Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2016
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,236 முறை படிக்கப்பட்டுள்ளது!

மீண்டும் உயிர்த்தெழும் தனுஷ்கோடி!

p241a ஆழிப்பேரலையின் அகோரப் பசிக்கு   ஏராளமான உயிர்களைப் பறிகொடுத்து,  பேரழிவின்  சாட்சியாக விரிந்துகிடக்கிறது தனுஷ்கோடி.

1964-ம் ஆண்டுக்கு முன்பு, கொண்டாட்டம் மிகுந்த நகரமாக விளங்கி, இன்று சிதைவுகளாக மிஞ்சியிருக்கும் இந்தப் பகுதி, 52 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழத் தொடங்கியுள்ளதுதான் மகிழ்ச்சியான செய்தி.

இந்திய நாட்டின் தென்கோடி எல்லை, தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லைப் போன்ற வடிவம்கொண்ட நிலப்பகுதி என்பதால், இதற்கு `தனுஷ்கோடி’ என்ற பெயர் வந்ததாக ஒரு புராணக் காரணம் சொல்லப்படுகிறது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், இங்கு வந்து நீராடுவதைப் பெரும் புண்ணியமாக நினைக்கிறார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இலங்கைக்குக் கப்பலில் செல்ல எளிதான வழியாக இருந்தது தனுஷ்கோடி. அதோடு, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இந்த நகரின் இயற்கை அமைப்பு அமைந்திருந்தது.

சர்வதேச மக்கள் வந்து செல்லும் துறைமுகப் பட்டினமாக இருந்த தனுஷ்கோடி, இன்று மனிதர்கள் வசிக்கத் தகுதியற்ற பகுதியாகக் கருதப்பட்டுவருகிறது.

அதற்குக் காரணம், 1964-ம் ஆண்டில் ஏற்பட்ட கோர நிகழ்வு. டிசம்பர் 17-ம் தேதி, தெற்கு அந்தமான் பகுதியில் புயல் ஒன்று உருவானது. இந்தப் புயல் மெள்ள மெள்ள வலுவிழந்து, டிசம்பர் 22-ம் தேதி, மணிக்கு 400 முதல் 550 கி.மீ வேகத்தில் இலங்கையில் தமிழர்கள் வாழும் வவுனியாவைத் தாக்கியது.

அதன் பின் வங்கக்கடலில் உள்ள பாக் ஜலசந்தியில் மையம்கொண்டு,  23-ம் தேதி அதிகாலை, தனுஷ்கோடியை நோக்கி வந்தது. மணிக்கு 280 கி.மீ வேகத்தில் காற்று வீசியதுடன் கடும் மழையும் பெய்தது.

இந்தப் புயல் காற்றுதான் தங்கள் வாழ்க்கையைப் புரட்டிபோடப் போகிறது என்பதை அறியாத தனுஷ்கோடி மக்கள், வழக்கம்போல் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

பாம்பன் – தனுஷ்கோடி இடையிலான பயணிகள் ரயிலும் இந்தப் பேராபத்தை அறியாமல் இயங்கிக்கொண்டிருந்தது.

p241bஇந்தியா வழியாக இலங்கை செல்ல விரும்புபவர்களுக்காக, அந்த நாளில் `போட் மெயில் சர்வீஸ்’ இருந்தது. ரயில் மற்றும் கப்பல் வழிப் பயணமான இதில், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயிலில் தனுஷ்கோடிக்கு வரவேண்டும். அங்கிருந்து `இர்வின் கோஷன்’ கப்பலில் பயணித்து, இலங்கை தலைமன்னார் துறைமுகத்தை அடையலாம். அங்கிருந்து கொழும்புக்கு ரயிலில் பயணிக்க வேண்டும். இது, சுற்றுலாப் பயணிகளுக்குப் புதுமையான அனுபவமாக இருந்தது.

இது தவிர, தனுஷ்கோடிக்கு வரவிரும்பும் யாத்ரீகர்களுக்காகவும் உள்ளூர்ப் பயணிகளுக்காகவும் `வாட்டர் டாங்’ எனப்படும் பயணிகள் ரயிலும் நாள்தோறும் இயங்கிவந்தது.

