Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2016
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,969 முறை படிக்கப்பட்டுள்ளது!

கடமை தவறாத போலீஸ்காரர் – சிறுகதை

imagesCA96NG0X‘தக்காளி.. வெங்காயம், உருளக்கெழங்கு, மெளகா.., பூடு..’ வாய்க்குள் முணுமுணுத்தபடியே சின்னத் தாளில் விலையை மட்டும் எழுதிக் கொண்டே வந்த ஆறுமுகம் பூண்டில் நிறுத்தி விட்டு செல்லத்தை நிமிர்ந்து பார்த்தான்.

“இன்னிக்கு பாருங்க. வீட்டுக்காரம்மாக்கு ஒடம்பு சரியில்ல. சனிக்கிழமையானா டீச்சரம்மாக்கு பூண்டு வேணுமேன்னு அவ பொலம்புனதைக் கேட்டுட்டு, காந்திதான் உரிச்சுக் கொடுத்துச்சு. ரெண்டே பாக்கெட்தான் இன்னிக்கு. ஒளிச்சுல்லா வச்சிருந்தேன் ஒண்ண உங்களுக்கின்னே” என்றான்.

“ஆஹா. காந்தி உரிச்சதா. நல்லாப் படிக்கிறாளா குட்டி?” புன்னகைத்த செல்லம் “இதையும் சேத்துக்க” என ஒரு காலிஃப்ளவரை தூக்கிக் கூடையில் போட்டார்.

கிடுகிடுவெனெ இருபது சாமான்களுக்கும் விலையைப் போட்டுக் கூட்டி, ‘சரக்’ எனக் கிழித்து ஆறுமுகம் நீட்டிய துண்டுக் காகிதத்தை ‘வெடுக்’ எனப் பிடுங்கினார் பின்னாலேயே வந்து நின்ற செல்லத்தின் கணவர் சுந்தரம்.

“கம்ப்யூட்டரை விடல்லா வேகமாப் போடுத பில்ல? இரு.. இரு கூட்டிப் பாக்குறேன்” என்றபடி எண்கள் மேல் குறும்பாகக் கண்களை ஓட்டத் தொடங்கினார்.

“அட. அவனைச் சீண்டிப் பாக்கறதுல அப்படி என்னதான் சந்தோசமோ ஒங்களுக்கு. நீ கண்டுக்காத ஆறுமுவம்” என்றார் செல்லம்.

“விடுங்கம்மா. கூட்டிப் பாக்கட்டுமே ஐயா. நம்ம கணக்குலயும் சரி வெயாவாரத்துலயும் சரி ஒரு தப்பு கண்டுபுடிக்க முடியாதுல்லா.” என்றான்.

“அது தெரியாமலா இருக்காரு. நீ வேற. ” என்ற செல்லம் “ஆரம்பத்துல நா கூடதான் நீ போடுத வெல, ஒன் கூட்டல் இதெல்லாம் சரியா இருக்குமோன்னு சூப்பர் மார்க்கெட் வெலபப் பட்டியலோடு வச்சுப் பாத்து, கால்குலேட்டரில் கூட்டிப் பாத்துன்னு இருந்தேன். ஊஹூம். ஒரு தடவயாவது மாட்டுவன்னு நெனச்சு ஏமாந்ததுதான் மிச்சம். ஒன் வண்டில எல்லாக் காயும் ஃப்ரெஷ்ஷா இருக்கதனால மட்டுமா கூட்டம் பிய்க்கி. அவங்கள விட சாகாயமாவும்லா குடுக்கிற.” எனப் புகழ்ந்தாள்.

“எல்லா ஒங்க ஆசிர்வாதம்” நெஞ்சில் கைவைத்துச் சிரித்தான் ஆறுமுகம்.

“ஒண்ண ஒத்துக்கிட்டே ஆகணும்பா. நீ இங்க வண்டி போடதுக்கு முன்னால மார்க்கெட் போய் நா காய் வாங்கிட்டு வந்தேன்னு வை. அது சூத்த.. இது சொள்ளன்னு நம்ம ஒரு வழி பண்ணிருவாங்க. இப்ப லிஸ்டை வாங்கிட்டு தைரியமா ஒங்கிட்ட வரமுடியுதே.” என்றார் சுந்தரம் தன் பங்குக்கு, பையை வாங்கியபடியே.

பெருமிதமாய் இருந்தது ஆறுமுகத்துக்கு. ஆயிற்று கிட்டத்தட்ட ஆறேழு வருஷம், ஊர் விட்டு ஊர் வந்து தள்ளு வண்டியில் கறிகாய்க் கடை போட்டு. சரியாய் நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நேரத்தில் இவன் வேலைபார்த்த பீடி ஃபாக்டரியை இழுத்து மூடிவிட்டார்கள். கல்யாணம் நின்று போய்விடும் நிலை. தீபாவளிக்கு ஊருக்கு வந்திருந்த தெய்வநாயகம் அண்ணாச்சிதான் கடவுள் போல ‘பையன் பொழைக்க நா கியாரண்டி. கல்யாணம் முடிஞ்ச கையோட பெங்களூரு கூட்டிட்டு போயிருதேன்’ன்னு பெண் வீட்டில் பேசி முடித்து வைத்தார்.

