Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2016
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,238 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் –10

அன்றைய ஸூபித்துவமும் இன்றைய தப்லீக்  ஜமாஅத்தும்.

சூபித்துவம் பற்றிய பகுதியில் அவர்களது அடிப்படைக் கொள்கைகள் பற்றி ஆராயும் போது அவர்களது சிந்தனைகள், கொள்கைகள் பற்றியெல்லாம் விரிவாக அலசவேண்டிய அவசியமில்லாத வகையில் — லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவுக்கு அவர்கள் கொடுக்கும் அர்த்தத்தை வைத்தே அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்று முடிவு செய்து விட முடியும்..

இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறெதுவுமே இல்லையென்பதே அவர்கள் கலிமாவுக்குக் கொடுக்கும் அர்த்தமாக உள்ளது என அறிந்தோம். அதே சூபித்துவத்திலே வாழையடி வாழையாக வந்துதித்தவர்களே தப்லீக் ஜமாஅத்தின் பூர்வீக காலம் தொட்டு இன்று வரை பொறுப்பு வகிக்கும் தப்லீக்கின் முக்கியஸ்தர்கள் என்பதுதான் ஆச்சரியமிக்க உண்மை. இதனை ஜீரணிப்பது சற்று கடினம்தான். ஆனால் அதுதான் உண்மை,.

இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் தப்லீக்கின் உயர் பொறுப்பில் இருக்கும் மௌலானாக்கள், பெரியார்கள்  அனைவரிடத்திலும் இதே சூபித்துவக் கொள்கை இருந்தது – இன்றும் இருக்கின்றது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதே இப்பகுதியின் முக்கிய நோக்கம். ஆனால் மூன்று நாள் நாற்பது நாள் என்றெல்லாம் வக்துக் கொடுத்து வெளிக்கிளம்பிச் செல்லும் அப்பாவி மக்களுக்கு இது பற்றியெல்லாம் எதுவும் தெரிவதில்லை. அது பற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதுமில்லை. சூபித்துவவாதிகள் எப்படி தம்மிடம் வரும் முரீதீன்களுக்கு பக்தர்களுக்கு தம்மீது முழு நம்பிக்கை வரும்வரை தமது விசக்கருத்துக்கள் எதையும் வெளியிடுவதில்லையோ அவ்வாறே இவர்களும் சாதாரண ஆரம்ப நிலையிலுள்ள தப்லீக் பக்தர்களுக்கு இது பற்றியெல்லாம் எதுவும் சொல்வதில்லை.

அவர்களுக்குத் தப்லீக்கின் அடிப்படை விதிகளான கலிமா,  தொழுகை, இல்முதிக்ரு, இக்ராம் இக்லாஸ்,  தப்லீக் ஆகியவற்றைப் பற்றி மாத்திரமே பேசப்படும். போதிக்கப்படும். தப்லீக் இயக்கத்தின் மீது மக்களுக்கு அபிமானம் ஏற்பட வேண்டுமென்பதற்காக செய்யப்பட்ட முயற்சியே இது. இந்த வழிதனிலே பல காலம் ஒருவர் பயிற்றுவிக்கப்பட்டதன் பின் ஒரு வருடம் இருவருடம் என்றெல்லாம் ஒருவர் டில்லி மர்க்கஸ், ட்ரை விந்மர்க்கஸூக்கெல்லாம் சென்றுவந்து தப்லீக்கின் மௌலானாக்கள், பெரியார்கள் மீது நீக்கமுடியாத ஒரு பிடிப்பு பற்று, அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டதன் பின்பே சூபித்துவக் கருத்துக்களைப் படிப்படியாக அவருக்குக் கற்பிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். இதையும் வெறும் கற்பனையாகவோ வாய்ப்பேச்சாகவோ நான் சொல்லவில்லை. ஆதாரப் பூர்வமாக – தகுந்த ஆதாரங்களுடன் நிருபித்துக் காட்டவுள்ளேன். குர் ஆன் ஹதீஸ் போதனைகள் எப்படியிருந்தாலும் தனக்கு தன் டில்லி பெரியார் – மௌலானா சொன்னதே சரி என்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு அங்கு அவர்களுக்கு மூளைச் சலவை இடம் பெறும். சூபித்துவப் போதனைகள் வெளிரங்கத்தில் ஆத்மீக சிந்தனையின் பக்கம் அழைப்பது போல் — இவர்கள் தொழுகையின் பக்கம் மக்களை அழைக்கும் இயக்கம் என்று பாமரர்கள் மத்தியில் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். சந்தர்ப்பம் வரும் போதே தம் சூபித்துவக் கருத்துக்களைப் புகுத்துகின்றனர்.