23-ம் தேதி நள்ளிரவு இந்த ரயில் தனுஷ்கோடியை நோக்கி வந்துகொண்டிருந்தது. தனுஷ்கோடியை அடைய சில 100 அடிகள் தூரமே இருந்த நிலையில், பலத்த காற்றுடன் மழையும் கொட்டத் தொடங்கியது. இதனால், தனுஷ்கோடிக்கு ரயில் வருவதற்கான சிக்னல் கொடுக்கப்படவில்லை.

p241dகடும் இருட்டு… மழையும் கொட்டியதால் ரயில் டிரைவரால் சிக்னலைப் பார்க்க  முடியவில்லை. இதனால், பயணிகள் ரயில் தனுஷ்கோடிக்குள் நுழைந்தது. அந்த நேரத்தில் எழுந்த ஆழிப்பேரலை ரயிலின் 6 பெட்டிகளை கடலுக்குள் இழுத்துச் சென்றது. நள்ளிரவு நேரம் என்பதால் ஜன்னல்கள், கதவுகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், ரயிலில் பயணம் செய்த 115 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

ஆழிப்பேரலையின் இந்தக் கோரத் தாண்டவம் பற்றிய செய்திகூட இரு நாட்களுக்குப் பின்னரே அரசு நிர்வாகங்களுக்குத் தெரியவந்தது. தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
தொடர்ந்து வீசிய புயலில் சிக்கி, தனுஷ்கோடி நகரமே உருக்குலைந்தது. ரயில் நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், நகரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் என ஒன்றுகூட புயலுக்குத் தப்பவில்லை. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரமாண்ட கட்டடங்களே கடலால் துவம்சம் செய்யப்பட்ட நிலையில், ஏழை மீனவர்களின் வீடுகள் என்னவாகியிருக்கும் என எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை. கடல் நீராலும் மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி நகரம் மூழ்கடிக்கப்பட்டது.

p241cஇதில் 1,800-க்கும் மேற்்பட்டவர்கள் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டாலும், உண்மையான இறப்பு விகிதம் எவ்வளவு என்பது இன்றுவரை முழுமையாகத் தெரியவில்லை.

   புயலின் கோரத்தை உணர்ந்த அரசு, அந்தப் பகுதியின் பூகோள அமைப்பை ஆய்வுசெய்து,  மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக தனுஷ்கோடியை அறிவித்தது. புயலில் தப்பித்த மக்களுக்காகப் புதிய வாழ்விடங்கள் ராமேஸ்வரம் பகுதியில் உருவாக்கப்பட்டு, அங்கு அவர்கள் குடியமர்த்தப்பட்டனர்.

ஊரையே தனக்குள் உள்வாங்கிக்கொண்ட வங்கக் கடலால் வளைக்க முடியாமல்போன ஒரே கட்டுமானம், தனுஷ்கோடியில் இருந்த துறைமுகப் பாலம். அந்த அளவுக்கு அந்தப் பாலம் உலோகக் கலவைகளால் வார்க்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் பிறகு, அங்கிருந்து கப்பல் போக்குவரத்தைத் தொடர்ந்து  இயக்க முடியவில்லை.

p241eஇதனால் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்பட்ட துறைமுகப் பாலம், புயலுக்குப் பின் அந்தப் பகுதியில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு உதவியாக இருந்தது.
ஆனால், உருக்கி ஊற்றப்பட்ட உயர்ரக  உலோகங்களால் உருவான அந்தப் பாலம், அரசியல் அதிகார வர்க்கத்தின் கண்களை உறுத்தியது.

இதனால், கடந்த 90-களின் தொடக்கத்தில் இந்தப் பாலம் தனியாரிடம் ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள், பாலத்தைத் துண்டு துண்டாகப் பெயர்த்தெடுத்துச் சென்றனர். இப்போது அந்தப் பாலத்தைக் கட்ட வேண்டும் எனில், பல கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால், பாலத்தை ஏலம் விட்டதன் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாயோ சொற்பம்தான்.