இருபது வருஷமாக அந்தப் பகுதி பேருந்து நிலையத்தில் பத்திரிகைக் கடை வைத்திருந்தார் தெய்வு அண்ணாச்சி. பெட்டிக்கடைதான். ஆனாலும் அந்த எட்டுக்கு எட்டு கடை அவரை லட்சாதிபதியாய் வைத்திருக்கிறது. டிவி வந்த பிறகு வாசிப்புக் குறைந்து விட்டது என்பவர்கள் இவர் கடையின் முன் ஒருநாள் இருந்து பார்க்க வேண்டும். எல்லா மொழிப் பத்திரிகைகளும் வேகவேகமாய் விற்றன. வருடக் கணக்காய் வந்து போகிறவரெல்லாம் அவரோடு நட்பு பாராட்டினர். கூடவே ரியல் எஸ்டேட், வாகன விற்பனைக்கானத் தகவல் பரிமாற்றம் என்றிருந்த அவரது உழைப்பும் சுறுசுறுப்புமே அவனுக்கு முன் உதாரணமாகிப் போனது.

சொன்ன சொல் மாறாமல், நான்கு மாதங்கள் தன் வீட்டோடு தங்க வைத்து, தெரிந்தவர் கடையில் சேர்த்துவிட்டு, வேலை பழக்கி, தள்ளு வண்டி வியாபாரத்தை ஆரம்பித்தும் கொடுத்துவிட்டார். தனி வீடு எடுத்ததும் ஊருக்குப் போய் மனைவி வள்ளியை அழைத்து வந்து விட்டான். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பக்கத்து வீட்டுக்காரரின் ஆட்டோவை எடுத்துக் கொண்டு கங்கனஹள்ளி மார்க்கெட் போய் விடுவான் கொள்முதல் செய்ய. அள்ளிப் போட்டோமா வந்தோமா என்றில்லாமல் ஒவ்வொருவரின் தேவையையும் மனதில் நிறுத்தி பார்த்துப் பார்த்து வாங்குவான்.

‘பாளேதண்டு மத்தே பாளேஹூவு இஷ்டு ஃப்ரெஷ் ஆகி ஈகடே யாவு அங்கடியல்லு சிக்கோதில்லா’

‘தோ கிலோ மஷ்ரூம் ச்சாயியே யே ரவிவார்’

‘கொச்ச கொச்சயாய் வாட் எ க்யூட் சைஸ்! ஸ்டஃப்ட் கேப்சிகம் செய்யான் வேண்டி ஆறுமுகம் யான் நிங்களத் தேடி வரும்!’

இந்த நம்பிக்கைகளைக் காப்பாற்றியதோடு அவரவர் மொழியிலேயே பதில் சொல்லத் தெரிந்திருந்தான். ‘எல்லா பாஷையும் தெரிஞ்சாதான் இந்த மண்ணுல காலந்தள்ள முடியும்.’ தெய்வு அண்ணாச்சி சொல்லித் தந்தது. முப்பது நாட்களில்.. புத்தகங்கள் சொல்லித் தந்ததை விட வாடிக்கையாளர்களிடம் பேசிப்பேசி கற்றதே அதிகம்.

இவன் வாங்கி வருபவற்றைப் பிரித்துத் தள்ளு வண்டியிலே வகைப்படுத்தி அடுக்குவாள் வள்ளி. சின்ன வெங்காயம், வெள்ளை பூண்டுகளை உரித்து வார நாளுக்கு இவ்வளவு, வாரயிறுதிக்கு இவ்வளவு எனக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாக்கெட் கட்டித் தருவாள். விற்காவிட்டால் குப்பையில் கொட்ட வேண்டிய தொழிலில், ‘கை சுத்தம்’ எனும் பேரைக் கட்டிக் காப்பது சவாலாய் இருந்தாலும் சந்தோஷமாய்ச் சமாளித்து வந்தான். ஆறுவயது ஆகி விட்ட மகள் காந்திமதியும் அவளால் முடிந்ததைச் செய்ய ஆரம்பித்து விட்டாள். சனி, ஞாயிறுகளில் அடம் பிடித்து இவனோடு வியாபாரத்துக்கு வருவதுண்டு. செல்லம் போன்ற சிலர் அவளோடு பேச்சுக் கொடுப்பார்கள். இன்று கூட மதிய உணவைத் தான் கொண்டு தருவதாய்ச் சொல்லியிருந்தாள் காந்திமதி.

பிரதான சாலையின் திருப்பத்தில் உள்ளடங்கி நின்ற வேப்பமரத்தடி அவனுக்கானதாகிப் போயிருந்தது. பக்கத்திலேயே பேர் பெற்ற சூப்பர் மார்க்கெட், இரண்டு, மூன்று வங்கிகள் என இருந்தாலும் அதன் வாடிக்கையாளர்கள் மட்டுமில்லாமல் இவனைத் தேடியே வாகனங்களை ஓரம் கட்டி விட்டு வாங்கிப் போவோரும் உண்டு. செல்லம் கூட அப்படிதான்.

