‘உடல் எப்போதும் அசதியாகவே இருக்கிறது; கொஞ்சமாக உணவைச் சாப்பிட்டாலும், உடல் எடை கூடிக்கொண்டே போகிறது; மாதவிலக்கு சுழற்சி ஒழுங்காக ஏற்படுவதில்லை’… இப்படிச் சொல்பவர்களிடம், ‘உங்களுக்குத் தைராய்டு கோளாறு இருக்கிறதா?’ என்றுதான் கேட்கத் தோன்றும்.
இன்றைய பெண்களிடம் அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்சினைகளில், தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரக்கும் பிரச்சினை முக்கியமானது. பிறக்கும் குழந்தை முதல் இளம் வயதினர், நடுத்தர வயதினர் என்று பெண்களில் பலரையும் பாதிக்கும் பிரச்சினையாக இன்றைக்கு இது உருவெடுத்துள்ளது. இதை ஆரம்ப நிலையிலேயே கவனித்துச் சிகிச்சை பெற்றுக்கொண்டால், பின்னால் ஏற்படுகிற அறிவாற்றல் குறைவு, மலட்டுத்தன்மை போன்ற பல சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.
தைராய்டு என்பது என்ன?
நம் தொண்டைப் பகுதியில் மூச்சுக் குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி, இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளுக்குத் தேவையான முதன்மை நாளமில்லா சுரப்பி இது. இதன் எடை 12-லிருந்து 20 கிராம்வரை இருக்கும். சாதாரணமாகப் பார்க்கும்போது நம் கண்ணுக்கு இது தெரியாது. நாம் உணவை விழுங்கும்போது, முன் கழுத்தில் குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது என்றால், தைராய்டு சுரப்பி வீங்கியுள்ளது என்று அர்த்தம்.
தைராக்சின் ஹார்மோன்
தைராய்டு சுரப்பி, ‘தைராக்சின்’ (T4), ‘டிரைஅயடோதைரோனின்’ (T3) எனும் இரண்டு வித ஹார்மோன்களைச் சுரக்கிறது. தைராய்டு செல்களில் ‘தைரோகுளோபுலின்’ எனும் புரதம் உள்ளது. இதில் ‘டைரோசின்’ எனும் அமினோ அமிலம் உள்ளது. தைராய்டு செல்கள் ரத்தத்தில் உள்ள அயோடின் சத்தைப் பிரித்தெடுத்து, டைரோசினை இணைத்து வினைபுரிந்து T4 மற்றும் T3 ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இந்த இரண்டு ஹார்மோன்களும் உடலின் தேவைக்கேற்ப ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகின்றன. இத்தனைச் செயல்பாடுகளையும் முன்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கிற ‘தைராய்டு ஊக்கி ஹார்மோன்’ ( TSH ) கட்டுப்படுத்துகிறது.
தைராக்சின் பணிகள்
குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, முழுமையான உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பின் உறுதி, தசையின் உறுதி, புத்திக்கூர்மை எனப் பலவற்றுக்குத் தைராக்சின் ஹார்மோன்தான் ஆதாரம். உடல் செல்கள் பிராணவாயுவைப் பயன்படுத்தி வேதிவினைகள் புரிவதற்குத் தைராக்சின் தேவை.
கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச் சத்துகளின் வளர்சிதைமாற்றப் பணிகளை ஊக்குவிப்பதும், புரதச் சத்தைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சியைத் தூண்டுவதும், சிறுகுடலில் உள்ள உணவுக் கூழிலிருந்து குளுக்கோஸைப் பிரித்து ரத்தத்தில் கலப்பதும், ரத்தக் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதும் தைராக்சின் ஹார்மோன் செய்கிற அற்புதப் பணிகள்.
மேலும் இதயம், குடல், நரம்பு, தசை, பாலின உறுப்புகள் போன்ற முக்கியமான உறுப்புகளின் செயல்பாடுகளையும் தைராக்சின் ஹார்மோன்தான் ஊக்குவிக்கிறது. மனித உடலில் வெப்பத்தை உண்டாக்கி, அதைச் சமநிலையில் வைத்திருப்பது, உடல் செல்களில் பல என்சைம்களைத் தயாரித்துக் கொடுப்பது, பருவமடைவதற்கும் கருத்தரித்தலுக்கும் துணைபுரிவது ஆகியவற்றில் தைராக்சின் முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதுபோல், தைராக்சின் இல்லாமல் உடலில் ஒரு செல்லும் வளர்ச்சியடையாது என்றால் மிகையில்லை.
