‘வீட்டில் இருந்தபடி சம்பாதிப்பது எப்படி?’, ‘வீட்டுப் பெண்கள் வியாபார காந்தம்’ ஆவது எப்படி?’, என்பது தொடர்பாகப் பல கட்டுரைகள் ஊடகங்களில் வந்த வண்ணமாக இருக்கின்றன. அதைப் படிக்கும்போது நாமும் ஏதாவது செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம் எழுவது உண்மைதான். ஏனென்றால், இந்தக்கால கட்டத்தில் மாத வருமானத்துடன் கூடுதல் வருமானமும் வருகிறது என்றால் யாராவது வேண்டாம் என்பார்களா? சரி, எப்படி இரண்டாவது அல்லது மூன்றாவது வருமானத்திற்குத் தயார்படுத்திக் கொள்வது, என்ன தொழில் செய்வது, எப்படி வருவாயைப் பெருக்கிக் கொள்வது என்பதில் ஆர்வமாக இருக்கிறீர்களா?
பெரிய அளவில் முதல் போட்டு, பல இயந்திரங்களை ஓட்டி, பல நூறு தொழிலாளர்களை நிர்வகித்து… எப்படி? எப்படி? என்று நீங்கள் மலைப்பது தெரிகிறது.
இந்த மலைப்பு, கவலை எல்லாம் இல்லாமல் கொஞ்சம் உழைப்பு, கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் ஈடுபாடு, கொஞ்சம் முதலுடன் உங்களது பொழுதுபோக்கான விஷயங்களையே எப்படி தொழில் ஆக்கலாம் என்பதைப் பற்றித்தான் நீங்கள் படிக்கப் போகின்றீர்கள்.
தொடர்ந்து படிப்பதற்கு முன் ஒரு கேள்வி!
உங்கள் எல்லோருக்குமே தொலைக்காட்சி பார்த்தல், தொலைபேசியில் அரட்டையடித்தல் போக மீதமுள்ள நேரத்தில் ஏதோ ஒரு பயனுள்ள பொழுதுபோக்கு இருக்கும். யோசியுங்கள். இந்த வயதில் இல்லையென்றாலும் சின்ன வயதில்… யோசியுங்கள். ஆம், இருக்கிறதல்லவா? அதுதான் தொழிலாக வடிவெடுக்கப் போகிறது!
எப்போதோ சிறு வயதில் நீங்கள் மனதார நேசித்து கற்றுக் கொண்ட அந்தப் பொழுதுபோக்கு உங்களுக்கு வருமானத்தை ஈட்டித் தரப் போகின்றது என்றால் அது எவ்வளவு எளிதான விஷயம், இல்லையா? ஆமாம்! இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் இந்த 9 மணி முதல் 5 மணி வரை என்ற வட்டத்திற்குள்ளிருந்து வெளியே வந்து தொழிலதிபர்கள் ஆகவே விரும்புகின்றனர்.
தொழில்களாக மாறக் கூடிய பொழுதுபோக்குகள்
முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது இதுதான். பயனுள்ள பொழுதுபோக்குகளே தொழில் ஆவதற்கான தகுதியைப் பெறும். சில உதாரணங்கள் இதோ. வாழ்த்து அட்டைகள், பேப்பர் பை, பொம்மைகள் போன்றவற்றை பொழுதுபோக்காய் செய்து பார்த்திருப்பீர்கள். கிளாஸ் பெயிண்டிங், கூடை பின்னுதல், சிகையலங்காரம், மெஹந்தி போன்றவற்றிலும் ஆர்வமாய் ஈடுபட்டிருக்கக் கூடும். உங்கள் தேவைக்கேற்ப ஊறுகாய், சீயக்காய்பொடி போன்றவற்றை தயாரித்திருக்கலாம். உங்களுக்குத் தெரிந்தவற்றை நீங்களும் கூறுங்கள்.
உங்கள் தேவைக்கு நீங்கள் செய்வதுபோல ஏன் மற்றவர்கள் தேவையை நீங்கள் பூர்த்தி செய்து, அதையே தொழிலாக மாற்றி, அதன் மூலமாய் வரும் வருமானத்தை அனுபவிக்கக் கூடாது?
மேலே கூறப்பட்ட உதாரணங்களைக் காணும்போது அவற்றைச் செய்வதற்கு, நேரம், பொறுமை, ஈடுபாடு, கற்பனைத் திறன் ஆகியன முக்கியம் என்பது புலனாகும். ஆனால், இவற்றை விற்பனை செய்வதற்கு இன்னும் கொஞ்சம் ‘அதிகப்படியான விஷயங்கள்’ தேவை. அவை என்னவென்று பார்ப்போமா?
