Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,890 முறை படிக்கப்பட்டுள்ளது!

எம்.பி.ஏ. – மேலாண்மை (MBA – Management Studies)

பொதுவாக அனைவருமே நல்ல வேலை வாய்ப்பை பெறுவதற்கும், தற்போது செய்யும் வேலையிலிருந்து பதவி உயர்வு பெறுவதற்கும்தான் முதுநிலை படிப்பை மேற்கொள்கின்றனர். அந்த வகையில்தான் எம்.பி.ஏ. படிப்பையும் பலர் மேற்கொள்கின்றனர்.

 இன்றைய வர்த்தகமயமான உலகில், எம்.பி.ஏ.படிப்பானது மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகிறது. ஒரு நிறுவனத்தில், எம்.பி.ஏ. பட்டம் பெறுவதற்கு முன் நமக்கு இருந்த வாய்ப்புகளும்,அந்தப் பட்டத்தைப் பெற்றபிறகு நமக்கு இருக்கும் வாய்ப்புகளும் வித்தியாசமானவை. எம்.பி.ஏ. என்ற மந்திரச் சொல் உங்கள் பெயரோடு சேர்ந்திருந்தால்,உங்களுக்கு பல வாய்ப்புகள் தேடி வரும். நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வும் உங்களுக்கு கிடைக்கும்.

எம்.பி.ஏ. படிப்பிற்குள் பலவித பிரிவுகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.இதன்மூலம் பல புதிய விஷயங்களில் அறிதலும், பயிற்சியும் கிடைக்கிறது. மேலும் நாம் ஏற்கனவே பணிபுரியும் துறையைப் பற்றியும் புதிய விஷயங்களை அறிந்துகொள்கிறோம்.எம்.பி.ஏ. படித்த ஒரு மாணவர் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் அதிகமான பணி வாய்ப்பினை பெறுகிறார். வேலை இல்லை என்ற நிலைமை அவருக்கு ஏற்படுவதில்லை.பலவிதமான உட்பிரிவுகளைக் கொண்ட எம்.பி.ஏ. படிப்பில் விதவிதமான வேலை வாய்ப்புகள் உள்ளன. அவற்றை விரிவாக காண்போம்.

மார்க்கெடிங்

இத்துறை வேலை வாய்ப்பானது மகிழ்ச்சியாக அனுபவிக்கத்தக்கது. இந்தத் துறையானது திறமையான நபர்களுக்கு பல சவாலான வாய்ப்புகளைத் தருகிறது. இத்துறையில் மாற்றங்கள் சகஜம். இத்துறையில் கற்றுக்கொள்வதற்கு நுட்பங்களும்,ஆய்வுசெய்வதற்கான விஷயங்கள், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான வியூகங்கள் போன்றவை எப்பொழுதும் உண்டு. அதேசமயம், இத்துறையில் ஈடுபடும் முன்னர்,உங்களுக்கான தகுதிகளை நீங்கள் சுய மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும்.

உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் தகவல்களை சுருக்கமாகவும்,தெளிவாகவும் உங்களால் பேச்சிலும், எழுத்திலும் வெளிப்படுத்த முடியுமா?

ஒரு பிரச்சினையை உணர்ந்து, அப்பிரச்சினையை தீர்ப்பதற்கான பொருத்தமான ஒரு தீர்வை முன்வைக்க முடியுமா?

சிக்கலான தரவுகளை ஒருங்கிணைத்து விளக்கமளிக்க முடியுமா?

புதிய விஷயங்களை சிறப்பாக யோசிக்க முடியுமா? அந்த யோசனைகளை சிறப்பாக ஒருங்கமைத்து, அதை மற்றவர்களுக்கு தெளிவாக விளக்க முடியுமா?

