Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2005
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,111 முறை படிக்கப்பட்டுள்ளது!

நசீரின் நோன்பு

நோன்பு வைக்க உணவு தயாரிக்கும் வேளையில் ஈடுபட்டிருந்த பஷீராவுக்கு நேற்றைய நிகழ்வுகள் நிழற்படமாய் நெஞ்சில் மூட்டமிட்டிருந்தன.

அம்மாடி! இதயம் கலங்கிப் போனது மாதிரி ஆகி விட்டது! ஆளுக்கு ஆள் உலுக்கி எடுத்துவிட்டார்கள்.

“ஏற்கனவே அதிகாலை இரண்டு மணிக்கே எழுந்து விட்டதால் அலாரத்தை மறக்காமல் ஒலிக்காமலிருக்கச் செய்திருந்தாள். சூடான உணவு தயாரானதும் மற்றவர்கர்களை தட்டி எழுப்பிக் கொள்ளலாமே!

நசீர் பஷீராவின் கடைசிப் பையன் – அனைவருக்கும் செல்லப்பிள்ளை. ஏழு வயது தான். ஆனால் அதற்குள் குர்ஆன் ஒதி முடித்திருந்தான். எல்லா விஷயங்களிலுமே படுசூட்டிகை.

இந்த ஆண்டு ரமளான் மாதம் தொடங்கு முன்னேயே தான் கண்டிப்பாக நோன்பிருக்கப் போவதாகக் கூறிக் கொண்டிருந்தான்.

அனைவரும் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டார்கள். இந்த உக்கிரமான வெயிலில் இந்த ‘நோஞ்சான் குஞ்சு’ நோன்பு பிடிக்க முடியுமாவது!

“ம்..ம்.. நோன்பை பிடிச்சுடுவோம். கண்டிப்பாய்ப் பிடிச்சுடுவோம் அதிகாலை எந்திருச்சு கிணத்தடிக்குப் பின்புறமா ஒளிஞ்சு நின்னுக்க! நோன்பு வரும் – உடனே விழுந்து அமுக்கிப் பிடிச்சிடு. என்ன?” என்று ஜோக்கடித்தனர் சிலர்.

ஆனால் அதை அவன் சீரியஸாகச் சொல்கிறனர் என்பது பஷீராவுக்கு நன்றாகத் தெரியும்.

ஏழு வயதானாலும் தொழ, நோன்பு வைக்க, ஏவும் கடமை பெற்றோருக்கு இருக்கிறது என்ற அடிப்படை மாாக்க ஒழுக்கத்தை அவனுள் ஏற்றிவைத்த தாய் அல்லவா அவள்! மூன்று வயதிலிருந்தே அரபி அட்சரங்களை மனத்தில் பதிய வைத்து – ஆறே வயதில் குர்ஆனை முடிக்கவைத்துத் திருப்தி கண்டவள்.

மற்றவர்கள் நசீர் சொல்வதைக் கேலியாக எடுத்துக் கொண்டது பஷீராவுக்குக் கூண்டோடு பிடிக்கவில்லை. ‘மார்க்க அனுஷ்டானங்களில் என்ன விளையாட்டு வேண்டிக் கிடக்கிறது? மண்டூகங்கள்!’ என்று மனதுக்குள் திட்டிக் கொண்டாள்! ஆயிற்று – ரமளான் பிறந்து தலைநோன்பு வந்தது. இன்றிரவே அமைதியின்றிக் காணப்பட்டான் நசீர். “நீ அமைதியா தூங்கு கண்ணு. ஸஹர் நேரதம் (நோன்பு வைக்கும் நேரம்) வந்ததும் அம்மா எழுப்புகிறேன்” என்றாள் பஷீரா!

“நீ எழுப்பமாட்டே.. பொய் சொல்றே! போன வருஷம் ஏமாத்தினது மாதிரி இந்த வருஷமும் ஏமாத்திடுவே” என்றான் அவன்.

“போன வருஷம் உனக்கு ஏழு வயசு ஆகல – அதனால எழுப்பல – ஆனா இப்ப அப்படியில்லை – நீயும் நொன்பு வைக்கனும் வச்சிப் பழகனும். அதனால கண்டிப்பா எழுப்பறேன்” என்றாள்.

“கண்டிப்பா எழுப்புவேயில்ல?” என்ற மீண்டும் ஒருமுறை உறுதி சய்து கொண்டு தான் தூங்கினான்.