சுந்தரத்தின் கிண்டல் பழசை அசை போட வைத்தாலும், பரபரவென வியாபாரம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. நண்பகல் நெருங்க கூட்டம் குறைந்த வேளையில் பசிக்க ஆரம்பித்திருந்தது.

திடீரென போலீஸ் வண்டி வந்து நிற்கவும் அந்த இடத்தில் ஒரு பரபரப்பு சூழ்ந்தது. பண்டிகைக் காலம் நெருங்கி விட்டால் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டத்தைக் குறிவைத்துச் சாலையோரத்தில் தற்காலிகக் கடைகள் நிறைய முளைத்து விடும். அப்போது போலீஸ்காரர்கள் கெடுபிடி செய்வது வாடிக்கைதான். நீண்ட கம்பினை டபடபவெனத் தரையில் தட்டி மூட்டையைக் கட்டிக் கொண்டு ஓட வைப்பார்கள் வியாபாரிகளை. அன்று பழங்கள், பூக்கள், தீபாவளிக்கென அகல்விளக்குகளோடு புதிதாய் நாலைந்து பேர்கள் கடை விரித்திருந்தார்கள்.

“கெளம்புங்க. கெளம்புங்க. இல்லே வண்டில ஏத்திருவேன்” கம்பைத் தரையில் விளாசியபடி சத்தம் போட்டுக் கொண்டிருந்த போலீஸ்காரருக்கு ஐம்பது வயதாவது இருக்கும். நரைத்த முறுக்கு மீசையும், அரையடிக்குத் தள்ளிய தொந்தியும், கன்னத்தில் பெரிய மருவுமாய், வயதான பூக்காரம்மாவை மிரள வைத்துக் கொண்டிருந்தவரை இதற்கு முன் அந்த ஏரியாவில் பார்த்ததில்லை ஆறுமுகம்.

“அஞ்சு நிமிசம் கொடுங்கய்யா. வெளக்கெல்லாம் ஒடையாம அள்ள வேண்டாமா” எனக் கெஞ்சினார் ஒருவர். “சீக்கிரம். சீக்கிரம்” என்றவரின் பார்வை அடுத்து ஆறுமுகத்தின் மேல் விழுந்தது. முகத்தில் எந்தப் பயமும் இல்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தோரணை அவரை உசுப்பி விட்டிருக்க வேண்டும்.

“ஏம்ப்பா. ஒனக்குத் தனியாச் சொல்லணுமா?” என்றார் கண்கள் சிவக்க. ஒருகணம் திகைத்தான் ஆறுமுகம். எதிர்பார்க்கவில்லை இதை. அவனது வண்டி சாலை போக்குவரத்துக்கோ, பாதசாரிகளுக்கோ எந்த இடையூறும் ஏற்படுத்தாத மூலையில் இருந்ததோடு, வாடிக்கையாய் நிற்பவனென இதுவரை எவரும் அவனைக் காலி செய்யச் சொன்னதில்லை.

“சார். இங்க நா ஆறு வருஷமா நிக்கேன்” என்றான்.

“அதனால.. ” எகத்தாளமாய்க் கேட்டார்.

“இங்க கடை இருக்கதுல யாருக்கும் எடஞ்சல் இல்லியே சார்? உள்ள தள்ளிதான…”

“ஆளாளுக்கு கெடச்ச எடத்துல கடயப் போட்டுக்கிட்டு அப்பன் சொத்தாட்டம் உரிமை வேற கொண்டாடுறீங்களோ? எதுத்துப் பேசாம கட்டுறா மூட்டைய” எனக் கம்பால் வண்டி மேல் ஓங்கித் தட்டியதில் அடுக்கி வைத்திருந்த குடை மிளகாய்கள் சரிந்து ஓடின. காந்திமதியின் பிஞ்சுக் கைகள் உரித்துக் கொடுத்த பூண்டு பாக்கெட் கிழிந்து பூண்டுகள் நட்சத்திரங்களாய்ச் சிதறின. நெஞ்சில் அடித்த மாதிரி இருந்தது ஆறுமுகத்துக்கு.

“சொல்ல வாரத முழுசாக் கேட்டதான. கையில நூறு ஐநூற அமுக்குறவனுகள விட்டுருவீங்க. அப்பாவிங்களச் சாகடிப்பீங்க”

ஆறுமுகத்தின் போறாத வேளை. கீழே வைத்திருந்த வெங்காயம், உருளைக் கிழங்கு மூட்டைகளை வண்டிமேல் ஏற்றியபடியே அவன் முணுமுணுத்தது அந்த அல்லோகலத்திலும் அட்சரம் பிசகாமல் அவர் காதில் விழுந்து தொலைத்து விட்டது.

“என்னடா சொன்ன நாயே..” என அவன் சட்டைக் காலரைப் பற்றித் தெரு நடுவே இழுத்து, வேகமாய் இரண்டு சுற்று சுற்றிக் கையை எடுக்கவும் அப்படியே மல்லாக்க விழுந்தான் ஆறுமுகம்.