பொதுவாகக்கூறின் அதிகமான சகோதரர்கள் ஏன் தப்லீக்கை ஆதரிக்கின்றார்கள்?. அதில் வெளிக்கிளம்ப விரும்புகின்றார்கள் என்று ஆராயும்போது இன்றைய பஸாதுகளும் குழப்பங்களும் நிறைந்த இந்த பித்னாவுடைய ஜமானில் குழப்பங்கள் அதிகரித்துள்ள காலகட்டத்தில் வாழும் இச்சகோதரர்கள் இஸ்லாத்தின் மீது தாம் கொண்டுள்ள பற்றின் காரணமாகவும் நபிவழிப்படி நடக்க வேண்டுமென்ற ஆர்வ மேலீட்டாலும் தமக்கு இஸ்லாமிய வழிகாட்டலை வழங்கக் கூடிய ஒருவரைத் தேட இவர்களின் மனம் விரும்புகின்றது. மேலோட்டமாகத் தேடிப் பார்க்கின்றார்கள். தப்லீக் ஜமாஅத்துத்தான் ‘தீன் என்பது அல்லாஹ் வின் கட்டளையும் நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழி முறையுமாகும் இதை பூரா மனித சமூதாயத்துக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் பணியில் சொந்த பணத்தை, உடலுழைப்பை, காலத்தைத் தியாகம் செய்து உழைக்கும் ஒரு அமைப்புத்தான் தப்லீக் ஜமாஅத்’ என்ற விளம்பரத்தைக் கேட்கின்றார்கள்.

அதனையடுத்து கார்க்கூன்களின் விடாமுயற்சியாலும்,  தொடர்ச்சியான சந்திப்பாலும் 3 நாட்கள் வெளிக்கிளம்பிச் செல்லச் சம்மதிக்கின்றார்கள் அங்குள்ள சூழல் அவர்களின் மனதுக்கு இதமளிப்பதாக,  மனதிலுல்ல கவலை கஷடங்களை மறக்க ஒரு நன்மருந்தாக,  தொழில் மற்றும் குடும்பச் சுமைகளை விட்டுப் பிரிந்து சுதந்திரமாக நேரத்துக்குத் தொழுது கொண்டு வேளாவேளை சாப்பிட்டுக் கொண்டு பள்ளியுடைய சூழலில் இருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம். எவருடைய தொந்தரவுமில்லை. செல்லும் இடமெல்லாம் வரவேற்பு அமோகமாயிருக்கின்றது. சண்டை சச்சரவு பிரச்சினைக்குரிய எந்த விடயங்களிலும் தலையிடுவதில்லை. இப்படியான ஒரு சூழல் தப்லீக்கில் கிடைப்பதால் இதையே எதிர்பார்த்திருந்த அதிக வேலைப்பளுமிக்க வாழ்க்கையால் விரக்தியுற்றிருந்த பாமர சகோதரர்கள் இதை நேசித்து இதன்பால் லயித்து விடுகின்றனர் இதனால் இந்த அமைப்பில் உள்ள மார்க்க முறண்பாடுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தவறி விடுகின்றனர் இதில் அதிகம் பேர் மார்க்மென்றால் என்னவென்று பெரிதாக அறியாத நிலையிலேயே — அறிந்து கொள்ளும் நோக்கிலேயே தப்லீக்கில் காலடியெடுத்து வைக்கின்றனர். எனவே இதிலுள்ள குறைகளை அறிவது ஒருபக்கமிருக்க அவைதான் இஸ்லாம் என்று அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதால் அப்படியே அவற்றை ஏற்றுக் கொள்கின்றனர். அதன் முக்கியஸ்தர்கள் கூட அடிக்கடி தமது பயான்களில் ‘இந்த வேலையில் குறை பிடிக்க முற்படுபவர் வேலையை விட்டும் தூரமாக்கப்படுவார். பின்னர் தீனிலிருந்தே தூரமாக்கப்பட்டு விடுவார் என்று அடிக்கடி எச்சரிப்பதால் பயம் காட்டுவதால் அதிக அப்பாவிப் பாமர மக்கள் இதைப் பற்றி ஆராய்வதற்கே அச்சம் கொண்டு தானும் ஒரு வேளை அவர்கள் சொல்வது போல் தீனை விட்டும் தூரமாகி விடுவோமோ எனப் பயந்து ‘தலைவன் எவ்வழியோ தானும் அவ் வழியே ‘ என்ற கோஷத்துடன் நடை பயில ஆரம்பித்து விடுகின்றனர். அதனால் யாரேனும் இதைப்பற்றி இதன் குறைகளைப் பற்றி அவரிடம் எடுத்துச் சொன்னாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்வதில்லை.

இதனாலேயே இன்று தப்லீக் அமைப்பு பாமர மக்களின் ஹீரோவாகச் செல்வாக்குப் பெற்று பல நாடுகளிலும் வியாபித்துக் காணப்படுகின்றது.