குறை தைராய்டு
தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரப்பதைக் ‘குறை தைராய்டு’ (Hypothyroidism) என்கிறோம். இதன் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருக்கும். செயல்கள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாது. முகம் வீங்கும். முடி கொட்டும். இளநரை தோன்றும். தோல் வறட்சி ஆகும். பசி குறையும். ஆனால், உடல் எடை அதிகரிக்கும். அடிக்கடி மலச்சிக்கல் உண்டாகும். ஞாபக மறதி, அதிகத் தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கை, கால்களில் மதமதப்பு, கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சினை, மூட்டுவலி இப்படிப் பல பிரச்சினைகள் அடுத்தடுத்துத் தலைதூக்கும். ரத்தசோகை, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது போன்ற பாதிப்புகள் குறை தைராய்டு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கியமான அறிகுறிகள்.
என்ன காரணம்?
நாம் உண்ணும் உணவில் உடலின் தேவைக்கு ஏற்ப அயோடின் சத்து இருப்பதில்லை. தைராய்டு சுரப்பிக்குப் போதுமான அளவு அயோடின் கிடைக்காவிட்டால், தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. இதனால் தைராய்டு ஊக்கி ஹார்மோன் (TSH) அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியை மேன்மேலும் தூண்டும். ஆனாலும், அதனால் போதுமான அளவுக்குத் தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. பதிலாக, அது வீக்கமடைந்து கழுத்தின் முன் பக்கத்தில் ஒரு கழலைப் போன்று தோன்றும். அதற்கு ‘முன்கழுத்துக் கழலை’ (Goitre ) என்று பெயர்.
சண்டித்தனம் செய்து படுத்துக்கொண்ட மாட்டை என்னதான் தார்க்குச்சி கொண்டு சீண்டினாலும், அது எழுந்து வண்டியை இழுக்காது; மாட்டுக்குக் காயம் ஆவதுதான் மிச்சம். அதுபோலத்தான் இதுவும். இந்த நிலைமை நீடிப்பவர்களுக்குக் குறை தைராய்டு ஏற்படுகிறது.
இந்திய மக்கள்தொகையில் மூன்று சதவீதம் பேருக்கு இந்தத் தைராய்டு பிரச்சினை உருவாகிறது என்கிறது புள்ளிவிவரம். முக்கியமாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாழ் மக்களிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது.
இது ஒரு தன்தடுப்பாற்றல் நோயாகவும் (Auto immune disease) ஏற்படலாம் என்கிறது மருத்துவம். அதாவது, நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் செல்கள், சொந்த உடலின் செல்களையே, வெளியிலிருந்து வரும் நோய்க் கிருமிகளாகக் கருதி அழித்துவிடுகின்றன. பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், இதைத் தூண்டுவதாகக் கருதப்படுகிறது. இப்படித் தைராய்டு செல்கள் அழிக்கப்படுபவர்களுக்குக் குறை தைராய்டு ஏற்படுகிறது.
இது தவிரப் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காரணமாகத் தைராய்டு சுரப்பியில் அழற்சி (Thyroiditis) ஏற்படுவது, தைராய்டு சுரப்பியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது, முன்பிட்யூட்டரி சுரப்பி சிதைவடைவது போன்ற காரணங்களாலும் குறை தைராய்டு ஏற்படலாம். இளம் வயதில் புற்றுநோய் தாக்கி, கதிரியக்கச் சிகிச்சை பெற்றிருந்தால், தைராய்டு சுரப்பி சிதைவடைந்து, குறை தைராய்டு ஏற்படலாம்.
இன்றைய தலைமுறையினருக்குக் குறை தைராய்டு ஏற்படுவதற்கு மன அழுத்தம்தான் முக்கியமான காரணம். பெற்றோர் யாருக்காவது குறை தைராய்டு இருந்தால், வாரிசுகளுக்கும் அது வர வாய்ப்பு உண்டு.
குழந்தைக்கும் குறை தைராய்டு
பிறந்த குழந்தைக்கும் குறை தைராய்டு (Cretinism ) ஏற்படுவதுதான் வேதனைக்குரியது. கருவில் குழந்தை நன்கு வளர்வதற்குத் தாயிடமிருந்து தைராக்சின் ஹார்மோன், சரியான அளவில் சென்றாக வேண்டும். அப்படிக் கிடைக்காதபோது, குழந்தைக்குக் குறை தைராய்டு ஏற்படுகிறது.