நேர் மேலே உச்சிச் சூரியன் தகிக்க, கண்களுக்குள் மின்மினிப்பூச்சிகள் பறந்தன. நொடியில் அவனைச் சூழ்ந்து கொண்டது கூட்டம். கேவலமாய்க் கைகளைக் கால்களைப் பரப்பி எழக்கூட முடியாத அதிர்ச்சியில் கிடந்தான்.

‘அட நம்ம ஆறுமுகம்” “தூக்கி விடுங்க” “சோடா வாங்கிட்டு வாங்கப்பா யாராவது” “அடப்பாவமே” “அச்சச்சோ” அனுதாபக் குரல்களைத் தாண்டி “ஐய்ய்ய்யோ…. அப்ப்ப்ப்பா….” எனக் கேட்ட காந்திமதியின் குரலில் சர்வ நாடியும் ஒடுங்கிக் கூசிப் போய் விட்டான். பெற்ற மகளுக்கு முன் எந்தத் தகப்பனுக்கும் வரக் கூடாதத் தலைக்குனிவு.

வெடவெடவென நடுங்கிய அவள் கையிலிருந்து நழுவி விழுந்தது சாப்பாட்டுக் கூடை. அவன் அருகே அமர்ந்து அழத் தொடங்கி விட்டாள். சுதாகரித்துக் கொண்டு “ஒண்ணுமில்லடா காந்தி” என ஈனஸ்வரத்தில் சொன்னபடி எழுந்து உட்கார்ந்தான். அதற்குள் போலீஸ்காரர் இவன் காய்கறி வண்டியைக் கம்பால் குறுக்கும் நெடுக்குமாய் தட்டிக் கலைத்துப் போட்டு விட்டுக் கூட்டத்தைப் பிளந்து அருகே வந்தவர் “இனி இங்க ஒங்கடையப் பாத்தேன்.. தொலச்சுப் புடுவேன்” உறுமியபடியே வண்டியேறிப் போனார்.

“ஏம்ப்பா ஒன்ன அந்த போலீஸ்காரரு தள்ளி விட்டாரு. எதுக்கு இந்தத் திட்டு திட்டுறாரு” அவள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் “வா வண்டியத் தள்ளிட்டு வீட்டுக்குப் போகலாம்” என சாமான்களைக் கட்டத் தொடங்குகையில் “பாருப்பா. நான் உரிச்ச பூண்டல்லாம் கொட்டிக் கெடக்கு” மறுபடியும் அழ ஆரம்பித்தாள் காந்தி.

வீட்டிலேயே முடங்கி விட்டான் ஆறுமுகம். நான்கு நாட்களாய் இரவும் பகலும் மீசைக்கார போலிஸின் உறுமலும் எகத்தாளமும் அவனைத் தொடர்ந்து கொண்டேயிருந்தன.

“ஏலேய். நெசமா என்ன நடந்துச்சுன்னு சொல்லுலே. இந்தூருப் போலிசுங்க அத்தன லேசுல பப்ளிக் மேலக் கைவச்சிர மாட்டாங்க. ஏதாவது வாய விட்டியா?”

“என்ன சொல்ல வரேன்னு பொறுமையாக் கேட்டிருந்திருக்கலாம்லா அந்தாளு. ஏழபாழைங்கன்னா அத்தன எளக்காரமாப் போச்சு.” நடந்ததை விவரித்ததும் அண்ணாச்சிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.

“தப்பு ஒம்மேலயுந்தால. அண்ட வந்த எடத்துல இந்த வாயடி எதுக்கு? அவரு நெசமாவே லஞ்சம் வாங்காதவரா இருக்கலாம். நீ மட்டும் ஒன் தொழிலுல யாரும் ஒரு பெசகு சொல்லிரக் கூடாதுன்னு இருக்கேல்ல? ஒரு கிலோ தக்காளி வாங்குனா அதுல அழுகிப் போன நாலஞ்ச உருட்டி விட்டு மனுஷங்க வயித்தெரிச்சல வாங்கிக் கட்டறவனோட ஒன்னய ஒண்ணா வச்சுப் பேசுனா சும்மா இருப்பியா?”

“சரி ஏதோ எக்குத் தப்பா சொல்லிட்டந்தான். அதுக்காக இப்பிடியா..”

” விடுல! சும்ம சொன்னதயேச் சொல்லிக்கிட்டு. கவர்மென்ட் ஆர்டரு போடுத நேரம் இப்பிடி மிரட்டி வெரட்டறதும், நாலு நாளுல மறுபடிக் கடயப் போடேலக் கண்டுக்காமப் போறதும் இங்க வழக்கந்தான்னு தெரியாதா என்ன?” என்றவர் “சரி சரி, கெளம்பு வியாவாரத்துக்கு. எடத்த வேறெவனும் புடிச்சுக்காம பாத்துக்கச் சொல்லிருக்கேன். தீவாளிக்கு ஒரு வாரந்தான் கெடக்கு.”

மறுத்து விட்டான் ஆறுமுகம்.

“நமக்கும் மான ரோசம் இருக்குல்லா. ஊரப்பாக்கவே கெளம்புதேன். இனி எந்த மொகத்த வச்சுட்டு அங்க கட போட. போறவன் வாரவன்லா துக்கங் கேப்பான்.”