அறபுக்கள் கூட இதற்கு ஆதரவளிப்பது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அரபுக்கள் என்ன மலக்குகளா ? நபிமார்களா ? அவர்களும் மனிதர்களே. . எம்மை விடவும் மார்க்க அறிவில் மட்டமான நிலையிலுள்ள – ஏன்..பாத்திஹா ஸூராவே ஒழுங்காக ஓதத் தெரியாத அறபுகளும் நிறையவே இருக்கின்றனர்.. அறபுக்களில் ஒரு சில சகோதரர்கள் இதில் மும்முரமாக ஈடுபடுவது உண்மை தான். அதனால் அது மார்க்க அங்கீகாரம் பெற்றுவிடுமா ? அப்படியானால் அறபிகளுக்கு எதற்காக அல்லாஹ் நபியை அனுப்ப வேண்டும். ??? அவர்கள்தான் மேதைகளாச்சே. ..
ஆக தப்லீக் அமைப்பு இன்று அகலமாக வளர்ந்துள்ளது,  ஆனால் ஆழமாக வளர வில்லையென்பதே உண்மை.

இன்று தப்லீக்கில் ஈடுபாடு கொண்டுள்ள எம் சகோதரர்களுக்கு இக்கருத்துக்கள் ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் தரலாம். இதனையெல்லாம் ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். ஆனால் உண்மையை அறிய விரும்புபவர் நடுநிலையாக இதில் கூறுப்படும் கருத்துக்களை தப்லீக் அமைப்புடன் ஒப்பீடு செய்து ஆராயும் போது இன்ஷா அல்லாஹ் உண்மை புலப்படும். உண்மைக்கு உறக்கம் கிடையாது. ஆனால் அதை விரும்பாதவர்க்கு அது எளிதில் புலப்படாது. அதற்காகத்தான் தப்லீக் ஜமாஅத்தின் வெளிப்படையான,  ரகசியமான அனைத்து நடவடிக்கைகளையும் — அவற்றில் குர்ஆன் ஹதீதுக்கு முரண்பாடு எந்த விதத்தில் உள்ளன என்பதையும் ஆதாரப்பூர்வமாக எடுத்துக் காட்டுகின்றேன்.

இன்னும் ஒருசிலர் ‘தப்லீக்கில் குறைபாடு இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும். எதில்தான் குறைபாடு இல்லை. குறைகளை விட்டு விட்டு நிறைய நல்ல விடயங்கள் இருக்கின்றன அவற்றை எடுத்து நடப்போமே’ என்று நடுநிலைவாதம் பேசுகின்றனர் இவ்வாதமும் அர்த்தமற்ற வாதமே. உலகிலுள்ள எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அதிலே அவற்றில் சமூகத்துக்கு நன்மை தீமை இரண்டுமே இருக்கத்தான் செய்கின்றன. மது பானத்தில் கூட நன்மையும் இருப்பதாகவே அல்குர்ஆன் சொல்கின்றது.

 ‘நபியே நீங்கள் சொல்லுங்கள் அதிலே (சாராயத்தில்) அதிகம் தீங்கிருக்கின்றது,  அத்துடன் அதில் மக்களுக்கு நன்மையுமிருக்கின்றது. அதனால் ஏற்படும் தீமை அதன் நன்மையை விட மிக அதிகமாகும்’ எனக் கூறுகின்றது. (ஸூரத்துல் பகரா 219).

எனவே நன்மை இருக்கின்றதென்பதால் ஒரு விடயத்தை நல்லதென நியாயப்படுத்த முடியாது. அதனால் ஏற்படும் விபரீதம் தீமை எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் தீர ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும். அந்த வகையில் நான் சூபிகளிடம் இருப்பதாகக் கூறிய இஸ்லாத்தைத் தகர்த்தெறியும் ஷிர்க்கான- இஸ்லாமிய அகீதாவைக் குழிதோண்டிப் புதைக்கும் குப்ரான விடயங்கள் அனைத்துமே இதன் ஸ்தாபகர்களான ட்ரைவிந் மர்கஸ் மௌலானாக்களிடமும், டில்லிப் பெரியார்களிடமும் இருக்கின்றன. அதையும் ஆதாரப் பூர்வமாக நிரூபித்துக் காட்டவுள்ளேன்.

