Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2015
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,284 முறை படிக்கப்பட்டுள்ளது!

நினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள் 1/2

brain பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

மூளையின் செயல்திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க எளிய வழி!

மூளையின் செல்களில் குளுகோஸ் சக்தியாக மாற ஆக்சிஜன் மிக மிக அவசியம். காரணம் மூளை தனது எரிபொருளாக குளுகோஸையே பயன்படுத்திக் கொள்கிறது. இவை நவீன விஞ்ஞானம் கூறும் உண்மைகள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மூளைக்கும் பிராண சக்திக்கும் இடையிலான தொடர்பு குறித்து நமது தந்திர யோகிகள் அறிந்திருந்தனர். மூளையின் இயக்கத்திற்கு பிராண வாயு (ஆக்சிஜன் ) மட்டுமின்றி, பிராண சக்தி எனப்படும் பிராணனும் தேவை என தந்திர யோக நூல்கள் கூறுகின்றன.

இந்த பிராண சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்து, மூளையின் செயல்திறனைப் பலமடங்கு அதிகரிக்கச் செய்யும் எளிய தந்திர யோக முறையே பிராண முத்திரையாகும்.

செய்முறை: சிறுவிரல், மோதிர விரல் ஆகியவற்றின் நுனிப் பகுதியால் பெருவிரலின் நுனிப்பாகத்தைத் தொடவும், அதிக அழுத்தம் வேண்டாம் சற்றே தொட்டுக் கொண்டிருந்தால் போதும், பிற இரு விரல்களும் (சுட்டுவிரல், நடுவிரல்) வளைவின்றி நேராக இருக்கட்டும்.

அமரும் முறை: ஆசனங்களில் பரிச்சயம் உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து செய்யலாம், மற்றவர்கள் கால்களை மடக்கி அமர்ந்து செய்யவும், மாணவர்கள் படிக்கத் துவங்கும்முன் நாற்காலியில் அமர்ந்தபடியே இந்த முத்திரையைச் செய்யலாம், தலை, கழுத்து, முதுகு ஆகியவை வளைவின்றி நேராக இருக்க வேண்டும். இரு கைகளிலும், ஒரே நேரத்தில் செய்யவும், சுவாசம் இயல்பான நடையில் இருக்கட்டும். சீராகவும் ஆழமாகவும் இருப்பது அவசியம், மூச்சை அடக்குதல் கூடாது.

குறைந்த பட்சம் 8 நிமிடங்கள், அதிக பட்சமாக 48 நிமிடங்கள் வரையில் செய்யலாம். சராசரியாக பள்ளி மாணவர்கள் காலையில் 16 நிமிடங்கள், மாலையில் 16 நிமிடங்கள் செய்யப் பழகிக்கொள்வது நல்லது.

பலன்கள்: மூளையின் செயல்களுக்கு பிராண சக்தியும், பிராண வாயுவும் அதிக அளவில் கிடைப்பதால், மூளை சுறுசுறுப்பாகிறது. மூளையின் செல்களிலுள்ள சோர்வு மறைந்து, புத்துணர்ச்சியுடன் மூளை செயல்படத் துவங்கும். உடலிலுள்ள அனைத்து செயல்களுக்குமே பிராண சக்தி அதிக அளவில் பாய்வதால் உடலில் உள்ள அசதி, சோர்வு, சோம்பேறித்தனம் ஆகியவை மறைந்து, உடலிலும் ஒரு புத்துணர்வு உருவாகும். உடல் , மூளை இரண்டின் செயல்திறணும் பல மடங்கு அதிகரிக்கும். உடலில் பிராண சக்தி அதிக அளவில் பாயும்போது, நாடிகளில் உள்ள சக்தித் தடைகள் அதிகரிக்கும். இவை தவிர பிராண வாயுவுக்கு வேறு ஒரு மிக முக்கியமான பணியும் உண்டு.