இந்தப் பாலத்தை மட்டும் தொடர்ந்து பராமரித்திருந்தால், சேதுசமுத்திரத் திட்டத்துக்கும், வரும் காலங்களில் தனுஷ்கோடி பகுதிகளில் ஏற்பட உள்ள வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியிருக்கும். மேலும், இலங்கையில் ஆதிக்கம் செலுத்திவரும் சீனாவால் நம் நாட்டுக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல்களைச் சமாளிக்க நமது கடற்படைக் கப்பல்களுக்கு இந்தப் பாலம் பயன்பட்டிருக்கும்.

p241gஆனால், இப்போது 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீனவர்களுக்காகப் புதிய பாலம் கட்டிவருகிறார்கள். ஆயிரக்கணக்கான உயிர்களை விழுங்கிச் செரித்த தனுஷ்கோடி மீது, உயிர்பிழைத்த அந்த மண்ணின் மைந்தர்களுக்கு  ஈர்ப்புக் குறையவில்லை. அங்கு குடி தண்ணீர், சாலை, மின்சாரம் என எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையிலும், தனுஷ்கோடி கடலை, தாயின் மடியாகக் கருதும் மீனவர்கள் இன்னும் அந்த மணற்குன்றுகளுக்கு மத்தியில் வசித்து வருகின்றனர்.

இரண்டு பக்கமும் கடல் விரிந்து கிடப்பதால், பாரம்பர்ய மீனவர்களின் பொக்கிஷமாக தனுஷ்கோடி திகழ்கிறது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் தமிழகத்தின் பல நகரங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

  `மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதி’ என்று அரசு அறிவித்துவிட்டதால், மாவட்ட நிர்வாகத்தால், இந்த மக்களுக்கு எந்த வசதியையும் செய்துகொடுக்க முடியவில்லை.  இருந்தாலும், தீவுப் பகுதியில் இயங்கும் பல்வேறு அமைப்புகள் போராடி, அந்த மணற்பரப்பில் டெம்போவில் பயணம் செய்வதற்கு அனுமதி வாங்கினார்கள். தனுஷ்கோடிக்கு எட்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்னால் இருக்கும் முகுந்தராயர் சத்திரம் வரை நகரப் பேருந்து வந்து செல்ல வழி ஏற்படுத்தினார்கள். மின் இணைப்பு வழங்க அனுமதி இல்லாததால், ஜெனரேட்டர், கார் பேட்டரி மூலம் மின்சாரத்தைப் பயன்படுத்த  ஆரம்பித்தார்கள்.

தற்போது அங்கு அனைத்து குடிசைகளுக்கும் சோலார் மின்சாரம் வழங்கப்படுகிறது. மீனவக் குழந்தைகளுக்காகத் தற்காலிகமாக ஒரு  தொடக்கப் பள்ளியும் தொடங்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும் இருந்து தனுஷ்கோடியைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் அங்கு எந்த வசதியும் இல்லாதது குறையாகவே இருந்தது. இந்த நிலையில்தான் மத்திய அரசு தனுஷ்கோடியின் முனை வரை தேசிய நெடுஞ்சாலையை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. பிரமாண்ட பூங்கா ஒன்றும், அமைக்கப்பட உள்ளது.  தவிர, அழிந்துபோன துறைமுகத்தை மீண்டும் உருவாக்கவும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சாலை அமைப்புப் பணிக்காகவும், ஒரு வளாகத்தை உருவாக்குவதற்காகவும் 50 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. கடற்காற்றையும், மணல் புயலையும்  தாண்டி,  சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. சாலையில் மணல்படிவதைத் தடுக்க, இருபுறமும் கருங்கல் சுவர் எழுப்்பப்படுகிறது.