அதே போன்று ஆறு நம்பருடைய வாழ்க்கை பூரா மக்களிடமும் வரவேண்டுமென்பதில் ஒரே குறியாக இருக்கும் இப்பெரியார்கள் அந்த ஆறு நம்பர்களையும் மாத்திரம் எடுத்து ஏனைய இஸ்லாமிய விடயங்களை எவ்வளவு சாதூர்யமாகப் புறந்தள்ளுகின்றனர் என்பதையும் ஆறு நம்பரிலுள்ள விடயங்கள் வெளிப்படையில் நல்லவைகளாகத் தோன்றினாலும் அதற்கு அவர்கள் கொடுக்கும் வியாக்கியானம் எந்தளவு குறுகிய வட்டத்தில் உள்ளது என்பதையும் முடிந்தளவு ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தவுள்ளேன். அதுமட்டுமின்றி சூபிகளின் கொள்கைகளை அப்படியே அச்சொட்டாகப் பின்பற்றும் இவர்களிடம் இபாதத்களாகக் கருதப்பட்டு வரும் ஏராளமான மார்க்க விரோத விடயங்களையும் முடிந்தளவு சுருக்கமாகத் தெளிவு படுத்த விரைகின்றேன்.

தப்லீக் சகோதரர்கள் அனைவரினதும் ஒருமித்த வாதம் என்னவென்றால் சில வழி கெட்ட கூட்டத்தினர் இந்த நபிமார்கள் செய்து வந்த மகத்தான வேலையைப் பற்றி இல்லாதது பொல்லாதததையெல்லாம் சொல்லுவார்கள். அவையெல்லாமே அவர்களின் பொறாமையின் வெளிப்பாடு. இந்த ஹக்கான வேலையின் பரக்கத்தால் எத்தனை லட்சம் பேர் நேர்வழி பெற்றிருக்கின்றார்கள். குடியும் போதையுமாக இருந்த எத்தனை பேர் நல்ல மனிதர்களாகியிருக்கின்றார்கள். ஒரு கையில் வெட்டரிவாளும் மறுகையில் சாராய போத்தலுமாக அலைந்த ஆயிரக் கணக்காணோர் இன்று ஒரு கையில் தஸ்பீஹ் மணியும் மறுகையில் மிஸ்வாக் குச்சியுடனும் காட்சி தருகின்றார்கள். எத்தனை ஆயிரம் பூட்டிக்கிடந்த பள்ளிகள் உயிர்ப்பிக்கப்பட்டு இன்று இபாதத்களால் ஜொலிக்கின்றன. முஸ்லிம் பெண்களிடத்தில் பர்தாவுடைய வாழ்வு வந்திருக்கின்றது. கலிமாச் சொல்வதற்கே தெரியாத எத்தனையோபேர் இன்று திருந்தி இஸ்லாமிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இது அல் லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயக்கம் என்பதற்கு இதன் தீவிர வளர்ச்சியே சான்றென்று அடுக்கிக்கொண்டே செல்வார்கள்.

உண்மையில் இவையெல்லாம் நல்ல விடயங்கள் என்பதிலும் தப்லீக் இயக்கத்தின் முயற்சியே இதற்கு முக்கிய பங்கு என்பதிலும் சந்தேகமேயில்லை. ஆனால் இந்த நன்மைகளைக் கூட விஞ்சி விடக் கூடிய இஸ்லாமிய கோட்பாட்டுக்கு எதிரான நச்சுக் கருத்துள்ள கொள்கைகள் ஒரு பக்கமும்,  இஸ்லாத்தைக் குறுகிய வட்டத்துக்குள்ளாக்கி அது கூறிய பலவற்றைக் கத்தரித்து விட்டு அது கூறாத நிறைய விடயங்களை இஸ்லாமியச் சாயம் பூசி விளம்பரப்படுத்தும் போக்கும் இவர்களிடம் காணப்படுவதனாலேயே இதனை விமர்ச்சிக்கும் நிலை ஏற்படுகின்றது. இது பற்றி பின்னர் விபரமாகச் கூறவுள்ளேன். அதே போன்று ஒரு இயக்கத்திற்குக் கிடைக்கும் தீவிர வளர்ச்சியும் பெரும்பான்மை மக்கள் ஆதரவும் சமூக வரவேற்பும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயக்கம் என்பதற்கு ஒரு போன்றும் சான்றாக ஆகாது.

பத்ர் யுத்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நபிகளாருடன் 313 பேர். காபிர்கள் 1000 பேர். மூஸா நபியுடன் ஒரு சிறு கூட்டம். பிர்அவ்னிடம் ஒரு பெரிய பட்டாளம். எண்ணிக்கையை வைத்துச் சொல்வதென்றால் குரைஷிகளும் பிர்அவ்னும் சத்தியத்தில் இருந்ததாகவே சொல்ல வேண்டும். இன்றும் கூட உலக மக்கள் தொகையில் முஸ்லிம் களின் எண்ணிக்கையை விட கிருஷதவர்களின் எண்ணிக்கையே அதிகம். உலகச் செல்வத்தின்; பெரும்பகுதி அவர்களிடம் இருக்க அனேக நாடுகள் அவர்களை ஆதரித்து அவர்களின் உதவிக்காகக் கையேந்திக் காத்திருக்கின்றன. எனவே எண்ணிக்கையை வைத்தே சத்தியமா அசத்தியமா? என்று தீர்மானிப்பதாயின் இஸ்லாத்தை விடக் கிருஸ்தவ மதமே மிக உண்மையானது. அல்லாஹ்வின் அருளைப் பெற்றது என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்ல முடியுமா? என்று தப்லீக் சகோதரர்கள் சிந்திப்பார்களாக.