இதனால், குழந்தையின் வளர்ச்சி பாதிப்படைகிறது. பிறந்தவுடன் குழந்தை வீறிட்டு அழவில்லை என்றால், மூன்று நாட்களில் தாய்ப்பால் அருந்தவில்லை என்றால், மஞ்சள் காமாலை நீடித்தால், குட்டையாக இருந்தால், மூக்கு சப்பையாக இருந்து, நாக்கு வெளித் தள்ளி, வயிறு பெருத்து, தொப்புளில் குடலிறக்கம் காணப்பட்டால், அந்தக் குழந்தைக்குக் குறை தைராய்டு இருக்க அதிக வாய்ப்புள்ளது.
பொதுவாக, குழந்தைக்கு வயது ஏற ஏற அதன் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். ஆனால், குறை தைராய்டு உள்ள குழந்தைக்கு ‘வளர்ச்சி மைல்கல்’ தாமதப்படும். உதாரணமாக, தாயின் முகம் பார்த்துச் சிரிப்பது, குரல் கேட்டுத் திரும்புவது, நடக்கத் தொடங்குவது, பல் முளைப்பது, பேச்சு வருவது, ஓடியாடி விளையாடுவது போன்ற வளர்ச்சி நிலைகளில் பின்னடைவும் பாதிப்பும் ஏற்படும். வயதுக்கு ஏற்ற அதன் செயல்பாடுகளில் மந்தமான நிலை உண்டாகும். மாறுகண், காது கேளாமை போன்ற குறைபாடுகளும் தோன்றலாம்.
பள்ளி வயதில் அறிவு வளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மையிலும் (I.Q. ) குழந்தை பின்தங்கும். முக்கியமாக, கற்றலிலும் நினைவாற்றலிலும் குறைபாடுகள் தோன்றும். பெண் குழந்தைகள் பருவமடைவதில் தாமதம் ஏற்படும். அல்லது மாதவிலக்கு அதிக நாட்கள் நீடிக்கும். இவ்வாறு ஏற்படும் நிலையில் குழந்தையை உடனடியாக டாக்டரிடம் காண்பித்துத் தகுந்த சிகிச்சை பெற்றால், பாதிப்புகள் குறையும்.
பரிசோதனைகள் என்ன?
ரத்தத்தில் T3, T4 மற்றும் TSH அளவுகளைப் பரிசோதிக்க வேண்டும். குறை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் குறைவாகவும், TSH அளவு அதிகமாகவும் இருக்கும். இது தவிர அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பைக் கணிக்க முடியும். இன்றைய நவீன மருத்துவத்தில் ‘ஐசோடோப் ஸ்கேன்’ பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை மிகவும் துல்லியமாகத் தெரிந்துகொள்ள உதவுகிறது.
சிகிச்சை என்ன?
குறை தைராய்டு பாதிப்புக்குத் தைராக்சின் மருந்தைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இந்த மருந்தின் அளவு, அதற்கான கால அளவு ஆகியவற்றை மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த மருந்தை நிறுத்தக்கூடாது. அயோடின் குறைவால் வரும் முன்கழுத்துக் கழலை நோய்க்குப் போதுமான அளவு அயோடின் கலந்த சமையல் உப்பைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் பிரச்சினையைக் கட்டுப்படுத்த முடியும். இப்படி முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது அறிவு மந்தம், மாதவிலக்குக் கோளாறுகள், மலட்டுத்தன்மை, பிரசவகால சிக்கல்கள் போன்றவற்றைத் தடுத்துக்கொள்ள முடியும்.
முறையான உணவு
நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். கடல் சார்ந்த உணவு வகைகளில் அயோடின் சத்து அதிகம் என்பதால் மீன், நண்டு போன்ற உணவு வகைகள் நல்லது. பால், முட்டை, இறைச்சி சாப்பிட வேண்டியது முக்கியம். பசலைக்கீரை, முள்ளங்கி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், டர்னிப் ஆகியவற்றைக் குறைவாகச் சாப்பிட வேண்டும். சமையலுக்குச் சாதாரண உப்பைப் பயன்படுத்துவதைவிட அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனையோடு, கழுத்துக்கு உண்டான உடற்பயிற்சி / யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டால், குறை தைராய்டு பிரச்சினைகளைத் தடுக்க முடியும்; தள்ளிப்போடவும் முடியும்.