ஒருவருக்கு மேற்கூறிய திறமைகள் இருந்தால், அவர் மார்க்கெடிங் துறையில் தயக்கமின்றி ஈடுபடலாம். மேலும் அவர்களால் சிறப்பாக செயல்பட்டு நற்பெயரையும் ஈட்ட முடியும். மார்க்கெடிங் துறையில் பலவித பிரிவுகள் இருப்பதால், ஒவ்வொருவரும்,தங்களுக்கு எந்தப் பிரிவில் ஆர்வம் இருக்கிறதோ, அதைத் தேர்ந்தெடுத்து பணிபுரியலாம்.

மார்க்கெட்டிங் துறையில், குறிப்பிட்ட பிரிவில்(பிராண்ட் மேனேஜ்மென்ட், தயாரிப்பு மேம்பாடு மற்றும் தகவல்தொடர்பு போன்றவை) சிறப்பு படிப்பை மேற்கொண்டால்,பலவிதமான நன்மைகள் உண்டு. பல துறைகளில் கோலோச்சும் மார்க்கெடிங் துறை வேலை வாய்ப்புகளைப் பற்றி இங்கே அலசுவோம்.

மார்க்கெடிங் மேனேஜர்

தற்போதைய வாடிக்கையாளர்களுடனான உறவை நிர்வகிப்பது மற்றும் அவர்களுக்கான சேவைகளை கவனிப்பது போன்றவை இவரது முக்கியப் பணிகளாகும். சர்வதேச மார்க்கெடிங், வாடிக்கையாளர் திருப்தி மற்றும் அவர்களை தக்கவைத்தல், சந்தை வியூகம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் போன்றவைகளில் தனது திறன்களைப் பயன்படுத்துகிறார். இந்தப் பணியானது, அதிக திறன்கள் தேவைப்படுகிற, மிகவும் எதிர்பார்க்கப்படும் பணியாகும்.

மார்க்கெடிங் கம்யூனிகேஷ்ன்ஸ்

வாடிக்கையாளர்களுக்கான தகவல்களை உருவாக்குவது மற்றும் அவற்றை கொண்டு செல்வதை நிர்வகிப்பது போன்றவை இத்துறை நிபுணர்களின் பணியாகும். பொருட்களின் மீது புகழ்பெற்ற வாசகங்களை எழுதுவது, தேவையான நேரங்களில் பத்திரிக்கைகளுக்கு கொடுக்கக்கூடிய விஷயங்களை எழுதுவது போன்ற முக்கியப் பணிகளை இத்துறை ஸ்பெஷலிஸ்டுகள் செய்வதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பணியாகும்.

மேலும் பிராண்டிங், விளம்பரப்படுத்தல் மற்றும் பொதுமக்கள் தொடர்பு போன்ற பல பணிகளையும் இத்துறை உள்ளடக்கியுள்ளது. எனவே இத்துறையானது ஒரு சுவாரஸ்யமான துறையாக கருதப்படுகிறது.

விளம்பரத்துறை

ஒருவருக்கு, விளம்பரங்களில் ஆர்வம் இருந்தால், அவருக்கு மார்க்கெடிங் துறையில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. அக்கவுண்ட் மேனேஜ்மென்ட், அக்கவுண்ட் திட்டமிடுநர்கள் மற்றும் மீடியா பையர்ஸ் போன்ற துறைகள் விளம்பரத்துறையுடன் இணைந்தவை.அக்கவுண்ட் மேனேஜர்கள், ஏஜென்சியின் பலவித துறைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கிடையே ஒரு பாலமாக செயல்படுகிறார். திட்டமிடப்பட்ட நேரத்தில்,திட்டமிடப்பட்ட நிதி அளவிற்குள் ஒரு விளம்பரம் வெளியாவதை நிர்வகிப்பது இவரின் பணி.

அக்கவுண்ட் திட்டமிடுநர்கள், வாடிக்கையாளர் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். மேலும் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் தொகுப்பிற்குள் நிகழும் பிறப்பு-இறப்பு விகிதங்களை ஆராய்வதும் இவரது பணி. சந்தையில் அவர்களின் நடத்தைகளை எது தூண்டுகிறது என்பதை கண்டறிய இந்த ஆராய்ச்சி உதவுகிறது. மீடியா பையர் என்பவர், விளம்பரம் தரக்கூடிய வகையில் ஒரு பொருத்தமான மீடியாவைத் தேர்ந்தெடுக்கிறார். அக்கவுண்ட் திட்டமிடுநரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வைப் பயன்படுத்தி, எங்கே விளம்பரம் மேற்கொள்வது என்ற முடிவினை மேற்கொள்கிறார்.

