Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2016
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,786 முறை படிக்கப்பட்டுள்ளது!

முறையான உழைப்பு நிறைவான வெற்றி!

முறையான உழைப்பு நிறைவான வெற்றி வெற்றி உங்கள் கையில்

நான் கஷ்டப்பட்டு படிக்கிறேன். என்னால் சிறந்த வெற்றியைப் பெறமுடியவில்லை”.

“நாள் முழுவதும் நான் உழைக்கிறேன். என்னால் பணக்காரனாகி வாழ்க்கையில் வெற்றிபெறஇயலவில்லை”.

“தினந்தோறும் கடினமாக உழைத்தாலும், என்னால் உயர்ந்த நிலைக்கு வரவே முடியவில்லை”

இப்படி “வருத்தத்தின் வாசலில்” நின்றுகொண்டு, வாழ்க்கையைத் தொலைக்கின்றவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகி வருகிறது.

“உழைப்புக்கு ஏற்றஊதியம் கிடைக்கும்” என்றுதான் எல்லோரும் பலரும் நம்பிக்கையோடு நாட்களை நகர்த்துகிறோம். ஆனால் அந்த நம்பிக்கை சிலருடைய வாழ்க்கையில் கேள்விக்குறியாகிவிடுகிறது.

இதற்குக் காரணம் என்ன?

“வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும்” என்ற எண்ணத்தோடு கடினமாக உழைப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போவதற்குக் காரணம் அவர்கள் தங்களது வாழ்க்கையில் மேற்கொண்ட முரண்பாடான அணுகுமுறைகள்தான்.

“பெரிய பணக்காரராக வேண்டும்” என்று ஆசைப்படுபவர்களில் சிலர் கடினமாக உழைத்தாலும்கூட, சரியான முறையில் உழைக்கும் முறையைப் புரிந்து கொள்ளாததானால் தான், அவர்களது “எதிர்காலத் திட்டங்கள்” நிறைவேறாமல் போய்விடுகிறது.

இன்று உழைக்காமலேயே வாழ்க்கையில் வெற்றி பெற சிலர் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதற்கு “முல்லாவின் கதை” உதாரணமாக அமைகிறது.

ஒருமுறை முல்லா ஒரு ஊருக்கு வந்தார். அங்குள்ள மக்களிடம் ஒரு தகவலைத் தெரிவித்தார்.

“வாழ்க்கையில் எந்த சிந்தனையும் இல்லாமல், எந்த வேலையும் இல்லாமல், எந்தவித உழைப்பும் இல்லாமல் பெரிய பணக்காரராக மாறவிரும்புபவர்கள் இந்த ஊரில் யாராவது இருக்கிறீர்களா? இருந்தால், நீங்கள் என்னிடம் உடனே வந்து ஆலோசனை பெறலாம்” என்று ஊர்மக்களிடம் தெரிவித்தார் முல்லா.

முல்லாவின் அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. எந்த உழைப்பும் இல்லாமல் பணக்காரராக மாறும் ரகசியத்தை தெரிந்துகொள்ள அனைவரும் விரும்பினார்கள். முல்லா குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தில் ஏராளமான பேர் வந்து குவிந்தார்கள். பெரும் கூட்டத்தைப் பார்த்து முல்லா திடுக்கிட்டுப் போனார். பின்பு அந்த கூட்டத்தினரிடம் எதுவும் பேசாமல் வேறு திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் முல்லா.

கூட்டமாக கூடிநின்ற மக்கள் முல்லாவைப் பார்த்து கோபப்பட்டார்கள். “எந்த உழைப்பும் இல்லாமல் பணக்காரராக மாறுவது எப்படி?” என்பதை எங்களுக்குச் சொல்லுவதாகச் சொல்லிவிட்டு இப்போது நீர் எங்கே செல்கிறீர்? உம்மை நாங்கள் போகவிடமாட்டோம்” என்றுகூறி அவரைத் தடுத்தார்கள்.

முல்லா அவர்களைப் பார்த்து பலமாகச் சிரித்தார்.

“உழைப்பே இல்லாமல் ஊதாரித்தனமாக இந்த ஊரில் இருப்பவர்கள் எத்தனை பேர்? என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். உழைக்காமல் வெற்றிபெற நினைப்பது முட்டாள்தனமான செயலாகும் என்பதை இந்த ஊரில் உள்ளவர்களுக்கு சொல்ல நினைத்தேன். அதற்காகத்தான் உங்களை ஒரு இடத்தில் கூடும்படி அழைத்தேன். உழைக்காமல் வாழ்க்கையில் வெற்றி கிடைக்காது. நீங்கள் போய்வாருங்கள் என்று சொல்லிவிட்டு முல்லா தனது ஊரைநோக்கி புறப்பட்டுச் சென்றார்.

முல்லாவின் கதை வேடிக்கையாகத் தோன்றினாலும், அது “உழைத்தால்தான் வெற்றி பெறமுடியும்” என்பதை அந்த நிகழ்வு தெளிவாக்குகிறது.

கடினமாக உழைத்தாலும், அந்த உழைப்பு சரியான முறையில் முறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அந்த உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும்.

ஒருமுறை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் ஒருவர் வந்து அறிவுரை கேட்டார்.

“இந்தக் காலத்து இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் தகுந்த அறிவுரை சொல்லுங்கள்” என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு ஜவஹர்லால் நேரு தெளிவாகப் பதில் தந்தார்.

“நான் இந்த இளைஞர்களுக்கு 3 அறிவுரைகளைத் தர விரும்புகிறேன். முதல் அறிவுரை “நன்றாகப் படிக்க வேண்டும்”. இரண்டாவது அறிவுரை “நன்றாகப் படிக்க வேண்டும்”. மூன்றாவது அறிவுரை “நன்றாகப் படிக்க வேண்டும்”. இந்த மூன்றும்தான் இளைஞர்களுக்கான எனது அறிவுரை என்றார் ஜவஹர்லால் நேரு.