ஆரம்ப ஏற்பாடுகள்
நீங்கள் முழுமனதுடன் தொழிலை ஆரம்பிக்க நினைத்தவுடன் செய்ய வேண்டிய முக்கியப் பணி, யார் யாரெல்லாம் தம்முடைய பொழுதுபோக்கினை வியாபாரமாக்கி உயர்ந்துள்ளார்கள் என்று ஆராய்வதுதான். ஆரம்பித்த நிலையிலிருந்து, விரிவாக்க நிலைவரை அவர்களுடைய அனுபவங்கள் எப்படிபட்டவையாக இருந்தன என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். இது உங்கள் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
அதன் பிறகு, நீங்கள் தயாரிக்க விரும்பும் பொருளை முடிவு செய்யுங்கள். அதே பொருளைத் தயாரிக்கும் வேறு நிறுவனங்களைப் பற்றியும், அவற்றின் தரம், விலைகளைப் பற்றியும் அறிந்து கொண்டு உங்கள் தயாரிப்புடன் ஒப்பு நோக்கிப் பாருங்கள். இந்த ஒப்பீடு உங்களின் தனித் தன்மையை அடையாளம் காட்டி தொழிலில் முன்னேற உதவும்.
பொருள் அறிமுகப்படுத்துதல்
நீங்கள் எந்தப் பொருளை வியாபாரம் செய்ய எடுத்துக் கொண்டாலும், முதல் கேள்வி, அதை எப்படி அறிமுகப்படுத்தப் போகிறீர்கள் என்பதுதான். நீங்கள் ஒரு மெழுகுவர்த்தியைத் தயாரிக்கப் போகிறீர்கள் என்றால், அதை உருவாக்கத் தேவைப்படும் கற்பனைத் திறனை விட, அதை அறிமுகப்படுத்துதலில் அதிக திறன் தேவைப்படும். புதுமையான அணுகுமுறையாக இருத்தல் நல்லது. ஞாபகம் இருக்கட்டும், இது போட்டிகள் நிறைந்த உலகம்! காலத்திற்கேற்றாற்போல மாறிக்கொள்ளுங்கள்.
சந்தைப்படுத்துதல்
உங்களுடைய தொழிலை எவ்வாறு சந்தைப்படுத்துவது? பெரும்பாலோர் தங்களுடைய வியாபாரத்தைப் பொருட்காட்சியில் துவக்குகின்றனர். சிலர் உள்ளூர்க் கடைகளில் துவக்குகின்றனர். உங்கள் ஊரில் நடைபெறும் பொருட்காட்சி, திருவிழா போன்றவை எந்தெந்த சமயத்தில் எங்கெங்கு நடைபெறுகின்றன என்ற தகவல்களை சேகரியுங்கள். உடனே அவ்விடத்தில் ஒரு ஸ்டால் அமைத்து விடுங்கள். நோட்டீஸ்களுடன் ஆஜராகி விடுங்கள். உங்கள் தொழில் பற்றிய முழு விவரங்களுடன் கூடிய கார்டுகளை அச்சடித்து வைத்துக் கொள்ளுங்கள். அங்கு வரும் உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்குத் தவறாமல் விநியோகம் செய்யுங்கள். மேலும், செய்தித்தாள்களில் செய்திகளாகவும் வெளியிடலாம். பலராலும் அறியப்படும்; செலவும் குறைவு.
அகலக்கால் வேண்டாம்!
நீங்கள் ஆரம்பிக்கப் போகும் தொழிலின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பதை உடனடியாகக் கூற முடியாது. அதற்கு சில வருடங்கள் கூடத் தேவைப்படலாம். இதை மனதில் கொண்டு கொஞ்சம் சிக்கனமாகவே இருங்கள். விளம்பரம் தேவைதான். ஆனால் அதற்காக பெரிய அளவில் செலவு செய்வதைத் தவிருங்கள். சிக்கனமாக, அதே நேரத்தில் ஆழமான பதிவினை ஏற்படுத்துகின்ற மாதிரி விளம்பரம் செய்யுங்கள்.
வரப்பிரசாதமான இணையம்
இக்காலத்தில் இணையம் மூலம் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. நீங்களும் நம்பகமான இணையதளங்களில் உங்கள் தொழில் பற்றிய செய்திகளை வெளியிடுங்கள். அந்த இணையதளம் பலராலும் பார்த்துப் பயன்பெறக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் அதிகம் செலவு செய்ய வேண்டி வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
சட்ட ஆலோசனை
பொழுதுபோக்காகக் கருதிய ஒன்று, வாழ்க்கைத் தொழிலாக மாறும் போது சில முடிவுகளைச் சட்ட ரீதியாக யோசித்து செயல்படுத்துவது மிக மிக முக்கியமாகும்.
1. உங்களுடைய தொழிலைப் பதிவு செய்து கொள்வது.
2. தொழிலுக்காக தனிப்பட்ட கணக்கினை வங்கியில் துவக்குவதோடு, தேவைப்பட்டால் தனி ‘கிரெடிட் கார்டு’ம் வாங்கிக் கொள்வது.
3. விரைவான பணப்பரிமாற்றத்திற்காக இணையதளம் மூலம் பணம் செலுத்தும் வகையில் ‘பே பால்’ போன்றவற்றில் கணக்குகளை ஏற்படுத்துவது.
4. எந்த சந்தர்ப்பத்திலும் உங்கள் தனிப்பட்ட வரவு செலவுகளுடன், தொழில் வரவு செலவுகளை சேர்க்காமல் பார்த்துக் கொள்வது.
பின் குறிப்பு :
ஆரம்ப காலத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களையே உங்கள் உதவிக்குச் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கும் பொழுது போகும், உங்களுக்கும் செலவு குறையும்.
நன்றி: – சித்ரா பாலு – நிலாச்சாரல்