மாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை

20161117174542“பாய்! நீங்க சில்லரை வாங்கிட்டீங்களா?” நடத்துன ரின் குரல் பக்கீர் ராவுத்தரை நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தது.
 
காசை நீட்டி, பயணச் சீட்டை வாங்கி பையில் போட்டுக் கொண்டார். அந்த அதிவேகப் பேருந்தின் வேகத்தை விட விரைவாக பக்கீர் ராவுத்தரின் மனம் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த நிகழ்ச்சிகள் இன்னும் கூட பசுமையாக இருக்கின்றன.
 
“மாமா, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க; பெரியவுக நீங்களே விசயத்தை புரிஞ்சுக்காம பிடிவாதம் செஞ்சா எப்படி?”
 
“யாருடா பிடிவாதம் செய்யறது? நானா? நீயா? திடீர்னு இப்படி ஒரு கல்லைத் தூக்கிப் போட்டுட்டு, என்னயே கொறையும் சொல்றியா? தாய் தகப்பன் மொகங்கூட தெரியாத உன்னை நெஞ்சிலே சுமந்து வளர்த்து, படிக்க வச்சு, மனுசனாக்கியதுக்கு நீ செய்யிற நன்றிக் கடனாடா இது?”
 
“சரி! அப்படித்தேன் விருப்பமில்லை, உங்க மகளை கட்டிக்க மாட்டேன்னு முன்கூட்டியாவது சொல்லி இருக்கலாமில்லே? உனக்கு அவதான் அவளுக்கு நீதான்னு ஊரெல்லாம் பேசுறப்ப சும்மா இருந்துட்டு இப்ப என்னடா திடீர் ஞானோதயம்? அவளுக்கு என்னடா கொறச்சல்?”
 
“அமீதாவுக்கு குறைச்சல்னா நான் சொல்றேன்? அவளைக் கட்டிக்க எனக்குத் தகுதி இல்லைன்னுதானே சொல்றேன்!”
 
மேசையில் உட்கார்ந்திருந்தவர் சடாரென்று எழுந்தார். அவன் நெஞ்சுச் சட்டையை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டார்.
 
“ஏண்டா, உனக்கென்னடா கொறை? அழகில்லையா? படிப்பில்லையா? பார்க்க இலட்சணமா இல்லையா? உன்னை விட அவளுக்கு எவன்டா தகுந்த கணவனாக முடியும்?”
 
“அமீதா எனக்கு சகோதரி மாதிரி. அவ வாழ்க்கையோட விளையாட நான் விரும்பல. என் முடிவை நான் மாத்திக்கிறத் தயாரா இல்லை” பக்கீர் ராவுத்தரின் கண்கள் சிவந்தன; பிடியை இறுக்கினார்.
 
“காரணத்தை நீ சொல்லாத வரை நானும் உன்னை விடப் போறதில்ல”
 
“உங்ககிட்ட சொல்லக்கூடிய விசயமா இருந்தா சொல்ல மாட்டேனா மாமா? உங்களை விட எனக்கு வேண்டியவங்க யாரு மாமா இருக்காங்க? நம்ப உசைன் ராவுத்தர் மகன் மஜீதுக்கே அமீதாவைக் கொடுத்துடுவோம் மாமா”
 
“நான் உசிரோட இருக்கையில் அவளுக்கு மாப்பிள பார்க்க நீ யாருடா?”
 
“நீங்க வளர்த்த நாய் மாமா! மஜீதுதான் அமீதாவுக்கு ஏற்றவன்னு நினைக்கிறேன். அவங்களும் விரும்பிக் கேக்குறாங்க. தயவு செய்து ஒத்துக்குங்க மாமா!”
 
“முடியாது; முடியாது; முடியாது!”
 
“நீ இப்ப காரணத்தை சொல்லப் போறியா, இல்லையா?” சொல்லாமல் அவர் விடப் போவதில்லை!
 
“பெண்ணுக்கு வாழ்வளிக்க எல்லாத்தையும் விட முக்கியமா வேண்டியது ஒன்று என்கிட்ட இல்லை மாமா!”
 
“என்னடா இல்லை? காசா, பணமா, சொத்தா? என்னோடதெல்லாம் வேற யாருக்குடா? இந்தா பாரு! கடைசியாக் கேக்குறேன். காரணத்தை சொல்லிடு..”
 
இதுவரை கல்லாக்கிக் கொண்டிருந்த மனது கரைந்து போனது. கண்கள் பனிக்கச் சொன்னான். “சொல்றேன்; ஆனா ஒன்று அதை மத்த யாருக்கும் சொலறதில்லைன்னு நீங்க உறுதி தரனும்..”
 