 “மீன்பிடித் தொழிலில் ஒவ்வொரு மீனுக்கும் ஒரு சீசன் உண்டு. சீசனுக்கு சீசன் வெவ்வேறு பகுதிகளுக்குச்  செல்ல வேண்டியிருக்கும். ஆனால், தனுஷ்கோடிக்கு வடக்கே பாக் ஜலசந்தியும், தெற்கே மீன்வளம்மிக்க மன்னார் வளைகுடாவும் உள்ளன. ஆகவே, இப்பகுதி மீனவர்கள், எந்தப் பருவத்திலும் இடம்பெயரவேண்டிய அவசியம் இல்லை, அதனால்,  மீனவர்கள் தனுஷ்கோடியைப் பெரிதும் விரும்புகிறார்கள். பேரழிவுக்குப் பிறகு,  தற்போதுதான் தனுஷ்கோடி  மீது ஆட்சியாளர்களின் பார்வை பட்டிருக்கிறது. தற்போது அமைக்கப்பட்டுவரும் புதிய சாலையால் சுற்றுலாப் பயணிகள் எளிதாக தனுஷ்கோடியைச் சுற்றிப் பார்க்க முடியும். மீன்களையும் நகரங்களின் சந்தைகளுக்கு எளிதாகக் கொண்டு செல்ல முடியும்’’ என்கிறார்,     தனுஷ்கோடி புனரமைப்புக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தனுஷ்கோடியை ராமாயணத்துடன் தொடர்புடைய ஆன்மிக நகரமாகக் கருதி புனரமைக்கும் வேலையில் ஈடுபட்டாலும், அது அங்கு வசிக்கும் மீனவர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் நன்மையைத் தேடித் தந்துள்ளது என்பதே உண்மை!

நன்றி: விகடன்


தனுஷ்கோடி தீவு உருவான கதை

இன்றைக்கு இந்திய நிலப்பரப்புக்கு வெளியே இருக்கும் ஒரு கடல்சூழ் தீவு தனுஷ்கோடி. அதாவது, நாம் சென்னையிலிருந்து புறப்பட்டால், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் என்று மண்டபத்தோடு முடிந்துபோகிறது நம் நாட்டின் நிலப்பரப்பு. நடுவே, ஒரு ஆறுபோலக் குறுக்கிடுகிறது கடல். அதைப் பாலம் வழியே கடந்தால், பாம்பனில் தொடங்கி ராமேஸ்வரம் வழியாக தனுஷ்கோடி வரை தீவு.

ஆரம்பக் காலத்தில் இப்படி இல்லை என்கிறார்கள். தனுஷ்கோடி வரை நீண்ட நிலப்பரப்பைப் பெரும் புயல்களே கடலால் பிரித்தன என்கிறார்கள். குறிப்பாக, கி.பி.1480-ல் ஏற்பட்ட புயலுக்குப் பின்னரே நிலத்தை உடைத்துக்கொண்டு கடல் உள்ளே வந்தது என்கிறார்கள்.

இயற்கைச் சீற்றத்தின் நெருக்கம்

தனுஷ்கோடியைப் பற்றி ராமநாதபுரம் மாவட்ட மக்கள் சொல்லும் செவிவழிச் செய்திகள், பல்லாண்டு காலமாக இந்தப் பகுதி இயற்கைச் சீற்றம் மிக்க பகுதியாக இருப்பதைச் சொல்கின்றன. கடந்த 60 ஆண்டுகள் வரலாற்றை எடுத்துக்கொண்டாலே புயல்கள் நடத்திய சூறையாட்டம் அதிரவைக்கிறது. 1955 புயல் தாக்குதலின்போது ஊருக்குள் வெள்ளம் வடிய ஒரு மாதத்துக்கும் மேல் ஆகியிருக்கிறது. 1964 புயல் தாக்குதல் ஊரையே அழித்துவிட்டுச் சென்றிருக்கிறது.

பேய் நகரம்

ஒருகாலத்தில் வாழத் தகுதியற்ற இடம் என்று நம்முடைய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இடம் தனுஷ்கோடி. பேய் நகரம் என்று அரசாலும் ஊடகங்களாலும் வர்ணிக்கப்பட்ட இடம். ஆனால், காலங்காலமாக அங்கேயே வாழ்ந்துவந்த மீனவ மக்களால் அந்த ஊரை விட்டுவிட முடியவில்லை. கடல் தாக்குதலில் தப்பித்த பெரும்பான்மை தனுஷ்கோடிவாசிகள், அவர்களுடைய தலைமுறைகள் – கிட்டத்தட்ட இரண்டாயிரத்துச் சொச்சம் பேர் – இன்னமும் தனுஷ்கோடியை விட்டு அகலாமல் இருக்கிறார்கள். அந்த ஊரை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். இந்த விஷயங்கள்தான் தனுஷ்கோடி மேல் ஒரு பெரிய ஈர்ப்பை எனக்கு உருவாக்கக் காரணமாக இருந்தன.