விளம்பரத் துறையில் பல அம்சங்கள் அடங்கியுள்ளன. சம்பளமானது, செயல்பாட்டை பொறுத்து அமைகிறது. மேலும் படைப்புத்திறன், பயணம், வாடிக்கையாளர் திருப்தி மற்றும் பிறருடன் கொள்ளும் தொடர்புகள் போன்றவை இத்துறையில் முக்கியமானவை.விளம்பர ஏஜென்சிகள், மீடியா அமைப்புகள், வணிக நிறுவனங்களில் விளம்பரத் துறைகள், லாப-நோக்கற்ற அமைப்புகள் மற்றும் சந்தை ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. அக்கவுண்ட் மேனேஜ்மென்ட், படைப்புத் திறன், மீடியா மற்றும் ஆராய்ச்சி போன்றவை விளம்பரப்படுத்தலின் 4 முக்கிய தொழில் வாய்ப்புகள்.

பிராண்ட் மேனேஜ்மென்ட்

இத்துறையானது, பல வகைகளில் விளம்பரத் துறையுடன் தொடர்புடையது. ஒரு பிராணட், சந்தையில் என்ன நிலையில் இருக்கிறது என்பதைப் பொறுத்து, அவரின் பணி நிலைகள் மாறுபடும். சந்தையில் ஒரு பிராண்டின் நிலையை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வது முக்கியப் பணி. வடிவமைப்பாளர்கள், தயாரிப்புக் குழுக்கள்,ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தயாரிப்பு மேலாளர்கள் ஆகியோருடன் கலந்து பணியாற்ற வேண்டியிருக்கும்.

உயர்ந்த திறனும், சுய உந்துதலும், அதிக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் தன்மையும்,பிறருடன் சிறப்பாக கலந்துரையாடும் திறனும், பயணம் செய்வதற்கான விருப்பமும்,மாற்றங்களை ஏற்கும் பக்குவமும் உள்ளவர்கள் இத்துறைக்கு ஏற்றவர்கள். இத்துறையில், தொடக்கத்திலேயே நல்ல சம்பளம் கிடைக்கிறது.மேலும், அனுபவம் மற்றும் செயல்பாட்டைப் பொறுத்து, பிற்கால பலன்கள் அமையும்.

பொதுமக்கள் தொடர்புத்துறை

 நிறுவனம் மற்றும் அதன் தயாரிப்புகள் பற்றி பொதுமக்களிடம் நல்ல அபிப்ராயம் ஏற்படுத்துவதே இப்பணியின் முதன்மை நோக்கம். இது நீண்டகால அல்லது குறுகியகால திட்டமாக இருக்கலாம் மற்றும் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் இப்பணியானது மிக முக்கிய பொறுப்பை வகிக்கிறது. சமூகத்தின் மத்தியில் நன்மதிப்பை உண்டாக்கி, ஒரு நிறுவனத்தின் அல்லது தனிநபரின் தயாரிப்புகளை சந்தையில் நல்ல முறையில் விற்பனை செய்ய பொதுமக்கள் தொடர்பு அதிகாரி பொறுப்பேற்கிறார்.

ஆன்லைன் மார்க்கெடிங் தொழில்

 ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் சேவையை விளம்பரப்படுத்த, இன்டர்நெட் மற்றும் மொபைல் போன் உள்ளிட்ட பலவித சாதனங்களைப் பயன்படுத்துவதாகும். மேலும் ஆன்லைன் விளம்பரங்ளும் இதில் அடங்கும். மேலும், மொபைல் போன்களில் குறுந்தகவல்கள்(எஸ்.எம்.எஸ்) அனுப்பி, மக்களை கவர்ந்திழுப்பதும் இதில் அடக்கம்.

