Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2016
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,380 முறை படிக்கப்பட்டுள்ளது!

சட்டம் தன் கடமையைச் செய்யும்

ticketlessமும்பையில் உள்ள புலேஷ்வர் பகுதியைச் சேர்ந்த பிரேமலதா பன்சாலி என்ற பெண் சமீபத்தில், புறநகர் ரயிலில் பயணித்துள்ளார்.  மஹாலட்சுமி ரயில் நிலையத்தில் இறங்கிய அவரிடம் பயணச்சீட்டு பரிசோதகர்கள், பயணச்சீட்டு கேட்டுள்ளனர். ஆனால், அவர் பயணச் சீட்டு இல்லாமல் பயணித்துள்ளார். இதனால் 260 ரூபாய் அபராதம் செலுத்துமாறு பயணச் சீட்டு பரிசோதகர்கள் கூறியுள்ளனர்.

அந்த அபராதத்தைச் செலுத்த மறுத்த அவர், வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி தப்பித்துச் சென்ற, தொழிலதிபர் விஜய் மல்லையாவை முதலில் கைது பண்ணுங்க என ஆத்திரத்துடன் தெரிவித்துள்ளார்.

 இதனால் ரயில்வே காவலர், அவரிடம் சமரசப் பேச்சு நடத்தி, பின்னர் ஒரு பெண் காவலர் அவருக்காக அபராதத் தொகை கட்ட முன்வந்த போதும், அதை ஏற்க மறுத்து சுமார் 12 மணி நேரம் ரயில்வே அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 “சாதாரண மக்களைத் துன்புறுத்துவதை விட்டு விட்டு விஜய் மல்லையா போன்றவர்களைக் கைது செய்யுங்கள். எதற்காக அவர்களிடம் மட்டும் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறீர்கள்?’ என தொடர்ந்து கேள்விக் கணைகளைத் தொடுத்து, அதிகாரிகளைத் திக்குமுக்காடச் செய்துள்ளார்.
பின்னர், அவரது கணவர் வந்தவுடன், அவரையும் அபராதம் கட்ட விடாமல், பின்னர் நீதிமன்றத்திற்குச் சென்று தனது தவறை ஒப்புக் கொண்டு, அபராதத்திற்குப் பதில் ஏழு நாள்கள் சிறைவாசத்தைத் தெரிந்தெடுத்துள்ளார்.

 இந்தச் சம்பவம் மல்லையா வெளிநாடு தப்பியதை விட பரபரப்பாக ஊடகங்களிலும், மக்களிடையேயும் விவாதப் பொருளாகி விட்டது.

 அதே சமயத்தில் பயணச் சீட்டு வாங்காமல் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிந்திருந்தும், அந்தப் பெண்மணி பயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்தது அவரது தவறு. ரயில் பயணச் சீட்டு பரிசோதகர் தன் கடமையைச் செவ்வனே செய்து சட்டத்தின் விதிமுறைகளை நிலைநாட்டியுள்ளார்.

 நீதிமன்றமும் அந்தப் பெண்மணிக்குத் தண்டனையை மறுக்காமல் நீதியை நிலைநாட்டியுள்ளது. இது மற்ற ரயில் பயணிகளுக்கும் நல்ல பாடமாக அமைந்து விட்டது.
ரயிலில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்ய மற்ற பயணிகளும் அஞ்சுவார்கள். இது தான் நம் நாட்டில் நடக்கும் சட்டத்தின் ஆட்சி. சட்டங்களும், விதி முறைகளும், ஏழைகளுக்கும், சாமானியர்களுக்கும் மட்டும் தானா? அரசியல்வாதிகளுக்கும், பண பலம் படைத்தவர்களுக்கும் இல்லையா என்பது விஜய் மல்லையாவின் தப்பியோட்டம் மக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.

 ஆனால், இச்சம்பவம் நான் ஒரு கொலை தான் பண்ணினேன், பத்துக் கொலை செய்த அவனைப் போய் பிடியுங்கள் என்று கூறுவது போல் உள்ளது. நல்லவர்களையும், கெட்டவர்களையும் வித்தியாசப்படுத்திக் காட்டுவது நாம் செய்யும் நல்லச் செயல்களே.
இப்படி ஒவ்வொருவரும் மல்லையாவின் செய்கையைச் சுட்டிக் காட்டி ரயிலில் பயணச் சீட்டு வாங்க மறுத்தால் ரயில்வே நிர்வாகம் என்னவாகும்?

 இந்த உலகமே சுழன்று வருவதற்கான அடிப்படைக் காரணமே தனி மனிதன் ஒவ்வொருவரும் தனது பொறுப்பை உணர்ந்து, கடமையை உணர்ந்து நடப்பதால் தான்.

 வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் ஒவ்வொருவரும் விஜய் மல்லையாவைச் சுட்டிக்காட்டி அவர் கடனை வங்கியில் திருப்பிக் கொடுத்தால் தான், நானும் என் வங்கிக் கடனை அடைப்பேன் என்று கூறினால் இந்தியப் பொருளாதாரம் என்னவாகும்?

 ஒருவர் தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டி மீண்டும் அந்தத் தவறை இழைக்காமல் அதன் மூலம் தன்னை திருத்திக் கொண்டு வாழ்தலே சரியான வாழ்க்கை முறை என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

 இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் ஆட்சி தான் நடைபெறுகிறது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நம் நாடு அன்பும், பண்பும் நிறைந்த அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் மக்களாலேயே அமைதியாக இயங்குகிறது.

 விதிமுறைகளும், சட்டங்களும் அதை தன் மனசாட்சியாகக் கொண்டு செயல்படும் மக்களுமே, ஒரு நாடு எனும் தேருக்கு அச்சாணியாக இருந்து இயக்குகிறார்கள்.
சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று ஒவ்வொருவரும் நம்ப வேண்டும். இதைத் தான் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்று உண்மையைப் பகர்கின்றார் ஒளவை பெருமாட்டி.

 மல்லையாவைச் சுட்டிக்காட்டி ஒவ்வொருவரும் தன் கடமையை, ஒழுக்க நெறிமுறைகளை, சட்டத்தின் விதிகளை பின்பற்ற மறுத்தால் இந்த நாட்டிற்கு அரசும், நீதிமன்றமும் தேவையில்லையே.

பாறப்புறத் இராதாகிருஷ்ணன் – தினமணி