சுரப்பைப் பாதிக்கும் உணவுகள்
நாம் வழக்கமாகச் சாப்பிடும் சில உணவு வகைகளின் அளவு அதிகமாகிவிட்டால், அவை தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும். அப்போது தைராய்டு சுரப்பி உணவிலுள்ள அயோடின் சத்தைப் பயன்படுத்த முடியாது. இதன் காரணமாக, தைராக்சின் ஹார்மோனைத் தேவையான அளவுக்குச் சுரக்காது. இதனால் குறை தைராய்டு ஏற்படும். தைராய்டை பாதிக்கிற கீழ்க்காணும் உணவு வகைகளை அளவோடு சாப்பிடுங்கள். ஏற்கெனவே ‘குறை தைராய்டு’ உள்ளவர்கள் இவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.
தைராய்டு பிரச்சினைக்கு என்ன பரிசோதனை?
தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளுக்குத் தேவையான, முதன்மை நாளமில்லா சுரப்பி இது. சாதாரணமாகப் பார்க்கும்போது நம் கண்ணுக்கு இது தெரியாது. நாம் உணவை விழுங்கும்போது, முன் கழுத்தில் குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது என்றால், தைராய்டு சுரப்பி வீங்கியுள்ளது என்று அர்த்தம்.
தைராய்டு ஹார்மோன்கள்
‘தைராக்சின்’ (T4), ‘டிரைஅயடோதைரோனின்’ (T3) எனும் இரண்டு வித ஹார்மோன்களை இது சுரக்கிறது. இப்படிச் சுரப்பதற்கு அயோடின் சத்து தேவை. இந்த இரண்டு ஹார்மோன்கள் பெரும்பாலும் புரதத்துடன் இணைந்திருக்கும். சிறிதளவு ஹார்மோன்கள் புரதத்துடன் இணையாமலும் இருக்கும். அவற்றுக்கு FT3, FT4 என்று பெயர். இவை உடலின் தேவைக்கேற்ப ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகின்றன. இவற்றின் செயல்பாடுகளை முன்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கிற ‘தைராய்டு ஊக்கி ஹார்மோன்’ (TSH) கட்டுப்படுத்துகிறது.
குறை தைராய்டு
தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரப்பதைக் ‘குறை தைராய்டு’ (Hypothyroidism) என்கிறோம். இதன் ஆரம்பநிலையில் உடல் சோர்வாக இருக்கும்; செயல்கள் மந்தமாகும்; சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாது; முகம் வீங்கும்; முடி கொட்டும்; இளநரை தோன்றும்; தோல் வறட்சி ஆகும்; பசி குறையும். ஆனால், உடல் எடை அதிகரிக்கும். ஞாபக மறதி, அதிகத் தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சினை, மூட்டுவலி இப்படிப் பல பிரச்சினைகள் அடுத்தடுத்துத் தலைதூக்கும்.
தைராய்டு வீக்கம்
உண்ணும் உணவில் உடலின் தேவைக்கு ஏற்ப அயோடின் சத்து கிடைக்காவிட்டால், தைராய்டு சுரப்பி தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. இதனால் தைராய்டு ஊக்கி ஹார்மோன் அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியை மேன்மேலும் சுரக்கத் தூண்டும். ஆனாலும், அதனால் தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. பதிலாக, அது கழுத்தின் முன்பக்கத்தில் ஒரு கழலை போன்று வீங்கிவிடும். அதற்கு ‘முன்கழுத்துக் கழலை’ (Goitre) என்று பெயர். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காரணமாகத் தைராய்டு சுரப்பியில் அழற்சி (Thyroiditis) ஏற்பட்டு வீக்கமடைவதும் உண்டு. இது ஒரு தன்தடுப்பாற்றல் நோயாகவும் (Auto immune disease), கட்டியாகவும் (Thyroid adenoma) ஏற்படலாம்.
மிகைத் தைராய்டு
தைராய்டு சுரப்பி வழக்கத்துக்கு மாறாக வீக்கமடைந்து அதிகமாகப் பணி செய்தால், தைராக்சின் சுரப்பு பல மடங்கு அதிகரித்துவிடும். இந்த நிலைமையை ‘மிகை தைராய்டு’ ( Hyperthyroidism ) என்கிறோம். இந்த நோய் உள்ளவர்களுக்கு அதிகமாகப் பசிக்கும். அடிக்கடி உணவு சாப்பிடுவார்கள். ஆனால், உடல் மெலியும். நெஞ்சு படபடப்பாக இருக்கும்; நாடித்துடிப்பு அதிகரிக்கும்; விரல்கள் நடுங்கும்; உள்ளங்கை வியர்க்கும்; அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் கழியும்; சிலருக்குக் கண்கள் பெரிதாகி விகாரமாகத் தெரியும்.
