Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2015
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,007 முறை படிக்கப்பட்டுள்ளது!

தடுப்பூசி ரகசியங்கள்

 p36 நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள்!

உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் இல்லாமல்போனால், கிருமிகள் நடத்தும் வேட்டையில் நாம் சுலபமாய்ச் சிக்கி, இவை உண்டாக்கும் நோய்களுக்கு ஆளாகி, பல ஆபத்துகளைச் சந்தித்திருப்போம். ஆனால், மனித இனத்துக்கே கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம், ‘தடுப்பாற்றல் மண்டலம்’ (Immune system) என்ற தற்காப்புப் படைதான்.

நாம் உறங்கினாலும் இந்தத் தற்காப்புப் படை உறங்குவது இல்லை; இதற்கு 24 மணி நேரமும் நம்மைக் ‘காவல் காக்கும்’ வேலைதான். நாட்டைக் காக்கின்ற ராணுவம்போல், இது நம் உடலைக் காக்கிறது. நம் ரத்தம்தான் இதன் ‘கேம்ப் ஆபீஸ்’. ரத்த வெள்ளை அணுக்கள்தான் தளபதிகள். ‘T’ அணுக்கள், ‘B’ அணுக்கள், ‘மேக்ரோபேஜ்’ அணுக்கள், ‘எதிர் அணுக்கள்’ (Antibodies) என்று பலதரப்பட்ட சிப்பாய்கள் இந்தத் தற்காப்புப் படையில் பணிபுரிகிறார்கள்.

ரத்தக்குழாய்களும், ரத்தக்குழாய்க்கு வெளியில் இருக்கும் நிணநீர்க்குழாய்களும்தான் யுத்தம் நடக்கும் இடங்கள். சரி, யாருடன் யுத்தம்? கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகள் என்று சொன்னோமல்லவா? அவற்றுடன்தான் யுத்தம். இந்தக் கிருமிகளுக்குள்ளும் பலவிதங்கள் உண்டு. சுருக்கமாகப் பிரித்தால், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா ஆகிய நான்கு வகைகளில் அவை அடங்கும்.p36a

இந்த ‘எதிரிகள்’ நம் உடலுக்குள் நுழையும்போது, உடலின் தற்காப்புப் படை தன்னிடமுள்ள ‘சிப்பாய்’களை அனுப்பி, யுத்தம் செய்யும். சில சிப்பாய்கள் இந்த எதிரிகளைக் கொன்றுவிடுவார்கள். சில சிப்பாய்கள், கொல்லப்பட்ட எதிரிகளை அப்படியே விழுங்கி, அந்த இடத்தைத் துப்புரவு செய்வார்கள். இன்னும் சில சிப்பாய்கள் இந்த எதிரிகளை நினைவில் வைத்துக் கொண்டு, இனியும் இதுபோன்ற எதிரிகள் உடலுக்குள் நுழைகிறார்களா என்று வேவு பார்த்துத் ‘தளபதி’க்குத் தகவல் அனுப்புவார்கள். இப்படி, நம் எதிரிகளை அழித்து, அவை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது, உடலின் தற்காப்புப் படை.

இவ்வாறு நம் உடல் மேல் படையெடுக்கும் பல வகைப்பட்ட கிருமிகளை அல்லது உடலுக்குத் துன்பம் தரும் எந்த ஒரு வெளிப்பொருளையும் எதிர்த்துத் தாக்குவதற்கும், அழிப்பதற்கும் உடலில் தற்காப்புப் படை தருகின்ற சக்திக்கு ‘நோய் எதிர்ப்பு சக்தி’ அல்லது ‘நோய்த் தடுப்பாற்றல்’ (immunity) என்று பெயர்.

நோய் எதிர்ப்பு சக்தியின் வகைகள்:

நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, ‘இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Innate Immunity ), ‘செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Acquired immunity) என இரண்டு வகைகள் உண்டு. ‘இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது உடலில் பிறவியிலேயே அமைந்திருப்பது. ‘செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது பிறவியில் அமைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியைச் செயற்கை முறையில் தூண்டும்போது கிடைப்பது. இது, நாம் பிறந்த பிறகு, நம் வாழும் காலத்தில் பெறப்படுவது. இது எப்படிச் சாத்தியமாகிறது? ‘முள்ளை முள்ளால் எடுக்கிற வித்தை’தான் இங்கு கைகொடுக்கிறது. ஒரு நோய்க்கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்புச் சக்தி கிடைக்க வேண்டும் என்றால், அந்தக் கிருமியையே உடலுக்குள் செலுத்த வேண்டும். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் தடுப்பூசிகள்.

தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் (Oral vaccines) மூலம் வீரியம் குறைந்த நோய்க்கிருமிகளைச் சிறிதளவு நம் உடலுக்குள் செலுத்தினால், அந்தக் கிருமிகளுக்கு எதிராக ‘எதிர் அணுக்கள்’ உருவாகி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும். பிறகு, மற்றொரு சமயத்தில் இதே நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, ஏற்கனவே உள்ள எதிர் அணுக்கள் அந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு அழித்துவிடும். இதன் பலனாக, அந்த நோய் நம்மை அண்ட முடியாது. இதுதான் தடுப்பூசிகள் வேலை செய்வதற்கான அடிப்படைத் தத்துவம். தடுப்பூசியின் மகிமைகளைப் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்.

பொதுநல மருத்துவரான டாக்டர் கு.கணேசன், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச்சேர்ந்தவர்.  ஆங்கில மருத்துவச் செய்திகளை எளிமையாக எழுதுவது இவருக்குக் கைவந்த கலை. இதுவரை 28 மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழில் தயாரிக்கும் ‘மருத்துவக் கலைச்சொல் பேரகராதி’ பணியில் வல்லுனர் குழு உறுப்பினராகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கp3_6aலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் வல்லுனர் குழு உறுப்பினராகவும் உள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ‘மகாகவி பாரதி அறிவியல் தமிழ் விருது’ வழங்கி சிறப்பித்துள்ளது. இவருக்குக் கிடைத்துள்ள இலக்கியப் பீடம் விருதும், இந்திய மருத்துவக் கழகம் வழங்கியுள்ள ‘எழுத்துச் சாதனையாளர் விருது’ம் இவருக்குப் புகழ் சேர்க்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியம் குறித்து பெற்றோரிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதில் அதிக அக்கறை உள்ளவர். அதன் வெளிப்பாடுதான் இந்தத் தொடர்.

நன்றி: விகடன்