சரியாக மூன்று மணிக்கெல்லாம் அவனாக எழுந்து ஸஹருக்குத் தயாராகி விட்டான்.

அது ஒரு பெரிய குடும்பம்! மாமனார், மாமியார், நாத்தனார் இருவர், அவர்கள் குழந்தைகள் என்று பெரிய பட்டாளம்! பஷீராவின் கணவன் யாக்கூப் – நசீரின் வாப்பா மார்க்க விஷயங்களில் அவ்வளவு கறார் பேர்வழி என்று சொல்ல முடியாது. – நினைத்த போது தொழுவான் – ரமளானில் ஒரு பத்து  நோன்பு வைத்தால் பெரிய விஷயம்.

பஷீராவின் மாமனார் வயிற்ற வலியையும், மாமியார் சர்க்கரை நோயையும் காரணம் காட்டி நோன்பிலிருந்து நளினமாகக் கழன்று கொள்வார்கள். “இந்த அல்லா இந்தப் பாழாப் பொன வியாதிகளை விட்டு நோன்பிருக்க முடியாமல் பண்ணிட்டானே!” என்று அங்கலாய்த்து இறைவன் மேலேயே பழியைப் போட்டு விடுவார்கள்.

ஆக, பெண்டு பிள்ளைகள் தான் அந்த வீட்டில் நோன்பிருப்பார்கள்!

ஸஹருக்குச் சாப்பிட்டு விட்டு நோன்பு நிய்யத்தையும் (உறுதி மொழி) மூன்று முறை ஒதி நெஞ்சில் ஊதி விட்டுக் கொண்டு படுத்துக் கொண்டான் நசீர்.

பகல் 12 மணி வரை ஒன்றும் தெரியவில்லை. ஆனால் நேரம் ஆக ஆகப் பிள்ளை துவண்டு விட்டான் என்றாலும் வயிற்றைத் தரையில் வைத்துக் கொண்டே சுருண்டு கிடந்தான்.

இடையில் நோன்பை விட்டுவிடுமாறு பெரியவர்கள் சொன்னதையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை நசீர். பதிலே பேசாமல் உலர்ந்த கண்களால் அவாகளை வெறித்துப் பார்த்ததோடு சரி.

மாலை ஐந்து மணிக்கெல்லாம் பிள்ளை வயிற்றில் கையை வைத்துக் கொண்டு பிரள ஆரம்பிக்கவும் எல்லோரும் துடிதுடித்துப் போனார்கள்.

நோன்பை விட்டவிடமாறு எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் அசைந்து கொடுக்கவில்லை.

அந்தக் கோபத்தை அவனது வாப்பா பஷீரா மீது காட்டினான்.

“நீதாண்டி பச்சப் பிள்ளை கிட்ட அத இதச் சொல்லி இந்த நிலைக்கு ஆளாக்கிட்டே! தடிமாடாட்டம் இருக்கிறவனுகள்லாம் மூனு வேளையும் மூக்குப் பிடிக்கத் திண்ணுப்புட்டுத் திரியிற இந்தக் காலத்துல பச்சை மழலையப் போயி நோன்பபு வைக்கச் சொல்லிப் பாடாப் படுத்திட்டியே!” என்று கத்தினான்.

அவன் ஒரு முன்கோபி. பதில் பேசினால் கடித்துக் குதறிவிடும் ரகம்! எனவே மெளனமாக நின்றாள்.

மாமனார், மாமியார், நாத்தனார், அக்கம் பக்கம் என்று ஒருவர் பாக்கியில்லாமல் வார்த்தைகளால் அவளைக் கொட்டித் தீர்த்தார்கள். ஏதோ அவள் பாவம் செய்திட்ட மாதிரி.

ஆயிற்று, ஒரு வழியாக நோன்பு துறக்க பத்து நிமிடங்கள் இருக்கும்போதே மனோதத்துவ ரீதியாக அந்தப் பிஞ்சு மலரை ஊக்கப்படுத்த, குளிர்பானம், பஜ்ஜி, வடை, நோன்புக்கஞ்சி எல்லாவற்றையும் அவனுக்கு முன் பரப்பி வைத்தாள் பஷீரா.

மணி அடித்தவுடன் பாய்ந்து எழுந்து நோன்பு திறக்கும் துஆவை (பிராத்தனையை) படுசுத்தமாக ஓதி நோன்பு திறந்தான்.