பரிசோதனைகள் என்ன?
வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், ரத்தத்தில் T3, T4,TSH, FT3, FT4 , anti TPO ஆகியவற்றின் அளவுகளைப் பரிசோதித்தால், நோயின் நிலைமை தெரியவரும். பொதுவாக T3 0.7 2 .04 ng/dL என்ற அளவிலும், T4 4.4 11.6 ng/dL என்ற அளவிலும் TSH 0.28 6.82 IU/dL என்ற அளவிலும் FT3 1.4 – 4.2 pg/dL, FT4 0.8 2 ng/dL இருக்க வேண்டும்.
இந்த இயல்பு அளவுகள் ஆய்வகத்தைப் பொறுத்தும், நோயாளியின் நோய்நிலை, அவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், வயது, கர்ப்பம், வயது ஆகியவற்றைப் பொறுத்தும் சிறிதளவு மாறலாம். எனவே, நோயாளியானவர் தான் எடுத்துக்கொள்ளும் மருந்து விவரத்தையும் கர்ப்பமாக இருந்தாலும் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
முடிவுகள் எப்படி இருக்கும்?
- குறை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் குறைவாகவும், TSH அளவு அதிகமாகவும் இருக்கும்.
- மிகை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் அதிகமாகவும், TSH அளவு குறைவாகவும் இருக்கும்.
- இந்த மூன்று அளவுகளும் குறைந்திருந்தால், முன்பிட்யூட்டரி சுரப்பியில் குறைபாடு உள்ளது என்று பொருள்.
- சிலருக்குக் குறை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு அதிகமாக இருக்கும்.
- சிலருக்கு மிகை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு குறைவாக இருக்கும்.
- FT3, FT4 அளவுகள் அதிகமானால் மிகை தைராய்டு உள்ளது என்று அர்த்தம்.
- குறை தைராய்டு உள்ளவர்களுக்கு ரத்த ஹீமோகுளோபின் அளவு குறைவாகவும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகவும் இருக்கும்.
- anti TPO பரிசோதனை ‘பாசிட்டிவ்’என்றால் முன்கழுத்துக் கழலைக்குக் காரணம் தன்தடுப் பாற்றல் நோய் என்றும், ‘நெகட்டிவ்’என்றால் சாதாரணக் கழலை என்றும் அறிய உதவும்.
எப்படிச் செய்வது?
- இந்தப் பரிசோதனையை வெறும் வயிற்றில் செய்வது நல்லது.
- பரிசோதனைக்கு வரும்போது மது அருந்தி யிருக்கக் கூடாது; புகைபிடிக்கக் கூடாது.
இதர பரிசோதனைகள்
- அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றின் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பை ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும்.
- இப்போது ‘ஐசோடோப் ஸ்கேன்’ பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை மிகவும் துல்லியமாகத் தெரிவிக்கிறது.
- வீக்கம் காணும் தைராய்டு சுரப்பியிலிருந்து ஊசி மூலமாகச் சிறிய அளவில் திசுவை அகற்றி செல்களைப் பரிசோதிப்பதன் (FNAC) மூலம் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய முடியும்.
- யார், எதற்குச் செய்துகொள்ள வேண்டும்?
- குறை தைராய்டு, மிகை தைராய்டு பிரச்சினை உள்ளதாகச் சந்தேகப்படுபவர்கள் முதலில் நோயைக் கணிப்பதற்குப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
- இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் சிகிச்சை பெற்றுவருபவர்கள் நோயின் தற்போதைய நிலைப்பாட்டை அறிவதற்குப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
- தைராய்டு சுரப்பியில் வேறு பிரச்சினை உள்ளவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
- தைராய்டு சுரப்பிக்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
- பிட்யூட்டரி சுரப்பியில் பிரச்சினை உள்ளவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
- இளம்பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
- இதயநோய்க்காக அமிய்டோரான் (Amiodarone) மாத்திரையை எடுத்துக்கொள்பவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
– கட்டுரையாளர், பொது நல மருத்துவர்.
தொடர்புக்கு:
gg********@gm***.com