையும் செய்வதற்கு இது மிகவும் பயன்படுகிறது. மெலாமைன் பிளாஸ்டிக்கும், யூரியா பிளாஸ்டிக்கின் பண்புகள் பலவற்றைக் கொண்டுள்ளது. இது தண்ணீர், வெப்பம் ஆகியவற்றைத் தாங்கும் வலிமை கொண்டது. எனவே, மின்சாதனங்களின் தயாரிப்புக்கு இது மிகவும் ஏற்றதாக விளங்குகிறது.

செல்லுலோசிக்:

செல்லுலோசிக் பிளாஸ்டிக் தீயில் உருகிவிடும் தன்மையுடையது. வெப்பத்தில் நீர் போன்று உருகி, ஆறவைத்தால் மீண்டும் உறுதியாகிவிடக் கூடியது. எனவே இதிலிருந்து மீண்டும், மீண்டும் புதிய பொருட்களை உற்பத்தி செய்ய இயலும். விரிப்புகள், உருளைகள், குழாய்கள் வடிவத்தில் செல்லுலோஸ் நைட்ரேட் கிடைக்கிறது; பல வண்ணங்களிலும் இது கிடைக்கிறது. விரிப்பு, உருளை, குழாய்களை வேண்டிய அளவில் துண்டித்து இணைக்கவும் முடியும். பேனா, மூக்குக் கண்ணாடிச் சட்டங்கள் ஆகியன இதிலிருந்து உற்பத்தி செய்யப்படுபவை. ஒளிப்படப் பிலிம்கள், வாகனங்களுக்கான வார்னிஷ், செயற்கைத் தோல் போன்றவையும் செல்லுலோஸ் நைட்ரேட்டில் இருந்து உருவாக்கப்படுகின்றன.

செல்லுலோஸ் அசிடேட்:

இதுவும் செல்லுலோஸ் நைட்ரேட் போன்றதே எனினும், இது வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் கொண்டதாகும். செல்லுலோஸ் அசிடேட் பிளாஸ்டிக் துகள்களிலிருந்து, படிவ அச்சுகளைப் பயன்படுத்தி, பல்வேறு பொருட்களைத் தயாரிக்க இயலும். தண்டுகள், குழாய்கள், விரிப்புகள் போன்றவற்றைத் தயாரிக்கலாம். மெல்லிய பிலிம்களையும் தயாரிக்கலாம். மெல்லிய பிளாஸ்டிக் பிலிம்களை ட முதல் 1/8000 செ.மீ. தடிமன் அளவுக்கும் கூட தயாரிக்கக்கூடும். எக்ஸ் கதிர் பிலிம்களையும் தயாரிக்க இயலும். அசிட்டேட் ரேயான் இழைகளும் இதைக்கொண்டே உற்பத்தி செய்யப்படுகின்றன.

எதனாய்ட்:

இந்த வகையில் முக்கியமான பிளாஸ்டிக்குகளாக விளங்குபவை பாலிஸ்டெரின், பாலிவினைல் கலவை, பாலி மீதைல் மெதாக்ரைலேட் மற்றும் பாலிதைலேன் ஆகியனவாகும். பாலிஸ்டெரின் வகை நிறமற்றதும், பளிங்குபோல் காட்சியளிப்பதுமாகும். இதில் தேவையான வண்ணத்தைப் பூசலாம். பலவகைப் பொம்மைகள், மின்கல உறைகள், பெனிசிலின் சிரிஞ்சுகள் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. இதன் விலையும் குறைவு.

பாலிவினைல் குளோரைட் (பிவிசி):

வினைல் பிளாஸ்டிக்குகள் வகையில் இது மிக முக்கியமான ஒன்றாகும். மின்செப்புக் கம்பிகளைச் சுற்றும் உறையாக இது பயன்படுத்தப்படுகிறது. வாகன இருக்கைகள், மழைக்கால உடைகள், தரை விரிப்புகள் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. பல வடிவங்களிலும், கவர்ச்சியான வண்ணங்களிலும் இப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கிராமபோன் இசைத்தட்டுகள் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்பட்டது. இதனைக் கொண்டு உருவாக்கப்பட்ட காலணியின் அடிப்பாகம், தோலால் உருவாக்கப்பட்டதை விட வலிமை வாய்ந்ததாக விளங்குகிறது. வினைல் பிளாஸ்டிக்கைக் கலந்து உருவாக்கப்பட்ட ஆடைகள் தோலால் செய்யப்பட்டவை போல் இருக்கும்; இதனைக் கலந்து உருவாக்கிய காகிதம், அட்டைப் பெட்டி செய்யப் பயன்படுகிறது. எண்ணெய், தண்ணீர் போன்றவற்றால் இது ஈரமாவதில்லை.

செயற்கைப் பற்கள் மற்றும் கண்கள்:

பாலி மீதைல் மெதாக்ரைலேட் எனும் பிளாஸ்டிக் மிகவும் லேசானது; தெள்ளத் தெளிவானது; பிளாஸ்டிக் தடிகள், குழாய்கள், விரிப்புகள் தயாரிக்கப் பயன்படுவது. இவ்வகைப் பிளாஸ்டிக்கில் வண்ணங்களைக் கலந்து இருளில் ஒளிரும் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. விமானச் சாளரங்கள், இருக்கைகள், மூக்குக் கண்ணாடி வில்லைகள், மருத்துவக் கருவிகள், செயற்கைப் பற்கள், செயற்கைக் கண்கள் ஆகியன தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.

பாலி எதிலின்:

பாலி எதிலின் என்பது பிளாஸ்டிக்கின் அண்மைக்கால வளர்ச்சியாகும். இது பிளாஸ்டிக் துகள்கள், பிலிம்கள், விரிப்புகள், குழாய்கள் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுவதாகும். மின் கருவிகள் தயாரிப்பிலும், உணவுப் பொருட்களைப் பொட்டலங்களாகக் கட்டுவதற்கும் இது பயன்படுகிறது.

நைலான் பொருட்கள்:

நைலான் என்பது பாலிமைட் பிசின் வகையைச் சார்ந்தது; இழைகள், துகள்கள், விரிப்புகள், குழாய்கள், கயிறு, நூல் ஆகிய வகைகளில் இது கிடைக்கிறது. நைலான் மிகவும் வலிமையானது; வேதிப் பொருட்கள் சேர்க்கையால் சேதமடையாதது.

ஆல்கைட்:

ஆல்கைட்கள் வண்ணப் பூச்சு வார்னிஷ்களில் பயன்படுவன; தண்ணீரால் அழியாதவை. பொத்தான்கள், தைக்கும் ஊசிகள், பேனா, நாகரிகப் பொருட்கள் போன்றவற்றின் தயாரிப்பிலும் இவை பயன்படுகின்றன.
நன்றி:உணர்வுகள்