ஆக்சிஜன் அதிகம் கிடைப்பதால் மூளையின் செயல்கள் சுறுசுறுப்படைந்தாலும் இடது மூளையின் செயல்பாடுகளே அதிகரிக்கும். பிராண சக்தி அதிக அளவில் செல்லும்போதுதான் வலது மூளையின் பணிகளான, பேச்சுத்திறன், எழுத்துத்திறன், கற்பனைத்திறன் ஆகியவையும் அதிகரிக்கும்.நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தியும் பிராண முத்திரைக்கு உண்டு. பிராண முத்திரையைத் தொடர்ந்து செய்து நினைவாற்றலைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்யலாம்.

1. கவனமான பார்வை

2. ஆர்வம், அக்கறை

3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம்.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள், பிறகு 2, 4, 6, என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள், பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98, 96 என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5, 6, 7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்திரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள்.

இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏ யை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரிய வரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாருங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால் இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதேபோன்று இன்னொரு பயிற்சி உங்கள் நெற்றியைbrainfood கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள் அதில் மறுநாள் 9 மணிக்கு யாரையாவது சந்திப்பதாக எழுதிப் போடுங்கள். பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதேபோன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு விடயத்தை எழுதிப் போடுங்கள். அதேபோன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்துவிட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

இந்த 6 விடயங்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளலாம். புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிகெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அப்பியாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத் திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக்கொண்டால் வாழ்க்கை நின்றுவிடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும். ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.

இந்த உலகத்தில் இவருக்குத் தான் அறிவு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அறிவாளியாக, புத்திசாலியாக இருப்பர். அறிவு என்பது சிந்திக்கும் திறனையே குறிக்கிறது. எந்த சமயத்தில் எப்படி சிந்தித்தால் எப்படி வெற்றி கிட்டும் என்பதை சரியாக யார் சிந்தித்து அறிவை பயன்படுத்துகிறார்களோ அவர்களே புத்திசாலி மற்றும் மிகுந்த அறிவுள்ளவர்கள்.

உதாரணமாக ஒருவர் படிப்பில் கெட்டிக்காரராக, புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் அவர் விளையாட்டில் அவ்வாறாக இருக்க மாட்டார்கள். இவ்வாறு அறிவில் பல வகைகள் உள்ளன. அத்தகைய அறிவை அனைவரும் பெற வேண்டுமென்றால், அறிவை வளர்க்க ஒரு சில வழிகள் இருக்கிறது.

அறிவை வளர்க்க சில டிப்ஸ்….

1. நல்ல தூக்கம் மற்றும் போதுமான ஓய்வு அவசியம். இவற்றில் தூக்கம் மற்றும் ஓய்வு ஆகிய இரண்டும் ஒன்று அல்ல. ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூங்குகிறோம். ஆனால் அப்போது உடலானது ஓய்வு பெறுகிறது. ஆனால் அவ்வாறு தூங்கி எழுந்து புத்துணர்ச்சி அடையாமல் இருந்தால், எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அப்போது அறிவானது குறைவாகத் தான் இருக்கும். ஆகவே நல்ல தூக்கத்தின் மூலம் அறிவானது பெருகும்.

2. நிறைய பேர் வார இறுதியில் தூங்கி எழுந்திருக்கும் போது நீண்ட நேரம் கழித்து எழுந்திருப்பர். ஆனால் எழுந்ததும் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பர். ஆனால் அப்படி எழுந்து உடற்பயிற்சி செய்ய நினைக்கும் நேரம் ஷூ ஆனது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் தேடி, அதையே கண்டு பிடிக்க போய் ஒரு நாளில் அரை நாள் போய்விடும். இந்த நேரத்தில் அவர்களது மூளையானது அந்த ஒரு ஷூவில் மட்டும் தான் இருக்கிறதே தவிர, வேறு எதையும் யோசிக்கவில்லை.