“ஓஹோ. தொர ஊருக்குப் போனப்ல. அங்க மட்டும் ‘ஏன் வந்துட்ட’ன்ன கேக்க மாட்டானுவளா? அடிபட்டு மிதிபட்டுதாம்ல மேல வரணும். இந்தப் பட்டணத்துல நா பாக்காத பிரச்சனயா. அத விடு. அப்டியே ஊருல இதே வியாவாரத்தை நீ செஞ்சாலும் இந்த அளவுக்கு சனங்க, விற்பன இருக்கும்னு சொல்ல முடியாது.” எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். இவன் கேட்பதாய் இல்லை.

“சென்மத்துக்கும் அந்தப் போலீஸ்காரனயும் அவன் பண்ண அடாவடியையும் மறக்க முடியாதுன்னு தோணுது அண்ணாச்சி. இந்த ஊர்லயே இருந்தா நெனச்சு நெனச்சே எனக்குப் பைத்தியம் பிடிச்சிரும் போலருக்கு. ஊருக்கு போக பஸ்ல டிக்கெட் கூட போட்டுட்டேன்” என்றான்.

“சொல்லதச் சொல்லிட்டேன். அப்புறம் ஒன் இஷ்டம்” அவர் வருத்தப்பட்டது இவனுக்கும் சங்கடத்தையே தந்தது. ‘மன்னிசிருங்க அண்ணாச்சி. பொட்டுத் தூக்கம் இல்ல. இனி இந்த மண்ணுல மனசு ஒட்டும்னு தோணல’ தனக்குள் சொல்லிக் கொண்டான்.

மறுநாளே “ஆறுமுவம் ஆறுமுவம்” என உற்சாகமாய்க் கூப்பிட்டபடியே வந்தார் தெய்வநாயகம்.

அவருக்கு பின்னால் சுந்தரமும் செல்லமும்.

“நீங்களா? வாங்கய்யா. வாங்கம்மா” என்றான் பரவசமாக.

ஓடிப் போய் செல்லத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் காந்திமதி.

அதன் பிறகு நடந்தததெல்லாம் கனவு போலிருந்தது. செல்லம் தான் வசித்த ஐநூறு வீடுகள் கொண்ட குடியிருப்புக்குள் அவன் கடை போட்டுக் கொள்ள அசோஷியனில் பேசி அனுமதி வாங்கி வந்திருந்தார். மீந்து போனால் கட்டுப்படியாகாது எனக் கை வைக்காதிருந்த பழங்கள் மற்றும் கீரைகள் என விரிவானது வியாபாரம். சுந்தரம் நிறைய ஆலோசனைகள் கொடுத்தார். ஒரே இடத்தில் நாள் முழுக்க இருந்தால் நினைத்த நேரத்துக்கு வந்து வாங்கிக் கொண்டிருப்பார்கள் என பக்கத்துக் குடியிருப்பிலும் அனுமதி வாங்கிக் கொடுத்தார். காலை மாலை இருவேளைகளிலும் மூன்று மணி நேரம் இங்கே, மூன்று மணி நேரம் அங்கே. ஆயிரம் வீடுகளில் தினம் நானூறு பேராவது வாங்கினார்கள். இரண்டே வருடத்தில் இரண்டாவது விலையில் ஒரு வேன் வாங்கி விட்டான். வேலைக்கு இரண்டு ஆட்களை வைத்துக் கொண்டான். தள்ளு வண்டி போய் வேனையே ‘மொபைல்’ கறிகாய்க் கடையாக ஆக்கிவிட்டான். தங்கியிருந்த வீட்டை விலை பேசிக் கொண்டிருந்தான்.

ஆரம்பத்தில் மீசைக்காரப் போலீஸ் மாதக் கணக்கில் மனதை அலைக்கழிக்கவே செய்தார். அதுவே வெறிபிடித்த மாதிரி வேலை பார்க்க வைத்தது. முன்னுக்கு வர வர அவரைப் பற்றிய நினைவு சற்று பின்னால் போனதென்னவோ நிஜம் என்றாலும் வெறுப்பு மட்டும் குறையவே இல்லை. அதன் பிறகு சில தடவைகள் அந்தப் போலீஸ்காரரை வெவ்வேறு இடங்களில் பார்த்திருக்கிறான். இன்னும் பெரிய ஆளாகி அவர் முன்னால் போய் நிற்க வேண்டுமென ஒரு சமயம் நினைப்பான். இன்னொரு சமயம் ‘அந்த மனுசன் மூஞ்சில நாம எதுக்கு முழிக்கணும்’ எனக் கொதிப்பான்.

அவன் ஒன்றும் அடி, அவமானம் பார்க்காமலே வளர்ந்தவன் இல்லை. பள்ளியில் சரித்திர வாத்தியார் வாங்கு வாங்கென வாங்கியிருக்கிறார். கணக்கில் புலியாய் இருந்தாலும் பத்தாவதில் ஆங்கிலத்திலும் சரித்திரத்திலும் கோட்டை விட்டு நின்ற போது அப்பா தெருவே பார்க்க பெல்டால் விளாசி ‘பீடி சுத்ததாம்ல லாயக்கு’ எனப் பேட்டை ஃபாக்டரி ஒன்றில் கொண்டு தள்ளி விட்டிருந்தார்.

