‘ஒரு மிகச் சிறிய செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், எதிர்பார்க்க முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கும்’ என்பது தான், வண்ணத்துப் பூச்சியின் விளைவு எனும், ‘கேயாஸ் தியரி’ எனப்படும் கேயாஸ் கோட்பாடு.
இந்த கோட்பாட்டை உருவாக்கிய எட்வர்ட் லோரன்ஸ், ‘பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பால் ஏற்படும் சலனத்துக்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு’ என்றார். எங்கோ நடக்கும் ஒரு செயல், மற்றொரு இடத்தில் நடக்கும் மாபெரும் விளைவுக்கு எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம்.
என்ன தொடர்பு: அதுபோல, தென் பசிபிக் கடலை ஒட்டி அமைந்துள்ள தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடந்த நிலநடுக்கத்துக்கும், வட பசிபிக் கடலை ஒட்டி அமைந்துள்ள ஐப்பானில் நடந்த நிலநடுக்கத்துக்கும், இந்தியாவில் உருவாகியுள்ள வறட்சிக்கும், ஏதாவது தொடர்பு இருக்குமா? தற்போது உலகெங்கும் மிகவும் அதிகமாக பேசப்படும், ‘எல் – நினோ’ எனப்படும், பருவநிலை மாறுபாடின் தாக்கமே இதற்கெல்லாம் காரணம் என, விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதாவது, பெரு நாட்டுக்கு அருகே, பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம், உலகெங்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.ஸ்பெயின் மொழியில், ‘சின்னப் பையன்’ என அழைக்கப்படும் எல் – நினோ, பசிபிக் பெருங்கடலில் தட்ப வெப்பநிலை மாற்றத்தால், பருவநிலை யில் ஏற்படும் தாக்கத்தை குறிக்கிறது.
பசிபிக் பெருங்கடலின் அடியில், திடீர் வெப்பநிலை அதிகரிப்பால், தண்ணீர் சூடாகிறது. இதனால், கடலின் மேற்பரப்பில் உள்ள தண்ணீரும் சூடாகி, ஆவியாக மேலே சென்று, வாயுமண்டலத்தில் மழைமேகமாக மாறுகிறது. இதைத் தவிர, பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள நிலப் பரப்புகளிலும்
வெப்பநிலை உயருகிறது.
வழக்கமான தட்பவெப்ப சூழ்நிலைகளின்போது, வளிமண்டல அழுத்தமானது, கிழக்கு பசிபிக் பகுதியில் இருந்து மேற்கு நோக்கி நகரும்.எல் – நினோவின் தாக்கம் இருக்கும்போது, கிழக்கு பசிபிக் பகுதியில் வளிமண்டல அழுத்தம் குறைந்து விடுகிறது; அதே நேரத்தில் மேற்கு பசிபிக் பகுதியில், இது உயருகிறது. இதனால், வளிமண்டல அழுத்தமானது, மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகரும்.
இந்தப் பருவநிலை மாறுபாடுகளால், பசிபிக் கடலுக்கு கிழக்கே உள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து, வெள்ளம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் பசிபிக் கடலுக்கு மேற்கே உள்ள பகுதிகளில், வறட்சி ஏற்படுகிறது. கிழக்கு பகுதியில் வறட்சி ஏற்பட்டால், மேற்கு பகுதியில் வெள்ளம் ஏற்படுகிறது.பசிபிக் கடலின் அடியில் ஏற்படும் இந்த தட்பவெப்பநிலை மாறுபாடு, மற்ற பெருங்கடல்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நிலநடுக்கம், எரிமலைஎல் – நினோவின் இந்த பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் தாக்கத்தால், அதிக மழை பெய்யும் நிலப்பகுதியில், அழுத்தம் அதிகரிக்கிறது என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நிலப்பகுதியில் ஏற்படும் இந்த பாதிப்பு தான், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்றவற்றை, தற்போது அதிக அளவில் ஏற்படுத்துகின்றன என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வழக்கமாக, எல் – நினோ, அதிகபட்சம், இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும். இரண்டு முதல், ஏழு
ஆண்டுகளுக்கு ஒருமுறை, எல் – நினோ பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த, 1982 – 83ம் ஆண்டில் தான் இதன் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. அப்போது ஏற்பட்ட வறட்சி மற்றும் காட்டுத் தீ உள்ளிட்ட பாதிப்புகளால், தெற்காசிய நாடுகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மட்டும், 23 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டது.
அதே நேரத்தில் கிழக்கு பசிபிக் மண்டலத்தில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், மழை, வெள்ளம் போன்றவற்றால், 17 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.கடந்த, 2015ல் துவங்கிய எல் – நினோவின் தாக்கம், தற்போது தொடருகிறது. பல்வேறு நாடுகளில் ஏற்படும் நிலநடுக்கம், சுனாமி, வறட்சி, வெள்ளம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கு, எங்கேயோ கடலுக்கு அடியில் ஏற்படும் வெப்பநிலை மாறுபாடு தான் காரணமா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சியில்ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்ட ஆய்வுகளில், இந்த சம்பவங்கள் ஒன்றுக்கொன்று நேரடியான தொடர்பு இல்லாவிட்டா லும், ஒவ்வொரு மாறுபாடுகளும், மற்றொன்று ஏற்படுவதற்கு அடிப்படையாக உள்ளன என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
‘மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதா என கேட்கலாம். இயற்கையை சுரண்டத் துவங்கியதால் தான், இதுபோன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளை, இயற்கை சீற்றங்களை நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது’ என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
வந்துள்ளது ‘லா – நினா’
இந்தியாவில், 2002, 2009ல், எல் – நினோவால், மிகவும் குறைவான மழை பெய்தது. அதே நேரத்தில், 1994, 1997ல் பருவமழை இயல்பாக இருந்தது.இதனால், எல் – நினோவால், இந்தியாவில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை; மற்ற காரணங்களாலும் தான் பருவமழை பொய்ப்பதாக, ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
அதே நேரத்தில், எல் – நினோவுக்கு நேர் எதிரான, ‘லா – நினா’ சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளதால், இந்தியாவில், வரும் பருவமழை காலத்தின்போது, இயல்பைவிட அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆராய்ச்சி மையம் சமீபத்தில் அறிவித்தது.