மேலும் சோம்பேறித்தனம் தான் அறிவை மழுங்க வைத்து நேரத்தை கழிக்கிறது. எப்படியெனில் நீண்ட நேரம் தூங்குவதால் சோம்பேறித்தனம் தான் அதிகரிக்கும். ஆகவே அத்தகைய நீண்ட நேர தூக்கமானது அறிவை அப்போது மழுங்க வைத்துவிடுகிறது. ஆகவே அவ்வாறு மழுங்காமல் ஸ்டாமினா அதிகரிக்க தினமும் எழுந்து சுறுசுறுப்பாக ‘ஜாக்கிங்’ செய்ய வேண்டும். இதனால் அறிவானது பெருகும்.

3. தொலைக்காட்சியில் தேவையில்லாத நிகழ்ச்சிகளைப் பார்த்து அறிவை மழுங்க வைக்கின்றனர். மேலும் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு அடிமையே ஆகிவிடுகின்றனர். மூளையானது ஒரு கத்தி போன்றது. அதை பயன்படுத்தாவிட்டால் கூர்மையை இழந்துவிடும். ஆகவே அறிவுக்கு வேலை கொடுக்கும் நிகழ்ச்சிகளை வேண்டுமென்றால் காணலாமே தவிர, அறிவை மழுங்கச் செய்யும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டாம்.

4. இன்றைய காலத்தில் நிறைய பேர், எடை குறைய வேண்டும் என்பதற்காக சிலசமயம் சாப்பிடாமலே இருக்கின்றனர். ஆகவே இத்தகையவற்றை நினைவில் கொள்ளாமல், நன்கு உண்டால் தான் மூளையானது கத்திப் போல் நன்கு வேலை செய்யும். மேலும் நட்ஸ், தானியங்கள், முட்டை மற்றம் கடல் உணவுகள் போன்றவை மூளையை வளர்க்கும் உணவுகள் ஆகும். மேலும் இவை அனைத்தும் உடலுக்கு ஏற்ற, உடல் எடையை அதிகரிக்காத உணவுகளும் கூட.

5. நன்கு விளையாட வேண்டும். மூளையை நன்கு சுறுசுறுப்பாக, கூர்மையாக வைத்துக் கொள்ள யோசிக்கும் வகையில் இருக்கும் விளையாட்டுகளை விளையாட வேண்டும். உதாரணமாக செஸ், வார்த்தை விளையாட்டு, மெமரி கேம்ஸ் போன்றவற்றை விளையாடுவதன் மூலமும் அறிவை வளர்க்கலாம்.

இவ்வாறெல்லாம் பின்பற்றுங்கள் மூளையானது சுறுசுறுப்போடு இருப்பதோடு, அறிவும் கூர்மையடையும்.

நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளும் நுட்பங்கள்:

1. உடற்பயிற்சி:


உடற்பயிற்சி என்பது உடல் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல, மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கவும், நினைவாற்றல் பெருக்கத்திற்கும் மிக மிக அவசியமாகும். எனவே தினமும் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்களை யாவது உடற்பயிற்சிக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும்.
ஒன்றை நாம் தெளிவாக அறிந்து கொள்ளாதபோது நம்மால் அதனை நினைவுக்கு கொண்டு வருதல் இயலாது. மிகச் சிறிய விஷயம் ஒன்றை பதிவு செய்ய நம்முடைய மூளை குறைந்தது எட்டு நொடிகளை எடுத்துக் கொள்கிறது. எனவே, வலிந்து நினைவில் செய்திகளை பதிக்கும்போது அமைதியான இடையூறில்லாத சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

2. தையல்காரர் அணுகுமுறை:

மேலோட்டமாய் தகவலைக் கேட்டுக் கொள்வது, போகின்ற போக்கில் பார்த்து வைப்பது என நுனிப்புல் மேய்வது போல் இல்லாமல் ஒரு தையல்காரர் எவ்வாறு அளவுகளை சரியாகக் குறித்துக் கொள்கிறாரோ அவ்வாறு தகவல்களைப் பதிவு செய்து கொள்வது என்றைக்குமே மறந்துபோகாது.