எனக்கும் தப்லீக் ஜமாஅத்துக்கும் கூட ஒரு காலத்தில் நெருங்கிய தொடர்பு இருந்தது. அப்போது தப்லீக்கின் பெரியார்கள் மார்க்க விரோதக் கருத்துக்கள் சிலவற்றைக் கூறும் வேளை அதனை நானும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலையில்தான் இருந்தேன் தப்லீக் மீதிருந்த அபார பக்தியும் அபிமானமும் அதிலுள்ள குறைகளைக் கண்டுகொள்ளக் கூடிய மனோநிலையை என்னில் இல்லாமலாக்கி விட்டன என்றே கூற வேண்டும். இதே போன்று இதை வாசிக்கும் தப்லீக் அபிமானிகளுக்கும் இந்த மனோபாவம் இருக்கும் என்றே நம்புகின்றேன். இருப்பினும் உண்மை கசத்தாலும் அதை ஏற்றே ஆகவேண்டியிருக்கின்றது. நபிவழிக்கு மாற்றமாக யாரின் செயல் இருப்பினும் அதனைப் புறக்கணித்தே ஆக வேண்டியுள்ளது. அது ஒரு முஸ்லிமின் இஸ்லாமிய, மற்றும் தார்மீகக் கடமையாகும். எனவே குர்ஆன் ஹதீஸின் ஆதாரத்துடன் தப்லீக்கில் தவறு இருப்பதாக நீரூபித்தால் அதனை ஏற்றுக்கொள்வேன் என்ற உறுதியுடன் இதனை வாசிக்க ஆரம்பியுங்கள்.

இது தவிர தனிப்பட்ட வகையில் எனக்கு தப்லீக்குடனோ தப்லீக் சகோதரர்களுடனோ எவ்வித காழ்ப் புணர்ச்சியோ கசப்புணர்வோ கிடையாது. இன்று வரைக்கும் நான் அவர்களுடன் சகோதரத்துவ வாஞ்சையுடனேயே பழகி வருகின்றேன். ஒரு முஸ்லிம் தான் விரும்புவதை தனது சக சகோதரனுக்கும் கிடைக்க வேண்டுமென விரும்ப வேண்டுமென்ற நபிமொழிக்கேற்ப இதிலுள்ள விடயங்களை தப்லீக் சகோதரர்கள் படித்ததன் பின் அது பற்றிச் சிந்திக்கத் தலைப்பட வேண்டு மென்பதே எனது அவா. ..

அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கின்றேன். இன்றும் கூட குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பல கோணங்களில் முரண்படுகின்றது என்ற ஒரே காரணத்துக்காகவே நான் தப்லீக்கை விட்டு ஒதுங்கியுள்ளேன். இன்றும் கூட டில்லி,  ரைவிந் மர்கஸ் தொடர்புகளைக் கத்தரித்து விட்டு அல்குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் செயற்படுவது என்ற நிபந்தனைக்கு கார்க்கூன்கள் சம்மதித்தால் இன்றிலிருந்தே நான் என் ஆயுளைக் கொடுத்து தப்லீக்கில் இணைந்து செயற்படக் காத்திருக்கின்றேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன். நான் மட்டு மல்ல குர்ஆன் ஹதீஸ் வழியில் நடக்கும் அனைத்து சகோதரர்களும் இதற்கு சம்மதிப்பார்கள் என்றே நம்புகின்றேன். நாம் அனைவருமே நிச்சயம் என்றோ ஒரு நாள் மரணிக்கக் கூடியவர்கள். அதன் பின் கப்ரில் புதைக்கப்பட்டு விடுவோம். அங்கே எமக்கு மீண்டும் உயிரூட்டப்பட்டு மலக்குகள் விசாரிப்பார்கள். நபி (ஸல்) அவர்களுடைய உருவத்தைக் காட்டப்பட்டு இந்த மனிதரைப்பற்றி நீ என்ன சொல்கின்றாய் ? என்பார்கள் அப்போது நபிவழியில் நடந்தவர்களே சரியான பதிலைக் கூற முடியும். நபிவழியைப் புறக்கணித்து நடந்தவர்களின் நிலை அந்தோ பரிதாபம் !! நாளை மறுமையில் அல்லாஹ் நம்மனைவரையும் மஹ்ஷர் வெளியில் ஒன்று கூட்டுவான் விசாரணை செய்வான். நபிவழிப்படி செயற்பட்டிருந்தால்த்தானே அல்லாஹ்வின் விசாரணையிலிருந்து வெற்றி பெற இயலும். நபியவர்களை நாம் மறுமையில் கவ்தர் எனும் ஆற்றின் பக்கம் சந்திக்க இருக்கின்றோம். அவ்வேளை நபிவழி நடந்தவர்களுக்கே நீர் புகட்டப்படும். அதற்கு மாற்றமாக நடந்தவர்களை நபியவர்களே மலக்குகளிடம் கூறி ‘இவர்களைத் துரத்துங்கள் துரத்துங்கள் என்று விரட்டுவார்கள் எனஹதீஸில் உள்ளதே. … நமக்கு இந்த நிலை ஏற்பட்டால் நம் கதி என்ன ? என்பது பற்றிய சிந்தனையுடன் தொடர்ந்து வாசியுங்கள். அல்லாஹ்வின் நல்லடியார்களாக நாம் அனைவருமே வாழ்ந்து மரணிக்க வேண்டுமென்று அவனைப் பிரார்த்திக்கின்றேன்.

