மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஒடிசா மாநில கவிஞர் ஹல்தார் நாக் என்பவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
ஒடிசா மாநிலம் பல்காரா மாவட்டத்தில் ஹல்தார் நாக்(66) பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் இளம் வயதில் தந்தையை இழந்ததால் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு வந்தது. வறுமை காரணமாக மூன்றாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்தினார். பள்ளியில் 16 ஆண்டுகள் சமையல் வேலை பார்த்துள்ளார். பின் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, பள்ளி மாணவர்களுக்காக தின்பண்டங்கள் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போது ‘தோடோ பார்க்கச்’ எனும் தனது முதல் கவிதை தொகுப்பை வெளியிட்டார். பின்னர் கொஸ்லி மொழியில் இயற்கை, மதம், சமூகம், புராணம் உள்ளிட்டவை தொடர்பாக ஏராளமான கவிதைகள், கதைகளை எழுதி வருகிறார். தொடக்கத்தில் நாட்டுப்புற கதைகளை எழுதிய இவர் 20 காவியங்களை இயற்றியுள்ளார்.
சம்பல்பூர் பல்கலைகழகம் ஹல்தாரின் கவிதைகளை பாடத்திட்டத்தில் சேர்த்து அவருக்கு சிறப்பளித்துள்ளது. மேலும் அவருடைய ‘ஹல்தார் கிரந்தபலி- 2 ‘ என்ற கவிதை தொகுப்பை விரைவில் வெளியிட உள்ளது. இவரின் கவிதைகள், காவியங்களை ஆராய்ந்து 5 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
இவர் தனது படைப்புகள் வழியாக மனித மாண்புகளை மையப்படுத்தி சமூக மாற்றத்தை வலியுறுத்தி வருகிறார். ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலத்தில் இவரது கவிதைகளுக்கு ரசிகர்கள் ஏராளம். இளம் கவிஞர்கள் இவரின் எழுத்து நடையை பின்பற்றி பல நல்ல படைப்புகளை இயற்றி வருகின்றனர். இவருடைய வாழ்க்கையை பி.பி.சி., நிறுவனம் ஆவணப்படமாக எடுத்துள்ளது.
இவரின் பணியை சிறப்பிக்கும் விதமாக இந்திய அரசு கடந்த வாரம் இலக்கியத்திற்கான பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்துள்ளது.