ஈவென்ட் மேனேஜ்மென்ட்

 வாடிக்கையாளர்கள் மத்தியில், பலவித நுட்பங்களையும், கவர்ச்சியான அம்சங்களையும் பயன்படுத்தி,நிறுவனம் மற்றும் அதன் தாயரிப்புகளை விளம்பரப்படுத்தி, அதன்மூலம் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தி, நிறுவன வளர்ச்சிக்கு உதவும் முக்கியப் பணியாகும்.

மார்க்கெடிங் ஆராய்ச்சி

 இன்றைய போட்டி உலகில் தரவுகளை சேகரித்து, அதன்மூலம், வாடிக்கையாளர்களை கவர்ந்து,சேவைகளை மேம்படுத்துதல் ஒவ்வொரு நிறுவத்திற்குமே அத்தியாவசியமான ஒன்று. மார்க்கெடிங் ஆராய்ச்சியின் முடிவுகளின் மூலமே, ஒரு நிறுவனம் தனது புதிய வியூகங்களை வகுக்க முடியும்.லாப-நோக்கமற்ற அமைப்புகள், சில்லறை வியாபார நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், வணிக குழுக்கள், நிபுணத்துவ அமைப்புகள் மற்றும் அரசு அமைப்புகளில் இத்துறை சார்ந்த பணிகள் கிடைக்கின்றன. மேலும், விளம்பர ஏஜென்சிகள் மற்றும் ஆலோசனை மையங்களிலும், இத்துறை சார்ந்த நிபுணர்களுக்கு தேவைகள் உள்ளன.

இத்துறைக்கு வர விரும்பும் ஒருவர், போதுமான தகுதிகள் பெற்றிருப்பது அவசியம். ஏனெனில், அவர் தரும் விபரங்களை வைத்துதான் ஒரு நிறுவனத்தின் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பொதுவாக, மார்க்கெடிங் ஆராய்ச்சியாளர்கள், ஒரு உதவி ஆய்வாளராகத்தான் தங்களின் பணியை துவக்குகிறார்கள். இவர்கள், ஒரு அனுபவம் வாய்ந்த ஆய்வாளருடன் பணிபுரிகிறார்கள். உதவி ஆய்வாளர்கள், தங்களின் களப் பணியின்போது, கல்லூரியில் கற்றதையே விரிவாக கற்கிறார்கள். அனுபவம் பெற்ற பிறகு, முழு அளவிலான மார்க்கெடிங் ஆய்வாளராக ஒருவர் பணிபுரிய ஆரம்பிக்கிறார். உதவியாளரை விட, முழுநேர மார்க்கெடிங் ஆய்வாளருக்கு அதிக பொறுப்புகள் உண்டு. இந்த ஆராய்ச்சியாளர்கள்தான், மார்க்கெடிங் துறைக்கு பல முக்கிய முடிவுகள் எடுக்க உதவியாக இருக்கிறார்கள்.

இவர்களின் அனுபவத்திற்கேற்ப, இவர்களுக்கான பதவி உயர்வும் கிடைக்கிறது. நல்ல அனுபவம் வாய்ந்த ஒரு மார்க்கெடிங் ஆராய்ச்சியாளர், ப்ராஜெக்ட் மேலாளராகவோ, ப்ராஜெக்ட் இயக்குநராகவோ ஆகலாம்.இந்த நிலையில் இருப்பவர்கள், மார்க்கெடிங் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களின் பணிகளை மேற்பார்வையிடுகிறார்கள்.