தப்லீக் ஜமாஅத்தின் தோற்றம்.

இந்தியாவின் வடபகுதியிலுள்ள தேவ்பந்த் எனும் ஊரிலுள்ள மேவாத் எனும் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மத் இல்யாஸ் காந்திஹ்லவி தேவ்பந்தி (றஹ்) என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டு – அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பே தப்லீக் ஜமாஅத் எனும் அமைப்பாகும். இந்த தப்லீக் அமைப்பின் கேந்திரஸ்தலம் இந்தியாவின் தலைநகரான டில்லியில் அமைந்துள்ளது. தேவ்பந்த் எனப்படுவது அங்குள்ள ஹனபி மத்ஹப் போதிக்கும் மத்ரஸாக்களில் மிகப் பழைமை மிக்கதும், பெரியதுமாகும். மத்ரஸத்து தாருல் உலூம் என்பது இதன் பெயராகும். முஹம்மத் காஸிம் நானூத்துவியின் மேற்பார்வையில்; நபி (ஸல்) அவர்களே இதனை ஆரம்பித்ததாகவும்,  இந்த மத்ரஸாவுக்கு அடிக்கடி முஹம்மது நபியவர்கள் தமது கலீபாத் தோழர்களுடன் வருகை தந்து மத்ரஸாவின் வரவுசெலவுக் கணக்குகளைச் சரிபார்ப்பதாகவும் தப்லீக் முக்கியஸ்தர்கள் வாதிடுகின்றனர். ஆதாரம்: : (தோ ரூஹானிய்யத் அறபு பெயர்ப்பு ப:434)

இந்த மத்ரஸாவில் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை விளக்கம் (அகீதா ) இஸ்லாத்துக்குப் பல்வேறு கோணங்களில் முரண்படும் மாத்துர்திய்யா பிரிவினரின் கொள்கையின் படி போதிக்கப்படுகின்றது. மார்க்கச் சட்டங்கள் ஹனபி மத்ஹபின் ஊடாகக் கற்பிக்கப்படுகின்றன. இந்த மத்ஹபு நபிவழிக்கு மாற்றமான ஆயிரக் கணக்கான சட்டங்களைப் போதிக்கின்றதென்பது தனி விடயம். அப்படியானால் அல்லாஹ் கூறிய கொள்கைக்கு மாற்றமான நம்பிக்கைகளும்,  நபியவர்களின் போதனைகளுக்கு மாற்றமான சட்டங்களும் போதிக்கப்படும் மத்ரஸா ஒன்றை எப்படி நபியவர்களே தொடங்கி வைக்க முடியும் ? அடிக்கடி வருகை தந்து கணக்குகளைச் சரிபார்க்க முடியும் ? அவர்களுக்கே வெளிச்சம் இப்படி நிகழ்வது சாத்தியமா ? என்பது தனி விடயம்.

இது ஒருபக்கமிருக்க இந்த தப்லீக் பெரியார்கள் அனைவருமே ஜிஸ்த்திய்யா தரீக்காவின் ஷேக்மார்கள் – தர்ம கர்த்தாக்களாவார்கள் என்பதுதான் ஆச்சரியமான விடயம். இந்தத் தரீக்காவைத் சேர்ந்தவர்கள்; ஹாஜா முஈனுத்தீன் ஜிஸ்;தி அவர்களைத் தமது ஆத்மீக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள்.