3. பல்வேறு புலன்களை பயன்படுத்துதல்:

கண்டிப்பாக நினைவில் வைக்கவேண்டிய விஷயங்களை வாய்விட்டு சொல்லிப்பார்த்தல் நல்லது. படித்தறியும்போதுகூட பார்வையிலேயே படிப்பதைக் காட்டிலும் வாய்விட்டு (முடிந்தால் சத்தமாக) படித்தலும், சற்று முயற்சி செய்து ரிதம் போல் வரிசைப்படுத்திக்கொள்ளுதலும் சிறந்தது. கேட்பதன் மூலமாக அறிந்து கொள்ளும்போது தொடர்புடைய நிறம், சொற்கள், வாசம், தன்மையோடு பதிவுசெய்து கொள்வதும் நல்ல பலனைத் தரும்.

4. முன்பே அறிந்தவற்றோடு தொடர்புபடுத்தி வைத்தல்:


புதிய தகவல்கள் முன்பே அறிந்தவற்றோடு தொடர்புடையது எனும்போது அவற்றை நினைவுபடுத்திப் பார்த்து இணைத்து பதிவு செய்யலாம்.

5. படம் வரைந்து வைத்துக்கொள்ளுதல்:

எழுதிவைக்கும் தகவல்களோடு அதற்குரிய படங்களையும் (கோட்டுப் படம் போல்) சின்னச் சின்னதாய் பக்கத்திலேயே வரைந்துவைத்து எழுதிக் கொண்டால் நினைவுபடுத்திப் பார்க்கும் போது தன் கருத்துக்களை தன் நினைவுக்கும், பிறருக்கு தகவலாகவும் மனிதன் பதிவு செய்துள்ளான். இது இன்றைக்கும் சிறந்த முறையாகும்.

ஞாபக சக்தியை அதிகரிக்க பிராமி, சங்குபுஷ்பி, வல்லாரைக் கீரை போன்ற ஆயுர்வேத மருந்துகள் உதவுகிறது.மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.

பீர்க்கங்காய் வேரை எடுத்து நன்கு சுத்தம் செய்து இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்

பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இலை ஆகியவைகளை தினமும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

செம்பருத்திப்பூவில் உள்ள மகரந்தகாம்பை நீக்கிவிட்டு சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளைக்கு பலம் கூடும்.

தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஊற வைத்து உலர்த்தி சூரணம் செய்து கொடுத்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்

நினைவாற்றலை அதிகரிக்க பாதம் சாப்பிடுங்கள்!!

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். அதுபோல் பாதாம் நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தி கொண்டது. குழந்தைகளுக்கு தொடர்ந்து பாதாம் சாப்பிட கொடுத்து வந்தால் அவர்களது நினைவாற்றல் அதிகரிக்கும். இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.

நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப்பொருட்களை தொடர்ந்து சாப்பிட வேண்டும். உங்களுக்காக சில குறிப்புகள்:

1. ஞாபகசக்தியை அதிகரிக்கம் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீட்சை,திராட்சை, மாதுளை,ஆரஞ்சு முதலியன.

2. சமையலில் சீரகம்,மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.

3. பள்ளிக் குழந்தைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்து கொள்வது மிகவும் அவசியம். அதற்கு தினமும் இரவில் 12 பாதாம் பருப்புகளை ஊறப்போட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் நரம்புகளும் பலமாகின்றன. அரைக்கும் முன் பாதாமின் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாமில் 490 கிராம் பாஸ்பரஸ், தாதுஉப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் இதில் உள்ளது.

4. கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பீட்ரூட், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா ஆகியவற்றிலும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இதை தவிர பால், தயிர் முதலியவற்றையும் உணவில் சோ்க்க வேண்டும்.

5.பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும். புத்திக்கூர்மையை ஏற்படுத்தும்.

6.அறிவை அதிகரிக்கும் வெண்டைக்காய்:

மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும். இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.

வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன் பூர்வீகம் எத்தியோப்பியா.

கொழுப்பை கரைக்கும்

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

கொழ கொழ காய்

வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

வாய் நாற்றம் அகலும்

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப்படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம்.

வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் (laxative.) உள்ளது. இது உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாய்வு கோளாறுகளை தடுக்கிறது. வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும்.

இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்.