ஒரு சமுதாயம் சிறப்புடன் விளங்க, எல்லா காரணிகளையும் விட, கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. 1910ல், ஆங்கில அரசின் சட்டசபையில் கோபாலகிருஷ்ண கோகலே, அனைவருக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி அளிக்க வேண்டும் என, குரலெழுப்பினார். ஆனால், இது தொடர்பாக, அவர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறவில்லை.
அதேபோன்று, 1944ல், தாக்கல் செய்யப்பட்ட, ‘சார்ஜண்ட்’ அறிக்கையில், ஆரம்பக் கல்வி குறித்த பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும், இலவச அடிப்படை கல்வி என்பது இவ்வறிக்கையில் இடம் பெற்ற முக்கியமான பரிந்துரை.அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்பதன் அவசியம் நுாற்றாண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தப்பட்டாலும், இந்தியா சுதந்திரமடைந்து, 65 ஆண்டுகளுக்கு மேலாகியும், அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற நிலையை எட்டவில்லை.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 30 கோடிக்கும் மேற்பட்ட மாணவ சமுதாயத்தை கொண்டுள்ளது நம் நாடு. தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பது, கல்வி தான் என்பதையும், அதன் அவசியத்தையும் பெற்றோர் உணர்ந்திருக்கின்றனர்.இதனால், எழுத்தறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கை, எதிர்பார்த்ததை காட்டிலும், சற்று அதிகமாகவே உயர்ந்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில் எழுத்தறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2015ல் தான், இந்தியா, 72 சதவீத எழுத்தறிவை எட்ட முடியும் என, சர்வதேச அமைப்புகள் கூறின. ஆனால், 2011லேயே, 74.4 சதவீத எழுத்தறிவை எட்டியிருக்கிறோம்.
மக்கள் தொகை உயர்வு என்பது, மக்கள் தொகை பெருக்கத்தை மட்டுமல்ல; நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் சுட்டிக் காட்டுகிறது. இதில், எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது சற்று ஆறுதலான விஷயம். அதேநேரத்தில் ஆரம்பக் கல்வியே கிடைக்காத, அதாவது, பள்ளிகளை எட்டிப் பிடிக்காத நிலையில் லட்சக்கணக்கான குழந்தைகள் நம் நாட்டில் உள்ளனர்.மாநில அரசுகள் அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், நம் நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லாத எண்ணற்ற கிராமங்கள் இருக்கின்றன.
இத்தகைய கிராமங்களில் வாழ்பவர்களின் நிலை எப்படி இருக்கும்? போக்குவரத்து வசதிகள் இல்லாத கிராமங்களில், அடிப்படை வசதிகளற்ற குக்கிராமங்களில், பாதை வசதியே இல்லாத மலைக் கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என்பதே உண்மை.
ஏழ்மை நிலையிலும், பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம், பெற்றோர் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கான வசதிகள் இருந்தும், வாய்ப்புகள் இல்லாதபோது, என்ன செய்ய முடியும்?
இந்தியாவில் முழுமையான எழுத்தறிவைப் பெற்ற மாநிலம் என்ற பெருமையை கேரளா தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. கிராமங்களிலும், மிகவும் பின்தங்கிய பகுதிகளிலும் ஆரம்பப் பள்ளிகளைப் பரவலாக அமைத்தது தான் இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
கடந்த, 19ம் நுாற்றாண்டின் இறுதியில், திருவாங்கூர் பகுதியில் மட்டும், 255 அரசுப் பள்ளிகளும், 1,388 தனியார் (அரசு உதவி பெறும்) பள்ளிகளும் இருந்ததாக, ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.ஆனாலும், தேசிய அளவில் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற இலக்கை எட்ட முடியவில்லை. இதற்கு ஆரம்பக் கல்வியில் நிலவும் அலட்சியப் போக்கே காரணம்.
உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடத்தைப் பெற்றுள்ள சீனா, சமூக வளர்ச்சியில் இந்தியாவை மிஞ்சி விட்டது.சீனத்தில் கல்வியும், சுகாதாரமும், இந்தியாவை விட பல மடங்கு மேம்பட்டிருப்பதற்குக் காரணம் அரசு இவ்விரு துறைகளில் நேரடியாக அதிக நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கி, திட்டங்களை அமல் செய்தது தான்.மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், கல்விக்காக ஒதுக்கீடு செய்யும் தொகை போதுமானதாக இருப்பதில்லை. அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்.