ப்ராடக்ட் மேனேஜ்மென்ட்

 ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு தொடர்பாக கிடைக்கும் லாபம் மற்றும் சந்தை வளர்ச்சி ஆகியவை அந்தந்த குறிப்பிட்ட ப்ராடக்ட் மேனேஜரையே சாரும். இவர் அந்த குறிப்பிட்ட தயாரிப்புத் துறையின் சி.இ.ஓ.எனப்படுகிறார். சில ப்ராடக்ட் மேனேஜர்கள், சர்வதேச அளவில் பொறுப்புடையவர்களாக இருந்தாலும்,பெரும்பாலானவர்கள், உள்நாட்டு சந்தையிலேயே கவனம் செலுத்துகிறார்கள். இத்துறையில் பணிபுரிய விரும்புபவர்கள், நல்ல திறமையும், உற்சாகமும், அதிக பொறுப்புகளை ஏற்றுக் கொள்பவர்களாகவும்,நல்ல தகவல்-தொடர்புத் திறன் உள்ளவர்களாகவும், பயணம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களாகவும்,மாற்றங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். இத்துறையில் ஆரம்ப சம்பளமே கணிசமாக கிடைக்கும். செயல்திறன் மற்றும் அனுபவத்தைப் பொறுத்து சம்பள விகிதம் பிற்காலத்தில் வேறுபடும்.

புதிய ப்ராடக்ட் மேம்பாடு

 சில நிறுவனங்கள், புதிய தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கென்றே, இத்தகைய பணி நிலைகளை வைத்துள்ளன. ஒரு புதிய தயாரிப்பை விளம்பரப்படுத்தி, அதை சந்தையில் அறிமுகப்படுத்தி,சந்தைப்படுத்தும் திட்டங்களை வகுத்து, அந்த தயாரிப்பை ப்ராடக்ட் மேனேஜரிடம் ஒப்படைக்கும் முன்புவரை உள்ள பணிகளை இந்த தயாரிப்பு ஸ்பெஷலிஸ்ட் செய்கிறார்.

சில்லறை வணிகம்

 கடந்த 10 வருடங்களாக, சிறப்புடன் வளர்ந்துவரும் துறையாக சில்லறை வணிகத் துறை இருந்து வருகிறது.ஸ்டோர் மேனேஜ்மென்ட், வாங்குதல், தயாரிப்பை விளம்பரப்படுத்தல் போன்ற பல நிலைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

லாப-நோக்கமற்ற அமைப்புகளில் மார்க்கெடிங் தொழில்

 ஒரு வித்தியாசமான மற்றும் அர்த்தமுள்ள வகையில் ஒரு பணியை மேற்கொள்ள விரும்பினால், அவர் லாப-நோக்கமற்ற ஒரு அமைப்பில் பணிக்கு சேரலாம். இந்தியா போன்ற நாடுகளில் இந்த வகையில் பல வேலை வாய்ப்புகள் உள்ளன. கல்லூரிகள், நூலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவை, தங்களது திட்டங்களை விளம்பரப்படுத்த, மேற்கூறிய மார்க்கெடிங் நபர்களை நம்பியுள்ளன. இதுபோன்ற பணிகளின் மூலமாக, சமூகத்திற்கு சில நன்மைகளை செய்ய முடியும்.

மார்க்கெடிங் ப்ரமோஷன்

 மார்க்கெடிங் நிறுவனங்களில் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் விளம்பரக் குழுக்களை காண்பது அரிது.திட்டங்களை விளம்பரப்படுத்த, நேரடி மெயில், டெலிமார்க்கெடிங், இன்ஸ்டோர் டிஸ்ப்ளேக்கள்,விளம்பரங்கள், ஒரு பொருளுக்கு ஆதரவளித்தல், சிறப்பு தொடக்க நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல அம்சங்களை பயன்படுத்துகின்றனர். இந்தத் தொழிலைப் பொறுத்தவரை, படைப்புத் திறனும், கணிப்புத் திறனும் முக்கியம்.

மார்க்கெடிங் துறை என்பது தனிப்பட்ட மற்றும் அமைப்பு ரீதியான திறன்கள் அதிகம் தேவைப்படும் ஒரு தொழில். இதற்காக ஒருவர் எப்போதுமே ஆர்வக்கோளாறாக இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. ஒரு குறிப்பிட்ட வேலையை, குறிப்பிட்ட நேரத்தில் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துறையில் அடிப்படை ஆர்வம் இருக்க வேண்டும்.

தொடரும்..

நன்றி: கல்வி களஞ்சியம்