இவர்களிடம் ‘ஜிஸ்திய்யா தரீக்காவின் ஷேக்மாரின் வரலாறுகள்’ எனும் பெயரில் ஒரு புத்தகம் உண்டு. இதில் அந்த தரீக்காவின் முக்கிய ஷேக்மார்களின் வாழ்க்கைத் தொகுப்பு உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இதில் முதலாவது இடத்தில் நபி (ஸல்) அவர்களுடைய பெயரை இடம்பெறச் செய்திருக்கின்றார்கள். என்னவோ நபியவர்களே ஜிஸ்த்திய்யாத் தரீக்காவை ஆரம்பித்து அதன் முதலாவது ஷேக்காக இருந்து நடத்தியது போன்ற ஒரு பிரமையைப் பாமரர்களுக்குப் போதிப்பதற்காக இவ்வாறு செய்துள்ளார்கள். அடுத்து வரும் ஜிஸ்த்தியாத் தரீக்காவின் ஷேக் மார்களாக அபூபக்ர், உமர்,உதுமான்,  அலி ரலியல்லாஹ- அன்ஹூம் அவர்களது பெயர்களை இடம்பெறச் செய்து இஸ்லாத்தின் வரலாறே ஜிஸ்திய்யா தரீக்காவிலிருந்தே தோற்றம்பெற்றது போன்ற ஒரு மாயையைத் தோற்றுவிக்கின்றார்கள்.

அது மட்டுமின்றி நபியவர்கள் தமது மரணத்தில் கப்ருடைய வாழ்க்கையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். மரணித்தவர்கள் திரும்ப மறுமையில் தான் எழுப்பப்படுவார்கள் என்பது இஸ்லாமியப் போதனை. அவர்கள் சொர்க்கவாசிகளாயின் அங்குள்ள இன்பங்களைக் கண்ணுற்றதும் உலகிற்கு வரவே விரும்ப மாட்டார்கள். உயிர்த்தியாகம் செய்த ஷஹீத் மாத்திரம் மீண்டும் உலகுக்கு வந்து 10 தடவைகள் போரில் கொல்லப்பட வேண்டுமென விரும்புவார் என்பது நபிமொழி. (புகாரி 2606 முஸ்லிம் 34)

இதற்கு மாற்றமாக மரணத்தின் பின்னும் ஒருவர் உலகிக்கு மீண்டு பல்வேறு செயற்பாடுகளைச் செய்ய முடியுமென்ற வழிகெட்ட சூபிகள் கூறும் இந்துக் கொள்கையினையே இவர்கள் கொண்டிருக்கின்றனர் நபியவர்கள் தேவ்பந்து மத்ரஸாவின் கணக்கு வழக்குகளைச் சரிசெய்யத் தோழர்களுடன் அடிக்கடி வருவதாக இவர்கள் கூறுவதிலிருந்து இதனை விளங்கிக் கொள்ளலாம். தப்லீக் ஜமாஅத் சூபித்துவம் பிரசவித்த குழந்தை என்பதற்கு இந்த ஒரு ஆதாரம் மாத்திரமே போதும்.

இல்யாஸ் மௌலானா (றஹ்) அவர்களைப்பற்றிச் சொல்வதானால் இவர்கள் ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள். சூபித்துவப் பாதையில் தன்னை முன்னர் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் மார்க்க அறிவில் போதிய தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் இஸ்த்தைப் பரப்ப வேண்டுமென்ற ஆர்வம் அவர்களிடம் மேலோங்கியிருந்தது. அதாவது அவர் சார்ந்திருந்த, சரிகண்டிருந்த சூபித்துவ தரீக்காவின் பக்கம் மக்களை ஒன்று சேர்ந்த்து நேர் வழிப்படுத்த வேண்டுமென்ற ஆதங்கத்துடன் இருந்தார்கள். றஸீத் அஹ்மத் கான்கோஹி, அஷ;ரப் அலி தானவி போன்ற  ஷேக் மார்களிடமும் பைஅத் – குருஞான தீட்சை பெற்றுக் கொண்டவராயிருந்தார்கள். (நள்ரத் அல் ஆபிரா ப: 7,8)

குருமார்களிடம் சென்று ஞான தீட்சை – பைஅத் செய்வது இஸ்லாத்துக்கு முறனான விடயமென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தனது ஊரான மேவாத்தியிலுள்ள மக்கள் இஸ்லாத்தை விட்டும் தூரமான நிலையில் — விக்ரக வழிபாடு நடத்தும் இந்துக்களின் கலாச்சாரத்தை முற்றிலும் தழுவிய நிலையிலே,  எவ்வித வணக்க வழிபாடுகளோ இபாதத்களோ இன்றி வயலும் வாழ்வுமாக இருந்த அந்த அறியாமைக் கூட்டத்தைக் கண்டு இவர்களை நேர்வழிப் படுத்த எண்ணிய ஷேக் அவர்கள் தனது குருமார்களிடம் இது பற்றிப் பேசி தனது திட்டத்தைத் தெரிவித்த போது அவர்களும் அதற்குச் சம்மதிக்கவே இவர்கள் தமது இந்த அமைப்பைத் தொடங்கி தொழுகையின் பக்கம் மக்களை அழைக்கும் இயக்கமென அதை அறிமுகப் படுத்தினார்கள். (நள்ரத் அல் ஆபிரா ப: 7,8).