அதெல்லாம் ரொம்பப் பழைய கதை. எப்போது அண்ணாச்சியுடன் இரயில் ஏறினானோ அப்போதே புதுப்பிறவி எடுத்திருந்தான். திறமையாலும் நேர்மையாலும் பணத்தை விட கெளரவத்தையும் மனிதர்களையும் சம்பாதித்திருந்ததில் பெருமைப்பட்டிருந்தான். அழகாய் அடுக்கிக் கொண்டே வந்த சீட்டுக்கட்டு வீட்டை நொடியில் கலைத்துப் போட்டவர் என்றைக்கும் தனக்கு எதிரிதான் என சொல்லிக் கொள்வான். அண்ணாச்சி சிரிப்பார்.

“அன்னிக்கு மட்டும் அவன் ஒன்னயப் பிடிச்சுத் தள்ளலேன்னா நீ இந்த அளவுக்கு மேல வந்திருப்பியான்னு யோசில” என்பார்.

ஒப்புக் கொள்ள மாட்டான். ” நான் இருக்க நல்ல நெலமைக்கு நீங்க டீச்சரம்மா, சுந்தரம் சார் எல்லாந்தான் காரணம். அந்தக் காட்டு மிராண்டிய சேக்காதீங்க உங்களோட. அதிகாரம் கையில இருந்தா என்ன வேணா செய்வானாமா? அரசன் கேக்காட்டிப் போனப் போது. தெய்வம் நின்னு கேக்கும் ஒரு நாள், ஆமா” என்பான்.

விடிந்தால் தீபாவளி. இவன் குடியிருப்பில் கடை போட்டதும் சரியாக தீபாவளிக்கு முந்தைய தினம்தான். தன் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர்களுக்குப் பதில் மரியாதை செய்யும் எண்ணம் தோன்றியது.

“அதுக்கென்ன என் கையால எல்லோருக்கும் விதவிதமா பலகாரம் செஞ்சுருதேன்.” என்றாள் வள்ளி.

“செரமப் படாத. பேருக்கு ரெண்டு பலகாரம் பண்ணு. நல்ல கடையா பாத்து வெளியில வெரைய்டியா வாங்கிக்கலாம்”

செல்லம் டீச்சருக்கு, தெய்வு அண்ணாச்சிக்கு, அக்கம்பக்கத்து நண்பர்களுக்கு என லிஸ்டோடு காந்திமதியைக் கூட்டிக் கொண்டு வேனில் கிளம்பினான். அன்றைக்கு அவனது வியாபாரம் முடியவே இரவு ஒன்பது மணியாகி விட்டது. அதற்கு மேல் சிவாஜி நகர் போய் வாங்கிக் கொண்டு திரும்பி வருகையில் ஐப்பசியின் அடைமழை ஆரம்பித்து விட்டிருந்தது.

வண்டியை ஓட்டவே சிரமமாய் இருந்தது. “இந்த ஊத்து ஊத்துதே.. ச்சே..” எனச் சலித்தவனைப் பார்த்து “என்னப்பா நீ. மழை பெஞ்சாத்தானே நமக்கு காய்கறி பழமெல்லாம் கிடைக்கும். நம்ம பிஸினஸ் நல்லா நடக்கும். அதத் திட்டாத” என்றாள் காந்திமதி.

“ஆமா தாயீ. நீ சொல்றதுதான் சரி. மன்னிச்சுக்கப்பா சாமீ!” சிரித்தபடி வானம் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

சும்மாவேக் கொடுமையாய் இருக்கும் பெங்களூரின் வாகன நெரிசல். மழையும் சேர்ந்து கொள்ள கன்டோன்மென்டிலிருந்து எந்தப் பக்கமும் நகர வழியின்றி ஊர்ந்து ஊர்ந்து ஃபன் வொர்ல்ட் வரவே நாற்பது நிமிடமாகி விட்டது. என்னதான் பிரச்சனை என எம்பி எம்பிப் பார்த்தபடி வந்தவனுக்குப் பிறகுதான் தெரிய வந்தது அடுத்து வந்த சந்திப்பில், அடித்த மழையில் சிக்னல் வேலை செய்யாமல் போயிருந்தது. போதாக்குறைக்கு மரத்தின் பெரும் கிளையொன்று சரியாக அந்த இடத்தில் முறிந்து சாலையின் குறுக்காகக் கிடந்தது. ரெயின் கோட் மாட்டிக் கொண்டு ஒரு போலீஸ் நடு வீதியில் நின்று வாகனங்களை வழிபடுத்திக் கொண்டிருந்தார். வலப்பக்கம் திரும்ப இவன் முறை வரும் நேரம் பார்த்து ‘ஃப்பீ..’ என விசிலை ஊதி நிறுத்தினவரின் முகத்தில் இவனது வண்டி ஹெட் லைட் வெளிச்சம் விழ, “அப்பா. இது அவரு அவரு” என்றாள் காந்திமதி.