“இளமைக்காலத்தில் நன்றாகப் படித்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும்” என்பது ஜவஹர்லால் நேருவின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

இளமைக்காலத்தில் உழைப்பு என்பது படிக்கின்ற பாடங்களை தெளிவாகவும், துல்லியமாகவும் படிப்பதைதான் குறிக்கும். படிக்கவேண்டிய பாடங்களை முறைப்படி படிக்கக் கற்றுக்கொண்டவர்கள் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள்.

காட்டிலுள்ள மரங்களை வெட்டி, அந்த விறகுகளை விற்று அதன்மூலம் கிடைக்கின்ற பணத்தை வைத்து அதன்மூலம் வாழ்ந்துகொண்டிருந்தார்கள் இரண்டு விறகு வெட்டிகள்.

அதில் ஒருவர் முதல் நாள்; 8 மணி நேரம் உழைத்தார். 100 கிலோ மரங்களை வெட்டினார். இரண்டாம் நாள் அதேபோல் 8 மணிநேரம் உழைத்த பின்பும் அவரால் 90 கிலோ மரங்களைத்தான் வெட்ட முடிந்தது. மூன்றாம் நாள் 8 மணி நேர உழைப்பில் அவரால் 75 கிலோ அளவுக்குத்தான் மரங்களை வெட்ட முடிந்தது. நாளுக்குநாள் அவரது உழைப்பின் திறன் குறைந்தது.

ஆனால், அதேவேளையில் இன்னொரு விறகு வெட்டி முதள்நாள் 8 மணி நேரத்தில் 100 கிலோ மரங்களை வெட்டினார். இரண்டாவது நாள் 110 கிலோ மரங்களை அவரால் வெட்ட முடிந்தது. மூன்றாம் நாளில் 120 கிலோ எடை அளவுக்கு விறகுகளை வெட்டினார்.

விறகு வெட்டும் தொழில் செய்யும் அந்த இருவரும் ஒரே வயதுடையவர்களாக இருந்தாலும், அவர்களது உழைக்கும் திறனில் மாற்றம் இருப்பதைக் கவனித்தார் ஒருவர்.

முதலாம் விறகு வெட்டியிடம் சென்று, “நீங்கள் இரண்டுபேரும் ஒரே மாதிரிதான் வேலை செய்கிறீர்கள். ஆனால் உம்மைவிட உமது நண்பர் அதிகமாக விறகுகளை வெட்டுகிறாரே” அது ஏன்?” என்று கேட்டார்.

விறகு வெட்டிக்கு காரணம் புரியவில்லை. “இது ஏன் என்றே எனக்குப் புரியவில்லை. என்னால் முடிந்த மட்டும் உழைக்கிறேன். அவரைவிட என்னால் அதிகமாக விறகுகளை வெட்ட முடியவில்லை. இது என் தலைவிதி” என்றார்.

இதே கேள்வியை அடுத்த விறகு வெட்டியிடம் அந்த நபர் கேட்டார்.

“நான் விறகு வெட்டும்போது தொடர்ந்து விறகுகளை வெட்டுவதில்லை. இடையிடையே ஓய்வெடுத்துக் கொள்கிறேன். அந்த ஓய்வு நேரத்தில் எனது கோடரியை நான் கூர்மையாகத் தீட்டுவதற்கு நேரத்தை செலவு செய்கிறேன். அடிக்கடி தீட்டப்பட்ட கோடரியைக் கொண்டு வேலை செய்வதால் மரம் வெட்டும் வேலை எனக்கு எளிதாகப் போய்விடுகிறது. மிக அதிக அளவு மரத்தை என்னால் வெட்ட முடிகிறது” என்று சொன்னார்.

“இந்த விறகு வெட்டிகளின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும். இருவரும் ஒரே அளவில் உழைத்தாலும், ‘முறைப்படுத்தப்பட்ட உழைப்பு’ என்பதுதான் வெற்றியைத் தருகிறது” என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உழைக்கும்போதே ஓய்வெடுக்கவும், அவ்வப்போது கோடரியைத் தீட்டவும் அந்த விறகு வெட்டி முயற்சி செய்ததைப்போல, பாடங்களைப் படிக்கும்போதும் முறைப்படி அறிவை வளர்க்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் படித்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது சிறந்த உழைப்பைக் குறிக்கும். ஆனால், அதேவேளையில் பாடப் புத்தகங்களோடு பொதுஅறிவை வளர்க்கும் புத்தகங்களையும், வாழ்க்கைக்குத் தேவையான தன்னம்பிக்கையை வளர்க்கும் இதழ்களையும், நூல்களையும் முறைப்படி படித்து, கோடரியைத் தீட்டுவதைப்போல அறிவை தீட்டுவதிலும் அக்கறை கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எளிதாக மாறும்.

365நாள் முழுவதும் படித்த பின்பும் என்னால் அதிக மதிப்பெண்கள் பெறமுடியவில்லையே” என்று வருத்தப்படுபவர்கள், படிக்கும் வழக்கத்தை முறைப்படுத்தவும், நினைவாற்றலை நெறிப்படுத்தவும் பழகிக்கொள்ள வேண்டும். தேவையான அளவுக்கு ஓய்வெடுக்கவும், அந்த ஓய்வு நேரத்திலும் அறிவினை அகலப்படுத்தவும், சிந்தனையை ஆழப்படுத்தவும் பழகிக்கொள்பவர்கள் மட்டுமே வெற்றியை எளிதில் பெற்று விடுகிறார்கள்.

கவிநேசன் நெல்லை