அனைவருக்கும் நிம்மதிப் பெருமூச்சு. ஆனால் இது கொஞ்ச நேரம்தான். திடீரென் ஒரு வாந்தி – அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து உண்ட அனைத்தும வெளியே வந்து விட்டது. ஒரு சில நிமிடங்களில் துவண்டு விழுந்து விட்டான். ஒரே கலவரம், அக்கம்பக்கம் கூடிவிட்டது.

வெளியே சென்றிருந்த நசீரின் வாப்பாவை அழைக்க ஒருவர் ஓடினார். ஆஸ்பத்திரிக்குத் தூக்கச் சொல்லி ஆலோசனகைள். இடையில் ஒரு அனுபவசாலி ஒரு வாந்தி மாத்திரையைக் கொண்டு வந்து கொடுத்து படுக்கச் செய்தார் – பையன் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்ததும் எல்லாம் சரியாகி விட்டது. இருந்தாலும் எல்லோரும் பஷீராவை ஒரு மூச்சு திட்டித் தீர்த்துவிட்டுத்தான் ஓய்ந்தார்கள். ஏதோ அவளுக்குப் பசமே இல்லாதது போலவும் – அவளது ரத்தத்தின் ரத்தம் துவண்டு போனதைக் கண்டு துடிக்காதவள் போலவும்! இன்னும் சில நாட்களுக்காவது அவனை நோன்பிருக்க விடக்கூடாது என்று தற்காலிகமாக நினைத்து கொண்டாள் பஷீரா.

ஆயிற்று! சமையல் வேலை முடிந்து விட்டது – ஒவ்வொருவராக எழுந்து வர ஆரம்பித்தார்கள்

நசீர் எழுந்திருக்கவில்லை என்ற நிம்மதி.

எல்லாரும் சாப்பிட ஆரமப்பித்து விட்டார்கள். திடீரென எழுந்து ஓடிவந்தான் நசீர்.

உடனே எல்லோரும், “வேண்டாம், வேண்டாம், படுத்துக் கொள்” என்று கூப்பாடு போட ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த கூச்சல் கேட்டு எழுந்து வந்த நசீரின் வாப்பாவும் சத்தம் போட்டார். “எனக்கு பசிக்குது வாப்பா சாப்பிட்டு விட்டு நிய்யத் வச்சிக்காமப் படுத்துக்கிறேனே?” என்றான் இரக்கம் தொணிக்க. உடனே எல்லோரும் அமைதியானார்கள். சாப்பிட்டு முடித்து அணைவரும் படுத்துக் கொண்டார்கள்.

பஷீரா ஒரு மங்கலான விளக்கைப் போட்டுக் கொண்டு குர்ஆன் ஓத ஆரமபித்தாள் சன்னமான குரலில். தலையைணையை அம்மாவுக்கருகில் இழுத்துப் போட்டுக் கொண்டு படுத்துக் கொண்ட நசீர், “அம்மா!” என்று மெல்லி குரலில் அழைத்தான்.

“என்ன கண்ணு” என்று திரும்பினாள்.

“நான் மனசுக்குள்ளேயே நிய்யத்து வச்சுக்கிட்டேனே” என்றான் குறும்பாகச் சிரித்துக் கொண்டே. பஷீராவின் மனம் சற்றே கலவரமாயிற்ற. “டேய்! வாப்பா கோபப்படுவாங்கல்ல! எல்லாம் என்னைப் போட்டு திட்டுவாங்கல்ல?” என்றாள்.

“வயத்த வலிக்குது . வாந்தி வருதுன்னு சொன்னாத்தானே திட்டுவாங்க? “பல்லைக் கடிச்சிக்கிட்டுச் சும்மா கெடந்துட்டா என்ன சொல்லப் போறாங்க?” என்றான். பதில் பேசாமல் அவனையே உற்றுப் பர்த்தாள் பஷீரா.  அவள் கண்கள் பனித்தன். அந்த பிஞ்சு நெஞ்சுக்குள் ஆழமாக வேர் பாய்ச்ச ஆரம்பித்து விட்ட பக்தியுணர்வுகள் அந்தத் தாயைக் குளிர்வித்தன. “உனக்குள்ள உறுதிப்பாட்டுக்கு – தவக்கலுக்கு (இறை உறுதிக்கு) அல்லா எந்த தொந்தரவையும் இனிமே தரமாட்டான் கண்ணு. நீ தைரியமாத் தூங்கு” என்றாள் அவள் கண்களைத் துடைத்துக் கொண்டே.