அவரேதான். ‘இல்லை.. அவனேதான்..’

முறுக்கு மீசை. பெரிய மரு. அந்த இரவிலும் மழையிலும் கூட நொடியில் அடையாளம் தெரிந்து கொள்ள முடிகிறதென்றால் தன்னைப் போலவே காந்திக்கும் அந்தச் சம்பவம் மறக்கவேயில்லை என நினைத்துக் கொண்டான்.

அப்போதுதான் அது நிகழ்ந்தது. எதிர்திசை வண்டிகள் அனுமதிக்கப் பட்டிருக்க, நிறுத்தப்பட்ட அவனது வரிசையிலிருந்து ஒரு பைக் சீறிக் கிளம்ப எத்தனித்தது போலீஸ்காரரைத் தாண்டி. அதிலிருந்த இருவருமே இளைஞர்கள். “நில்லுங்கடா… டேய்… ” என்றபடி அவர் பைக்கின் பின் இருக்கைக் கம்பியைப் பற்ற, சற்றே தயங்கிய இளைஞன், விசுக் என வேகத்தை அதிகரித்து விட்டான். பிடியை விடாமல் கூடவே பத்தடி ஓடியவர் தடுமாறித் தலைகுப்புற விழுந்தார் நடுச் சந்தியில். “ஹோ..” என்று கைகளைத் தூக்கிக் கூச்சலிட்டபடி திரும்பிப் பார்க்காமல் சென்ற விட்ட இளைஞர்கள் அநேகமாய்ப் போதையில் இருந்திருக்க வேண்டும்.

ஒரு விநாடி ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டன வண்டிகள். என்ன நடந்ததென அறியாமல் பின்நின்ற வாகனக்காரர்கள் ‘பீம் பீம்’ என எழுப்பிய ஹாரன் ஒலிகளுக்கு மத்தியில், இடியோடு வெட்டிய மின்னல் வெளிச்சத்தில், பெருக்கெடுத்த மழைநீருக்குள் அசைவற்றுக் கிடந்தார்.

ஆறுமுகமும் காந்திமதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அரை நிமிடம் கழித்து மெல்லத் தலையைத் தூக்கிப் பார்த்த போலீஸ்காரர் எழுந்து உட்கார்ந்தார். அவ்வளவுதான். நின்ற வண்டிகள் அவரைச் சுற்றித் தம் போக்கில் செல்ல ஆரம்பித்து விட்டன.

“அப்பா.. பாவம்ப்பா..” என்றாள் தயங்கித் தயங்கி காந்திமதி.

சட்டென வண்டியை முறிந்து கிடந்த மரக்கொப்பின் பக்கமாய் ஒடித்து நிறுத்தி விட்டு, ‘உள்ளயே இரு’ மகளுக்கு சைகை காட்டிவிட்டு இறங்கி ஓடினான்.

அதற்குள் குடையோடு எங்கிருந்தோ விரைந்து வந்தார் ஒடிசலான ஒரு போலீஸ்காரரும். இருவருமாய்ச் சேர்ந்து அவரைக் கைத்தாங்கலாய் அருகேயிருந்த பஸ் ஸ்டாப்பின் பெஞ்சில் உட்கார வைத்தார்கள்.

உடலெங்கும் சேறு. நெற்றியிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. கை, கால் முட்டிகளில் சிராய்ப்பு.

“கடமை, கடமைன்னு இப்ப உசுர விடப் பாத்தீரே. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகியிருந்தா.. அப்பவே சொன்னேன். ‘எப்படியும் தொலையட்டும்னு ஓரமா நிப்போம். கட்டுக்கு மீறி ஏடாகூடமா ஏதும் ஆச்சுன்னா சிக்னல் மேலப் பழியப் போட்டு நழுவிக்கலாம்’னு. கேட்டீரா?”

ஆறுமுகம் தன் கர்ச்சீஃபை எடுத்து அவர் தலையைச் சுற்றி அழுத்திக் கட்டினான்.

“ஆழமாவே வெட்டிருக்கு. நாலு தையலாவது வேண்டியிருக்கும் போல. என் பைக்கில பாப்டிஸ்ட் ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்” என்ற ஒடிசல் போலீஸ்காரரிடம் “மழையில் சங்கடம்ங்க. என் வண்டி அதோ நிக்கி. நா கொண்டு விட்ருதேன்” என்றான் ஆறுமுகம்.

“அதான் சரி. போய் எடுத்திட்டு வந்திருப்பா” என்றார்.

மீசைக்கார போலீஸோ “அதெல்லாம் வேண்டாம் தம்பி. செஞ்ச ஒதவியே பெருசு. ரொம்ப தாங்க்ஸ். ஒரு ஆட்டோ பிடிச்சு போய்கிறேன்” என்றார்.

“உக்கும். பப்ளிக் கிட்ட உதவி வாங்கறதும் புடிக்காது இந்த மனுசருக்கு. அவசர ஆபத்துக்கு பாவமில்ல. நீ போய் கொண்டாப்பா வண்டியை” என்றார் மற்றவர்.