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம் யாதெனில் ஷேக் அவர்களின் இஸ்லாமியப் பற்றும், மக்களை நல்வழிப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள்,  பட்ட சிரமங்கள் அனைத்தும் பாராட்டத்தக்கதே. ஆனால் அவர்கள் எதன் பக்கம் மக்களை அழைத்தார்கள் என்பதே கேள்வி ?. சூபித்துவத்தைப் பற்றியும் அதன் கொள்கைகள் கோற்பாடுகள் பற்றியும் ஏற்கனவே உங்களுக்குக் கூறியிருக்கின்றேன். அந்த தரீக்காக்களின்; பக்கம்தான் மக்களை அழைத்தார்கள். அதாவது அன்று அவர்களுக்குத் தெரிந்த இஸ்லாம் அதுதான். இதற்காக அவர்களைக் குறைகூறவும் முடியாது. காரணம் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இந்திய முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாம் இப்படித்தான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இஸ்லாம், குர்ஆன் ஹதீஸின் விளக்கங்களெல்லாம் ஆலிம்களுக்குக் கூடத் தெரிந்திருக்காத காலமது. மத்ஹபு நூல்களை மார்க்க ஞானமெனவும்,  சூபித்துவக் கருத்துக்களை மெஞ்ஞானமெனவும் நம்பி பாமர முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலம். குர்ஆன் ஹதீஸ் போதனைப்படிதான் மக்கள் வாழவேண்டுமென ஆங்காங்கே ஓரிரு உலமாக்கள் பிரச்சாரம் செய்தாலும் அவர்களெல்லாம் குழப்பவாதிகள்,  வஹாபிகள் என்று பட்டஞ் சூட்டப்பட்டு சமூகத்திலிருந்தே ஒதிக்கி வைக்கப்பட்ட காலம். எனவே ஷேக் இல்யாஸ் (றஹ்) அவர்களிடமும் இஸ்லாத்தின் அகீதா அறிவுகள் அதன் தூய வடிவில் சென்றடையவில்லை. அவர்களிடம் இஸ்லாமியப் பிரச்சாரம் பற்றிய அவா ஓங்கியிருந்த போதும் கூட அதனைச் செயற்படுத்துவதற்காக அவர்கள் தெரிவுசெய்த வழிமுறை சூபித்துவ வழிமுறையாகவே இருந்தது. அவர்களும்கூட சூபித்துவ தரீக்காவின் ஷேக்மார்களிடம் குருதீட்சை பெற்றிருந்தார்கள்.. அவர்களுக்குப் பின் வந்த தப்லீக்கின் முக்கியஸ்த்தர்களும் அதே ஞான வழியில் நடை பயில்பவர்களாகவே இருந்தார்கள்.

எனவே சுருங்கக் சொல்வதானால் ஒரு இயக்கத்தின் ஸ்தாபகர் தன்னகத்தே கொண்டிருந்த நற்குணங்கள்,  பக்தி, இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மீதிருந்த ஈடுபாடு போன்வற்றைக் கொண்டு அவரது இயக்கத்திற்கும் நல்ல இயக்கம் என்று சான்றுவழங்கிட முடியாது. உதாரணமாக நூஹ் நபி லூத் நபி ஆகியோர் நல்லடியார்கள் என்றபடியால் அவர்களின் மனைவிமக்களும் நல்லவர்களென வாதிடுவது எப்படி அபத்தமானதோ அது போன்று தான் இதுவும். நபியவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய கூட்டமெனப் பிரகடனம் செய்த கவாரிஜ்களைப் பாருங்கள் ஸஹாபாக்களையே மிஞ்சி விடுமளவுக்கு அதிக இபாதத்தாளிகளாக இருந்தார்கள். குணசீலர்களாயிருந்தார்கள். இதை வைத்து அவர்கள் நல்லவர்கள் என்று சொல்லிட முடியுமா ? எனவே ஒரு இயக்கத்தை இஸ்லாமிய இயக்கமென்று சொல்வதானால் அது இஸ்லாத்தின் போதனைகளுக்கு எந்தளவுக்கு ஒத்துப் போகின்றது, எந்தளவுக்கு முரண்படுகின்றது என்பதை எடை போட்டுப் பார்த்தே முடிவெடுக்க வேண்டும். எனவே தப்லீக் இயக்கம் உருவாக்கியுள்ள அடிப்படைகள் சட்ட வரையறைகள் கொள்கைகள் பற்றியெல்லாம் சற்று விரிவாக விளக்க வேண்டியது அவசியம் எனவே தப்லீக் சகோதரர்கள் தயவு செய்து பொறுமையுடன் பின்வரும் விடயங்களையும் வாசிக்க வேண்மென்பதே எனது எதிர்பார்ப்பும் வேண்டுதலுமாகும்.