பாதிப்புகள் என்ன?
எல் – நினோ ஏற்படும்போது, உலக நாடுகளில், ஒரே நேரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள்:
ஈக்வடார், பெரு நாடுகளில் பலத்த மழை தெற்கு பிரேசிலில் பலத்த மழை; வடக்கு பிரேசிலில் வறட்சி ஜிம்பாப்வே, மொசாம்பிக், தென் ஆப்பிரிக்கா, எத்தியோப்பியாவில் வறட்சி வட அமெரிக்கா, கனடாவில் வெதுவெதுப்பான குளிர்காலம் இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வறட்சி அல்லது மிகவும் குறைவான மழை.
நிலநடுக்கம் தொடருமா?
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், ஈக்வடார், ஜப்பான், மியான்மர், இந்தோனேஷியா, ஆப்கன் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு, பலர் உயிரிழந்தனர். சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
கடந்த, 20ம் நுாற்றாண்டின், முதல் 60 ஆண்டுகளில், ரிக்டர் அளவுகோலில், 8.5க்கு அதிகமான அளவு நிலநடுக்கங்கள், எட்டு நடந்தன. ஆனால் அதற்கடுத்த, 40 ஆண்டுகளில், மிகப் பெரிய
நிலநடுக்கங்கள் ஏதும் ஏற்படவில்லை.தற்போது, மீண்டும் அதுபோல, ஒரு நிலநடுக்க சுழற்சி ஏற்பட்டுள்ளதா என, புவியியற்பியலாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.இருப்பினும், நிலநடுக்க மண்டலங்களில் உள்ள நாடுகள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஈக்வடாரை உலுக்கிய நிலநடுக்கத்துக்கு 233 பேர் பலி:தென் பசிபிக்பெருங்கடலை ஒட்டி
உள்ள, தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 233 பேர் உயிரிழந்தனர்; நுாற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.ரிக்டர் அளவுகோலில், 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், பாலம் உட்பட பல்வேறு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
தலைநகர் கொய்டோவிலிருந்து, 170 கி.மீ., தொலைவில் உள்ள மியூஸ்னே நகரை மையமாக வைத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், சில விநாடிகள் நீடித்தது. அதைத் தொடர்ந்து அதிர்வுகளும் ஏற்பட்டதால், பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்தன.தலைநகர் கொய்டோ உட்பட நாட்டின் பல பகுதிகளில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மான்டா உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டன.ராணுவம், போலீஸ் மற்றும் தீயணைப்புப் படையினர், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
”இந்த நிலநடுக்கத்தில், 233 பேர் உயிரிழந்தனர்; நுாற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்,” என, ஈக்வடார் துணை அதிபர் ஜார்ஜ் கிளாஸ் தெரிவித்தார். பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள, 20 லட்சம் பேர் வசிக்கும் க்வாயாகில் நகரில், ஒரு பாலம் இடிந்து விழுந்தது. பல்வேறு கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாயின.
நகரும் பூமித்தட்டு பகுதியான ஈக்வடாரில், கடந்த, 100 ஆண்டுகளில், ரிக்டர் அளவுகோலில் ஏழுக்கும் அதிகமான அளவுக்கு, பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த, 1987ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 1,000 பேர் பலியாயினர்.
சுனாமி எச்சரிக்கை:நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஹவாயைச் சேர்ந்த பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், பசிபிக் கடலோர நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்திருந்தது. இதனால் இப்பகுதியில் பதற்றம் நிலவியது. ஆனால் சில மணி நேரங்களுக்குப் பின், அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.”வாடிகனுக்கு சென்றுள்ள, அதிபர் ரபேல் கோர்ரியா, மீட்புப் பணிகள் குறித்த தகவல்களை கேட்டறிந்து வருகிறார்,” என, துணை அதிபர் கிளாஸ் தெரிவித்தார்.
பீதியில் ஜப்பானியர்கள்:கடந்த சில நாட்களில் மட்டும், இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஜப்பானியர்கள் பீதியில் உள்ளனர். பலர், தெருக்களில் தங்கி வருகின்றனர். ஜப்பானின் கையூஷுவில், இரு தினங்களுக்கு முன், 6.5 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 10 பேர் பலியாயினர்; பலர் காயமடைந்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம், குமாமோட்டோவில், ரிக்டர் அளவில், 7.5 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 41 பேர் உயிரிழந்தனர்; 1,000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.குமாமோட்டாவில், 80 ஆயிரம் வீடுகளுக்கு, இரண்டு நாட்களாக மின்சாரம் வழங்கப்படவில்லை; நான்கு லட்சம் வீடுகளுக்கு குடிநீர் தடைபட்டுள்ளது. நிலநடுக்கத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
நன்றி: தினமலர்