திரும்பி ஓடினான். தன்னை அடையாளம் தெரியவில்லை எனப் புரிந்தது. இருளும், அவர் இருந்த சூழலும் என்பதை விட, நினைவு வைத்திருக்க வாய்ப்பில்லை என்பதே சரி. ஒரு நாளில் எத்தனை இடங்களில் எத்தனை பேரைச் சந்திக்கிறவர்?

“காந்தி, அவர நாம ஆஸ்பத்திரில விடப் போறோம். அவரு பேச்சுக் கொடுத்தாலும் முன்னமே தெரியும்கிற மாதிரி எதுவும் காட்டிக்காத. புரிஞ்சுதா” மகளை எச்சரித்தபடி வண்டியை பஸ் ஸ்டாப் அருகே கொண்டு சென்றான்.

“நீ உள்ள கூடப் போக வேண்டியதில்லப்பா. தகவல் சொல்லிட்டேன். ஆஸ்பத்திரி வாசல்லயே எங்காளுங்க ரெண்டு பேரு தயாரா நிப்பாங்க. எறக்கி விட்டாப் போதும்.” என்றார் ஒடிசல் போலீஸ்காரர்.

“என்னால ஒங்களுக்குச் சிரமம்.” பின் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தார் மீசைக்காரர்.

“பரவாயில்லங்க” என்றான்.

“என்ன வரத்து வந்தாங்கன்னு நீங்களேதான் பாத்தீங்களே தம்பி. மரம் விழுந்ததுல கரெண்டு போச்சு. சிக்னல் இல்ல.. தெருவிளக்கில்ல.. கேமரா வேலப்பாக்காது.. போதாதா? வண்டி நம்பரயும் மழையில பாக்க முடியாதுங்கிற தைரியம்.”

தலையைத் தன் இரு கைகளாலும் அவர் அழுந்தப் பிடித்துக் கொண்டிருப்பது ரியர் வ்யூ கண்ணாடி வழியாகத் தெரிந்தது.

அவன் கவனிப்பதை உணர்ந்து “இந்த வலியெல்லாம் எனக்குப் பெருசே இல்ல” என்றார். “பழகிருச்சு. உசுரு எங்களுக்கு ஒவ்வொரு நாளுமே போய்ப் போய்தான் வருது. எவன் எங்கெ எப்படி அடிப்பட்டுக்குவானோன்னு பக்கு பக்குன்னேதான் பொழப்பத் தள்ளறோம். அவசரம்னு ஒருத்தன் காரணஞ்சொல்லிட்டு நிக்காமப் போவான். அவனப் பாத்து இன்னும் நாலு பேரு கெளம்புவான். எவனாவது ஒருத்தன் சக்கரத்துக்குள்ள மாட்டுவான்.”

சாய்ந்திருந்தவர் சீட்டின் முனைக்கு வந்து தொடர்ந்தார்.

“ரோட்டுல மனுசங்க நடக்க முடியுதா? எவனாவது ஒருத்தன் நடபாதயில கடயப் போட்டா அவனப் பாத்து இவன்னு வரிசையா கெளம்பிருதாங்க. துணி வாங்க, ஸ்வீட்டு வாங்க, பட்டாசு வாங்கன்னு அலை அலையா எங்க பாத்தாலும் சனங்க, நடக்க எடமில்லாம வண்டிகளுக்குள்ள வந்து விழுறாங்க. இல்ல.. சரியாத் திருப்ப எடமில்லாம வண்டிக்காரங்க யாரு மேலேயாவது ஏத்திடுறாங்க. அததுக்கு ஒரு எடம் ஏவல்னு இருக்குல்ல. வயித்துப் பொழப்புக்கு வியாவாரம். இல்லேங்கல. அதவிட மனுச உசுரு பெருசில்லியா. போனா வருமா? இன்னிக்கு மத்யானம் கூட இதோ இந்தப் பாப்பா வயசுதான். ப்ச். ஸ்பாட்லேயே.. . அதுலருந்து மீண்டு வராம மனசு பதச்சு நிக்கையில இந்தப் பசங்க… இப்படி! நடு ராத்திரல கொட்ற மழையில ஒரு மனுசன் எதுக்காக, யாருக்காக இப்படி அல்லாடுதான்னு நினைச்சுப் பாக்குறாங்களா…”

நெரிசல்களிலிருந்து வெளியேறி பெல்லாரி சாலையில் திரும்பியதும் சீரான வேகத்தில் ஓட்ட முடிந்தது வண்டியை. பேய் மழை இப்போது இதமான தூறலாகியிருந்தது.

“பாப்பா என்ன படிக்கிற?”

காந்திமதி பதில் சொல்லாமல் அப்பாவைப் பார்த்தாள் மிரட்சியுடன்.

“மாமா கேட்கிறாருல்ல. சொல்லு காந்தி” என்றான் புன்னகையுடன் ஆறுமுகம்.

ராமலக்‌ஷ்மி

அடை மழை  – கடமை தவறாத காவல் அதிகாரி – போலீஸ் காரர்களின் எதார்த்தமான வாழ்க்கை.