“சரி சொல்லு”
 
“ஒரு பெண்ணை சந்தோசமா வச்சுக்க எனக்கு தகுதி இல்ல மாமா! ஆமா எனக்கு ஆண்மை இல்லை!”
 
“என்ன..? என்னடா சொல்றே?”
 
“எனக்கு சமீபத்துலதான் அது தெரிஞ்சது. இந்த விசயத்தை இத்தோட விட்டுடுங்க. மேலும் மேலும் தோண்ட நினைச்சீங்கன்னா நான் உயிரோட இருக்க மாட்டேன். அந்த அவமானத்தை என்னால தாங்கிக்க முடியாது”
 
எதிர்பாராத இந்த நெத்தி அடியில் துவண்டு போனார் பக்கீர் ராவுத்தர் என்பதை அவன் புரிந்து கொண்டான். தாரை தாரையாக கண்ணீர் வடித்துக் கொண்டு தன் முன் நிற்கிற அன்வரை நேருக்கு நேர் பார்க்கக்கூட அவருக்கு தைரியமில்லை.
 
“மாமா.. அப்ப மஜீதை நிச்சயம் செய்து விடலாமில்லையா?”
 
“சரிப்பா, ஆக வேண்டியதை பார்!” – அவர் வாய் முணுமுணுத்தது.
 
அமீதா, மஜீத் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. தனக்கென்றே வளர்ந்தவள் இன்னொருவனுக்கு என்றாகிவிட்ட பிறகு, அதுவும் தானே முன்னின்று எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டியதாகிவிட்ட பிறகு அன்வர் ஆடிப் போனான். என்னதான் தியாக உந்துதலில் செயல்பட்டிருந்தாலும் இயல்பான இளமை உணர்வுகளின் அலைக்கழிப்புக்கு ஆளானான். பக்கீர் ராவுத்தருக்கும் அது புரியாமல் இல்லை.
 
சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பலமுறை அவர் வற்புறுத்திப் பார்த்தார். ஒரேடியாக மறுத்து விட்டான் அவன்!
 
மகளின் செழிப்பிலும் வனப்பிலும் பக்கீர் ராவுத்தர் இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தார். நாட்களின் நகர்ச்சியில் ஓராண்டு ஓடிப் போயிற்று.
 
பக்கீர் ராவுத்தரின் நிலபுலன்களைப் பார்த்துக் கொண்டு ஒரு பணியாளனை போல கடமையாற்றி வந்த அன்வரின் நடவடிக்கைகளில் ஏகப்பட்ட மாறுதல்கள். தொழிலில் அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்தான். அடிக்கடி மூன்று நாள், ஏழு நாள் என்று வெளியில் சென்று திரும்புவான். ஒரு நாள், பக்கீர் ராவுத்தர் முன்வந்து நின்றான்!
 
“மாமா, சேலத்துல ஒரு தனியார் கல்லூரியில் கிளார்க் வேலை கிடைச்சிருக்கு; சேரலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்; உங்க அனுமதி வேணும்!”
 
“எதுக்கப்பா உனக்கு அந்த அடிமை வேலை? ஊர் உலகம் உண்மை புரியாம ஏற்கனவே என்னைத் தூத்திக்கிட்டிருக்கு! அது போதாதா?” “எனக்கு மன அமைதி தேவைப்படுது மாமா! தயவு செய்து மறுக்காதீங்க” முடிவில் உறுதியாய் இருந்தான்.
 
மாமாவின் அனுமதியோடு சேலம் சென்றவன் அவ்வப்போது கடிதம் எழுதிக் கொள்வான். கொஞ்சம் கொஞ்சமாக கடிதங்களும் குறைந்து விட்டன. எப்போதாவது சேலம் சென்று வரும் ஊர்வாசிகள் அவனை சேலத்தில் சந்தித்ததாகச் சொல்வதுண்டு. காலம் செல்லச் செல்ல அன்வரைப் பற்றிய சிந்தனைகள் மறைய ஆரம்பித்தன.
 
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கைச் சூழலில் ஒரு திடீர்ச் சூறாவளி! உசைன் ராவுத்தரின் ஒரே மகனான மஜீதுக்கு, மூன்று ஆண்டுகளாகியும் வாரிசு பிறக்கவில்லையே என்ற மூட்டத்துடன் ஆரம்பமாயிற்று.
 
பிறவியிலேயே ஏற்பட்ட ஒரு தவறின் காரணமாக அமீதாவின் கர்ப்பப்பைக்கு குழந்தையைத் தாங்கும் வலிமை இல்லை என்று எல்லா மருத்துவர்களும் ஒரே பதிலைச் சொல்ல, குடும்பத்தில் அமளி!
 