கல்விக்கான நிதி ஒதுக்கீடு என்பது, ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடாக ஆகும் வரை, அதன் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் போன்று, இரு மடங்கு கல்விக்காக நிதி ஒதுக்க வேண்டும் என, உலகப் பொருளாதார வல்லுனர்களால் வரையறுக்கப்பட்டு உள்ளது.இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, மாதிரி விதிகளும் வகுக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் சட்டமாக உருவாக்கப்பட்டு, 2010 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆயினும், அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற இலக்கை எட்டிப் பிடிக்க முடியவில்லை. இன்றளவும் பள்ளிக்குச் செல்லாத லட்சக்கணக்கான குழந்தைகள், நம் நாட்டில் உள்ளனர்.
மனித வளத்துக்கும், சுதந்திரம், சம உரிமை போன்றவற்றுக்கும் கல்வி அவசியத் தேவை என்ற உயர் பார்வை, நம் நாட்டில் இல்லை.கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய குழந்தைகளிடமும், பெற்றோர்களிடமும் அதிகரித்துள்ளது. ஆனால், அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், அரசுப் பள்ளிகள் இருப்பதில்லை.அரசுப் பள்ளிகளைக் காட்டிலும், தனியார் பள்ளிகளில் கல்வி கற்க வைக்கவே பெற்றோர் விரும்புகின்றனர். இதற்கு கல்வித் தரம் மட்டுமின்றி, அடிப்படை வசதிகள் இல்லாத நிலையும் ஒரு காரணம். அதிகப்படியான அரசுப் பள்ளிகளில் கழிப்பறை, விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகள் இருப்பதில்லை.
அனைவருக்கும் ஆரம்பக் கல்வி வழங்குவதில் மிகப் பெரும் சவாலாக விளங்குவது, இடைநிற்றல் பிரச்னை தான். இடைநிற்றலைப் போக்கிடும் வகையில், அரசு, பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ஆனால், அது கிராமப்புறங்களில் உள்ளவர்களைச் சரியாக சென்றடைவதில்லை. அதனால், நகர்ப்புறங்களைக் காட்டிலும், கிராமங்களில் இடைநிற்றல் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.வேளாண்மையை பிரதானமாகக் கொண்டுள்ள கிராமங்களில், அறுவடைக் காலங்களின்போது, ஆட்கள் பற்றாக்குறையால், சிறு வயதினரும் விவசாய வேலைக்குச் செல்கின்றனர். அவர்களின் சொற்ப வருமானமும் குடும்பத்தின் ஏதேனுமொரு தேவையை பூர்த்தி செய்வதால், மீண்டும் பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் தொடர்ந்து வேலைக்குச் செல்கின்றனர்.
நகரமயமாதலால் வேளாண் நிலங்கள் குறைந்து, வேறு வேலை தேடி அண்டை மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் குடும்பத்துடன் இடம் பெயரும்போது, அவர்களோடு செல்லும் குழந்தைகள் மீண்டும் பள்ளி செல்லாமல், தங்களின் உடற்திறனுக்கேற்ப, ஏதாவதொரு வேலைக்குச் செல்கின்றனர்.இதுபோன்ற சிறார்களின் பெற்றோர்களிடம், கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு, அரசின் நடவடிக்கைகள் மட்டுமே தீர்வாகாது. கிராமங்களில் மக்களோடு பழகும் வாய்ப்பைப் பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத் துறையினரின் வாயிலாகவே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதிகப்படியான நிதி ஒதுக்கீடு மட்டுமே எதிர்பார்த்த பலனைத் தராது. கல்விக்கான நிதி முறையாகச் செலவிடப்படுவதும், அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற நோக்கில் அனைத்து தரப்பினரிடமும் நிலவும் ஆர்வமும், சமூக அக்கறையும் தான், இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும்.
– பெ.சுப்ரமணியன் – சிந்தனையாளர்
இ – மெயில்: ppmanian71 at gmail.com