மஜீதுக்கு மறுமணம் செய்து விடுவது பற்றி அவனது பெற்றோர்கள் முடிவு செய்து பெண் தேட ஆரம்பித்தார்கள். மஜீதும் மறுப்பெதுவும் சொல்லவில்லை. சமாதானம் செய்ய முனைந்தவர்களும் மறுமணத்தின் நியாயத்தை ஒப்புக் கொள்ள, வாழ்க்கையை பங்கு போட்டுக் கொள்ள அமீதா ஒரேடியாக மறுக்க, சில மாத கால போராட்டத்திற்குப் பிறகு அது ‘தலா’க்கில் (மணமுறிவு) முடிந்தது!
 
பக்கீர் ராவுத்தர் இந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு உயிர் வாழ்வதே பெரிய காரியம் என்றுதான் சொல்ல வேண்டும்! மகளின் எதிர்காலத்தை பற்றி எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். இடையில் ஒருநாள் அமீதா இராவுத்தரின் முன்வந்து நின்றாள்.
 
“அத்தா (அப்பா) நான் ஒரு கடிதம் தர்ரேன். அதை மச்சானிடம் கொண்டு போய்க் கொடுக்கிறீங்களா?” என்றாள். 
 
அந்தக் கடிதத்துடன்தான் பக்கீர் ராவுத்தர் இப்போது சேலம் போய்க் கொண்டிருக்கிறார். இதோ சேலமும் வந்து விட்டது.
 
அமீதாவுக்கு நேர்ந்துவிட்ட அவலத்தைக் கேட்டு துடித்துப் போய்விட்டான் அன்வர். அமீதாவின் கடிதத்தை அன்வரிடம் நீட்டினார் பக்கீர் ராவுத்தர். பரபரப்போடு அதைப் பிரித்தான்.
 
“அன்புள்ள மச்சான்,
 
நான் நேசித்தவரோடு வாழ்க்கையைத் தொடங்குவதற்காக, நான்காண்டுகளுக்கு முன்பு என் முதற் கடிதத்தை உங்களுக்கு எழுதினேன். இந்தக் கடிதத்தை என் வாழ்வை முடித்துக் கொண்ட பிறகு இப்போது எழுதுகிறேன்.
 
அத்தா எல்லா விசயத்தையும் சொல்லியிருப்பார். உங்கள் கனவுகளை கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் அழித்தேன். முடிவில் என்னை நானே அழித்துக் கொண்டேன். நானும் அம்மாவும் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் அத்தா ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதால் உங்களை வைத்தே அவரை சம்மதிக்க வைத்தோம். 
 
அத்தாவிடம், நீங்கள் அன்று ஆண்மை இல்லை என்று சொல்லி உங்களை நீங்களே அழித்துக் கொண்ட அந்த நிமிடத்தில் எனக்குப் புரியாத அந்த தியாகத்தின் அளவு இப்போது புரிகிறது.
 
உங்கள் அனுதாபத்தைப் பெறுவதற்காக இந்தக் கடிதத்தை நான் எழுதவில்லை. அதற்கு எனக்கு அருகதையும் இல்லை! எனக்கு வாழ்வு தருவதற்காகத்தானே உங்களை நீங்கள் மெழுகுவர்த்தியாக்கிக் கொண்டீர்கள்? இப்போதுதான் என் முடிவு வந்து விட்டதே! மேலும் நீங்கள் ஏன் எரிந்து கொண்டிருக்க வேண்டும்? எனவே நீங்கள் வாழ்வைத் தொடங்க வேண்டும் என்ற என் ஆசையைத் தெரியப்படுத்தவே இந்தக் கடிதம்!
 
எனக்காக எவ்வளவோ பெரிய தியாகத்தைச் செய்த நீங்கள். இதைக் கண்டிப்பாகச் செய்வீர்கள் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.
 
– அமீதா
 
கடிதத்தை படித்து முடித்த அன்வர் மாமவை நோக்கினான். கூடவே அமிதாவுக்குத் தான் எழுதப் போகும் பதில் கடிதத்தின் ஒருசில வாசகங்களை மனசுக்குள் ஒத்திகை பார்த்தான்.
 
“அமீதா, நான் ஊருக்குத் திரும்பத்தான் போகிறேன். திருமணமும் செய்து கொள்ளத்தான் போகிறேன். ஆனால் வேறு யாரையோ அல்ல, உன்னைத்தான்; என் அமீதாவைத்தான்…!”
 
– ஹிமானா சையத் – தமிழ் இலமுரியா